Monday, March 28, 2011

எழுத்தாளர் (நடிகர் ) கே.எஸ். பாலச்சந்திரனுக்கு 

அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு

-குரு அரவிந்தன்-


ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப் படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு ‘‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு” வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளை, முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவலுக்கு 2009ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைத்திருக்கிறது.
சென்ற மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கில் நடைபெற்ற விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்கள் இவ்விருதை வழங்கிப் பாராட்டினார்.
இந்திய ரூபா 15,000 உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில்
தோப்பில் முகமது மீரான் (1996)
வல்லிக்கண்ணன் (1997)
இந்திரா பார்த்தசாரதி (1998)
நாஞ்சில் நாடன் (1999)
பூமணி (2000)
இமயம் (2001)
மேலாண்மை பொன்னுசாமி (2002)
பாமா (2003)
பெருமாள் முருகன் (2004)
எஸ்.வி. ராஜதுரை (2005)
கவிஞர் சல்மா (2006)
ஜோ டி குரூஸ் (2007)
ஆகியோர் இவ்விருதை இதுவரை விருதைப்பெற்றிருக்கிறார்கள்.
தஞ்சாவூரில் நடைபெறும் “அமுதன் அடிகள் அறக்கட்டளை” இலக்கிய விருதுவிழாவில், 2008 ம் ஆண்டுக்கான விருதை பிரபல நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும், 2009ம் ஆண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும், 2010ம் ஆண்டுக்கான விருதை பிரபல நாடகாசிரியர் முத்துவேலழகன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் நேரடியாக விழாவில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது.
உலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்தூக்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல்  சென்றடைய ஆவன செய்தால், நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும். என்று பி.எச். அப்துல் ஹமீட் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் - நாவலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுகூரலாம். தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின்  மேற்குறித்த  வார்த்தைகள் இப்போது நிஜமாகியிருக்கின்றன.
பகலும் இரவும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்த மாலைப்பொழுதில்... மேற்கிலிருந்து அடித்த வாடைக் கச்சான் காற்று, கடற்கரையை பார்த்துக்கொண்டு நின்றிருந்த அந்தோனியின் பொத்தான்கள் இல்லாத சேர்ட்டை பின்னே தள்ளி நெஞ்சுக்கூட்டை குளிரினால் சில்லிட வைத்தது. -  “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” நாவலிலிருந்து சில வரிகளை மீட்டுப்பார்க்கும் நூலாசிரியர் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்,  தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் தனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும்தான் தன்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது என்று அவருடனான உரையாடலின் போது குறிப்பிடுகின்றார்.
கலைஞர் பாலச்சந்திரன் இலங்கையில் யாழ்மாவட்டத்தில் வடபகுதியில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் ஜூலை மாதம் 10ம் திகதி 1944ம் ஆண்டு பிறந்தவர். பாலச்சந்திரனின் தந்தையின் பெயர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பதாகும். எல்லோராலும் கலைஞராக அறியப்பட்ட இவர் சிறந்த ஒரு எழுத்தாளருமாவார். கனடாவில் வாழும் இவர் பல சிறுகதைகளை தினகரன், வீரகேசரி போன்ற வாரஇதழ்களில் எழுதியுள்ளார். சுமார் 250ம் மேற்பட்ட வானொலி நாடகங்களை இலங்கை வானொலிக்காக எழுதியிருக்கிறார் இவர் எழுதிய கிராமத்துக் கனவு, விழுதுகள், வாத்தியார் வீட்டில், மனமே மனமே போன்ற வானொலி தொடர் நாடகங்களும், தூரத்துச் சொந்தம், ஒருகை ஓசை, ஒருநாள் கூத்து போன்ற தொலைக்காட்சி நாடகங்களும் மறக்க முடியாதன. சுமார் 12 தொலைக்காட்சி நாடகங்களை எழுதியிருக்கும்; இவர், வை.ரி.லிங்கம், நாதன் நீதன் நேதன், போன்ற தொலைக்காட்சித் தொடர்களையும் எழுதி நெறிப்படுத்தியிருக்கின்றார். சுமார் 20 மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கியதோடு; இவர் சிரித்திரன், தினகரன், சிந்தாமணி போன்றவற்றில் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து ஒருபேப்பர், தாய்விடு, தூறல் போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் இதுவரை சுமார் 5 திரைப்படப்பிரதிகளை எழுதி, இயக்கியிருக்கின்றூர். இவர் ஒருபேப்பரில் எழுதிய அனுபவத் தொடர், ‘நேற்றுப்போல இருக்கிறது’ என்ற  பெயரில் நூல்வடிவில் வெளியாகவருக்கிறது.
இந்த நாவல் வெளிவந்தபோது பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் விமர்சகர்கள் பலர் அதைப்பற்றி விமர்சனம் செய்திருந்தார்கள். அவர்களில் செ.கலாயா – தினக்குரல், அதிபர் திரு.பொ.கனகசபாபதி, பி.எச். அப்துல் ஹமீட் - தீராநதி, என்.கே. மகாலிங்கம் - தாய்வீடு, பி.விக்னேஸ்வரன் - காலச்சுவடு, முல்லை அமுதன் - காற்றுவெளி, மனுவல் ஜேசுதாசன் - வீரகேசரி, குரு அரவிந்தன் - இணையம் - திண்ணை, பதிவுகள், தமிழ் ஆரம், கலைஞன் - இணையம் - யாழ்களம், வல்வை சாகரா - இணையம் - யாழ்களம் போன்றவற்றில் விமர்சனக் கட்டுரை எழுதி இவரது ஆளுமையை வெளியுலகிற்குத் தெரிய வைப்பதில் முன்னின்ற முக்கியமானவர்களை இங்கே குறிப்பிடலாம்.
கடலோடிகளின் கதையைச் சொல்லும் இந்த நாவல் பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் குறிப்பிடும் போது, தங்களைத் தாங்களே விமர்சகர்களாக ஆக்கிக் கொண்ட ஒருசில நவீன விமர்சகர்கள் ஈழத்து படைப்பிலக்கியத்தில் இந்த நாவலைச் சேர்த்துக் கொள்ளப் பின்நிற்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனென்றால் ஏதாவது தகாத வார்த்தைப் பிரயோகங்களையோ, அல்லது பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடிய சம்பவங்களையோ ஆசிரியர் இந்த நாவலில் எந்த ஒரு இடத்திலும் வலிந்து புகுத்தவில்லை என்பதே அவர்களின் பெரிய குறையாக இருக்கும். ஆசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆசிரியர் இந்த சூட்சுமத்தை அறிந்திருக்கவில்லையோ, அல்லது மொழி நாகரிகம், பண்பாடு கருதி, சமுதாயம் சீரழிய எழுத்தாளன் காரணமாக இருக்கக்கூடாது என்ற தனது கொள்கை காரணமாக இதைப் புகுத்தவில்லையோ தெரியவில்லை. முப்பத்தைந்து, நாற்பது வருடங்களுக்கு முன் ஈழத்தமிழ் கடலோடிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது, அவர்கள் எங்கே, எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள நீங்களும் விரும்பினால், இந்த அருமையான நாவலை ஒரு தடவையாவது வாசித்துப் பாருங்கள். மான்பாய்ஞ்சான் என்றொரு தமிழ் கிராமம் இருந்ததே அது எங்கே இருந்தது, அது ஏன்தொலைந்து போயிற்று என்று எங்கள் அடுத்த தலைமுறையினர்  தேடவேண்டி வந்தால் அதற்குப் பதில் சொல்ல இந்த நாவல் ஒரு ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஈழத்து ஓவியர் ரமணி இந்த நாவலுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். பி.எச். அப்துல் ஹமீதின் முன்னுரையோடு, இந்த நாவலை வடலி பதிப்பகத்தினர் சிறப்பாக வடிவமைத்து பிரசுரித்திருக்கிறார்கள். தனது பண்பட்ட எழுத்து மூலம் கனடிய தமிழ் இலக்கியத்திற்கு மேலும் வளம் சேர்க்க வேண்டும் என்று கலைஞர், எழுத்தாளர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நாங்களும் வாழ்த்துவோமாக!

நன்றி: வடக்கு வாசல் 


No comments: