Monday, June 06, 2011


பிறத்தியாள் இரண்டு வருடம் கடந்து 

-கற்சுறா- 


கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கும் பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு. தோழன் விமலேஸ்வரனை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட தொகுப்பு என்பதில் மிக இறுக்கமான வேதனையுடன் மெல்ல பக்கங்களை விரிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு நண்பர்களது இழப்பினூடாக தாண்டிக்கொண்டிருந்த தருணங்கள். எந்தவொரு பகலிலும் எந்தவொரு இருளிலும் ஒரு தோழனை ஒரு தோழியை இழந்துகொண்டிருந்தோம். வரலாறு ஈழம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

1980கள் மிகவும் நெருக்குவாரம் நிறைந்த நாட்கள். எங்களில் பலர் சேர்த்துவைத்த அத்தனை தடையங்களும் ஏதோ ஒரு வழியில் காணாமலேயே போய்க் கொண்டிருந்தன. மனங்களில் பதிவாகிய நினைவுகளைத் தவிர இன்று பெரும்பாலும் தடையங்கள் அத்தனையும் அழிந்துதான் போய்விட்டன. இத்தனை காலம் தாண்டி விமலேஸ்வரனை ஒரு கணத்திலேனும் நினைத்துக் கொள்ள வைத்திருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு.


இங்கும் பானுபாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாக 1980களிலிருந்து எழுதிய கவிதைகள் அவள் தமயந்திக்கு எழுதிய கடிதங்கள் என்று பரவியிருக்கும் இந்தப் பிறத்தியாள், கவிதைகள் குறித்துப் பேசுவதை விட நாம் கடந்து வந்த காலங்களைப் பேசவைப்பது என்பதில் கணிசமான அளவு முக்கியம் பெறுகிறது. இந்தத் தொகுப்பிற்கூடாக நோக்கும் போது பானுபாரதி அவர்களை கவிஞர் என்று என்னால் சொல்ல முடியாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

யுத்தகால வாழ்வில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும், அதுவும் ஈழத்தில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்களது சர்வாதிகாரத்தில் இருந்து தப்பித்தல் என்பதே வாழ்வாகியிருக்கும் தருணத்தில் எழுத்துக்காக தோழர்கள் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு சிறிய கவிதையை பாதுகாத்தல் என்பது தற்கொலைக்குச் சமனானது. ஆக ஒரு எழுத்தாளனால் தனது எழுத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாதுதான் போகும். ஆனால் பானுபாரதியோ ஒரு எழுத்தாளர் என்பதைவிடவும் சமூகச் செயற்பாட்டளியாகவும் போராளியாகவும் இருந்த தருணங்களில் கவிதையைப் பாதுகாத்தல் என்பது அவரது இரண்டாந்தர வேலையாகவே இருந்திருகிறது. அப்போது எழுதப்பட்டவைகள் கவிதைகள் என்பதை விடவும் முக்கியமாக தனக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப்பரிமாற்றமாகவே இருந்திருக்கிறது. ஆனால் நமக்கிடையே வாழும் பல ஈழத்துக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் தமது கவிதைகளைப் பாதுகாப்பதையே அந்த யுத்தகாலத்திலும் சரி இன்றுகடைசியாக நடந்த கோரச்சண்டையிலும் சரி முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் பானுபாரதி அவர்களை ஈழத்துக் கவிஞர் என்ற குறுகிய அரியண்டத்தனமான சொல்லால் அழைத்து குறுக்கிவிடமுடியவில்லை.

பெண்களின் உடலும், மொழியும், அரசியல் அபிலாசைகளும், குழந்தைகளும், கனவுகளும் பெண்களுக்கே சொந்தமில்லாத ஒரு போர்க் காலச்சூழலில் கவிதைகள் எழுதுவதற்கும் எழுதிய ஒரு துண்டுக்கவிதையையும் புலிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும், இன்னும் கவிதைத் திருடர்களிடமிருந்தும் மறைத்து பாதுகாக்க எவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது என்ற உண்மையை இந்தத் தொகுப்பு போட்டுடைக்கின்றது. என்று ஜீவமுரளி எழுதியதில் அவ்வளவு உண்மையிருக்கிறது. ஈழத்துக் கவிதைச்சூழல் அவ்வளவு அசிங்கமானதாய்த்தான் இருக்கிறது.

சிவரமணியையும் அவளது கவிதையையும் செல்வியையும் அவளது கவிதைகளையும் அழித்தவர்கள் நாங்கள் தானே. நாங்கள் எப்படி இன்னொரு வெளியில் கவிதைகள் குறித்து உரையாடலாம்? செல்வியை ஒருகவிதைக்காகக் கொலைசெய்து விட்டு அதன்பின் எப்படி நவீன கவிதைகள் குறித்தும் புதுக்கவிதைகள் குறித்தும் அரசியல் கவிதைகள் குறித்தும் பெண்கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் எழுதுவது குறித்தும் நாம் உரையாடுவது? என்ன அசிங்கம் பிடித்த வேலை?

இந்த வேலைதான் பிரேமிளின் வாழ்விலும் நடந்தேறியது. “I was killed by the tamils” என்று எழுதினார் பிரேமிள். உண்மையில் உயர்ந்த கலைஞர்களை அவமதித்து மனோதத்துவக் கொலை செய்வதிலும் பட்டினி போட்டுக் கொல்வதிலும் உயர்ந்த கலையை மூச்சடக்குவதிலும் மிகிமிகத் தீவிரம் காட்டுகிறவர்கள் அரை வேக்காட்டுக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும்தான் என்று எழுதினார் காலசுப்பிரமணியன். இந்த அரைவேக்காட்டாளர்களுடன் கைகோர்த்து பிரேமிளைக் கொன்றவர்கள் நமது முழுவேக்காட்டாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்.

பானு எழுதிய கவிதைகள் பேசுவதை விட பானுவிடம் இருந்து தொலைந்து போனகவிதைகள் பேசியவை முக்கியமானவை என்பதால், பிறத்தியாள் குறித்துப் பேசவர இவ்வளவு மனம் உறுத்த உறுத்த இந்த ஒப்பாரியை வைக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கில்லாத கதை சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. வராலற்றை செவி வழியாகவே சொல்லிவிடும் கடத்திவிடும் மனம் அவர்களுடையது. அகத்தை நேசிக்கும் மனம் மறுபுறத்தில் தன்னை அறியாமல் புறத்தை அதிகம் நேசிக்கிறது. நேசிப்பின் மீது படரும் மொழியூடாக வரலாற்றைக் தனக்குள்ளால் கடத்திவிடுகிறது. ஆனால் ஆண்களோ வரலாற்றுக்குள்ளால் தங்களைக் கடத்திவிடுவதிலே கவனம் செலுத்தவதால் உடலுடனும் அதன் மொழியுடனும் ஈர்க்கப்படாமலேயே அந்நியப்பட்டுவிடுகிறார்கள்.

ஈழப் போராட்டத்தில் இந்தியராணுவ வருகை என்பது மிக முக்கியமான காலகட்டம். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இருந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு மக்களை மேய்த்தன. மந்தைகளாக்கின என்பதை பலர் மறந்த போதும் தனது கவிதைகளில் குறிப்பிட மறக்காதவர் பானு. அப்போது பாடசாலை இளைஞர்களுக்கு மலவாசலுக்குள்ளால் Fanta போலத்தலை நுளைத்து வதை செய்யும் சித்திரவதை முகாமாக இருந்தது அசோகா ஹோட்டல் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம்.

அசோகா (ஹோட்டல்) ஆட்சியின் ஆதிக்கம்

கோடிப்புறத்து கிராமங்களின்

குச்சொழுங்கைக்குள்ளும் நீள்கிறது

இங்கு மரணத் தீர்ப்பெழுத

குறைந்த பட்ச

சமுசயங்களே காணுமாயுள்ளது.

என்று எழுதுகிறார் பானு.

எப்டி கந்தன் கருணையையும் துணுக்காயையும் விசுவமடுவையும் மறக்க முடியாதோ அதேபோல் நாம் மறக்க முடியாதது அசோகா ஹோட்டல். இந்த இந்திய இராணுவக் காலங்களில் ஈழத்துச் சூழலும் அதற்குள் வாழ்ந்த ஈழத்துப் பெண்களது நிலையையும் விமலுக்கு எழுதிய கடிதங்கள் பேசுகின்றன.

1.
“மரண பயத்திடமிருந்து

தலையை மறைப்பதை விட

ஒரு துண்டுக் கவிதையை மறைப்பதே

பெரும்பாடாய் இருக்கிறது.”

2.

“ஒரு கவிதையையோ

காகிதத்தையோ

அல்லதொரு சிறு குறிப்பையோ

பெண்ணின் மர்மப் பிரதேசங்களென(?)

சுட்டப்படும் இடங்களில் கூட

மறைத்து வைப்பதென்பது

தற்கொலைக்கச் சமனான செயல்

ஏனெனில்

எல்லாத் தரப்புச் சோதனைக்காரரும்

முதலில் கைவிட்டுத் தேடுவது

இந்த இடங்களாய்த்தான் இருக்கிறது.’

3.

‘தெரு நாய்கள் கூட

கடலை எண்ணையின் நாற்றம்

தூரத்தில் வரவே

வாலை மடக்கி

யோனியைப் பொத்திக் கொண்டோடப்

பழக்கப்பட்டு விட்டன.’

4.

‘ஓ பாரதமே

எல்லைகள் தாண்டி

வெண்கொடி நாட்டுவது இருக்கட்டும்

முதலில் உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும்

பிசைந்துருட்டி விளையாட திரண்ட உன் முலைகளை

அவர்களுக்குக் கொடு.’

பானு தனது சகோதரன் நக்கீரனுடன் நடாத்திய உரையாடல் இது.

நான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன். சேர்த்து விடுங்கோ.

சேர்ந்து…?

ஆயுதப்பயிற்சி எடுக்கப்போகிறேன் இந்தியாவுக்கு அனுப்பி விடுங்கோ.

எடுத்து…?

நாட்டுக்காகப் போரடப் பொகிறேன்.

ஹா…ஹ…ஹா…ஹா…

….

கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு நீ கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உண்டு.
என்று நடந்த உரையாடலில், தான் கற்றுக் கொண்டவை அதிகம் எனக் கூறுகிறார்.

தனது சனங்களது வேதனை குறித்து அந்த வாழ்வின் தர்க்கம் குறித்து எழுதும் பானுவினது
போர்க்குணம் மிகப்பெரியது. பானுவுக்கு அந்தப் போர்க்குணத்தை ஒப்புவிக்க கவிதை வாய்த்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய பல பெண்கள் ஒதுங்கியிருப்பதைப் போல பானு ஒதுங்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தோசம். இன்னும் ஒவ்வொரு கணமும் கவிதை மொழியை கைக்குள் பொத்தித் தான் இருக்கிறார் பானு. தற்போது சிட்டுக்குருவி பற்றிய கவிதைகளில் தற்கால விமர்சனம் பரவிக்கிடக்கிறது. பானுவின் கவிதைகள் பெரும்பாலும் விமர்சனமாக அமைவது சமூகம் பற்றிய அதீத அக்கறையின் காரணமாகவே. கடைசிப்பக்கம் என்ற கவிதை ஒரு சமூகவிடுதலைப் போராளியின் கங்கணம் அது.

“….

நளத்தியென்றும்

பள்ளி பறைச்சியென்றும்

அழுகல் வாயால் சொல்லெறிந்து

அடித்து விரட்டியதும்

இந்தக்

கடைசிக் கலட்டி வெளிக்குள்தான்.

மீண்டும் மீண்டும் கூறியது கூற மறுத்து

அடம்பிடிக்கிறதென் கவிதை.

முஸ்டியை உயர்த்தி

கட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது.

என்னவென்று?

உங்கள் பல்லுக் கில்லெல்லாம்

அடித்துடைக்கும் படி.

…”

இதுதான் பானு. இதுதான் பிறத்தியாள்.


நன்றி: கற்சுறா

No comments: