நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும் நிகழ்வு வரும் 10.10.2010 ஞாயிறன்று டென்மார்க் வயன் நகரில் உள்ள லின்ட்ரோவ மண்டபத்தில் பி.ப.15.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கலையரசனின் ஆபிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா, வி.ஜீவகுமாரன் அவர்களின் – யாவும் கற்பனை அல்ல, த. துரைசிங்கம் அவர்களின் தமிழ் இலக்கிய களஞ்சியம் , வேதா இலங்காதிலகம்அவர்களின் உணர்வுப்பூக்கள் – ஆகிய நான்கு நூல்கள் அறிமுகமாகின்றன. தொடர்புக்கு: கோபால்- 0045 / 20658961 தாஸ் - 0045 / 41427562 வேதா - 0045 / 8610 6198 கலை- 0031 / 642344458 | |||||
Monday, September 27, 2010
நூல் அறிமுகம்
Thursday, September 23, 2010
அஞ்சலி
Wednesday, September 22, 2010
இந்த நூற்றாண்டின் மிக மோசமான வறட்சி
-பி .சாய்நாத்-
சர்வதேசப் புகழ்பெற்ற பத்திரிகையாளரான பி. சாய்நாத் சாதாரண மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வறட்சி பற்றிய அவரது கட்டுரைகள் “Everybody loves a good drought” என்ற நூலாக வெளிவந்துள்ளன. தற்போது தலித் பிரச்சினை குறித்து இந்து நாளேட்டில் அவர் எழுதிவரும் கட்டுரைகள் நூலாக வெளிவரவுள்ளன. சென்னை வந்திருந்த சாய்நாத்திடம் (தலித் இதழ் எண் 6, ஜூன் 2003இல் வெளியிடுவதற்காக) இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் இதனைப் பதிவு செய்தவர் : டாக்டர் ஆர். அழகரசன், தமிழாக்கம் : ரவிக்குமார்
இந்தியாவின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான வறட்சி என்பதை நீங்கள் அடையாளம் கண்டது எப்படி? அதிலிருந்து சாதிப் பிரச்சினைக்கு எப்படி வந்தீர்கள்?வறட்சி பற்றியதாக முன்வைக்கப்பட்டுள்ள எனது புத்தகம் உண்மையில் வறட்சி பற்றியதல்ல. வறட்சி என்பது ஒரு உருவகம். அது அத்தனைவிதமான கொள்ளைகளையும் பற்றிய ஒரு உருவகம். நீங்கள் வறட்சியால் துன்பப்படுவீர்கள், தொடர்பு ஊடகங்களின் வழியாக வறட்சி பற்றிய பேச்சு மட்டும் பரவிக் கொண்டிருக்கும்.
ஆக, வறட்சி என்பது தானாக வரவில்லை. அது சிலரால் ஏற்படுத்தப்படுகிறது என்கிறீர்களா?
இரண்டுவிதமான வறட்சிகள் உள்ளன. ஒன்று உண்மையான வறட்சி. மற்றது போலியான வறட்சி. “இந்த நூற்றாண்டின் மிக மோசமான வறட்சி” என்று அடையாளப்படுத்தப்படும் இடங்கள் பலவற்றில் ஆண்டுக்கு 1100 மி.மீ. மழை பொழிகிறது. லோனாவாலாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மலைப் பிரதேசம். ஒவ்வொரு வருடமும் அது வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியின்கீழ் வகைப்படுத்தப்படுகிறது. லோனாவாலாவில் ஆண்டுக்கு 2400 மி.மீ. மழை பொழிகிறது. ஒரு பிரதேசத்தை வறட்சி பாதித்த பிரதேசமாக அறிவிப்பதென்பது ஒரு அரசியல் முடிவு. ஏனென்றால், அப்படி அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணம் கிடைக்கும், பணம் கிடைக்கும், நலத்திட்டங்கள் வரும். ஆனால் உலகில் வேறு எங்கும் 2400 மி.மீ. மழை பொழிவதில்லை. கலஹண்டியில் ஆண்டுக்கு 1100 முதல் 1300 மி.மீ. வரை மழை பொழிகிறது. ராமநாதபுரத்தில் 450 மி.மீ. மழை பெய்கிறது. ஆனால் கலஹண்டியில் மக்கள் வறட்சியால் சாகிறார்கள். ராமநாதபுரத்தில் சாவதில்லை. ஏன்-? வறட்சி என்றாலே உங்களுக்கு கலஹண்டி நினைவுக்கு வரும். ராமநாதபுரத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. ஆனால் கலஹண்டிபோல மக்கள் மடிவதில்லை. நான் சொல்வது இதுதான். “இயற்கைமீது பழி போடாதீர்கள். மனிதர்களைப் பாருங்கள். ராமநாதபுரத்தில் உற்பத்தி ஆவதைப்போல ஐந்து மடங்கு உணவுப் பொருட்கள் கலகண்டியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனாலும், மக்கள் அங்கே சாகிறார்கள். இது இயற்கையின் பிரச்சினையா? மனிதர்களின் பிரச்சினையா? கலஹண்டியில் நடப்பதென்ன? அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் யாவும் வட்டிக்காரர்களிடம் போய்ச் சேர்கிறது. இப்போது கலஹண்டிக்கு போனீர்களேயானால் ஏழு ஆண்டுகளு’குப் பிறகு விளையப்போகும் தானியத்தை அடகுவைத்து இப்போது கடன் வாங்கும் விவசாயிகளைப் பார்க்கலாம்.
ராமநாதபுரத்திலும் நிலைமை அதுதான். மிளகாய் விளைவிக்கும் விவசாயிகள் மூன்று ஆண்டுகளு’குப் பிறகு வரப்போகும் விளைச்சலை இப்போதே தரகர்களிடம் அடகுவைத்துவிட்டார்கள். எப்படி அந்த விவசாயிகள் பிழைத்திருக்கிறார்கள்?
மக்கள் தம் வாழ்நாளில் பலமுறை வறட்சியைப் பார்த்திருக்கிறார்கள். அதை சமாளிக்க அவர்களால் முடியும். நான் ஒரு விவசாயியைப் பார்த்துக் கேட்டேன். “வறட்சிதான உங்களின் முதல் எதிரியா?” அவர் சொன்னார், “இல்லை, அது எனது எதிரிகளின் வரிசையில் ஐந்தாவதாகத்தான் வருகிறது.” முதல் எதிரி அரசாங்கம் தான். அரசாங்கம் என்றால் ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தைக் கூறவில்லை. விவசாயத்தைப் பற்றிய அரசின் அணுகுமுறைகள், எப்படியுள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அவர்களுக்கு அரசியல் யதார்த்தமும் அரசாங்க யந்திரம் என்றால் என்ன என்பதும் தெரியும் என்கிறீர்களா?
ஆமாம். “நாங்கள், எங்களது அப்பன், பாட்டன் காலத்தில் இதைவிட மோசமான வறட்சியைப் பார்த்திருக்கிறோம்“ என அவர்கள் சொல்கிறார்கள். தொண்ணூறுகள் முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் பார்த்தோம். அதனால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்போது அவர்கள் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டிலுள்ள ஏழை மக்கள் தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்படுகின்றனர். தொண்ணூறுகளைப் பொய்களின் காலம் என்று சொல்லலாம். திட்டக் கமிஷனின் வறுமை பற்றிய மதிப்பீட்டைப் பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. திட்டக் கமிஷனின் மதிப்பீடு உண்மையென்றால் அமெரிக்காவை ராஜஸ்தான் மிஞ்சிவிடும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் உள்ளதைவிட ராஜஸ்தானில் குறைவு என திட்டக் கமிஷன் கூறுகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் ராஜஸ்தானைவிட, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாக இருக்கும் என்கிறது திட்டக் கமிஷன். அதாவது, நாம் அமெரிக்காவைவிட வளமாக இருப்போம்! என்ன ஒரு வேடிக்கை!
இதில் அரசாங்கத்தைத்தான் நாம் குறை கூற வேண்டுமா-?
பொய் சொல்லப் பழகிவிட்டால் பொய் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திட்டக் கமிஷனின் மதிப்பீட்டின்படி 2011இல் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் சதவீதம் 4.5 ஆக இருக்கும். ராஜஸ்தானில் அது 1.5 சதவீதமாக இருக்கும். இந்தியாவிலேயே வறிய மாநிலம் அதுதான். அமெரிக்க நிலவரம் எப்படியிருக்குமென்பதைப் பார்ப்போம். அமெரிக்க அரசு தந்துள்ள புள்ளி விவரங்களின்படி 2011இல் அமெரிக்காவில் 12 முதல் 15 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பார்கள். ஆக நாம் அமெரிக்காவைவிட வளமான நிலையில் இருப்போம். இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது.
வறட்சியைப் பொருத்தவரை நாம் இயற்கையைக் குறை கூறிக்கொண்டு, மனிதர்கள் திட்டமிட்டு செய்யும் மோசடியை மறைத்து வருகிறோம் என்பதையே நான் பேசியிருக்கிறேன். வறட்சி பற்றி ஆராய்ந்தபோது அதில் பொதிந்திருக்கிற வேறுபல கூறுகளை நான் புரிந்து கொண்டேன். அவற்றுள் ஒன்றுதான் “சாதி” எனது நூலில் (ணிஸ்மீக்ஷீஹ்தீஷீபீஹ் றீஷீஸ்மீs ணீ ரீஷீஷீபீ பீக்ஷீஷீuரீலீt) பல இடங்களில் அது வெளிப்படுகிறது என்ற போதிலும் வறட்சி பற்றிய ஆராய்ச்சியின் பகுதியாக அதைப் பேசுவது போதாது. தனியாகவே சாதியைப் பற்றி ஆராய்ந்தாக வேண்டும் என நான் முடிவு செய்தேன்.
நீங்கள் கள ஆய்வில் ஈடுபட்டபோது என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர் கொண்டீர்கள்? நீங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதினீர்களா? சாதாரண மக்களை நினைத்து எழுதினீர்களா?
ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒன்றை நான் கற்றுக் கொண்டேன்1983 - 84 ல் ஐந்து மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவியது. அது எனது அறிவுக்கு சவாலாக இருந்தது. நான் மரபான பயிற்சி பெற்ற ஒரு பத்திரிகையாளன். எனக்கு எனது பயிற்சியின் போதாமை புரிந்தது. ஏனென்றால் அந்தப் பயிற்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே பயன்படும். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு கிராமத்தைப் பார்வையிட்டிருந்த ஒரு கலெக்டரின் அறிக்கையைத்தான் நாங்கள் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
ஒரு விவசாயி கிராமத்திலேயே முப்பது நாற்பது ஆண்டுகளாக வசிக்கிறார். அவர் சொல்வதைக் கேட்காமல் ஏன் கலெக்டரின் கருத்தைக் கேட்க வேண்டும்? அவர் ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள்தான் இருப்பார். ஒரு விவசாயியை விடவும் கலெக்டருக்கு அதிகம் தெரியும் என நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்-? தட்பவெப்ப நிலைகளில் ஏற்படும் மாற்றங்களையும் அவற்றுக்கேற்ப பயிர்களில் செய்யவேண்டிய மாற்றங்களையும் ஒரு விவசாயி நன்றாக அறிந்திருப்பார். அவர்தான் நம்பகமான ஆதாரமாக இருக்க முடியும். கலெக்டர் அல்ல. ஷூ போட்டுக் கொண்டிருக்கும் கலெக்டர் பேசுவது தத்துவம். ஆனால் விவசாயி சொல்வது அனுபவம். இப்படித்தான் எனக்கு இந்த யோசனை வந்தது. ஆகவே 1993 ஜனவரியில் நான் எனது வேலையை ராஜினாமா செய்தேன்.
எதனால் வேலையை ராஜினாமா செய்தீர்கள்?
நான் வேலையை விடுவதற்கு 1991 இல் ஏற்பட்ட சம்பவங்களே காரணம். அது தாராளமயம் ஆரம்பித்த காலம். அப்போது பத்திரிகைகள் சமூகத்தின் உயர்மட்டத்திலிருந்த 5 சதவீதம் பேரைப் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருந்தன. அழகுராணிகள், சினிமா நட்சத்திரங்கள்... இப்படி, அந்த நேரத்தில்தான் சமூகத்தின் ஆகக்கீழே இருக்கும் 5% மக்களைப் பற்றி எழுதுவதென தீர்மானித்தேன். இந்த இருதரப்பில் எது முக்கியம் என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும் என நான் நினைத்தேன். பத்திரிகைகளின் அணுகுமுறையை என்னால் மற்ற முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் நான் அடித்தட்டிலிருக்கும் 5% மக்களைப் பற்றி எழுதலாமில்லையா.
வெகுசன பத்திரிகைகளில் அதற்கான இடத்தை எப்படிப் பெற்றீர்கள்?
நீங்கள் சண்டை போட்டால்தான் அது கிடைக்கும். நான் எண்ணியிருந்ததை எழுத இடம் கிடைக்கும் என்றுதான் நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. பன்னிரெண்டு ஆண்டுகளாக நான் பத்திரிகை தொழிலில் இருந்தேன். என்னை யாவரும் அறிவார்கள். ஆனால் அந்தக் கணக்கெல்லாம் தவறாகிவிட்டது. ஒவ்வொரு பத்திரிகையாக ஏறி இறங்கினேன். அவர்கள் எனது “ப்ராஜெக்டை” நிராகரித்துவிட்டார்கள். நான் “வறட்சி” என்ற சொல்லைக்கூட பயன்படுத்தியிருக்கவில்லை. இருந்தாலும் அதுதான் பதிலாக இருந்தது. “இந்தியாவின் வறிய பத்து மாவட்டங்களில் உள்ள ஏழை மக்களின் நிலையைக் கண்டறிவது” என்பதுதான் எனது “ப்ராஜெக்ட்”. “வாசகர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது” என பத்திரிகை ஆசிரியர்கள் கூறிவிட்டனர். “தேசபக்திதான் அயோக்கியர்களின் கடைசிப் பு-கலிடம்“ என்ற ஜான்சனின் வார்த்தைகளை சற்றே மாற்றிக் கூறுவதானால், “வாசகர்களுக்குப் பிடிக்காது என்பதுதான் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்“. தமது வாசர்கள் யாரென்பதை மார்க்கெட்டிங் ஆட்களிடம் கேட்டுத்தான் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். எனது நூலின் இங்கிலாந்து பதிப்பில் முதல் அத்தியாயத்துக்கு நான் அதனால்தான் இப்படித் தலைப்பிட்டேன்; “வாசகர்கள் அறிய விரும்பாதது”.
எப்படி உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து?
நிகில் சக்ரவர்த்தி போன்றவர்களால் தான் நான் அந்த கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. “டைம்ஸ்” ஸ்காலர்ஷிப்புக்கான தேர்வுக் குழுவில் நிகில் சக்ரவர்த்தி, ஏ.கே.ஜெயின் போன்றவர்கள் இருந்தனர். அவர்கள் சுதந்திர போராட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அவர்களுக்கு என் “ப்ராஜெக்ட்” பிடித்திருந்தது.
ஏழை மக்களைப் பற்றிய காந்தியப் பார்வை காரணமாகத்தான் அவர்கள் உங்கள் “ப்ராக்ஜெக்டை” ஏற்றார்களா?
அப்படிச் சொல்ல முடியாது. அந்த குழுவில் டேரியல் டி. மோன்ட் போன்ற சூழலியல் வாதிகளும் இருந்தனர். அவர்கள் அந்த கோணத்தில் இதைப் பார்த்தனர். மொத்தத்தில் ஒரு காந்திய அணுகுமுறை அவர்களுக்கு இருந்தது என்று சொல்லலாம்.
ஏழைகள் என நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் விதம் பற்றி மட்டும்தான் நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறீர்களா? வறட்சியின் பல்வேறு பரிமாணங்களையும் நீங்கள் காணவில்லையா?
இந்த விஷயங்கள் எல்லாமே கொள்கைகளோடும் தொடர்புகொண்டேயிருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அனந்தபூர் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். ஆனால் கடந்த 150 ஆண்டுகளில் அங்கே பெய்யும் மழையின் அளவில் குறிப்பிடும் படியான மாற்றம் எதுவுமில்லையென புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதை எப்படி அணுகுவது? இயற்கை விஞ்ஞானமோ, புவியியலோ வறட்சி இஷ்டம்போல ஏற்படக்கூடிய ஒன்றல்ல என்றே கூறுகின்றன. அதுவொரு இயற்கையான விஷயம். அது நடக்கும். ஆனால் நாம்தான் அதற்கேற்ப திட்டமிட வேண்டும். நீங்கள் வட இந்தியாவில் இருந்தால் குளிர் காலத்துக்கென கம்பளி ஆடைகளை வாங்கி வைத்துக் கொள்வதில்லையா? அதேபோல நீங்கள் வறட்சியை உத்தேசித்தும் திட்டமிடவேண்டும். சில நேரம் எதிர்பாராத வறட்சி ஏற்படலாம். உங்களுக்குத் தெரிந்தே நீங்கள் திட்டமிடவில்லையெனில் நீங்கள் ஒரு முட்டாளகவோ அல்லது மோசமான பேர்வழியாகவோதான் இருக்க வேண்டும். நீங்கள் அந்தப் பிரச்சினையை தட்டிக் கழிக்க விரும்புகிறீர்கள் என்றுதான் பொருள். இப்படியிருக்கும்போது நாட்டிலுள்ள நதிகளை இணைப்போமென நீங்கள் எப்படிக் கூற முடியும்? கடந்த நாற்பது ஆண்டுகளாக நர்மதை நதிப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எல்லா நதிகளிலும் நீர் பெருக்கெடுத்து ஒடுவதாக யார் சொன்னது? நதிகளை இணைப்பதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ள செலவு எவ்வளவு? ஆறு லட்சம் கோடி ரூபாய். இது உங்கள் தேசிய உற்பத்தியில் கால் பங்கைவிட அதிகம். பெரிய திட்டங்களுக்கான செலவுகள் இந்தியாவைப் பொருத்தவரை திட்டமிட்டதைவிட இருநூறு முதல் ஐநூறு சதவீதம்வரை அதிகரித்தன என்பதே வரலாறு. நதிகளை இணைத்து முடிக்கும் போது அந்த செலவு நாட்டின் மொத்த உற்பத்தியையும் தாண்டியிருக்கும். ஐந்து பைசா அளவுக்குக் கூட உத்தரவாதமில்லாமல் இந்த திட்டத்துக்குள் நீங்கள் இறங்குகிறீர்கள். இதன்மூலம் நீங்கள் புதிதாக பத்துப் பிரச்சினைகளை உருவாக்குகிறீர்கள். காவிரிப் பிரச்சினை ஒன்றால் மட்டுமே பல உயிர்கள் பறி போயிருக்கிறது. நதிகளை இணைக்கும் திட்டமோ காவிரிப் பிரச்சினைபோல ஆயிரம் பிரச்சினைகளைக் கொண்டு வரும்.
நதிகளை இணைப்பது சாத்தியமே இல்லை என்கிறீர்களா?
நதிகளின் போக்கை திசை திருப்பினால் அதனால் பாதிக்கப்படுவது காவிரியின் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாயிகள் மட்டுமல்ல. பத்து மாநிலங்களில் அது பிரச்சினையைக் கிளப்பும். ஐம்பது ஆண்டுகளாகியும் காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள் புதிதாக எழும் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பார்கள்?
இரண்டாவதாக, இது வெறுமனே என்ஜினியரிங் பிரச்சினை அல்ல. சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல் பிரச்சினை. எந்தவொரு மடையனும் நதிகளை இணைத்துவிடலாம். ஆனால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது யார்? அது என்ஜினியரால் ஆகிற காரியமா?
துங்கபத்ரா அணை கட்டப்படுவதற்கு முன்பு ஆந்திராவிலுள்ள ரெட்டிகளும், ராவ்களும் அதை அறிந்து அங்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். அங்கே வாழ்ந்தவர்கள் தலித்துகளும், ஆதிவாசிகளும்தாம். அவர்களிடமிருந்து ஒரு கிரவுண்டு நிலம் வெறும் ஐம்பது ரூபாய் என்ற விலையில் இந்த காண்ட்ராக்டர்களால் வாங்கப்பட்டது இன்னும் ஆறே மாதங்களில் தங்களது நிலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டதாக மாறப்போகும் விஷயம் அந்த ஏழை மக்களுக்குத் தெரியாது. இன்று தங்களது நிலத்தில் தாங்கள் கூலிகளாக வேலை செய்யவேண்டிய நிலை அவர்களுக்கு. இப்படியான சிக்கல்கள் இந்த நாட்டில் இருக்கின்றன. நீங்க்ள சரியாகத் திட்டமிடாவிட்டால் கலாச்சார சமூகப் பிரச்சினைகளை என்ஜினியர்களின் தீர்வுக்கே விட வேண்டியிருக்கும்.
இது சரியான புரிதல் இல்லாததால் ஏற்படுகிறதா? அல்லது “உயர்சாதியினரின்” சதிவேலை எனப் பார்க்கிறீர்களா?
உலகமே செய்யத் தயங்குகிற ஒன்றை நீங்கள் செய்கிறீர்களென்றால் நீங்கள் காட்டுமிராண்டியைப் போல சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம். இங்கு ஒரு கல்வி அமைச்சர் இருக்கிறார். ராமனின் காலத்திலேயே அணு ஆயுதங்கள் இருந்ததாக அந்த அமைச்சர் எண்ணுகிறார். அவர் இயற்பியல் துறையில் பேராசிரியர் என்பதுதான் வேடிக்கை.
இந்த திட்டங்கள் யாவும் கான்ட்ராக்டர்களுக்கு பணத்தைக் கொண்டுவருகின்றன. அந்த குறிப்பிட்ட சில கான்ட்ராக்டர்களுக்கு அந்த ஒப்பந்தங்களை வழங்கும் அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் கொண்டு வந்து சேர்ககின்றன. இங்குதான் சதித் திட்டம் இருக்கிறது.
இவற்றை எதிர்த்து மக்கள் போராட வில்லையா?
இந்த சதித் திட்டங்களை அவர்கள் முழுமையாக அமுல்படுத்துபோதுதான் அது தெரியும். தங்களது நீரையும், பயிர்களையும் இழக்கப்போகிறோமென்பதை மக்கள் உணர்ந்து கொண்டால் என்ன நடக்குமென்று பாருங்கள். ஒருபுறம் நதிகளை தேசிய மயமாக்குவதைப் பற்றி பேசிக்கொண்டு மறுபுறம் நதிகளை தனியார் மயமாக்கி வருகிறார்கள். சட்டிஸ்கார் மாநிலத்தில் ஒரு ஆற்றில் இருபது கிலோ மீட்டர் நீளத்தை தனியாருக்கு விற்றுவிட்டனர். மக்களை மட்டும் அவர்கள் விற்கவில்லை. நீரையும் விற்கிறார்கள். நதிகளை தேசியமயமாக்குவார்களாம் தண்ணீரைத் தனியார் மயமாக்குவார்களாம். என்ன முட்டாள்தனம் இது?
அந்தப் பகுதிகளில் என்ன மாதிரியான போராட்டங்கள் எழுந்தன?
போராட்டங்கள் வருகின்றன. நாம் நமது சக மனிதர்களின் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதைப் பொருத்தது அது. ஒரிசாவில் தான் அவர்கள் கவனம் குவிந்திருக்கிறது. அங்கு அரசியல் விழிப்புணர்வு குறைவு. எனவே ஒரிசாவை அவர்கள் சோதனைக் கூடமாகப் பயன்படுத்துகிறார்கள். அதையே அவர்கள் பீகாரில் செய்தால் விளைவு வேறுவிதமாக இருக்கும். ஆந்திராவில் அரசியல் விழிப்புணர்வு அதிகம் எனவே அங்கு எதிர்ப்பும் அதிகமான உள்ளது. மின்கட்டண உயர்வை எதிர்த்து அங்கு மிகப் பெரும் போராட்டம் நடந்தது. 1998&2000ல் ஆந்திராவின் சில பகுதிகளில் நீரை தனியார் மயமாக்கினார்கள். நலகொண்டா பகுதியில் வாட்டர் மீட்டர் பொருத்தப்போனபோது அங்கிருந்த விவசாயிகள் அதை அனுமதிக்கவில்லை. மீட்டரைப் பொருத்தினால் உடைத்தெறிவார்கள் என்ற நிலை. அப்படித்தான் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்தியாவில் 70 முதல் 80 சத விவசாயிகள் மழையையும் ஏரிகளையும்தான் நம்பியுள்ளனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் 100 சதவீத மக்கள் மழையைத்தான் நம்பியிருக்கிறார்கள். தண்ணீரை தனியார் மயமாக்குவது என்றால் மழையை தனியார் மயமாக்குவதாக அர்த்தம். மிச்சம் என்ன இருக்கிறது? ஆக்ஸிஜனையும் தனியாருக்குத் தந்துவிடவேண்டியதுதான்.
கிராமங்களில் பல இடங்களில் தலித்துகள் தண்ணீரைத் தொட முடியாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது தண்ணீரை தனியார்மயமாக்குவது எப்படி அவர்களை பாதிக்கும்?
ஊர் குளங்களில் நீர் எடுக்கக்கூடாது எனத் தடுக்கப்படும் தலித்துகள் ஆறுகளை நோக்கிச் செல்கிறார்கள். அவற்றையும் தனியார் மயமாக்கிவிட்டால் அவர்கள் தானே அதிகம் பாதிக்கப்படுவார்கள்? தனியார் மயமாக்கலால் தமது பிரதிநிதித்துவ உரிமையை இழந்து அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகள்தான்.
உங்கள் கவனம் வறட்சியைப் பற்றி எழுதுவதிலிருந்து சாதியைப் பற்றி எழுதுவதாக எப்படி மாறியது?
1997இல் சுதந்திர தினப் பொன்விழா சமயத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்காக “மறக்கப்பட்ட சுதந்திரம்“ என்ற தலைப்பில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சாதாரண மனிதர்களைப் பற்றி ஒரு தொடர் எழுதினேன். 1942ல் நடந்த ஒரு கிளர்ச்சியைப் பற்றிய செய்திகளை சேகரிக்க காஸிப்பூர் சென்றிருந்தேன். முஜாகர் என்ற தலித் சாதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கூறிய ஒரு தகவல் என்னைத் தூக்கிவாரிப்போட்டது.
காஸிப்பூரில் சிறையன்று உள்ளது. அதில் இருநூறு பேரை அடைக்கலாம். அந்தப் பகுதியில் போராட்டம் நடக்கும்போதெல்லாம் சிறை நிரம்பிவிடும். இருநூறு பேர் இருக்கவேண்டிய சிறையில் மூவாயிரம் பேர்வரை அடைக்கப்படுவார்கள். மூன்று நான்கு நாட்களில் அவர்கள் விடுதுலை செய்யப்படுவார்கள். அப்போது அந்த சிறை எந்த நிலையில் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த சமயங்களில் மூன்று நான்கு ஜீப்புகளில் ஜெயில் காவலர்கள் ஊருக்குள் சென்று அங்கிருக்கும் முஜாகர் சாதியைச் சேர்ந்த இருபது முப்பது பேர்களைப் பிடித்து வருவார்கள். அவர்கள் மீது திருட்டு வழக்கு போடப்படும். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். அந்த ஜெயிலில் நிரம்பியிருக்கும் கழிவுகளையெல்லாம் அந்த இருபது முப்பது தலித்துகள் சுத்தம் செய்ய வேண்டும். அந்த வேலை முடிந்ததும் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இந்தத் தகவலை அவர் சொன்னபோது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவமா அது என நான் அவரிடம் கேட்டேன். இல்லை அது இப்போதுதான் சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது என அவர் சொன்னார். நான் அது பற்றி விசாரித்தபோது அது உண்மைதான் எனத் தெரிந்தது. அதற்குப் பிறகுதான் இனிமேலும் தாமதிக்கக்கூடாது என்ற முடிவுடன் சாதிப் பிரச்சினையைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.
சாதிப் பிரச்சினையின் முக்கியமான அம்சமாக எதை நீங்கள் கருதுகிறீர்கள்?
நமது சொல்லாடலில் சாதியைப் பற்றி நாம் அனுஷ்டிக்கும் மௌனம்தான் எனக்கு முதலில் தைத்தது. தலித்துகளைப் பற்றி ஆயிரக்கணக்கான “நியூஸ் க்ளிப்பிங்குகளை” நான் சேகரித்தேன். அவற்றில் “தீண்டாமை” என்ற சொல் ஒரு இடத்திலும் தென்படவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அது ஒரு கெட்ட வார்த்தை. ஒவ்வொரு நாளும் தீண்டாமையை வாழ்வில் கடைபிடிப்பீர்கள். ஆனால் அதைப்பற்றிப் பேசமாட்டீர்கள், என்ன ஒரு கோமாளித்தனம் இது!
தீண்டாமை ஒரு சமூகக் கொடுமை மட்டுமே என நீங்கள் நினைத்தால் அது ஒரு தவறு. அது, அதைவிடவும் ஆழமான பிரச்சினையாகும். ஏராளமான மக்களை அடிமைகளாக வைத்து கூலி தராமல் அவர்களிடம் வேலை வாங்கும் வசதியை சாதி ஏற்படுத்தித் தருகிறது. சாராயம் ஒரு சமூக தீமை என்று சொல்லலாம். ஆனால் சாதியை அப்படி மட்டுமே கூறிவிட முடியாது.
உத்திரப்பிரதேசத்தில் ஜன்மாஷ்டமி வந்தால் கிராமத்தைக் காலிசெய்துவிட்டு தலித்துகள் ஓடுகின்றனர். ஏனென்றால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ஜன்மாஷ்டமி கொண்டாடுகிறார்கள். அங்கு அடிமை வேலை செய்ய தலித்துகளைத்தான் அவர்கள் பிடித்துக்கொண்டு வருகிறார்கள்.
இப்படி சுரண்டப்படும் கூலியற்ற இலவச உழைப்பை எந்தவொரு பொருளாதார நிபுணராவது கணக்கிட்டிருக்கிறார்களா?
தலித்துகளும், ஆதிவாசிகளும் பி.ஜே.பி.யால் திரட்டப்படுவதாக சொல்லப்படுகிறதே அது பற்றி உங்கள் கருத்து என்ன--?
இந்த மதச்சார்பின்மை பற்றி பார்வையில் மிகப்பெரும் ஓட்டை உள்ளது. அது மதம் சார்ந்த பிரச்சினையாக மட்டும்தான் பார்க்கப்படுகிறது. அப்படிப் பார்ப்பது ஒரு நடுத்தர வர்க்கப் பார்வைதான். மதக் கலவரங்கள் பற்றி பேசும்போது ஒருவர் ஏதேனும் ஒரு மதத்தை விமர்சிக்கலாம். ஆனால், சாதிக்கலவரத்தின்போது ஒரு சாதியை விமர்சித்துவிட்டு உருப்படியாகப் போய்ச் சேர முடியாது. மதச் சார்பின்மை என்பது மதம் மற்றும் சாதி இரண்டையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாததால்தான் பி.ஜே.பி. தலித்துகளைத் திரட்டுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
அறிவுஜீவிகள் தலித் இலக்கியத்தைப் பற்றி பேசுவார்கள். தலித்துகள் மீதான வன்கொடுமைகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அவர்கள அம்பேத்கரின் படைப்புகளை வாசிப்பதில்லை. நீங்கள் அம்பேத்கரை படித்திருக்கிறீர்களா?
தலித்துகளைப் பற்றிய எனது நூல் விரைவில் வெளிவரவுள்ளது. அதைப்பாருங்கள். அந்த நூல் “சாதி என்பது உழைப்புப் பிரிவினை அல்ல. அது உழைப்பாளர்களைப் பிரிவினை செய்வது” என்ற அம்பேத்கரின் வார்த்தைகளோடுதான் துவங்குகிறது. நான் அம்பேத்கரை மிகவும் முக்கியமாகக் கருதுகிறேன்.
1993&க்கும் 2003&க்கும் இடையில் நான் பலமுறை தமிழ்நாட்டில் பயணம் செய்துவிட்டேன். நான் இரண்டு விஷயங்களை கவனித்தேன். எந்தவொரு தேசியத் தலைவருக்கும் இல்லாத அளவுக்கு அம்பேத்கருக்கு ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய கிராமங்கள் தோறும் இதே எழுச்சியை நான் பார்க்கிறேன். அந்த சிலைகள் அரசாங்கத்தால் நிறுவப்பட்டவை அல்ல, மக்களே வைத்தவை.
மகாராஷ்டிராவில் அறியப்பட்டதுபோல தமிழ்நாட்டில் அம்பேத்கர் அறியப்பட்டதில்லை என்றபோதிலும் இங்கே இப்படியரு அங்கீகாரம். தேசம் தழுவிய பிம்பமாக அம்பேத்கரே விளங்குகிறார். மக்களின் விருப்பம் இப்படி இருக்கிறது. நாம் மக்களிடமிருந்து எவ்வளவு விலகி இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஏழை எளிய மக்களின் மீதான உங்களின் அக்கறையைக் காட்டும்விதமாக தனிப்பட்ட முறையில் ஏதேனும் செய்திருக்கிறீர்களா?
எனது நூலிலிருந்து எனக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையைக் கொண்டு, இளம் பத்திரிகையாளர்களுக்கான விருது ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறேன். பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், ஐகான் காமிரா, ஒரு டேக்ரெக்கார்டர் ஆகியவை அதில் அடங்கும். அது பிராந்திய மொழிகளில் இயங்கும் பத்திரிகையாளர்களுக்கானது. இதுவரை மூன்று பேருக்கு அந்த விருதினை வழங்கியிருக்கிறோம். இருவர் ஆதிவாசி சமூகத்தையும் ஒருவர் தலித் சமூகத்தையும் சேர்ந்தவர். விருதுபெற்ற அந்த பத்திரிகையாளர்களுக்கு அவர்களது சாதியின் காரணமாக வெகுசன பத்திரிகைகளில் வேலை கிடைக்கவில்லை. இங்கே அவ்வளவுதூரம் சாதி துவேஷம் இருக்கிறது. அதுதான் உண்மை.
நன்றி : ரவிக்குமார்
Sunday, September 19, 2010
காணிகளை அபகரிக்க திட்டமிட்ட பொழுது, காணிகள் உறுதியாக மறுக்கப்பட்ட பொழுது சாந்தபுரம் மக்கள் இரத்தம் சிந்தவில்லை, துப்பாக்கிகளை தூக்கவில்லை, உறுதியாக ஒன்றாக போராடினார்கள். காணிகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இன்று காணி திரும்பியிருக்கிறார்கள். இன்றைய கையறு துயர்க்காலத்தில் சாந்தபுரம் மக்களின் கதை ஒரு வரலாறாகியிருக்கிறது
நிலத்திற்காய் போராடி வந்த சாந்தபுரம் மக்கள் தங்கள் நிலத்திற்கு திரும்பியுள்ளார்கள். இந்தப் புகைப்படங்கள் நிலம் திரும்பிய மக்கள் பற்றிய பதிவுகள்.
படங்கள்: தீபச்செல்வன்
நன்றி :வெளியீடு உயிர்மெய்
Thursday, September 16, 2010
பிடல் காஸ்ட்ரோ அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து பல வதந்திகளை கிளப்பி விட்டது. கியூபாவின் சோஷலிச மாதிரியில் காஸ்ட்ரோவுக்கு நம்பிக்கை இல்லை என்ற தலைப்புச் செய்தி அநேகமான உலக ஊடகங்களில் பவனி வந்தது. ஓரிரு நாட்களின் பின்னர், கியூபாவில் அரை மில்லியன் அரசாங்க ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருக்கும் செய்தியும், எதிர்பார்ப்பை அதிகரித்தது. வழக்கமாகவே வெறும் வாய் மென்று கொண்டிருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு, இந்த செய்திகள் அவல் கிடைத்தது போலானது. பிறகென்ன? "கடைசியாக காஸ்ட்ரோ கூட சோஷலிசம் குறைபாடுடையது, அது கியூபர்களுக்கு உதவவில்லை." என்று கூறி விட்டார். கியூபா இனி முதலாளித்துவ பொருளாதாரத்தை தழுவிக் கொள்ளும். இவ்வாறு எல்லாம் கனவு கண்டிருப்பார்கள். அது எவ்வளவு தவறானது என்பது காஸ்ட்ரோவை நேர்கண்ட "அட்லாண்டிக்" பத்திரிகை நிருபரே எழுதுகின்றார். " கியூபாவில் யாரும் ரியல் எஸ்டேட் வாங்கலாம் சட்டம் வருகிறது. ஆனால் அமெரிக்கர்கள் மட்டும் வாங்க முடியாது. அமெரிக்கர்களை வாங்க விடாமல் தடுப்பது கியூப சட்டமல்ல, மாறாக முட்டாள்தனமான அமெரிக்க அரசு."(Fidel: 'Cuban Model Doesn't Even Work For Us Anymore')
பிடல் காஸ்ட்ரோ கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு வருவோம். "கியூப மாதிரி இப்போதும் ஏற்றுமதி செய்யப் படக் கூடியதா?" என்பது பத்திரிகையாளரின் கேள்வி. "கியூப மாதிரி எங்களுக்கே செயல்படுவதில்லை." என்று பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார். முதலில் கியூபாவில், "மாதிரி (Model)" என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. எப்போதும் "சமூகத் திட்டமிடல்", அல்லது " சமூக விஞ்ஞானம்" போன்ற சொற்களையே பயன்படுத்துவார்கள். நீண்ட காலமாக கியூபா, புரட்சியை ஏற்றுமதி செய்வது வந்துள்ளமை ஒன்றும் இரகசியமல்ல. அமெரிக்காவில் அதனை "கியூப மாதிரி புரட்சி" என்று தான் அழைப்பார்கள். மேலும் முதலாளித்துவ கல்விக்கழகங்களில் கற்பவர்களுக்கு ஒரு "மாதிரி" தான் சிந்திக்கத் தோன்றும். இவையெல்லாம் காஸ்ட்ரோ அறியாததல்ல. தான் கூறிய அர்த்தத்தை திரிபுபடுத்தி வெளியிட்டதாக காஸ்ட்ரோ பின்னர் தெரிவித்தார்.(Castro 'misinterpreted' on Cuba economic model quote) அட்லாண்டிக் பத்திரிகை நிருபரை அழைத்துச் சென்ற Julia Sweig இன்னொரு விதமாக மொழிபெயர்க்கிறார். இன்றைய ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக பிடல் காஸ்ட்ரோ அவ்வாறு கூறியிருக்கலாம் என்கிறார். எது எப்படியிருப்பினும், "கியூபா சோஷலிசத்தை கைவிடுகின்றது" என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஒரு சாதாரண பத்திரிகை நிருபருடனான உரையாடலில் வெளிப்படுத்தியிருக்க முடியாது. அத்தகைய அறிவிப்புகளுக்கு வேறு இடங்களும், நிகழ்வுகளும் இருக்கின்றன.
இருப்பினும், பிடல் காஸ்ட்ரோவின் கொள்கையுடன் முரண்படும் கருத்துகள் சில, ராஜதந்திர நோக்கங்களுக்காக தெரிவித்திருக்கலாம். இரண்டு மாதங்களுக்கு முன்னர், கியூபாவில் அரச எதிர்ப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பான உலகச் செய்தியாகியது. அதே நேரம் பெருமளவு சந்தேக நபர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அந்த செய்தி மட்டும் எந்தவொரு ஊடக நிர்வாகியின் கண்ணுக்கும் புலப்படவில்லை.(Cuba's Prisoner Release) அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், கியூபாவில் மனித உரிமைகள் மேம்பட வேண்டுமென்றும், பொருளாதாரம் தனியார்மயமாக்கப் படவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்கின்றன. அப்போது தான் கியூபாவுக்கு சர்வதேச சமூகத்தில் சம அந்தஸ்து வழங்குவார்கள். இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலேயே, கியூபாவின் அண்மைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. காஸ்ட்ரோ ஒரு முதலாளித்துவ நலன் சார்ந்த அமெரிக்க பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியையும் அந்த வெளிச்சத்தின் கீழ் தான் பார்க்க வேண்டும். கியூபாவின் உத்தியோகபூர்வ கொள்கைக்கு மாறாக, காஸ்ட்ரோ ஈரான் அதிபர் அஹ்மதிநிஜாத் மீதும் விமர்சனங்களை வைத்துள்ளார். இஸ்ரேலின் இருப்பிற்கு நியாயம் இருப்பதாகவும், அஹ்மதிநிஜாத் யூதர்களை அவதூறு செய்வது சரியல்ல என்றும் காஸ்ட்ரோ கூறியுள்ளார். (Fidel to Ahmadinejad: 'Stop Slandering the Jews') அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டிக் பத்திரிகையாளர் ஏற்கனவே இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை பற்றி நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஒரு ஊடகவியாளரின் பின்புலம் குறித்து அறியாமல், காஸ்ட்ரோ உரையாடியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, நான் கூற வருவது இதைத்தான். கியூபா மேற்குலக நலன்களுக்கு இடையூறாக நிற்கவில்லை என்று பிடல் காஸ்ட்ரோ சமிக்ஞை கொடுத்திருக்கலாம்.
விரைவில் அமெரிக்கா இஸ்ரேலை பயன்படுத்தி ஈரான் மீது படையெடுக்க இருப்பதாக அனல் பறக்கும் உரையாற்றிய காஸ்ட்ரோ, தீர்க்கதரிசனத்துடன் கியூபாவுக்கு வரவிருக்கும் ஆபத்தை தவிர்க்க நினைத்திருக்கலாம். அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பதற்கு தயார் செய்து கொண்டிருந்த காலத்தில், லிபியா இது போன்ற ராஜதந்திர அணுகுமுறையை கடைப்பிடித்தது. "பயங்கரவாத்திற்கு எதிரான போரில் லிபியாவும் பங்குபற்றுவதாக" பகிரங்கமாக அறிவித்த கடாபி, அதன் மூலம் லிபியா மீதான பொருளாதார தடைகளை அகற்றிக் கொண்டார். வெறி கொண்ட காளை மாடொன்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் இடிக்கிறது என்றால், நாமாக ஒதுங்கிக் கொள்வோம். அமெரிக்கா என்ற இராணுவ பலம் வாய்ந்த ராட்சதனோடு நேரடியாக மோத முடியாது. சமயத்தில் ஒதுங்கிக் கொள்வது புத்திசாலித்தனம்.
கியூபா அடுத்த வருடம் அரை மில்லியன் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்று மேற்குலக ஊடகங்கள் சிலாகித்து பேசுகின்றன. அதிலும் குறிப்பாக பணி நீக்கம் செய்யப்படும் அரச ஊழியர்கள் தாமாகவே வர்த்தக முயற்சியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும். கடின உழைப்பாளிகளுக்கு தகுதிக்கேற்ப அதிக சம்பளம் வழங்கப்படும். ஒரு வர்த்தக நிறுவனம் தொடங்குவதற்கு இலகுவாக சட்டங்கள் மாற்றப்படும். இதை எல்லாம் கேள்விப்படும் போது, கியூபா சோஷலிசத்தை கைவிட்டு விட்டது போலத் தோன்றும். முதலாளித்துவமே சிறந்தது என்று தெரிவு செய்து விட்டதாக சிலர் சந்தோஷப்படுவார்கள். ஆனால் இந்த கருதுகோள்கள் எதுவுமே உண்மையல்ல. முதலாவதாக கியூப அரசு அடுத்த ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டாவதாக, கியூபாவின் அரச சார்பு தொழிற்சங்கம் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நியாயப் படுத்தியுள்ளது.
சீனாவில், வியட்நாமில் நடந்ததைப் போன்ற பொருளாதார மாற்றங்கள் கியூபாவில் இடம்பெறும் என்று பலர் எதிர்வுகூறினார்கள். ஒரு வகையில், அண்மைய அறிவிப்பு அந்த நாடுகளின் அனுபவங்களை கவனமாக ஆராய்ந்த பின்பே வெளியாகியுள்ளது. ஒரு வகையில் கியூபப் பொருளாதாரம் அந்தப் பாதையில் பயணப்படுவதாக இருந்தாலும், தீய விளைவுகள் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீனாவில் அனைத்து தொழிலாளர்களும் பெரிய நிறுவனங்களின் தயவில் விடப்பட்டனர். தொழிலாளர் நலப் பாதுகாப்பில் அரசாங்கத்தின் பொறுப்பு குறைக்கப்பட்டது. ஆனால் கியூபாவில் நடைபெறப் போவது அதுவல்ல. தொழிலாளர்கள் கட்டம்கட்டமாக பணி நீக்கம் செய்யப் படுவர். அவர்கள் தாமாகவே வர்த்தக முயற்சியில் ஈடுபட அரசாங்கமே ஊக்குவிக்கும். ஊழியர் சேம நிதியத்தில் இருந்தோ, அல்லது வங்கிக் கடனாகவோ கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு கம்பெனி தொடங்கலாம். ஆனால் வர்த்தக முயற்சியில் அனைவரும் வெற்றி பெறப் போவதில்லை. எப்படியும் என்பது வீதமானோர் அனைத்தையும் இழந்து வந்து நிற்பார்கள். அப்படியானவர்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அதை விட பணிநீக்கம் செய்யப்பட்டாலும் வர்த்தக முயற்சியில் இறங்க விரும்பாதவர்களுக்கு, அரசே வேறு தொழில் தேடித் தர வேண்டும். ஏற்கனவே உள்ள தங்குவிடுதிகள் போன்ற தனியார் துறையிலும் வேலை தேடலாம்.
உண்மையில் கியூப அரசு, சீனாவை பின்பற்றுவதை விட, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மாதிரியை பின்பற்றுவதாகவே தோன்றுகின்றது. கடந்த வருடம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மில்லியன் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்த பொருளாதார நெருக்கடி, இன்றுள்ள கியூப நிலையை விட மோசமாக இருந்தது. இருப்பினும் பணி நீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு அரசாங்க கொடுப்பனவு வழங்குவது பல குறைபாடுகளை கொண்டிருந்தது. முன்பு மாதிரி வேலையற்ற அனைவருக்கும் படியளந்த காலம் மலையேறி விட்டது. வேலையில்லாமல், வருமானமில்லாமல், (தற்காலிகமாக) அரசின் உதவியும் கிடைக்காமல் வறுமையில் வாடிய குடும்பங்கள் அதிகம். அத்தகைய பிரச்சினைகளை மேற்கு ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு சமாளித்து முன்னேறின? வேலையிழந்த மக்கள் சக்தியை, பொருளாதாரத்திற்கு புத்துயிர்ப்பு ஊட்ட எப்படி பயன்படுத்தினார்கள்? கியூபா அதிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பலருக்கு, கியூபாவில் நடைபெறும் மாற்றம் புதுமையாக தெரியவில்லை. இங்கே என்ன நடந்ததோ, அது தான் அங்கேயும் நடக்கின்றது.(Cuba lay-offs reveal evolving communism)
மேற்கு ஐரோப்பாவில் நூறு வீத முதலாளித்துவம் நிலவவில்லை. தவிர்க்கவியலாது சில சோஷலிசக் கூறுகளைக் கொண்டுள்ளன. எத்தனை வீதம் சோஷலிசம் என்பது, நாடுகளைப் பொறுத்து கூடலாம், அல்லது குறையலாம். உதாரணத்திற்கு சுவீடனின் சோஷலிசத்தின் அளவு பிற நாடுகளை விட அதிகம். இவ்வாறு முதலாளித்துவ நாடுகள் என்று பேரெடுத்த நாடுகள், சோஷலிச பரிசோதனை செய்வதை யாரும் தவறாக எடுக்கவில்லை. "ஆஹா, பார்த்தீர்களா! அவர்கள் முதலாளித்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்கள்." என்று சந்தோஷப்படவில்லை. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் அசைக்க முடியாத இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதே நேரம் உழைப்பாளரின் வசதிவாய்ப்புகள் அதிகரிக்கும் வண்ணம் செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன. இதை புரிந்து கொள்ள நீங்கள் பொருளாதார சூத்திரம் எதையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டியதில்லை. கியூபாவிலும் அதே மாதிரியான பொருளாதார மாற்றமே நடந்து கொண்டிருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் அப்படியே இருக்கும். மார்க்சிச-லெனினிசம் அரச கொள்கையாக தொடர்ந்திருக்கும். அத்தியாவசிய பொருளாதார நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருக்கும். ஏற்கனவே தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் துறைகளில், அரசு வெளிநாட்டு நிறுவனங்களுடன் Joint Venture ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச மூலதனத்தை நிர்வகிக்கும் ஸ்தாபனங்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. சிறு வணிகர்களைக் கொண்ட தனியார்துறை ஒரு நாளும் அரசுக்கு போட்டியாக மாற முடியாது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. சிறு வணிகர்கள், அரசுக்கு வரி கட்டியே தேய்ந்து போவார்கள். பெருமளவு பணம் சேர்த்து பெரிய முதலாளி ஆகும் கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை. "எல்லையற்ற பணம் சேர்க்க சுதந்திரம் கொடுக்கும்" முதலாளித்துவ நாடுகளிலேயே அது தான் நிலைமை.
Saturday, September 11, 2010
மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள்
-குமார்- (புதியஜனநாயகம் செப்டெம்பர் 2010 இதழிலிருந்து )
இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினர். அப்போராட்டத்தை வழிநடத்திய “”சோசலிசத்துக்கான இயக்க” த்தின் தலைவரான இவா மொரேல்ஸ், 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். பொலிவிய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை எதிரொலிக்கும் வகையிலும், தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் உணர்விலும் அவர் ஐ.நா.வில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில், பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. உலகின் ஏகாதிபத்திய நாடுகளும் பணக்கார நாடுகளுமான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, இஸ்ரேல், நெதர்லாந்து, டென்மார்க் முதலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை நாடகமாடியுள்ளன.
இத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறி அதை நீர்த்துப்போக வைக்கவும் ஏகாதிபத்திய நாடுகளும் தண்ணீர் ஏகபோக நிறுவனங்களும் கடும் முயற்சி செய்தன. ஏனெனில், இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரக்கூடிய, கொள்ளை இலாபம் தரக்கூடிய தொழிலாக தண்ணீர் வியாபாரம் முன்னணிக்கு வந்துள்ளது. இதனாலேயே தண்ணீரை “நீலத் தங்கம்” என்று பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் அழைக்கின்றன. கடந்த ஆண்டில், எண்ணெக் கம்பெனிகளின் இலாபத்தில் ஏறத்தாழ 40 சதவீதத்தை தண்ணீர் கம்பெனிகள் அடைந்துள்ளன. இந்தக் கம்பெனிகள், உலகின் தண்ணீர் ஆதாரங்களில் 5% அளவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன. இதிலேயே இவ்வளவு இலாபம் என்றால், இதர நீர் ஆதாரங்களையும் அவைக் கைப்பற்றிக் கொண்டால் அவற்றின் இலாபம் எவ்வளவு மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோகளால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக் கொடிய இருபெரும் நோகளான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் நோ தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. உலகின் வளரும் நாடுகளிலுள்ள ஏறத்தாழ 40 % மக்களுக்கு முற்றாக இத்தகைய வசதிகள் இல்லை. ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரின்றி மக்கள் வெளியேறும் போக்கு பல ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தானிலும் நிகழ்ந்து வருகிறது. இவர்கள் “தண்ணீர் அகதிகள்” என்று குறிப்பிடப்படுகின்றனர்.
இந்தியாவில் 1985-இல் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 750. இது 1995-இல் 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாக அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. அந்நீரைக் குடிக்கவோ குளிக்கவோ பயன்படுத்த முடியாது. நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் கிடையாது. இந்தியாவில் நடந்துவரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி ரூபா என்கிறது ஒரு ஆய்வு. தண்ணீர் தனியார்மயத்தை உள்நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்திவரும் இந்திய அரசு, உலக அரங்கில் தண்ணீர் மட்டுமின்றி, பல்வேறு மனித உரிமை விவகாரங்களில் முற்போக்கு நாடகமாடிக் கொண்டு பித்தலாட்டம் செய்து வருகிறது.
தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது உங்களது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆகவேண்டிய விசயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டு வந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், உலக நாடுகளைக் கட்டுப்படுத்தாத வெறும் காகிதத் தீர்மானம்தான். கட்டுப்படுத்தும் என்றால் இத்தனை நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், பெயரளவிலான இத்தீர்மானத்தைக் கூட ஏகாதிபத்திய தண்ணீர் ஏகபோக நிறுவனங்கள் எதிர்த்து நின்று சதி செய்கின்றன. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் ஆபத்து என்று அலறுகின்றன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பிற நாடுகளில் தலையீடு செயும் ஏகாதிபத்தியங்கள், மிகச் சாதாரண தண்ணீர் பெறும் உரிமையை நிலைநாட்டக் கோரும்போது, அதை நிராகரித்து எதிராக நிற்கின்றன. மனித உரிமை என்றெல்லாம் தமது ஆதிக்க நலன்களிலிருந்துதான் ஏகாதிபத்திய நாடுகள் கூச்சலிடுகின்றனவே தவிர, மக்கள் நலனிலிருந்து அல்ல.
மனித இனம் குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்காமல் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தண்ணீர் ஏகபோக நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கும் சூறையாடலுக்கும் எவ்வித சிறு இடையூறும் நேரக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் நியாயவாதம். இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமை!
________________________________________________
Flemming Bonne er død
Folketingsmedlem, Flemming Bonne, er død efter kort tids sygdom. Det oplyser TV2 Øst.
Han blev 65 år.
Indtil 2006 var Flemming Bonne borgmester i Nakskov, og før det byrådsmedlem samme sted. Siden valget i 2007 har han været SFs kommunalordfører på Christiansborg.
SFs formand Villy Søvndal skriver i et mindeord, at han med stor sorg "pludselig modtog beskeden om Flemming Bonnes alt for tidlige død her kort før, han ville være fyldt 66 år - og alle vore tanker går da også til hans kone, børn og børnebørn."
- Han forbliver en inspiration i sit konkrete og praktiske arbejde med både at sikre mennesker et job og brød på bordet - og engagere sig i en global klimapolitisk kamp for fremtiden, skriver Villy Søvndal.
- Jeg kommer til at savne Flemmings rolige og myndige facon, hvor politisk skarphed gik hånd i hånd med hans lune og samtidigt elegante afslappethed, lyder det videre.
Han efterlader en kone og to voksne børn.
Thursday, September 09, 2010
தோழர் கார்த்திகேசன் 33வது வருட நினைவுகூரல்
இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்களது மறைவின் 33வது வருட நினைவுகூரல் நிகழ்வு
காலம்:19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணி
இடம்: யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடம், (யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்) கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்
தலைமை:திரு ரெங்கன் தேவராஜன், வழக்கறிஞர்
பேச்சாளர்கள்:
திரு எஸ்.ஜி.புஞ்சிகேவா, வழக்கறிஞர் - திரு எம்.ஜி.பசீர், ஜே.பி., யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர் - கலாநிதி செல்வி திருச்சந்திரன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன பணிப்பாளர் -திரு வீ.சின்னத்தம்பி, இளைப்பாறிய ஆசிரியர்
ஏற்பாட்டாளர்கள்: கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியம் - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் -யாழ் ஆய்வறிவாளர் அணியம், த.பெ.இலக்கம் 165, யாழ்ப்பாணம்
Indlæg til debat
Skingre budskaber fra Venstre
-Troels Ravn -(Foketingskandidat (S))
De to Venstre-folk, Troels Lund Poulsen og Michael Aastrup Jensen udstillede i den forløbne uge på hver sin måde med bombastiske og absurde udtalelser, at den borgerlige regering er desperat i sin jagt på at skabe overskrifter og flytte fokus fra sin mislykkede økonomiske politik. TLP lagde ud, og proklamerede, at Socialdemokraterne ikke må presse SKAT for en hurtig afgørelse i familien Thorning-Schmidt’s skattesag. Skatteministeren ved udmærket, at Socialdemokraterne ikke har foretaget sig noget som helst angribeligt, men naturligt nok ønsker en hurtig afgørelse. Men TLP og regeringen er i panik, og ønsker tydeligvis at bære ved til et bål, der er ved at brænde ud.
Derefter kom Michael Aastrup Jensen på banen. Nu skulle vort svenske broderfolk belæres om begreberne frihed og demokrati. Sidstnævnte udtalelser er efter min mening eksempler på den magtfuldkommenhed og bedreviden, der præger regeringen. Inden MAJ bliver for højstemt i sin iver efter at revse vort svenske broderfolk, burde han i stedet kaste et kritisk blik tilbage på sin egen regerings ageren gennem de seneste 9 år. Anders Fogh Rasmussen sendte Danmark i krig i Irak i strid med Folkeretten og med et meget snævert politisk flertal i ryggen. Samme Anders Fogh nægtede kategorisk gennem flere år at møde journalister, som ønskede at konfrontere ham med Danmarks krigsdeltagelse. Og sammen med DF har regeringen gennem hele sit regime med giftig retorik ført en værdi- og kulturkamp, der på store stræk har været præget af intolerance og snæversyn, har delt befolkningen i dem og os, får og bukke, samt sendt Danmark ud i en fuldstændig meningsløs Muhammedkrise. Jo, de har så sandelig grund til at tage ved lære hinsidans.
Dalgårdsvej 124
6600 Vejen
Tuesday, September 07, 2010
முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட கேள்வி
அது யாருக்கு இருண்ட காலம் ?
-ஆதவன் தீட்சண்யா -
“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது... வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி...” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )
இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).
அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு'வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன. இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்...” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.
சரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது? இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள்? ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா? அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா? எதற்கிந்த வசை?
இங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை?
அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?
“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.
பார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்...” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)
களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) ... பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்.... “ என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )
‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார். அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.
இப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா? அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.
“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.
அவசரத்திற்கு உதவிய நூல்கள்:
1. தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)
2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
3.பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )
4.தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )
Monday, September 06, 2010
செங்கடல் வளரும் திரைப்படம்
செங்கடல்
(விகடனின் கேள்விகளுக்குத் தொகுப்பாக எழுதி வழங்கியது)
நன்றி : விகடன்