தமிழ்க் கதை உலகில் ஆரவாரமில்லாத அழுத்தமும்,அமைதியும் கூடிய பல தரமான சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருக்கும் ஆர்.சூடாமணி அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது.
தனது வாழ்நாளின் பெரும்பகுதியை உடல்நலக் குறைவு காரணமாகப் படுக்கையிலேயே கழிக்க நேர்ந்த சூடாமணிக்கு வாசிப்பும்,எழுத்தும் மட்டும்தான் வெளி உலகின் ஜன்னல்களாக இருந்து கொண்டிருந்தன.அது குறித்த கழிவிரக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு ‘மானுட அம்சம்’பற்றிய கரிசனையோடு தனது எழுத்துக்களைச் செதுக்கிக் கொண்டிருந்தவர் அவர்.
சூடாமணி முன் வைக்கும் பெண் குறித்த நிலைப்பாடு சமரசங்கள் அற்றது;
இன்றைய ஆக்கபூர்வமான பெண்ணிய எழுத்துக்கள் பலவற்றுக்கு அது ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது என்று கூடச் சொல்லலாம்.
எனினும் கதையின் கலைப்போக்குக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒரு பிரகடனமாக -ஆர்ப்பாட்டமான பாணியில் அது ஒருபோதும் வெளிப்பட்டதில்லை.
அவரது கதைகளின் உள்ளடங்கிய தொனியே வாசகனின் கரம் பற்றி அவன் செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செலுத்திவிடும் வல்லமை படைத்தது.
பெண் உளவியலை மட்டுமன்றி மனிதப்பொது உளவியலையே நுட்பமாக உள் வாங்கி உருவானவை அவரது பல ஆக்கங்கள்.
.
வெகு ஜன இதழ்களிலேயே இவரது பெரும்பாலான படைப்புக்கள் வெளிவந்தபோதும் - எந்தச் சூழலிலும் தனது எழுத்தை மலினப்படுத்திவிடாமல் கடுமையான தரக் கட்டுப்பாட்டைப் பேணி வந்தவர் சூடாமணி.
.தமிழக அரசின் பரிசுக்கு உரித்தான ’மனதுக்கு இனியவள் ‘நாவல் தொடங்கி ‘மானிட அம்சம்,தந்தை வடிவம்,தீயினில் தூசு என இவரது நாவல்களையும்,இலக்கியச் சிந்தனை விருதைப் பலமுறை வென்றிருக்கும் சிறுகதைகளையும் பட்டியலிட்டுக் கொண்டே போவதை விடக் கல்வெட்டாக நெஞ்சில் பதிந்திருக்கும் இவரது கதை ஒன்றைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
ஒரு விடுமுறைக் காலத்தில் தனது குழந்தைகளையும் உடனழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வருகிறாள் ஒரு பெண்.
தாய் அதே பழைய பாசத்துடன் அவளை வரவேற்கிறாள்;
மகளுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துத் தருகிறாள்;
பேரக் குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்கிறாள்.
ஆனாலும் கூட மகளுக்கு அவளிடம் ஒரு மாற்றம் தெரிகிறது .
முன்பு போல அந்தத் தாய் எப்போதும் வீட்டிலேயே இல்லாமல் ,வசதியற்ற பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரப் போகிறாள்;
தானறிந்த தையல் கலையைத் தேவையென வருவோர்க்கு இலவசமாகக் கற்பிக்கச் செல்கிறாள்.
தான் வந்திருக்கும் நாளிலாவது அதையெல்லாம் அவள் சற்று ஒதுக்கி வைக்கக் கூடாதா என்ற மகளின் ஆதங்கம் ,தந்தை அதற்குத் தரும் ஒத்துழைப்பைக் கண்டு இன்னும் கூட அதிகரிக்கிறது;
அவரிடம் தன் ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்கிறாள் மகள்.
‘’இதுவரை அவள் மனைவியாகவும் தாயாகவும் மட்டும்தான் இருந்தாள்.இப்போதுதான் அவள் ‘செந்திரு’வாக ஆகியிருக்கிறாள்’’
என்கிறார் தந்தை.
அந்தத் தாயின் பெயர் ‘செந்திரு’.
‘செந்திரு ஆகி விட்டாள்’என்ற அந்தச் சிறுகதை போன்ற பல புனைவுகள் காலக் கல்வெட்டாய்ச் சூடாமணியின் பெயரை என்றென்றும் சொல்லியபடி இருக்கும்.
No comments:
Post a Comment