மணத்துக்கு அரசியல் உண்டா ? இரண்டு கதைகள்
-தமயந்தி -
கதை/1
உள்ளிக்கு வந்த வாழ்வு!
1988ம் ஆண்டு. நான் அகதியாய் வந்த புதிது. செய்வதின்னதெனத் தெரியாது நானிருந்த அகதி முகாமுக்கு அண்மையிலிருந்த ரூசன்லி என்ற கடற்கரையின் பாறைகளின் மீது அமர்ந்தும், படுத்துறங்கியும் பொழுதுகளைக் கரைத்த காலமது. (எனது பல சிறுகதைகள் இந்தப் பாறை இடுக்குகளில்தான் பிரசவமாகின)
ஒரு நாள், உறவினனும் நண்பனுமான ஒருவன் என்னை ஒரு பழைய பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்துச் சென்றான். சுவரில் அறையப்பட்ட ஆணியில் தூசி படிந்தபடியே ஒரு ரஷ்யன் தயாரிப்பான செனித் கமெரா தொங்கிக்கொண்டிருந்தது. நான் பிறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே அது தயாரிக்கப்பட்டது. விலையைக் கேட்டேன் 500குரோனர்களென கடைக்காரக் கிழவர் சொன்னார். அடுத்து ஒருவாரத்தை சமாளிக்க என்னிடம் இருந்தது 500மட்டுமே. உடனே அதை எடுத்து அவரிடம் நீட்டி கமெராவைப் பெற்றுக் கொண்டேன்.
கடையிலிருந்து எனது அகதிக்கூடு வந்தடையும் மட்டும் என் நண்பன் பாடிய மங்களமிருக்கே.... சொல்லிமாளா. இந்தக் கடைகளிலெல்லாம் சொன்ன விலைக்கு யாருமே எந்தப் பொருளும் வாங்குவதில்லை. நோர்வேஜியரே எங்களைவிடப் பேரம் பேசித்தான் வாங்குவார்கள். அப்படி பேரம்பேசி 100, 150 குரோணர்களுக்கே இதனை வாங்கியிருக்க முடியுமென நீண்ட பிரசங்கமும், அறிவுரையும், திட்டல்களும். இவை எதுவுமே என் மண்டையில் ஏறவில்லை. காரணம் வெறுங்கையுடன் இருந்த எனக்கு இப்போ நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பெரிய ஆயுதம் கிடைத்த திருப்தி. இறக்கைகள் இல்லாமலேயே சிந்தனை ஒரு பருந்துக்கு ஒப்பானதாய் வானவெளியெங்கணும் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
விடிகாலையிலிருந்தே புறப்பட்டு விடுவேன். காடுகள், மலைகள், கடற்கரைகள், பாறைகள், சவக்காலைகள், குச்சொழுங்கைகளென கமெராவோடு அலைதலே நிரந்தரத் தொழிலாகி விட்டது. அப்படி அலைந்து கொண்டிருந்த ஒரு சமயத்தில்தான் நான் நண்பன் ஜீவமுரளியின் "ஒலிகளின் அரசியல்" கட்டுரைக்கு முகாந்திரமாய் சொல்ல வந்த இந்த சம்பவம் நடந்தது.
தெருவோரத்தின் நடைபாதையால் நடந்துகொண்டிருக்கிறேன். திடீரென என்னைத் தட்டிவிடுமாப்போல் மிகமிக அருகில் வந்து என்னைக் கடந்துசென்ற ஒரு சிவப்பு நிறக் காரிலிருந்து "க்வித்லொக்" (உள்ளிப்பூண்டு) என உரத்த குரலில் கோரஸாக கத்தியபடி கார் யன்னலூடாக விரலடித்துக் காட்டினார்கள். நோர்வேஜியர்கள் எம்மை நிந்திக்க, பழித்துரைக்க, வசைபாட உள்ளிப்பூண்டு என்ற இந்த வார்த்தையைத்தான் பாவிப்பார்களென அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இதுதான் நான் முதல் தடவையாக நேரடியாக எதிர் கொள்கிறேன். அந்தக் கணத்திலேயே தெருவோரத்தில் கிடந்த சொத்தம்பி பனங்கொட்டையளவு கல்லை எடுத்து குறி பார்த்து வேகமாய் எறிந்தேன். காரில் அது படும் என்றே நினைக்கவில்லை. பின்பக்கக் கண்ணாடியில் போய்த் தாக்கியது. கண்ணாடி நொருங்கியது. அல்பிரட் தம்பியையாவின் வயற்காணிக்குள் உயர்ந்து சடைத்து நின்ற இலுப்பை மரத்தில் கல்லெறிந்து காய்கள் விழுத்திய 70களின் கெட்டித்தனங்கள் இன்னும் மறைந்து விடவில்லை என்ற எண்ணம் ஒரு கணம் வந்து போனது.
சிகப்புக்கார் சடன்பிரேக் போட்டு நின்றது. காரிலிருந்து மூன்று வாட்டசாட்டமான இளைஞர்களும், அவர்கள் பின்னால் இரண்டு அழகிய இளைஞிகளும் என்னை நோக்கி வந்தனர். அவர்கள் இறங்கி வரும்போதே சடக் என எனது செனித் கமெராவால் அவர்களை ஒரு கிளிக் செய்து விட்டேன்.
பெரீய்ய வாக்குவாதம். "நீ இப்படி செய்ய முடியாது, இங்கு உனது செயலை நோர்வேஜியச் சட்டம் அனுமதிக்காது, உனக்கு சிறைத்தண்டனை கிடைக்கும்" இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். நான் சொன்னேன் "நீங்கள் என்னை இப்படி அவமதிக்கும் வார்த்தைகள் சொன்னால் மீண்டும் கல்லெறிவேன்" என்று. "இப்படி சொல்லாதே" என்றனர். "நீங்கள் சொன்னால் நான் எறிவேன்" என்றேன். சர்ச்சை நீண்டுகொண்டே போனது. இரண்டு பெண்களும் அவர்களை இடைமறித்து, அவர்களது தவறை சுட்டிக்காட்டி, சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். அவர்கள் என்னோடு விவாதம் செய்து கொண்டிருக்கும்போதே வேலியோரங்களில் அடுத்து இன்னும் எங்கெங்கு கற்கள் கிடக்கின்றன என கண்களால் கணக்குப்போட்டு வத்து விட்டேன்.
காரில் சென்று ஏறும்போது ஒருவன் மீண்டும் விரலடித்துக் காட்டினான். ஏற்கனவே அவதானித்து வைத்திருந்த கற்களில் ஒன்றை ஓடிப்போய் எடுத்து எறிய ஓங்கினேன். இரண்டு கைகளையும் உயர்த்தி "மன்னித்துக்கொள், மன்னித்துக்கொள்..." எனக் கத்தினான். ஒரு கையில் கண்ணகிசிலை சிலம்பை ஏந்தியதுபோல் கல்லை ஏந்தியபடி மறு கையால் "ஓடிப்போ" என்பதாய் சைகை செய்தேன். அவர்கள் போய் விட்டார்கள்.
நாம் விரும்பித் தின்னும் உள்ளிப்பூண்டை, பத்தியங்களுக்கு பேருதவியாயிருக்கும் உள்ளிப்பூண்டை, குழந்தை பெற்ற தாய்மாரின் வயிற்றுப்புண்ணை ஆற்றிய உள்ளிப்பூண்டை, எனது அப்பு பேதுருவை வாய்வு உபாதையிலிருந்து மீட்டெடுக்க ஆச்சி அன்னம்மா கைப்பக்குவமாய் வைக்கும் ரசத்தில் நடு நாயமாய் அலங்கரிக்கும் உள்ளிப்பூண்டை, நாம் ஆழ்கடலில் சுழியோடி கடலட்டை, சங்கு சிங்கறால் பிடித்த காலங்களில் ஏற்படும் காதுக்குத்துக்கு நெருப்பில் வாட்டி காதுக்குள் சொருகி வைத்து வலி அகற்றும் உள்ளிப்பூண்டை வைத்தே இவர்கள் எம்மை அடிக்கிறார்களே என்ற ஆதங்கத்தை சுமந்தபடி மீண்டும் ரூசன்லி கடற்கரையின் பாறைகளைத் தேடி நடந்தேன். எனது "சரக்குத்தண்ணி" என்ற சிறுகதை அப்போதான் பிரசவமானது.
1999ம் ஆண்டு.
நான் பணி புரியும் நோர்வேஜிய தினப்பத்திரிகையில் அடுத்த நாளுக்குரிய செய்திப் படங்களை எனது டெஸ்கிலிருந்து செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு மீற்றர் இடைவெளியில் டெஸ்கில் அமர்ந்திருந்து தனக்கான பணிகளை செய்து கொண்டிருந்தான் எனது சக நிழற்படப்பிடிப்பாள நோர்வேஜிய நண்பன் அந்த்ரே. அவன் எதையோ கறுக்கு புறுக்கு என சப்பிக்கொண்டிருந்தான். "என்ன...?" எனக் கேட்கும் பாவனையில் அவனைப் பார்த்தேன். விளங்கிக்கொண்டவன் தனது காற்சட்டைப் பையிலிருந்து கடலைக்கொட்டைகள் போல் ஒரு சிறங்கையை எடுத்து எனது பக்கம் நீட்டி சொன்னான் "நீயும் சாப்பிடு நண்பா, இது இதயத்துக்கு நல்லது, இரத்தத்தை சுத்திகரிக்கும், இயற்கை மருந்து நீயும் சாப்பிடு" என்றான். அவனது உள்ளங்கையில் உரித்த உள்ளிப்பற்கள் சிரித்துக்கொண்டிருந்தன.
மதியவுணவு இடைவேளையின்போது அவனிடம் சொன்னேன் "எம்மை இந்த நாட்டில் உள்ளிப்பூண்டு எனச் சொல்லித்தானே இத்தனை காலம் அவமதிப்பு செய்தார்கள்" என. அவன் சொன்னான் "நானும் அதை செய்திருக்கிறேன் நண்பா, அப்போதெல்லாம் இதன் அருமை எனக்குத் தெரியாது. அப்போ இது எனக்குக் கெட்ட மணமாய் இருந்தது. இப்போ எனக்கு மிகவும் பிடித்தமான மணமாய் உணர்கிறேன். எனது வீட்டில் உள்ளியில் தயாரிக்கப்பட்ட கிறீம், சீஸ், பட்டர், எண்ணெய் எல்லாமும் உண்டு தெரியுமா?" என்றான்.
வாழ்க உள்ளியின் வாசம், ஓங்குக உள்ளியின் புகள்!!
உள்ளிக்கு ஏற்பட்ட இந்த வாழ்வானது இப்போ எமது தேவைக்கு கிடைக்க மாட்டேனென்கிறது.
கதை/2
தூள்க்குழம்புக்கு வந்த வாழ்வு!
எமது மகள் இலக்கியா படிக்கும் பாடசாலை எங்கள் வீட்டிலிருந்து 100 அல்லது 120மீற்றர் தொலைவில்தான் அமைந்திருக்கிறது. மதியம் 12மணிக்கு சாப்பாட்டு இடவேளை மணி ஒலித்ததும் வீட்டுக்கு ஓடி வருவாள். முதல் நாள் சமைத்த குழம்புச் சட்டிக்குள் சோற்றைப் போட்டுப் பிரட்டி சூடாக்கிச் சாப்பிட்டு விட்டுத்தான் போவாள்.
நானும் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன் "இப்படி குழம்பு சாப்பிட்டுப் போனால் வகுப்பில் பக்கத்திலிருக்கும் பிள்ளைகளுக்கு மணக்குமே" என்று. இதற்கு அவள் எனக்குத் தரும் பதில் "அப்பா... அவங்கட உடம்பிலயிருந்து மணக்கிற புளிச்சபால் மணத்தவிட இது நல்லாத்தானேயப்பா இருக்கு?, அவங்களும் தாங்க விரும்பின பாதி வெந்த மீன், அரைப்பச்சை இறச்சி எண்டு சாப்பாடுகளக் கொண்டு வந்து சாப்பிடுகிறாங்கள்தானே?"
நானும் விக்கிரமாதித்தன் போல் அப்பப்போ முயற்சி எடுப்பேன், அவளும் வேதாளம்போல் ஒற்றை வரியில் கேள்விகளைக் கேட்டுவிட்டு குழம்புச்சட்டியோடு மரத்திலேறி விடுவாள். காலப்போக்கில் பழைய குழம்புக்கறியையும் சோற்றையும் பொட்டலமாகவே கட்டிக்கொண்டு பாடசாலைக்கே கொண்டு போகத் தொடங்கி விட்டாள்.
"ம்... நல்ல வாசமா இருக்கே இலக்கியா... கொஞ்சம் சுவை பார்க்கத் தருவாயா..?" எனக் கேட்ட இவளது நண்ப நண்பிகளுக்கு குழம்புக் குழையலைக் கொடுத்திருக்கிறாள். உறைப்புத் தாங்க முடியாமல் தண்ணீரைக் குடித்துக் குடித்து சாப்பிட்டிருக்கிறார்கள். அப்படியே பழகியும் விட்டார்கள். வகுப்பாசிரியரையும் விட்டு வைக்கவிலை.
ஒரு நாள் சமையற்கலை பாடத்தின் போது நான் அழைக்கப்பட்டேன். கோழிக்குழம்பு சமைப்பது எப்படியென சமைத்தும் காட்டினேன். கூடவே ரொட்டி. ரொட்டியுமில்லை, குழம்புச் சட்டியுமில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் எல்லாவற்றையுமே காலி பண்ணி விட்டார்கள். இப்போ குறைந்தது மாதத்தில் ஒரு தடவையாவது இலக்கியாவின் நண்ப நண்பிகள் ஐந்தாறுபேர் வீட்டுக்கு வந்து எமது சாப்பாட்டை சாப்பிட்டுப் போகிறார்கள். பல தடவைகள் நண்பர்குழாமோடு அவர்களது வீடுகளுக்கும் சென்று தாமே எமது சமையலை செய்து சாப்பிடத் தொடங்கி விட்டார்கள்.
தேவைகள்தான் மணத்தின் மீதான விருப்பு வெறுப்புக்களைத் தீர்மானிக்கிறதென நான் நினைக்கிறேன்.
யாராவது விழாம்பழ ஜாம் சாப்பிட்டிருக்கிறீர்களா....? என்ன சுவை!
அந்த ஜாமை மணந்து பார்த்திருக்கிறீர்களா...?
புளித்த மணத்தோடு வயிற்றால போகுமே அதே மணம்தான் இல்லையா?!
ஆனாலும் சாப்பிடுகிறோம்.
இங்கே தேவைதானே முன்னுக்கு நிற்கிறது.
No comments:
Post a Comment