Monday, November 29, 2010

கொண்டை பூவைத் தேடுது.

வண்டி கூழைத் தேடுது.


-வ.அழகலிங்கம்-

28 நொவெம்பர் 2010 சன்டே ஒப்சேவர் ஆசிரியர் ஓர் அற்புதமான ஆசிரியர் கருத்தைத் தீட்டியுள்ளார். அதிலே அவர் கொழும்பில் வசித்த சேரிவாழ் வறியவர்களுள் வறியவர்களான மக்கள் தொகை 1998 புள்ளி விபரப்படி 65000 குடும்பங்கள் இருந்ததென்றும், இன்றய புள்ளிவிபரக் கணக்கெடுப்பு 75000 குடும்பங்கள் என்றும் அவரே கூறியுள்ளார். இந்தச் சனத்தொகை கொழும்புவாழ் மக்களில் அரைப்பங்காகும்.

இந்த சேரிக் குடியிருப்பு என்று சொல்லப்படும் இந்த முதலாளித்துவ அமைப்பின் இருண்ட கடைக் கோடியில் வாழ்ந்த மக்கள் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் நகரசுத்தித் தொழிலாளர்களாகும். மற்றயோர் இலங்கையின் பெருந்தோட்டச் செய்கைக்காகக் காணிகள் பறிக்கப்பட்டு தோட்டப் புறங்களிலிருந்து துரத்தப்பட்ட சிங்களக் குடும்பங்களும் பலசமுதாய காரணங்களால் செம்மையாகப் பராமரிக்காமல் கைவிடப்பட்டுப் பெருகிய வறிய முஸ்லீம் குடும்பசகோதருர்களாகும். இவர்கள் அதிகமாக தேங்கிய நீர்த்தேக்கங்களுக்கு அருகாமையிலும் நாறிமணக்கும் வடிகால்களுக்கு அருகாமையில் வாழ்வதால் யானைக்கால் நோய் மலேரியா டெங்குக் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்களாகும்.
துரத்தப்பட்ட இந்த வறியவர்களுள் வறியவாகளின் அவலங்களுக்கான பெரிய பொறுப்பை யூஎன்.பியே எடுக்க வேண்;டும் என்று ஒப்சேவர் ஆசிரியர் கூறுகின்றார்.
The UNP should take the major share of the blame for the sufferings of the poorest of the poor in the city.
ஆளுவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி. துரத்துவது ராஜபக்ஸ்ச நிர்வாகம். அவலங்களுக்கான பொறுப்பு யூ.என்.பி க்கு. விந்தையான ஆசிரியர் கருத்து.

இவர்களை மீண்டும் குடியேற்ற ஒரு குடும்பத்திற்கு ரூபா2.5 மில்லியன் தேவைப் படுவதாகும். இது ஒப்சேவர் ஆசிரியரின் மதிப்பீடாகும். இந்தக் குடும்பங்களை மீளக் குடியமர்த்த இரண்டரை மில்லியன் ரூபா தேவையென்றால் வடகீழ்மாகாணத்தில் போர்க்கொடுமையால் உடுத்த உடுப்போடு குமர்ப் பெண்பிள்ளைகள் கூட மாற்றிக்கட்ட உடுப்பேதுமின்றி ஏதிலிகளாகிய மக்களைக் குடியமர்த்த எவ்வளவு காசு வேண்டும் என்று நாம் சொல்லி விளங்க வேண்டிய அவசியமில்லை.

போர் முடிந்ததுதான் தாமதம் யாழ்பாணத்தில் இருந்து புலிப் பாசிசத்தால் இனச் சுத்திகரிப்புக்காகத் துரத்தப்பட்ட  முஸ்லீம் குடும்பங்களைக் குடியமர்த்தும்படி கேட்ட பொழுது  அரசாங்கம் என்ன சொன்னது. இப்பொழுது வன்னி அகதிகளைக் குடியேற்ற வேண்டிய பெரும் சுமை உள்ளது. மறுப்பதற்கு இல்லை. அதன் பின்பு இவர்களைக் குடியேற்றலாம்.

இந்தக் கூற்றுக்கு ஏதும் அர்த்தம் இருக்குமானால் போர்க் கொடூர அகதிகளைக் மீள்குடியமர்த்திய பின்பு பலாத்காரமாகத் துரத்தப்பட்ட முஸ்லீம் அகதிகளைக் குடியமர்த்திப் புனருத்தாரணம் செய்து அதன் பின்பு இந்தச் சேரி ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். முப்பது வருட யுத்த அவலத்தை பொறுமையோடு காத்திருந்தவர்கள் இதற்கும் சிறிகாலம் பொறுத்திருக்கலாம்.

உண்மையை ஆசிரியரின் எழுத்திலிருந்தே விளங்கலாம்.
ஓரு கணிசமான சட்டபூர்வமற்ற
There is a considerable number of unauthorised structures on valuable lands, which could be exploited for better business ventures. Investors could recover their investment at any time
Private sector institutions engaged in business in the city also benefit from the program immensely .

சேரிக்குடிசைகள் பெறுமதி வாய்ந்த நிலங்களிலே கட்டப்பட்டுள்ளன. இவைகளை நல்ல வர்த்தகத்திற்காகச் சுறண்ட வேண்டும். இங்கே முதலிடுபவர்கள் தாங்கள் முதலிட்ட மூலதனத்தை சிக்கிரத்திலேயே மீண்டும் பெற்று விடலாம்; இங்கே செயற்படும் தனிப்பட்ட முதலாளிகளும் இந்த வேலைத்திட்டத்தால் பயன் பெறுவர்.;

மாநகரசபையை புதிய அழகுடன் மிளிரவைப்பதற்கு மாநகரசபை அபிருத்தி அதிகாரசபை முழு ஆதரவையும் வழங்கியுள்ளது.

கொழும்பிலே அழகுவெள்ளம் ததும்பிவழியப் போகின்றது. நடைபாதைகள் அழகுபடுத்தப்பட உள்ளன. கட்டிடக் கலை வல்லுனர்களால் திட்டமிடப்பட்ட சாலைவட்டங்களும் அதன் மத்தியில் அழகுத்தீவுகளும் பூஞ்சோலைகளும் பூச்சாடிகளும் கொழும்பையே அழகாபுரியாக உரு மாற்றுவதோடு சூழலியல் அனுதாப நகர்கப் போகிறது. இதனால் கொழும்புவாழ் மக்கள் மட்டும் பயனடையப் போவதில்லை. வர்த்தகத்திலே ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் பெரும் பயனை அடைய உள்ளன.

ஜனாதிபதி ராஜபக்ஸ்ச அடிக்கடி விடும் வண்டுவாணங்களில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வையே தமிழ்மக்களுக்கான தீர்வாகக் கொடுப்பேன் என்று அடிக்கடி கூறியுள்ளார். அண்மையில் இந்துப் பத்திரிகை ஆசிரியர் ராமுக்கு வழங்கிய செவ்வியின் ஒரு பந்தியைப் பாருங்கள்.

அரசியல் நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பிக்கும்போது எதிரணி ஒத்துழைக்க வேண்டும். சகலரும் தீர்வுக்கு சம்மதிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட தீர்வல்ல. இது மக்களின் தீர்வு. இது அடிமட்டத்திலிருந்து ஏற்படும் தீர்வு. இறக்குமதி செய்யப்பட்டதல்ல. இதனைப் பலவந்தமாகத் திணிக்க முடியாது. இது மக்களிடமிருந்து வர வேண்டும். இந்தத் தீர்வையே நாம் விரும்புகின்றோம்.'

1.இந்தச் சேரிமக்களை வெளியேற்றும் பொழுது மக்களின் எந்த அபிப்பிரயத்தையாவது கேட்டாரா? அல்லது எதிர்க்கட்சியைத்தான் கேட்டாரா?

2. அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும்பொழுது மக்களிடம் ராஜபக்ஸ்ச அபிப்பிராயம் கேட்டாரோ? கருத்துக் கணிப்பு எடுத்தாரா?

3.விலைவாசிகளைக் கூட்டும்போழுது மக்களிடம் கேட்டு எப்பொழுதாவது கூட்டியிருக்கிறாரா?

4. சர்வதேச நாணயசபைக்கு 2.6 பில்லியன் கடன் வாங்கும் பொழுது சமூகசேவைச் செலவீனங்களை வெட்டுவேன் என்று சத்தியம் செய்தே பெற்றார். சமூக சேவைகளை வெட்டுவது திண்ணம். எல்லா மக்களிடமும் கேட்டு வெட்டுகிறாரோ என்று இருந்து பார்க்கலாம். போன கிழமை நெருக்கடியில் சிக்கிய அயர்லாந்து, சர்வதேச நாணய நிதியத்திடம் அது போட்ட நிபந்தனையின் கீழ் கடன் பெறுவதை மறுத்துள்ளது.

கற்றுக்குட்டி ராஜபக்ஸ்ச:-

அண்மையில் தமிழ் அரங்கத்தினருடன் பேசும்பொழுது ராஜபக்ஸ்ச கூறினார்:-

'கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படி கூற முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.'

கொழும்பு பெரு நகரம் மாத்திரமல்ல அது தலை நகரம். தலை நகரம் மாத்திரமலல அது ஒரு துறைமுக நகரம். சர்வதேச விமான நிலயம் பாரளுமன்றம, மத்தியவங்கி, அதிசிறந்த வைத்திய சாலைகள் உள்ள நகரம். பல்கலைக் கழகம,; உயர் நீதி மன்றம், சர்வதேச நான்கு நட்சத்திர விடுதிகள், விபச்சாரவிடுதி , சிறைச்சாலையென்று எல்லாமே செறிந்துள்ள நகரம். மற்றய கிரமப் புறங்களைக் காட்டிலும் அதிகவேலைவாய்ப்பு, கல்வி கற்று முன்னேறுவதற்கான வாய்ப்பு, சர்வதேசத் தொடர்பும், போக்குவரத்து என்று நிறைய வாய்ப்புக்கள் உள்ள தலைநகரம். அதை நோக்கி கிராமப்புற மக்கள் பெருக் கெடுப்பது இயற்கை நியதியும் பொருளாதார நிர்ப்பந்தமுமாகும். கொழும்பு வரலாற்று ரீதியாகத் தமிழ் முஸ்லீம் மக்களின் பிரதேசம். கொழும்பு மாத்திரமல்ல கொழும்பு பாணந்துறை கழுத்துறை காலியென்று இங்குள்ள மிகப் பழமையான இந்துக் கோவில்களே சாட்சி. கொழும்பு துறைமுகத்தில் மிகப் பெரும்பான்மையான மாலையாளத்தவர் வேலை செய்ததும் கொழும்பில் நூறு வருடங்களுக்கு மேலான நாட்டுக் கோட்டைச் செட்டிகளின் வங்கிகளெல்லாம் இருந்தது வரலாறு. இலங்கையில் புத்த சமயம்பரவியபோது உயிர்க் கொலை செய்யும் மீன் பிடித் தொழிலை புத்த சமயத்தவர் செய்ய முடியாமையால் அவர்கள் கரையோரங்களை விட்டு நகர்ந்தது எல்லாம் இயற்கையே. போர்த்துக்கேயர் வர முன்பே கொழும்பின் தமிழ் முஸ்லீங்கள் பெரும்பான்மையாக வாழ்ந்ததை சரித்திர ஆதாரங்களும் போர்துக்கீசரின் குறிப்புக்களும் எடுத்தியம்புகின்றன. இவைகள் அல்ல பிரச்சனை.

யுத்தத்தால் கல்லுக்குமேல் கல் இல்லாமல் பெரிய தொழில்சாலையோ வடிகால்களோ நீர்வினியோகமோ மற்தைய இயற்கை வசதிகளோ இல்லாத இடத்தில் சிங்கள மக்கள் விரும்பிக் குடியிருக்கச் சென்றிரார். ஏதோ அப்பாவிச் சிங்கள மக்களை சிங்கள இனவாதத்திற்கு எதிராகப் போராடிய எந்தச் சுவடையும் வரலாற்றால் பதித்திராத ராஜபக்ஸ்ச குடியேற்றியது அற்ப நோக்கத்திற்காக. வெகு சீக்கிரத்தில் அவர்களே அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்புவதும் சீக்கிரம் நடக்கவிருக்கும் நிகழ்வுப் போக்கு. யாழ்ப்பாணத்திலே காசு உழைப்பதற்கு வசதி இருந்திருந்தால் அப்பாவி ரிஷான சவுதி அரேபியாவுக்குப் போய் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்க மாட்டார். மற்றய இலங்கைப் பெண்கள் லட்சக் கணக்கில் மத்திய கிழக்குக்குப் போய் மானபங்கப் படமாட்டார்.

நவீன முதலாளித்துவ அபிவிருத்தி வரலாற்றில்  நகரத்தில் கிராமங்களை விடச் சனங்கள் நெரிசலாகத் திரள்வதும், கிராமத்திற்கும் நகரத்திற்குமிடையே பெரும் முரண்பாடு நிகழ்வதும் வரலாறு திருப்பித் திருப்பி பதிவில் வைத்துள்ளது. ராஜ ப்க்ஸ்சவின் பேரன் பிறக்கமுன்னரே கொழும்பில் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதும் கொழும்பை நோக்கி இலங்கையின் எல்லாக் கிராமப்புற மக்களும் குடிபெயர்ந்தார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இலங்கை வரலாற்றையாண்ட அரசியற் தலைவர்களில் மிகவும் கற்றுக் குட்டியான ராஜபக்ஸ்சவுக்கு இவைகள் எப்படித் தெரியப் போகிறது. எப்படி பிரபாகரனைச் சூழ ஒரு கூட்டம் சந்தர்ப்ப வாதக்கும்பல் இருந்து பிரபாகரனை முருகனுக்கு நிகரானவன் என்று புழுகிப் புழுகிக் கழுத்தறுத்தார்களோ அப்படியே இன்று ராஜபக்ஸ்சவைப் புழுகியே வயிறு வளாக்கும் ஒரு கூட்டம் ராஜபக்ஸ்சவுக்கு சவக்குழியைக் கிண்டிக் கொண்டிருக்கின்றது. இன்று புலி ஒடுக்குமுறை அறவே அற்ற நிலையில் ஒடுக்குமறையின் ஏகாபோகமாக இலங்கை அரசு இருக்கும் பொழுது ராஜபக்ஸ்சவுக்குச் சாமரைவீசும் தமிழ் ஊடகங்களும் மூலதர்மமற்ற அரசியல் வாதிகளும் அவமானகரமாக மண்கௌவுவது வரலாற்று நிகழ்ச்சியாகும். உலக வங்கி, பொருளாதார, அரசியல்  ராஜதந்திர நெருக்கடிகளைக் கவனிப்பவர்களுக்கு ராஜபக்ஸ்சவின் அற்ப அரசியல் ஆயுளைத் தீர்மானிப்பது மிகச் சுலபமான காரியமாகும்.

No comments: