Monday, May 07, 2012

யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!

வடபுலத்துப் போர்ச் சூழலால் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. போர் முடிந்த பின்பும் அதே நிலை தொடருகிறது. இதன் மத்தியிலேயே இம்முறை மேதினம் யாழ்ப்பாணத்தில் பேரணிகளுடன் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தமது தமிழ் மேட்டுக்குடிச் சகாவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டு மேதினம் கொண்டாடியது. தெற்கிலிருந்து பெருந்தொகையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் பேரணிக்கும் கூட்டத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதனை வேறொரு கட்சியினர் செய்திருந்தால் யாழ்ப்பாண ஊடகங்கள் எகிறிக்குதித்து இனவாதத்தையும் இனவெறியையும் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் இது மேட்டுக்குடிக் கூட்டு என்பதால் அதனை அடக்கி வாசித்துக்கொண்டனர். இது தமிழர் பழைமைவாத ஆதிக்க அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மமாகும். அத்துடன் சிங்கக்கொடி பிடித்த ரணில் சம்பந்தன் கூட்டுக்கரங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைத்தானும் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (NDMLP) யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடத்திய சைக்கிள் பேரணிக்கும் கூட்டத்திற்கும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
மேற்படிப் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சியின் மேதினப் பேரணியும் கூட்டமும் செஞ்சட்டைகளுடனும் செங்கொடிகளுடனும் மிகவும் எழுச்சிகரமாக சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை நடாத்தப்பட்டது.
அரசாங்க எதிர்ப்பு முழக்கங்கள் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. பொருட்கள் மீதான விலையேற்றத்தை எதிர்த்தும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பைக் கண்டித்தும் அரசியல் தீர்வை வலியுறுத்தியும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சி வழங்கக்கோரியும் தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தியும் தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்தும் உழைக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரளக்கோரியும் ‘ரணில் சம்பந்தன் கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு’ என்றும் இந்திய அமெரிக்க தலையீட்டை எதிர்த்தும் பேரணியில் முழக்கங்கள் முழங்கப்பட்டன.
இவற்றைப் பார்த்த மக்கள் மிகவும் வியப்புடனும் அவதானத்துடனும் பேரணிக்கு ஆதரவு கொடுத்தனர். அவ்வாறே மேதினப் பொதுக்கூட்டமும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்ட கூட்டமாக அமைந்திருந்தது. கட்சியின் வடபிரதேசச் செயலாளர் தோழர் கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி. கா செந்திவேல் பிரதான உரையை ஆற்றினார். தொழிற்சங்க, வெகுஜன, பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர். கட்சியின் கலைக்குழுவினரால் புரட்சிகரப் பாடல்கள் இடையிடையே பாடப்பட்டன. பெருந்தொகையான பொலிசாரும் புலனாய்வுத்துறையினரும் பேரணியையும் கூட்டத்தினையும் நோட்டமிட்டவாறே இருந்தனர். ஆனால் மக்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாழ்ப்பாண வீதிகளில் செங்கொடிகளும் செஞ்சட்டைகளும் அணிவகுத்து வந்த காட்சிகளும் உணர்ச்சிகர முழங்களும் புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளுவதற்கான அடையாளமாகக் கண்டனர்.
இவ்வாறான புரட்சிகர மேதினப் பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் பற்றி  யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளிவரும் நான்கு நாளிதழ்களான உதயன், யாழ் தினக்குரல், வலம்புரி, தினமுரசு ஆகியவற்றில் ஒரு வரி கூட எழுதப்படவில்லை. நான்கு நாட்களாகியும் இந்த நான்கு நாளிதழ்களும் தமது வக்கிரமான மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. இது ஏன்?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் பெரும் சத்தத்துடன் வாயுபறிந்தால் அதில் தமிழ்த்தேசிய மணம் வீசுவதாக இப்பத்திரிகைகள் தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உழைக்கும் தமிழ்மக்களான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தனியார் துறை ஊழியர்கள், போன்றவர்களின் பிரச்சினைகளை முன்வைத்தும் அவற்றுக்கான தீர்வை வற்புறுத்தியும் இடம்பெற்ற உணர்வு பூர்வமான இவ்விடதுசாரி மேதினம் பற்றி இருட்டடிப்புச் செய்தமையானது இந்த யாழ்ப்பணாத்துத் தமிழ் ஊடகங்களின் நடுநிலை, சுதந்திரக்குரல், தமிழ்த்தேசிய பாதுகாப்பு போன்ற போலித்தனங்களை அம்பலமாக்கியுள்ளது.
தமிழ்மக்கள் மத்தியில் ஊடக வியாபாரத்தை நடாத்தும் ஊடக முதலாளிகளின் பைகளை நிரப்புகின்ற அதேவேளை மக்கள் மத்தியில் மாற்று அரசியற் கருத்தும் மாற்றுச் சிந்தனையும் வரக்கூடாது என்பதில் அவை மிக அக்கறையாக இருக்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இதனை ஊடக அயோக்கியத்தனம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது?  இவ்வூடக இருட்டடிப்புப் பற்றி வடபுலத்து இளம் தலைமுறையினர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

நன்றி:துலா

No comments: