Monday, November 08, 2010

ராகுல் சாங்கிருத்தியாயன்

வால்காவிலிருந்து கங்கைவரை
நூலாசிரியர்  ராகுல் சாங்கிருத்தியாயன்  
பற்றிச் சில…….. 


சுதந்திர கால இந்தியாவிற்கு முன்பிருந்த ஐக்கிய மகாணம் ஆஜம்கட் ஜில்லாவில் பாத்ரா என்ற சிற்றூரில் வைதீக வைஷ்ணவர் என்ற மிக மிக உயர்குலம் என்ற கூறிக்கொள்ளும் பார்பனக் குலத்தில் ஏப்ரல் 9.1893ல் பிறந்தவர்.
சிறுவயது முற்கொண்ட தன் குலத்திற்கு வெளியேயுள்ள சிறுவர்களுடன் பழகுவதும் வீட்டைவிட்டு அடிக்கடி ஓடிவிடுவதும் இவரது பழக்கமாக இருந்துள்ளது. ஆனாலும் சற்று மனம் நிலைப்பட்டு ஆர்யமுசாபிர் வித்யா என்ற கல்வி நிறுவனத்தில் சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுத்தேர்ந்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை இவரின் எண்ணத்தையும் மாற்றியது. 1919களில் இந்திய விடுதலைப் போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொண்டார். அதனால் ஆங்கில அரசால் சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் வாழ்நதார். சிறை வாழ்ககையில் குர்ஆனை சமஸ்கிருத்தில் மொழி பெயர்த்தார். சுதந்திர இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிராசத்துடன் இணைந்து அரசியலில் பணியாற்றினார். ஆஜம்கட் ஜில்லாவின் காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
ஒருமுறை தனது நண்பர் ஒருவரின் கிராமத்திற்குச் சென்று கிணறு ஒன்று தோண்டிக் கொண்டிருந்தபோது சுட்ட செங்கல் உடைபட்டு வருவதைக் கண்டார். உடன் கிணறு தோன்றுவதை நிறுத்திவிட்டு பக்குவமாக செங்கள்கள் சிதையாதவாறு தோண்டச்செய்தார்.  அந்த செங்கள்களில் முத்திரையாக பதிக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று கூட்டி வரிசைப்படுத்தி படித்தார். அது பழங்கோவில் ஒன்று எனறும் மேற்கு நாடுகளான டெஹ்ரான், பலுசிஸ்தான் நாடுகளுடனான தொடர்புகள் பற்றி அது கூறுகிறது என்றும் கண்டுகொண்டார். இன்றும் பாட்னா அருட்காட்சியகத்தில் அவரால் ஒப்படைக்கப்பட்ட இச்செங்கற்கள் அவரின் பெயரில் சிறப்பிக்கப்பட்டு காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு அவரின் அறிவுத்தேடல் தாகம் பன்மடங்காகியது. பௌத்த தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு பௌத்த துறவியானார். திபெத். சீனா மஞ்சூரியா இலங்கை ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். பௌத்தத்தின் உண்மையான சாராம்சங்களை ஆய்வுசெய்து அறிந்துகொண்டார். பௌத்தம் சிதைக்கப்பட்டுவிட்டது. மஹாயாணமும் ஹீணயானமும் போலித் தத்துவ விரிவுரைகள் என்பது இவரால் நிறுபிக்கப்பட்டது.
அறிவுத் தாகத்தின் தேடல் இவரை கம்யுனிசக்கோட்பாட்டிற்கள் ஈர்த்தது. அதன்பிறகு இவர் எழுதிய விஞ்ஞானலோகவாதம் பொதுவுடைமைதான் என்ன?, வால்காவிலிருந்து கங்கை வரை,சிந்து முதல் கங்கை வரை,  இசுலாமிய பௌத்த ஐரோப்பிய தத்துவ இயல்கள் போன்றவை மிக  அதிகமாக மக்களால் வரவேற்க்கப்பட்டது.
முறையாக படித்து பட்டம் பெறாத இவரின் அறிவு நுட்பத்திறமைகளாக ருஷ்யாவின் லெனின்கிராடு பல்கலைக்கழகம் 1937- 38லும் 1947- 48லும் பேராசியர் பணிக்கமர்த்தி கௌரவித்தது.
இவரின் 150 புத்தகங்களும் இந்திய மற்றம் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு அறிவுக் கலஞ்சியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நூலைப்பற்றிச்சில…
ஒரு சிந்தனையாளரின் தன் வாழ்நாள் முழுவதும் தேடித்திரட்டிய அறிவுச் செல்வம் இந்நூலிலேயே எளிமையான கதை வடிவங்களில் அள்ளித் தரப்பட்டுள்ளது.
இந்நூலின் தொடக்க கதைகளான நிஷா, திவா, அமிர்தாஸவன், புருசூதன் என்ற நான்கும் ஏறக்குறைய கி.மு.6000த்திலிருந்து கி.மு.2500 வரையிலான காலகட்டத்தில் மனித சமுதாயம் வாழ்ந்த நிலையை விளக்குகிறது. அது ஏடறிந்த வரலாற்றுக்காலத்திற்க்கு முந்தைய வரலாறு. இன்று நாம் பல படிமங்களை (Fossils) கண்டெடுத்துள்ளதால் இதனை வெறும் கற்பனை என்று ஒதுக்க முடியாது.
அடுத்துவரும் புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன் என்ற நான்கு கதைகளும் கி.மு.2000லிருந்து கி.மு.400வரை 1600 ஆண்டுகளுக்கான மனித சமுதாயத்தின் வாழ்க்கையும் பண்பாடுகளையும் விளக்குபவனாக உள்ளன.  இதற்கு இந்து மதத்தின் நான்கு வேதங்கள், மகாபாரதக்கதைகள், பௌத்கிரந்தமான, அட்டகதாசாந்தோக்ய உபநிடதம், மிருகதாரணய உபநிடதம் ஆகியன சாட்சிகளாக உள்ளன.
ஒன்பதாவது கதை பந்துலமல்லன் (கி.மு.790) கதைக்கு முழு முற்றான ஆதாரங்கள் பௌத்த நூல்களிலிருந்து எடுக்கபபட்டவை.
(கி.மு.335) பத்தாவது கதை நாகதத்தனின் ஆதாரமாக சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரம் கிரேக்கர்களின் யாத்திரை வரலாற்று நூல்கள் ஆகியன அசைக்க முடியாத சாட்சியாக உள்ளன.
(கி.மு.50) பதினொராவது கதை பிரபா ராகுல்ஜியின் இலக்கிய வளத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அஸ்வகோஷ் எழுதிய புத்த சரித்திரம், சௌந்தரியானந்தம் வின்டர் நிட்ஜ் எழுதிய “இந்திய இலக்கியத்தின் சரித்திரம்”  இக்கதைக்கு பின்புலமாக உள்ளன.
பன்னிரண்டாவது கதையான சுர்ணயௌதேயன் குப்தாகாலக் கதை. (காலம் கி.பி.420) காளிதாசனின் ரகுவம்சம்,  சாகுந்தலம்,  குமாரசம்பவம் என்ற காவியங்கள் சொல்லும் பண்பாட்டு மூலக்கூறுகளிலிருந்து தொகுக்கப்பட்ட கதை.
பதிமூன்றாவது கதையான துர்முகன் ( காலம் கி.பி.630) வில்லிருந்து விடுபட்ட அம்பு நெஞ்சைத் தைப்பதுபோல் ஹர்ஷ சரித்திரம், காதம்பரியம், சீனப்பயணி இத்சிங்கின் யாத்திரை வரலாறு ஆகியனவற்றிலிருந்து எடுக்கப்பட்டு அரசாங்கத்தின் வராற்று பாடங்களின் புழுகுகளை வெட்டி வீழ்த்துகிறது.
பதினான்காவது கதை சங்கரபரணி (காலம் கி.பி.1200) யின் ஆதாரங்களாக நைடதத்தமும், சிலாசாசனமும் உள்ளன. அதன் பின்வரும் கதைகள் 7ம் கி.பி1200 லிருந்து கி.பி.1900 வரையிலான காலகண்ணாடிகள். அவைகளுக்கு ஆவணக் காப்பகங்களும் அருட்காட்சியகங்களும் அசைக்க முடியா சாட்சிகளாக உள்ளன.
இங்கு ஆதாரமாக தரப்பட்டுள்ள இலக்கியங்கள் இந்நுலுக்கு அணிந்துரை எழுதிய பதந்தானந்த கௌசல்யாயன் அணிந்துரையிலிருந்து தந்துள்ளோம். மண், கல் தாமிரம், பித்தளை, இரும்பு ஆகியவற்றில் எழுதப்பட்டும் வரையப்பட்டும் உள்ள வரலாறுகள் நுற்றுக்கணக்கான இலக்கியங்கள் எழுத்துவடிவம் பெறாத கதைகள் பாடல்கள் பலநாட்டின் பழக்க வழக்கங்கள் புதைபொருள்கள் ஆகிய எண்ணிடங்காதவைகளை தனது சமூக உணர்வால் சளைக்காமல் தேடிய ராகுல்ஜி அது அத்தனையையும் நமக்கு மனச் சோர்வைடயாது எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கதைகளாகத் தந்துள்ளார்.
அதுபோல் ஆளும் வர்க்கமும் அதைச்சார்ந்து வாழும் இலக்கியவாதிகளும் தன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் நியாயமும், புகழாரமும் சூட்டிக் கொள்ளவும் தான் செய்வர்.
இலக்கியங்களைப் பொருத்தவரை கற்பனைப் புனைவுகள் மிகைப்படுத்தப்பட்டு அலங்காரமாக எழுதப்பட்டிருக்கும் ஆனாலும் உண்மையான பண்பாடுகளும் பதிவு செய்யப்பட்டே இருக்கும். எடுத்துக்காட்டாக கி.பி.2500ல் இன்றைய நமது திரைப்படங்களை பாக்கும் நமது சந்நததிகள் கதாநாயன் வானில் பல்டி அடித்து சண்டை செய்யும் காட்சிகளை உண்மை என்று நம்புவான் என்பது எப்படிமுடியாதோ அதுபோல் ராகுல்ஜி அவைகளைப் பகுத்தறிந்தே உண்மைகளை அப்பட்டமாக எழுதியுள்ளார். அதனால் அவர் பலதுன்பங்களும் அடைந்துள்ளார். குறிப்பாக பார்ப்பனர்களிடமிருந்து பட்ட துன்பங்கள் பல.
இக்கதைகளின் அடிப்படையை சாயாக புரிந்து கொள்ளாத பல அறிவுஜீவிகள் அவா பாப்பனக் குடியிருப்பில் பிறந்நததால் பார்பனர்களை உயர்வுபடுத்தி எழுதியுள்ளார் என கூறுகின்றனர்.
ஒவ்வொரு கதையிலும் அக்கதையின் நாயகர்களின் வாயிலாக அன்றைவர்க்கப் பிரிவினரின் சிந்தனைகளை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக அசுரர்கள் பற்றி எழுதிய கதையில் அசுரர்கள் அடிமைகள் வைத்திருந்ததையும், விபச்சாரம், வணிகம், போர்த்திறன் குன்றியநிலை,  தனியுடைமைச் சிந்தனை ஆகியவைகளை புராதன பொதுவுடைமையில் வாழ்ந்த ஆரிய வந்தேரிகள் இழிவாக பேசுவதுபோல் கதை அமைந்திருக்கும். மேலோட்டமாக படிக்கும் நமக்கும் அசுரர்களை இழிவுபடுத்துவதாகவே தெரியும்.ஆனால் அவர் அக்கதையில் புராதான பொதுவுடைமை அமைப்பிலிருந்து முன்னேறி நகர அமைப்பிலும் மன்னராட்சி வடிவங்களில் மாறியுள்ளதையும் அவ்வாறு அடிமைகள் உட்பட வணிகம் சொத்து என்று தனியுடைமையிலும் கூலி அரசப்படை அமைப்பிலும் மாற்றம் பெற்றுள்ளதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதை இவர்கள் காணத் தவறிவிடுகின்றனர். தனியுடைமையில் வாழும் ஒரு சமுதாயம் போர் செய்யும் பண்புகளை இயல்பாகவே இழந்துவிடும். காரணம் அவர்களுக்கான கூலிப்படை அவ்வேலையைச் செய்வதால் ஆண்டைகள் சுகபோக வாழ்வினால் இப்பண்புகளை இழந்துவிடுவதே. மனிதனை மனிதனே அடிமையாக வைத்திருப்பதைபற்றி கொஞ்சமும் அறியாதவன் அதனை இகழத்தானே செய்வான்? அவ்வுணர்வை அது உள்ளபடி தானே பதிவு செய்ய முடியும்?
ஆரிய படையெடுப்பு, இனக்கலப்பு, பார்பனர்கள் மாமிச உண்ணிகள் உடன்கட்டை ஏறுதல், அவர்களுடைய வேதங்களின் பொய் புரட்டுகள்,  யாகங்கள் போன்ற மோசடிகள் ஆகியனவற்றை எல்லாம் அழுத்தமாக இக்கதைகளில் ராகுல்ஜி பதிவு செய்துள்ளார். இவருக்கு பார்ப்பனமுத்திரை குத்துவது அறிவீனம்.
இந்நுல் சிறுவர்களும் எளிதாக படித்து புரிந்துக் கொள்ளக்கூடியதே. உங்கள் வீட்டு சிறுவர்களையும் படிக்கச் சொல்லி அறிவை வளர்த்துக் கொள்ள செய்யுங்கள்.
 நன்றி :கண.முத்தையா 

No comments: