Tuesday, June 09, 2026

பிரக்ஜை

 -கரவைதாசன்-

   நான், அம்மா, அக்கா, தங்கை, ஐயா எல்லாருமாக  வீட்டுக்குள்ள இருக்கிறம் . மூலையில் கைவிளக்கு எரிந்துகொண்டிருக்கின்றது. விளக்கு சின்னதுதான் ஆனால் அறையிலிருந்த இருட்டு முழுவதையும் விரட்டியடித்து விட்டிருந்தது. ஒரு கடகம் இல்லை! ஒரு மூடல் அதுவும் இல்லை! அப்படின்றால் அதனை எப்படி அழைப்பது? ஓ! ஒரு குஞ்சுப்பெட்டி இது தான் சரி. அது நிறைய இடியப்பம் இருக்கிறது. உடனே அம்மியில் அரைச்சு எடுத்து வந்த சம்பல் ஒரு கிண்ணத்திலும் சட்டி நிறைய  தக்காளியும் சிறு நெத்தலியும் போட்டு வைச்ச சொதியும் இருக்கிறது. இந்த நேரத்தில எங்கால நெத்தலி என்று கேட்கக் கூடாது. எங்கட ஊர்ப்பக்கம் பின்னேரம் கூடுகிற கோயில்ச் சந்தையிலிருந்து அது அம்மம்மா கொண்டு வந்தது. எல்லாருமாக சாப்பிடத் தொடங்கும்போது நான் மட்டும் குழப்படி செய்யிறன். 

  "எனக்கு இடியப்பம் வேண்டாம். எனக்கு ஐயா வாங்கி வந்த பணிஸ்தான் வேணும்." இதில் நான் பிடிவாதமாக நிற்கிறன். அம்மா எனக்கெதிராக ஏப்பையை தூக்குகிறா. திண்ணையில் இருந்து நிலைமைகளை  அவதானித்த அம்மம்மா   "நான் யாவாரத்துக்கு எடுத்துச்செல்ல அரிஞ்சு வைச்ச வாழைப்பழ சீப்புகளில் நாலு கரஞ்ச பழத்தை இப்ப சாப்பாட்டுக்கு எடுங்கோவன்" என்று கூறுகிறா.

    ஐயா  சொல்லுகிறார் "அதிலை பிள்ளை இரண்டு பழத்தைப் பிடுங்கி பணிசோட அவனுக்கு குடுங்கோவன்" ஐயா அம்மாவை எப்பவும் பிள்ளை என்றுதான் அழைப்பார். எனக்கு பணிசும் பழமும் அவைக்கு சம்பலும் சொதியும் இடியப்பமும். எனக்கு நிறைய சந்தோசம். நான் வீட்டில் எல்லாருக்கும் செல்லம், யாரென்றில்லை  ஒருவர் கோவித்தாலும்  வேறு யாராவது ஒருவரிடமிருந்து எனக்கு அரவணைப்பு கிடைக்கும்.  

   எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம். "மாமி கொஞ்சம் காலைவில த்தணை"  தாழ்வாரத்துக்கு குனிந்தவாறு சொல்லிக்கொண்டு பெரியப்பா திண்ணைக்கு வருகிறார்...  பெரியப்பாவென்றால் அம்மாவின்ர சொந்த மச்சான். அவருக்கு நான் பெறாமகன். 

    "யார் வாத்தியாரே? வாங்கோ! வாங்கோ!" ஐயா சாப்பாட்டுக்குள்ளால கையை  எடுத்துக்கொண்டு செம்பையும் தண்ணியையும் தூக்குகிறார். "அவசரமில்லை,  நாங்கள் முற்றத்தில இருக்கிறம் . நீங்கள் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வாங்கோ" என்று கூறிக்கொண்டு பெரியப்பா முற்றத்துக்கு திரும்புகிறார். 

    முற்றத்தில் இந்தியாவிலிருந்து வந்த நடிகர் கோபாலகிருஷ்ணர், அவர் கையில் ஒரு பருவ வயதை எட்டிய   பராயப் பெண் பிள்ளையுடன் நிற்கிறார். படங்களில் பார்த்த அதே முகம் , நல்ல நரைத்த வெள்ளைத்தலை, வெள்ளை அரக்கை சேர்ட் + வெள்ளை நாலுமுழம். அந்தப் பெண்கூட வடிவானவளாக இருக்கிறாள். அவளுக்கு இது புது இடம் தானே அவளது வண்டுக் கண்களால் உருட்டி உருட்டி எல்லாரையும் பார்க்கிறாள். ஆனால் எனக்கோ அவள் என்னை மட்டும் துரத்தித்  துரத்தி தேடுவது போல் மனதிற்குள் மத்தளம். 

    ஐயா  முற்றத்திற்கு வந்ததும் ஐயாவும் பெரியப்பாவும் கதைத்துக் கொள்ளு .கினம் சித்தப்பாவும் தங்கட வீட்டுத் தாழ்வாரத்துக்குள்ளால குனிந்து முற்றத்துக்கு வருகின்றார்.

    எங்களின்ர வளவுக்கு பெரிய முற்றம் அடுப்புக்கு  மூன்றுகால்    வைச்சது மாதிரி எங்கடவீடும் சித்தியின்ரவீடும் மாமாவின்ரவீடும். இந்த மூன்று வீடுகளையும் பிறவெட்டுத்தடிகளால் வளைச்சுப் போட்ட வேலி இருக்கு, ஆனால் படலை இல்லை. முற்றம் நிறைய வெள்ளை மணல். அன்று பௌர்ணமி, அதனால் முற்றம் முழுவதும் பால்போல் இருந்தது. வேலிகளுக்கேயிருந்த நந்தியாவெட்டையும் பட்டிப்பூவும் காற்றடிக்கும் போதெல்லாம்  சிரித்துக் கொள்கின்றன. மாலுக்குள்ள இலட்சுமி படுத்துக்கொண்டு பகல் மேந்த  புல்லின் சுவைதனை மீ ட்டு இரைகண்டது. 

    இப்ப எங்கள் முற்றம் நிறைய சனம். அந்தோனிமாமா, காதர்காக்கா, பியதாச ஐயே  இன்னும் நிறைய ஐயாவின் கட்சியாக்கள். பெரியப்பா கொண்டு வந்த அரிக்கன் லாம்பு இரண்டையும் அம்மாவிடம் நீட்டியவாறு "சிமிளினை மினுக்குங்கோ" என்று சொல்லுகிறார். ஆனால் ராணிச்சித்திதான் லாம்புகளை வாங்கிக்கொண்டு எரிச்ச உமி போட்டு மினுக்கிறாள். 

    அரிக்கன் லாம்பு இரண்டும் இப்போ முற்றத்துக்கு வந்தாச்சு எல்லாரது முகங்களும் இப்போ வடிவாகத் தெரிகிறது. வகுப்பு ஆரம்பமாகியாச்சு முதலில் பெரியப்பா, பிறகு ஐயா இப்போ கோபாலகிருஸ்ணர் பேசிக் கொண்ட்டிருகின்றார். நாட்டில் எல்லாரும் கட்சிக்காக கூட்டம் கூடுவார்கள். ஆனால் இவர்கள் வகுப்பு எடுக்கிறம் அல்லது வகுப்பு நடத்துறம் என்று தான் சொல்லுவார்கள். அவர் பேசுவது என் காதில் தெளிவாக விழுகிறது . ஆனால் அது பற்றி நான் யாருடனும் கதைத்துக்கொள்வதில்லை. அதற்கான பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையாம் . ஐயாவும் மாமாவும் கண்டிப்பான தொனியில் சொல்லிக்கொள்வார்கள்.   "நீயென்ன இப்போதும் குழந்தைதானே  இனி  வாலிபனாகி கமிட்டிக் காட்டெடுக்க இன்னும் காலங்கள் இருக்கு"  என்பார்கள்.    

      கோபாலகிருஸ்ணர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார். "பேரினவாத அரசு அப்பாவி மக்கெளுக்கெதிராக அராஜகத்தினை" எல்லாரும் அவதானமாகக்  கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நானும் தான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் வலு தெளிவாக என் காதில் விழுகின்றன. நவ குடியேற்ற வாதம் ,  இலுமினாட்டிகள், உலகமயமாதல், பேரினவாதம், குறுந்தமிழ் தேசியம், அராஜகம், கொடூரம், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது, பங்கெடுப்பு சொற்கள் தொடர்கிறது  நான் அவற்றை அசை போட்டுக் கொண்டு உச்சரித்துப் பார்க்கிறேன். எனக்கு பக்குவம் வர, வாலிபக் கமிட்டிக் காட்டு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் தான்  இருக்கின்றன. நானும் ஐயா வைப்போல, மாமாவைப்போல, பெரியப்பாவைபோல, கோபாலகிருஸ்ணரைப் போல  பேச வேண்டும் ........ 

       (காகம் இதழ்:4  ஏப்ரல் 1995 )

 


No comments: