Sunday, December 15, 2019

-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை.


தமிழில் : ஜி. குப்புசாமி 

மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே:
இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எனது நாவலான “The Rat” இன் பிரளயமான கதையோட்டத்தில் , கோணல்மாணலான தளங்களில் செல்லும் சுற்றி வளைத்த நடையில், இதைப் போன்றதொரு சபையோரின் முன்னால் நிகழ்த்தப்படும் ஒரு புகழுரை இடம்பெறுவதை எனது ஒரு சில வாசகர்கள் இப்போது நினைவுப்படுத்திக்கொள்ளலாம். ஓர் சோதனைக் கூடத்தில் பயன்படுத்தப்படும் வெள்ளெலிக்கு – அங்கே புகழாரம் சூட்டப்படுகிறது.

அந்த எலிக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ‘அப்பாடா, கடைசியில் தரப்பட்டதே’ என்று ஒருவர் சொல்லலாம். அதன் பெயர் பல வருடங்களாக பட்டியலில் இருந்து வருகிறது. இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்த இலட்சக்கணக்கான சோதனைக்கூட விலங்குகளிலில் – கினிப்பன்றியிலிருந்து ரீஸஸ் குரங்குவரை – வெள்ளை ரோமமும், சிவப்புக் கண்களும் கொண்ட இந்த எலி இறுதியில் உரிய கெளவரத்தைப் பெறுகிறது. எனது நாவலில் கதை சொல்லியின் அபிப்பிராயத்தின் படி, நோபல் பரிசிற்குகந்த மருத்துவ ஆராய்ச்சியிலும், மரபணு ஆராய்ச்சியிலும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை விரித்து வைத்த ‘வாட்ஸன்’ மற்றும் ‘க்ரிக்கின்’ ஆய்வுகளிலும் மற்றெந்த பிராணிகளை விடவும் இந்த வெள்ளெலிகளே உபயோகப்படுத்தப்பட்டு, வெற்றிபெற உதவியிருக்கின்றன. இதற்குப் பிறகே சோளத்திலும் மற்ற காய்கறிகளிலும், இதர சோதனைக்கூட விலங்களிலும் படிபடியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட சட்டபூர்வமான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனாலேயே, இந்நாவல் முடிவிற்கு வரும்போது மனிதகுலத்தின் இறுதிநாட்களில் உருவான ‘வாட்ஸன் க்ரிக்குகள்’ எனப்படும் ‘எலிமனிதர்கள்’ இவ்வுலகை கோலோச்சத் துவங்குகின்றனர். இவர்களிடம் மனித, விலங்கினத்தின் இரு நற்பண்புகளும் கலந்திருக்கின்றன. மனிதர்களிடம் பெரும்பான்மையாக எலியும், எலியிடம் பெரும்பான்மையாக மனிதனும் இருக்கின்றனர். உலகம் இக்கலப்பின் மூலம் தனது ஆரோக்கியத்தை மீட்டெடுத்துக் கொள்கிறது. மாபெரும் அண்ட வெடிப்பிற்குப் பின் வெறும் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் ஈக்களும் ஒருசில மீன், தவளை முட்டைகளுமே எஞ்சியிருக்கின்றன. அதனால், இக்களேபரத்திலிருந்து மீண்டும், ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவர, ஆச்சரியகரமாக பிழைத்திருக்கும் இந்த ‘வாட்ஸன் க்ரிக்குகள்’தான் அனைத்திற்கும் தலைமையேற்க வேண்டியிருக்கிறது.

ஆனால், இக்கதையிழையை சுலபமாக ‘தொடரும்’ போட்டு முடித்து, சோதனைக்கூட வெள்ளெலிக்கு நோபல் வழங்கப்படுவதுடன் நாவலை சந்தோஷமாக முடித்து விடுவதற்காக பின்னப்பட்டதல்ல. இப்போது நான் – நியாயப்படி கூறவேண்டுமானால் – கதைசொல்லலை தப்பிப் பிழைத்திருப்பதற்கான ஒரு வடிவமாகவும், கலையின் ஒரு வடிவமாகவும் அணுகியிருக்கிறேன் என்று சொல்லலாம்.
மனிதர்கள் எப்போதும் கதைகள் கூறி வந்திருக்கின்றனர். மனிதகுலம் எழுதக் கற்றுக்கொள்ளும் முன், படிக்கத் துவங்கும் முன், எல்லோரும் எல்லாருக்கும் கதைகள் சொல்ல, எல்லோரும் எல்லோருடைய கதைகளை கேட்டும் வந்திருக்கின்றனர். சில படிக்காத கதை சொல்லிகள் மற்றவர்களைவிட அதிகமாகவும், சிறப்பாகவும் கதைகள் வைத்திருப்பது சீக்கிரமே தெரியவந்தது. அவர்களால் மனிதர்களை தமது பொய்களால் நம்பவைக்க முடிந்தது. அவர்களிலும் சிலர் அமைதியாக ஓடிச்செல்லும் தமது கதையிழைகளை வெட்டி கிளையாறுகளாக பிரித்து திசை மாற்ற, அவைகளும் வியக்கதக்க வகையில் வற்றிப்போகாமல் திடுமென திரும்பி, அகன்றப் படுகையாய் பெருகி, மூழ்கிய படகுகளின் சேதார மிச்சங்களும், பளுக்கள் மிதிக்கிற உபகதைகளும் புகுந்தன. இந்த ஆதிகாலக் கதைசொல்லிகள் பகலையோ, விளக்கொளியையோ நம்பியில்லாமல், தமது கதைகளின் மர்மத்திற்கும் திகிலிற்கும் உதவக்கூடிய அரைவெளிச்சத்திலும், இருட்டிலும் தமது பணியை கச்சிதமாகச் செய்யக் கூடியவர்களாயிருந்தனர் வறட்சியோ, கடுமழையோ எதுவும் அவர்களின் கதை சொல்லலை நிறுத்தக் கூடியதாயில்லை. கேட்பவரின் கவனம் திசை மாறுவதாகவோ, அல்லது தமது சொந்தக் கதைகளை மற்றவரிடம் சொல்லத் துவங்கி விட்டதாகவோ அறிந்தால் மட்டுமே தமது கதை சொல்லலை ‘தொடரும்’ போட்டு நிறுத்தினர்.
யாருக்கும் எழுதத்தெரியாத காலத்தில், அதனால் யாரும் எழுதாத காலத்தில் என்ன கதைகள் சொல்லப்பட்டன. ‘கெய்ன்னும் ஏபலும்’ காலத்திலிருந்தே கத்திக்குத்து, கொலைக்கதைகள் துவங்கிவிட்டன. பரம்பரைச் சண்டைகள், அதுவும் ரத்த வெறிச் சண்டைகள், எப்போதுமே கதைகளுக்கு உகந்தவை. இனக்கொலைகள் வெள்ளங்களோடும், வறட்சிகளோடும் ஆரம்பத்திலேயே வரத் துவங்கி விட்டன. கால் நடைகள், அடிமைகள் எனப் பட்டியல் நீளமாக இருப்பது உசிதமானது. ஆனால் சாகச வீரர்களின் கதைகளில் யாருக்குப்பின் யார் வந்ததென்ற குடிவழிப்பட்டியல் இல்லாவிட்டால் எந்தக்கதைகளும் நம்பப்படமாட்டாது. இப்போதுகூட பிரபலமாயிருக்கும் முக்கோணக் காதல்களும், சிக்கலான திருக்கு மறுக்கு வழிகளூடே முன்னேறி வருகிற, நீண்டுயர்ந்த கோரைப் பற்களுக்கிடையில் ஒளிந்திருக்கிற பாதி மனித, பாதிவிலங்கு அரக்கர் கதைகளும் பெருவாரியான வாசிப்பைத் தாண்டி வந்திருக்கின்றன. கடவுள் கதைகளும், கடல் யாத்திரைகளும் பளபளப்பேற்றப்பட்டு பெரிதாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, உருமாற்றப்பட்ட வித்தைகள் நடத்தி இறுதியில் இதைச் சொல்பவர் ஹோமர் என்றும், அல்லது பைபிள் என்றும் இருந்ததால், கதையாளர் குழுக்களும், கதைகளும் பிரபலமாகி வந்திருக்கின்றன. சீனாவிலும், பெரிஷியாவிலும் இந்தியாவிலும், பெரூவிய பீடபூமிகளிலும் எங்கெல்லாம் எழுத்து செழித்திருக்கிறதோ, அங்கே கதை சொல்லிகள்- குழுக்களாகவோ, தனி நபராகவோ, புனை பெயரிலோ, சொந்தப் பெயரிலோ; அறிவுஜீவிகளாக, ஞானவான்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனர். எழுதப்பட்ட இலக்கியத்திலேயே இப்போது நாம் பழகிவிட்டிருப்பினும் வாய்மொழி கதை சொல்லின் ஞாபகங்களை இன்னமும் தக்க வைத்திருக்கிறோம். அதுவும் நல்லதிற்குதான்; வாய்வழியாக வரும் கதையில் தொடர்பில்லாமல் தயங்கி, பின் பயத்தில் விரட்டபட்டதைப் போல பதைப்பில், கேட்ககூடாதவர் காதில் விழக்கூடாததைப் போல கிசுகிசுப்பில், பின் உரக்க, தெளிவாக என சொந்தக் குமுறல்களிலிருந்து வாழ்க்கையின் ஆதாரத் தேடல் வரை எத்தனை விதப் பரப்புகளை இக்கதைகள் சித்தரித்திருக்கின்றன? எழுதுவதை மட்டுமே நமது நம்பிக்கையாகக் கொண்டால் நமது கதை சொல்லல் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக புழுதியில் உலர்ந்து போய்விடாதா? இருந்தும் உரக்கப் படித்துக் காட்டுகிறோமோ, அல்லது நமக்குள் வாசித்துக் கொள்கிறோமோ, எவ்வளவு புத்தகங்கள் நிரந்தர வஸ்துக்களாக நமக்குக் கிடைக்கின்றன! இவை தாம் எனக்கு ஊக்கமளிப்பவை. என் இளமையில், மென்மையானவனாக நானிருந்த காலத்தில் மெல்வில்லி, டாப்ளின், லூதர் போன்ற ஆசான்கள் எனது விவிலிய பாடங்களைப் புராதனமான ஜெர்மன் மொழியில் எழுதுகையில், அவற்றை உரக்க சொல்லிக்கொண்டே, மையோடு எச்சிலும் தெறிக்க எழுத வேண்டுமென கட்டாயப்படுத்துவார். இப்போதும் அதிகம் மாறிடவில்லை. எழுத்து என்கிற எனது ஐம்பதாண்டுக்கால ரசிப்பதற்குரிய சித்ரவதையில் வாசகங்களின் இழைகளை மென்று, இயன்றவரை கூழாக்கி, எனை மறந்த ஏகாந்தத்தில், என் பிரத்தியேகமான மழலை மொழியில் எனக்கு நானே சொல்லிப் பார்த்துக்கொண்டு, சரியான தொனியோ, வைரமோ, இசையதிர்வோ கிடைத்தால் மட்டுமே எனது பேனாவை தாளின் மீது பதிக்கிறேன்.
ஆம், என் கதை ஒப்பிப்பை நான் நேசிக்கிறேன். அது எனக்குத் துணையாக, தனது பல்கூறான பேச்சுத் தடங்களோடு, என் எழுத்துகளை இலக்கியப் பதிவுகளாக்குகின்றது. தமது கூடுகளை விட்டுப் பறந்து போய் வெகுநாளாகிவிட்ட எனது புத்தகங்களை வாசகரின் சொந்த உரிமையானபின் சந்திப்பதும், புத்தகங்களில் மெளனமாய் படிந்திருப்பவற்றை நேயர்கள் முன் வாசிப்பதற்கும் இணையான சந்தோஷத்தை தவிர எனக்கேதுமில்லை. மொழியிலிருந்து ஆரம்பத்திலேயே பால்குடி மறந்த இளவயதினருக்கும், நரை விழுந்தபின்பும் தனியாத பசிக்கொண்ட முதியோருக்கும் எழுதப்பட்ட வார்த்தை உச்சரிக்கபடும் போது அந்த மாயவித்தை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. படைப்பாளிக்குள்ளிருக்கும் மாயவித்தைக்காரன் காலவோட்டத்திற்கெதிராக எழுதிக்கொண்டு , நிலைத்திருக்கும் நிஜங்களில் புழங்கிக் கொண்டு இதில் பிழைப்பு நடத்தி வருகிறான். அவன் வாய்விட்டுச் சொல்லாத இந்த சத்தியத்தை அனைவரும் நம்புகின்றனர் ; தொடரும்.
ஆனால், ‘நான் எவ்வாறு ஒரே சமயத்தில் எழுத்தாளனாக, கவிஞனாக, கலைஞனாக அதுவும் இந்த பயமுறுத்துகிற வெள்ளைத்தாள் மீது உருவாகியிருக்கிறேன்?’ ஒரு சிறுவனின் எந்த இறுமாப்பு இப்படியான பைத்தியக்காரத் தனத்திற்கு இட்டுச்சென்றது? நான் ஒரு எழுத்தாளனாக விரும்புவதை நான் புரிந்து கொண்ட போது எனக்கு வயது பனிரெண்டு. அது இரண்டாம் உலகப்போர் வெடித்திருந்த காலம். டான்ஸிக் நகரின் புறநகர் பகுதியில் நாங்கள் அப்போது குடியிருந்தோம். எனது திறமையை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் அடுத்த வருடம்தான் கிடைத்தது. இளைஞர்களுக்கான ஹிட்லரின் பத்திரிக்கை ‘Hilf – mit’ இல் (உதவிக்கரம் நீட்டு) ஒரு கதைப்போட்டி வந்தது. பரிசுகள் கவர்ச்சிகரமாக இருந்தன. உடனே என் முதல் நாவலை எழுத உட்கார்ந்தேன். என் தாயின் பின்னணி ஏற்படுத்தியிருந்த பாதிப்பில் அதற்கு ‘The Kashubians’ என்ற தலைப்பு வைத்தேன். ஆனால் கதை நிகழ்வுகள் அப்போது அருகி வரும் சிறுபான்மையினரான அந்தப் பாவப்பட்ட மக்கள் மத்தியில் நடப்பதாக இல்லாமல், 13ஆம் நூற்றாண்டில் வழிப்பறித் திருடர்களும் கொள்ளைக்காரர்களும் கோலோச்சிவந்த ஓர் இடையாட்சிக் காலத்தில் நடப்பதாக அமைந்திருந்தேன். நீதி என்பதே ஒருவித கட்டைப் பஞ்சாயத்து மூலமே எளியோர்களுக்கு கிடைத்து வந்த காலம் அது. அந்தக் கதையில் எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம், அந்த கஷீபிய மண்டலத்தின் பொருளாதார நிலைமையை சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டிவிட்டு, வழிப்பறிக் கொள்ளைகளையும் கூட்டுக் கொலைகளையும் வெகு உக்கிரமாக விவரிக்க ஆரம்பித்ததுதான். ஏகப்பட்ட கழுத்துநெரிப்புகளும், கத்திக்குத்துகளும், வெட்டுகளும் கட்டைப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளும், ஏகப்பட்ட தூக்குத் தண்டனைகளும், சிரத்தேசங்களும் என முடிந்து, முதல் அத்தியாயம் முடிவதற்குள்ளாகவே எல்லா பிரதான பாத்திரங்களும், ஏராளமான துணைப் பாத்திரங்களும் ஒன்று இறந்தோ அல்லது புதைந்தோ அல்லது காகங்களுக்கு இரையாகியோ போயிருந்தனர். பிணங்களிலிருந்து ஆவிகளை எழுப்பி பேய்க்கதை எழுத தனது எழுத்துப்பாணி இடந்தராததால் தோல்வியை ஒப்புக்கொண்டு அத்துடன் முடிக்க வேண்டியதாயிற்று. ‘தொடரும்’ போட இடமில்லை. பரிதாபமான முடிவுதான். ஆனாலும் அந்தக் கற்றுக்குட்டி தனது ஆரம்பப் பாடங்களை கற்றுக்கொண்டது. அடுத்தமுறை தனது பாத்திரங்களிடம் இன்னும் கொஞ்சம் கருணையோடு நடந்து கொள்ளவேண்டும் என்று.
முதலில் நான் வாசிக்கத் துவங்கினேன். மேலும் மேலும் வாசித்தேன். நான் படிக்கும்விதமே தனியானது. விரல்களால் காதுகளை அடைத்துக்கொண்டு படிப்பது, காரணம் நானும் என் தங்கையும் எங்களுக்கென்று தனித்தனியான அறைகளில்லாத ஓர் இரண்டு அறை – குடியிருப்பில் வசித்தது. எங்களுக்கு என்றொரு மூலைகூட தனியாக இல்லாத சூழலில் சிறுவயதிலேயே எந்தவொரு இரைச்சலுக்கும், ஜனக் கூட்டத்திற்குமிடையிலும் என்னால் மனதை ஒருமுகப்படுத்தி வாசிக்க முடிந்திருக்கிறது. வாசிக்கத் துவங்கிவிட்டால் நான் ஒரு கண்ணாடி குடுவைக்குள் அடைக்கப்பட்டதைப் போல புத்தகத்திற்குள்ளேயே மூழ்கிவிட முடிந்தது. குறும்புத்தனங்களுக்கு பெயர்போன என் அம்மா, தன் மகனின் சிதறாத கவனப்பெருமையை தனது சிநேகிதிகளிடம் காட்டிக் கொள்வதற்காக ஒரு விளையாட்டை செய்தார். அப்போது தட்டிலிருந்த பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டே ஏதோ வாசித்துக் கொண்டிருந்த என்னிடம், பிஸ்கெட்டை எடுத்துவிட்டு, தட்டில் ஒரு சோப்புக் கட்டியை – பாமாலிவ் என்று ஞாபகம் – வைத்துவிட்டார். படிக்கிற ஆர்வத்தில் அதையும் எடுத்து வாயில்போட்டு, அம்மாவும் அவர் சிநேகிதிகளும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, முழுசாக ஒரு நிமிடம் மென்று முடித்தபிறகுதான் எனக்கு உறைத்து, புத்தகத்தைப் போட்டுவிட்டு வாயிலிருப்பதை துப்பியிருக்கிறேன்.
இன்றும்கூட அதைப்போலவே ஒருமுகப்படுத்தி, கவனம் விலகாது வாசிப்பேன்; அந்தளவிற்கு வெறிபிடித்து படிப்பதில்லை அவ்வளவுதான். அப்போது அலமாரியின் நீலத்திரைமூடிய கண்ணாடிக்குப் பின்னால் எங்கள் புத்தகங்கள் இருக்கும். என் அம்மா ஒரு புத்தக கிளப்பில் உறுப்பினராக இருந்தார். தஸ்தாயேவ்ஸ்கி, தல்ஸ்தோய் நாவல்கள் அருகருகே அடுக்கப்பட்டிருக்கும். இடையே ஹாம்ஸன், ராபே, விக்கி பெளம் நூல்களும் இருக்கும். பிற்பாடு நகராட்சி நூலகத்திற்கு நான் செல்லவேண்டியிருந்தாலும் அம்மாவின் சேகரிப்புகள்தான் ஆர்வத்தின் முதல் தீண்டல். ஆசாரசீலரான வணிகராக, நாணயமற்ற வாடிக்கையாளர்களுக்கு கடனில் விற்று நொடிந்துப்போனாலும் பெரும் ரசனையாளராக அவர் இருந்தார். என் ஆரம்பக் கதைகளை ஆர்வத்துடன் கேட்பார். என்னையும் அழைத்துக்கொண்டு நகராட்சி அரங்கிற்கு என்று அடிக்கடிச் செல்வார்.
எனது சாதாரண பூர்ஷ்வா இளம்பிராயத்தை பல்லாண்டுகளுக்கு முன்னாலேயே கற்பனைப் பாத்திரங்களோடு சித்தரித்து முடித்துவிட்டு, இப்போது அவற்றையெல்லாம் மீண்டும் அரங்கேற்றுவது என்னைக் கேட்கப்பட்ட, “எழுத்தாளராக உங்களை ஆக்கியது எது?” என்ற கேள்விக்கு பதிலைக் கூறுவதற்காகவே தொடர்ந்த பகல்கனவு காணும் ஆற்றலும், மொழியை வைத்து உருட்டி விளையாடும் ஆதாரமான ஆர்வமும், நிஜத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குவதென்பது சரியான “போர்” என்பதால் பொய்க்காகவே சொல்வதும் வேட்கையும், மேலோட்டமாக திறமை என்று கூறப்படுகிறது. இருந்ததும், கடைசியாக, அமைதியானதொரு குடும்பத்தில் தீடீரென்று புகுந்த அரசியல், லேசாக மிதந்து கொண்டிருந்த திறமைக்கு எடைப்பாரமேற்றி ஒருவித நிரந்தரத்தன்மையையும், ஆழத்தையும் அளித்துவிட்டதும் காரணமாகும்.
என் அம்மாவைப் போலவே பிறப்பால் காஷீபியனான என் மாமா டான்ஸிகின் ஃப்ரீசிடியில் இருந்த போலாந்து அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்தார். அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவருக்கு நான் செல்லம். போர் வெடித்த போது ஹெவிலியஸ் ஸ்கொயர் அஞ்சலகக் கட்டிடம், ‘SS – Heonwehr’களால் முற்றுகையிடப்பட்டது. மாமா உள்ளேதான் இருந்தார். இறுதியில் அனைவரும் சரணடைந்தனர். விசாரணைப்பிறகு அவர்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டனர். திடீரென்று அவர் எங்கள் வாழ்க்கையிலிருந்து முற்றமாக அழிக்கப்பட்டுவிட்டார். இத்தனை நாட்களாக கேட்கப்பட்டு வந்த அவரது பெயர் உச்சரிக்கப்படுவது திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டது. இல்லாத மனிதராக அவர் ஆகிவிட்டார். ஆனாலும் அவர் எனக்குள் தொடர்ந்து வாழ்ந்தே தான் வந்திருக்கவேண்டும். பதினைந்துவயதில் நான் சீருடை அணிந்தபோது, பதினாறுவயதில் முதன்முதலாக பயம் என்பது, என்னவென்று அறிந்தபோது, பதினேழு வயதில் அமெரிக்கப் போர்க்கைதிகள் முகாமில் அடைக்கப்பட்டபோது, பதினெட்டு வயதில் கல் உடைக்குமிடத்தில் வேலை செய்தபோது, கல்லில் வேலை கற்றுக்கொண்டு பாறையை செதுக்கி சிற்பம் வடிக்க அறிந்துகொண்டபோது, எழுதி, வரைந்து, மேலும் மேலும் வரைந்து வெள்ளோட்டமாக சுதந்திரக் கவிதைகள் எழுதி, புதிரான ‘One – act’ எழுதி, கடைசியில் எனக்கான தளம் எதுவென்றறிந்து அதில் கால்பதித்துக் கொண்டபோது இவை எல்லாவற்றின் அடியிலும், வண்டல் படிவங்களுக்குக் கீழே எனது பிரியமான மாமா, சுடப்பட்டு புதைக்கப்பட்ட என் ஆசை மாமா, வீற்றிருந்ததை நான் (வேறு யாராக இருக்கமுடியும்.) கண்டு கொண்டேன். புதைந்திருந்த அவரைத் தோண்டியெடுத்து, என் இலக்கியமூச்சை அவருக்குள் செலுத்தி, வெவ்வேறு, முழு உயிரோடும், வேகத்தோடும் என் அத்தியாங்களில் பல்வேறு பிரதான, சிறிய பாத்திரங்களில் அவரை உலவவிட்டாலும் – சிலர் கடைசிவரை உயிரோடு இருந்தனர் – இந்த எழுத்தாளன் கொடுத்த வாக்குறுதிகளை அத்தனையையும் சாத்தியப்படுத்தியது. “தொடரும்” என்ற வாக்குறுதி.
எனது முதல் இருநாவல்கள் ‘The Tin Drum’ மற்றும் ‘Dog Years’ இவற்றிக்கு நடுவில் வெளிவந்த குறுநாவல் ‘Cat and Mouse’. எனக்கு ஆரம்பித்திலேயே புகட்டிய பாடம் என்னவென்றால் புத்தகங்கள் காயப்படுத்தும்; கோபத்தை ஏன் வெறுப்பைக் கூட மூட்டுமென்பதை, உங்கள் தேசத்தின் மீதுள்ள பிரியத்தால் எழுதுவது, நடுவீட்டிலேயே அசிங்கம் செய்வதாக அர்த்தப்படுத்தப்படலாம். எனவே, ஆரம்பத்திலிருந்தே நான் சர்ச்சைக்குரியவனாக இருந்து வருகின்றேன்.
சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர்களைப் போல எனக்கும் நல்ல துணை இருந்து வருகிறது. புகார் சொல்ல காரணங்கள் ஏதுமில்லை; பதிலாக இந்த நிரந்தர சர்சைத்தன்மை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதாக, இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் இருக்கிற தொல்லையாகவே நினைக்கத் தோன்றுகிறது. செல்வாக்கானவர்களின் சூப்பில் எச்சில் துப்பிவிட்டு வருவது எப்போதுமே எழுத்தாளர்களின் வழக்கமாக இருந்துவருகிறது. இலக்கியத்தைப் போலவே தணிக்கை முறைகளும் வளர்ச்சியடைந்து இந்தளவிற்கு கூர்மையாகியிருப்பதற்கு இதுவேதான் காரணம்.
அரசாளர்களின் சகிப்புத்தன்மை சாக்ரடீஸிற்கு விஷமளித்து, ஓவிட்டை நாடு கடத்தி, ஸெனாகவின் இரத்தக் குழாய்களைப் பிளந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இன்று வரையிலும் பல உன்னதமான மேற்கத்திய இலக்கியக்கனிகள் கத்தோலிக்க தேவலாயங்களில் நசுக்கிப் பிழியப்பட்டிருக்கின்றன. அரசர்களும், அதிகாரவர்கத்தினரும் தமது அராஜக தணிக்கை முறைகளை பூசிமெழுகி, மழுப்பி வந்தவற்றில் எத்தனை தூரம் இடைக்கால ஐரோப்பிய அறிவுப்புரட்சி கற்றிருக்கிறது என்று நான் வியக்கிறேன். இதுவரை எத்தனை ஜெர்மானிய, இத்தாலிய, ஸ்பானிஷ், போர்த்துக்கீசிய எழுத்தாளர்கள் தமது நாட்டிலிருந்தும் தாய்மொழியிலிருந்தும் விரட்டப்பட்டிருக்கின்றனர்.? லெனினிய –ஸ்டாலினிய பயங்கரவாதத்தில் எத்தனை கலைஞர்கள் வீழ்ந்திருக்கின்றனர் ? இன்று சீனாவிலோ, கென்யாவிலோ, குரவேஷியாவிலோ எழுத்தாளர்கள் சந்திக்கும் தடைகள் என்னென்ன.?
நான் புத்தகங்களைக் கொளுத்துகிற தேசத்திலிருந்து வருகிறேன். பிடிக்காத புத்தகத்தை அழிக்கிற இச்சை நமது காலத்தின் அடையாளமாகியிருக்கிறது. தொலைக்காட்சியில் காட்டுவதற்கும், ஏராளமான பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் நல்ல வாய்ப்பிருக்கிறது. இத்தகைய சுவராஸ்ய காட்சிகள் ஈட்டுகிற ஆதாயம் ஊடகங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் கணிசமானது. இதில் கொடுமை என்னவென்றால் உலகம் பூராவிலும் எழுத்தாளர்கள் மீதான அடக்குமுறைகளும், கொலை மிரட்டல்களும், ஏன் கொலையே கூட – இப்போதெல்லாம் மிகுந்துவிட்டது. இத்தகைய பயங்கரங்களை உலகம் மெளனமாக சகித்துக் கொள்கிற அளவிற்கு சகஜமாகிவிட்டது. 1995இல் நைஜீரியாவில் கென்சாரோ-விவா போன்றதொரு எழுத்தாளரும் அவரது ஆதரவாளர்களும், அந்நாட்டின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கெதிராக போராடியதால் மரணதண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டபோது, தம்மைச் சுதந்திர உலகம் என்று கூறிக்கொள்கிற சில நாடுகள் பெரும் எதிர்ப்புக்குரல் எழுப்பியதென்னவோ நிஜம்தான். ஆனால் இத்தகைய சுற்றுச்சூழல் அக்கறைகள் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஷெல்லின் ஆதாயங்களை பாதிக்கும் என்று தெரிந்ததும் சுதந்திர உலகின் எல்லா கூக்குரல்களும் அடங்கி, இயல்புநிலை விரைவிலேயே திரும்பிவிட்டது.
எதனால் தேவாலயங்களும், அரசாங்கங்களும், பொலலட் பீரோக்களும், வெகுஜன ஊடகங்களும், புத்தகங்களையும் அதனுடன் சேர்த்து எழுத்தாளர்களையும் மிகுந்த ஆபத்தானவர்களென்று எதிர்க்கின்றன.? ஆளும் கொள்கையை நேரடியாகத் தாக்குவதால் இந்த அடக்குமுறைகளும், வாயடைப்புகளும் நிகழ்வதாகத் கூற இயலாது. பெரும்பாலும் ஓர் இலக்கிய குறிப்பீடுவாயிலாக உண்மை என்பது பன்மையில்தான் இருக்கிறது என்றும் – ஒரேயொரு உண்மையென ஏதுமில்லையென்றும், பன்முக உண்மைகளை நிரூபிப்பதுமே, ஒன்றோ அல்லது மற்றொரு உண்மையையோ கைக்கொண்டிருக்கிற நபர்களுக்கு அபாயமாகனஃ மரணபயத்தை ஏற்படுத்துகிறது. அதுவுமின்றி, இந்த எழுத்தாளர்களுக்கும் கடந்த காலத்தை அமைதியாக விட்டுவிட முடியாதபடி ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆறிய ரணங்களைக் கிளறுகிற, மூடிய கதவுகளுக்கிடையே எட்டிப்பார்க்கிற, அலமாரிகளில் ஒளித்துவைக்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தேடுகிற, தெய்வப்பசுக்களை உண்கிற வழக்கம் அவர்களுக்கு இருக்கிறது. ஐரிஷ் குழந்தைகள் ஆங்கிலேயக் கனவான்களின் சமையலறைகளில் குழம்பாகி, வறுக்கப்பட்டு, சுடப்பட்டு, வேகவைக்கப்பட்டு, வருவதை ஜொனாதான் ஸ்விஃப்ட் சொல்லி சங்கடப்படுத்துவதைப் போல, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர்களுக்கு எதுவும் புனிதமாயிருப்பதில்லை. முதலாளித்துவம்கூட புனிதமாய் தோன்றுவதில்லை. அது அவர்களை வன்மமாக்கி, குற்றவாளிகளாகக்கூட ஆக்குகிறது. ஆனால் எல்லாவற்றையும் விட கொடுமை, அவர்களுக்கு மரபிற்காகக்கூட சரித்திரத்தின் வெற்றி வீரர்களின் பின்னால் நிற்கும் வழக்கமும் இருப்பதில்லை. அவர்களுக்கு சரித்திர நிகழ்வுகளின் விளிம்புகளில் தோல்வியுற்றவர்களோடு அளவளாவித் திரிவதில்தான் விருப்பமிருக்கிறது. ஏராளமாக பேசுவதற்கிருந்தும் அதற்கான தளமில்லாதவர்களுக்கு குரல் கொடுப்பதன் மூலமே, வெற்றியை கேள்விக்குரியதாக்குவதனாலும், அவர்களுடன் இணைந்திருப்பதாலும் அவர்கள் பக்கமே நின்றுவிடுகின்றனர்.
அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு , அவர்கள் காலச் சக்கரத்தின் எந்த ஆடையை அணிந்திருந்தாலும், இலக்கியத்திற்கெதிராக எந்தக் கொள்கையையும் பெரிதாகவரித்துக் கொண்டிருந்ததில்லை. அதனை ஓர் அலங்கார ஆபரணமாகவே அணிந்து வந்திருக்கின்றனர் தற்சமயம் அதன் வேலை பொழுதைப் போக்கவும், வேடிக்கை கலாச்சாரத்தை வளர்க்கவும், விஷயங்களின் எதிர்மறையான பகுதிகளை உதாசீனப்படுத்தி, மக்களுக்கு நம்பிக்கையூட்டும், இருட்டில் ஒளியாய் திகழவுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் எதிர்ப்பார்ப்பது என்னவென்றால், கம்யூனிச வருடங்களில் அப்பட்டமாக காட்டப்பட்டு வந்தது போலில்லாவிட்டாலும் ஒரு ‘நம்பிக்கை நாயக’னைத்தான். சந்தைப் பொருளாதாரக்காட்டில் ராம்போவைப் போல பிணங்களை ஒதுக்கித் தள்ளிக்கொண்டு புன்னகையுடன் வெற்றியை நோக்கி படியேறி வரவேண்டும்; சாகச வீரனாக, யுத்தத்திற்கு நடுவிலும் ஓர் அவசர சம்போகத்திற்கு தயாராக இருப்பவனாக, வரிசைவரிசையாக தோல்வியுற்றவர்களைத் தாண்டி வரும் வெற்றியாளனாக, சுருக்கமாக நமது ஒருமையாக்கப்பட்ட உலகிற்கு ஓர் உதாரண புருஷனாக இருக்கவேண்டும். மேலேயிருந்து தரையில் கால்தவறாமல் குதிக்கும் ஒரு வீரபுருஷனை ஊடகங்கள் எப்போதும் ஆதரித்து வந்திருக்கின்றன. டாலியைப் போல தனது படியாக்கங்கள் பலவற்றை ஜேம்ஸ்பாண்ட் பொரித்திருக்கிறான். தீமையை நல்லவை எப்போதும் வெல்லும், அவனைப்போல அலட்டிக் கொள்ளாத சாகசத்தைக் கைக்கொள்ளும் வரை.
இத்தகைய காரணங்கள் அவனது போட்டியாளர்களை அல்லது எதிரியை எதிர்நாயகனாக்கி விடுமா? தேவையில்லை. உங்களது வாசிப்பிலிருந்து நீங்கள் அறிந்திருக்கலாம். எனது வேர்கள் ஸ்பானிய அல்லது மூரிஷ் மரபின் 17 ஆம் நூற்றாண்டு ‘Picaresque’ நாவல்களில் ஊன்றியிருக்கின்றன. காற்றாலைகளிடம் வாளேந்தி சண்டைக்குச் செல்லும் சாகசம் காலகாலமாக இம்மரபில் ஊறிப்போயிருக்கிறது. குவிகாத்தேயின் இருப்பே தோல்வியின் நகைச்சுவை அம்சத்திற்காக படைக்கப்பட்டது. அவன் அதிகாரத்தின் தூண்களின் மேல் சிறுநீர் கழிக்கிறான்; அரியானசத்தின் கால்களை வாளால் அறுக்கிறான் – எதனையும் அவனால் சாய்த்துவிடமுடியாது என்பது தெரிந்ததே ! அவன் சென்றபின் அச்செறிவார்ந்த அரண்மனை கொஞ்சம் அசிங்கப்பட்டிருக்கலாம்; அரியாசனம் சிறிது தள்ளாடலாம். ஆனால் அவ்வளவு மட்டும்தான். அவனது நகைச்சுவை, அவன் விரக்தியின் பிரிக்கமுடியாததொரு பகுதியாகவே இருக்கிறது. நளினமான பெரும் சபையோரின் முன்னால் சோம்பலாக, கடைசி வரிசையில் சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் அவரது நாடகங்களில் சோகமும் நகைப்பும் கைகோர்த்துக் கொண்டு செல்கின்றன. வெற்றி வீரர்கள் அணிவகுப்பை ஏளனத்துடன் இகழ்ந்துக்கொண்டு அமர்ந்திருக்கும் அவர், அவர்கள் நடந்து வரும்போது தனது காலை குறுக்கே நீட்டி தடுக்கிவிழ வைக்கிறார். அவரது தோல்விகள் நமக்கு சிரிப்பை உண்டாக்கினாலும் அச்சிரிப்பு நம் தொண்டையிலேயே சிக்கிக்கொள்கிறது. அவரது கிண்டலான வெறுப்புரைகளில் கூட சோகநிழல் படிந்திருக்கிறது. தவிரவும், ஒரு ஃபிலிஸ்திய, வலதுசாரி அல்லது இடதுசாரி பார்வையில் அவர் ஒரு மரபுவழியாளர் – ஓர் உயர்தரமான தனிப்பங்களார் (Mannerist). வேவு பார்க்கும் கருவியை தலைகீழாகப் பிடித்துக்கொண்டு பார்க்கிறார்; பக்கத்துத் தடத்தில் இருக்கும் ரயிலைப் போலக் காலத்தை பார்க்கிறார். எல்லா இடங்களிலும் கண்ணாடிகளை வைக்கிறார்.
யாருடைய குரலில் அவர் பேசுகிறார் என்பதை உங்களால் தெரிந்து கொள்ளவே முடியாது. அவர் கண்ணோட்டத்தில், குள்ளர்களையும், பூதங்களையும் தனது அணியில் சேர்த்துக் கொள்வதில் தடையில்லை. ராபலேஸ் மதச்சார்பற்ற காவலர்களிடமிருந்தும் புனித விசாரணையிலிருந்தும் தொடர்ந்து தப்பியோடிக் கொண்டிருந்தாரென்றால் அதற்குக் காரணம் அவரது பிரம்மாண்டமான Panta Gruelலும் Gargantuaவிலும் இவ்வுலகை அறிவுரீதியாக புரட்டிப்போட்டிருந்ததுதான். அவை கிளப்பிய சிரிப்பு நிச்சயமாக நரகவேதனையையூட்டின. நோத்ட்ரே தாமின் கோபுரங்களின் மேல் கார்கந்த்வா நிர்வாணமாக நின்று, பாரிஸின் மேல் குறுக்கும் நெடுக்குமாக சிறுநீர் கழித்து நகரை மூழ்கடித்தபோது அதில் மூழ்காத ஜனங்களெல்லாம் வெடிச்சிரிப்பு சிரிக்கின்றனர். ஸ்விஃப்டிற்குத் திரும்பச் செல்லலாம்; அயர்லாந்தின் பசியைப் போக்க அவர் பரிந்துரைக்கும் எளிய முறைகளின்படி, பிரேசில், தெற்கு சூடானின் தெருச்சிறுவர்களை ருசியாக சமைத்து விருந்து படைத்தால் பொருளாதார மாநாட்டின் தேசத்தலைவர்கள் சங்கடத்தில் நெளிகின்றனர். அங்கதம் என்ற கலைவடிவத்தில் எதற்கும் அனுமதி உண்டு.
ஹென்ரிஷ் போல் இங்கே தனது நோபல் உரையை மே இரண்டாம் தேதி, 1973இல் நிகழ்த்தியபோது எதிரெதிர் நிலைகளில் இருந்த கவிதையையும், தர்க்கத்தையும் அருகில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு எதிர்ப்புணர்வு ஒளிந்துக்கொள்ளும் இடமாக இருக்கிற நகைச்சுவையைத் தாண்டி நான் சொல்லவேண்டியிருக்கிறது’ என்றார். அவர் குறிப்பின்பால் அவர்களுக்கு ஜெர்மனியின் புகழ் மண்டபத்தில் இருக்கும் இடம் அவருக்குத் தெரியும். தாமஸ் மன்னின் இலக்கிய படைப்புகள் எந்தளவிற்கு, வலது மற்றும் இடதுசாரிகளால் அப்போது (இன்றும்கூட) சந்தேகத்திற்குள்ளாயின என்ற முரண்நகையும் அவருக்குத் தெரியும். போல் குறிப்பிடுவது வயிறு வெடிக்கும் சிரிப்பையல்லல் வரிகளுக்கிடையே சத்தமின்றி படிந்திருக்கிற, அவரது கோமாளியை விசனத்தில் வீழ்த்துகிற, மெளனிகளாய் மாறிப்போன விரக்தி, ‘சுயகட்டுப்பாடு’ என்ற பெயரில் தணிக்கையிலிருந்து தப்பிக்க சூடிக்கொள்ளும் மாறுவேஷத்தின் நகைச்சுவையை அவர் குறிப்பிடுகிறார்.
நான் எழுதத் துவங்கிய ஐம்பதுகளின் ஆரம்பம்வரை ஹென்ரிஷ் போல் பிரபலாமாயிருந்தாலும், அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத எழுத்தாளராகவே இருந்தார். உல்ஃபாங் கோப்மென், குந்தர் யீஷ், ஆர்நோ ஷ்மிட் போன்றோருடம் அவரும் கலாச்சார உற்பத்திச் சாலையிலிருந்து விலகியே நின்றிருந்தார். போருக்குப் பிந்தைய ஜெர்மன் இலக்கியம் அதிகம் வளராமல், நாஜி அரசாங்கம் பாழ்படுத்திவிட்டுச் சென்றிருந்த ஜெர்மன் மொழியிடம் போராடிக் கொண்டிருந்த காலம் அது. மேலும் போரின் தலைமுறைக்கு என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்குக் கூட – அப்போது தியோடர் அடார்னோவின் தடையுத்தரவு போடப்பட்டிருந்தது; ‘ஆஷ்விட்ஸிற்குப் பிறகு கவிதை எழுதுவதென்பது காட்டுமிராண்டித்தனமானது. ஆஷ்விட்ஸ் நிகழ்வுகளுக்குப் பிறகு கவிதை இங்கே உருவாகுதல் சாத்தியமில்லை.’
வேறு வார்த்தைகளில் சொன்னால் ‘தொடரும்’ கிடையாது. இருந்தும் நாங்கள் எழுதினோம். அடார்னோ தனது மினிமா மொராலியாவில் குறிப்பிடுவதைப் போல ஆஷ்விட்ஸ் கடக்க முடியாத பெரும்பிளவை கலாசார சரித்திரத்தில் உண்டாக்கியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டே நாங்கள் எழுத வேண்டியிருந்தது. அதுதான் தடையைத் தாண்டிச்செல்ல எங்களுகிருந்த ஒரே வழி. இருந்தும் அடார்னோவின் எச்சரிக்கைக்கு இன்றுவரை பலம் இருக்கிறது. என் தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரும் அதனுடன் போராடியிருக்கிறோம். யாருக்கும் அமைதியாக இருக்க ஆவலோ, திறனோ இல்லை. ஜெர்மன் மொழியை அதனது மந்தமான, உள்நோக்கித் திரும்பிய குணத்திலிருந்து இழுத்துவர வேண்டிய கடமை எங்களுக்கிருந்தது. இத்தகைய பாதிப்புகளிலிருந்து, கருப்பு வெளுப்பு ஏதேச்சதிகாரத்தை நாங்கள் மறுதலிக்க வேண்டியிருந்தது. ஐயங்களுக்கும் அவ நம்பிக்கைகளுக்கும் பிறந்தவர்கள் நாங்கள், வயோதிக மதிப்பீடுகள் எங்களுக்குத் தரப்பட்ட சீதனம். எப்படியிருப்பினும் இத்தகைய விரதத்தை என்மேல் சுமத்திக்கொண்டு, முன்பு அலட்சியமாகத் தூக்கியெறிந்து பேசிய என் மொழியின் தாமதமாகவேனும் அறிந்துக்கொண்டு, அதன் கவர்ச்சியான மென்மையை, எந்தவொரு ஆழத்தையும் எட்டுகிற அதன் கூர்மையை, அதன் அபாரமான இளகிய கடினத்தை, அதன் வட்டார வழக்குகளின் ஜொலிப்புகளை, அதன் வினைரூபங்களின் கலையற்ற, கலாபூர்வமான விநோத அழகுகளை அறுவடை செய்யத் துவங்கினேன். இந்த முதலை மீட்டெடுத்தாலும் மேலும் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். அடோர்னோவின் உத்தரவைமீறி, அல்லது அதனால் தூண்டப்பட்டு. ஆஷ்விட்ஸிற்குப் பிறகு கவிதையோ உரைநடையோ எழுதுவதற்கிருந்த ஒரேவழி எழுத்தை, ஞாபகங்களாக மாற்றுவதுதான். கடந்தகாலத்தை முடிவிற்கு வரமல் தடுக்க இருந்த ஒரேவழி. இதனால் மட்டுமே ஜெர்மனியின், போருக்குப் பிந்தைய இலக்கியம் தனக்கும், தனது வாரிசுகளுக்கும் ‘தொடரும்’ என்கிற பதத்தை நியாப்படுத்தவும், நடந்தவற்றை செளகரியமாக மறந்து, ‘தட்டையாகா முன்பொரு காலத்தி.’ என்று ஆரம்பித்துவிடாதிருக்கவும், காயங்களை திறந்தே வைத்திருக்கவும் முடியும்.
நடந்தவற்றையெல்லாம் முடிந்துபோன கதையென்றும் – சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டால் நமது அவமானகரமான கடந்த காலத்தை மறந்துபோக வேண்டுமென்றும் – எத்தனை முறை இலக்கியத்திடம் கூறப்பட்டிருக்கிறது . நியாம்தானே! இந்த நிலை அபத்தமான அதேயளவு புரிந்து கொள்ளக் கூடியதுமாகும். ஒவ்வொருமுறையும் போருக்குப் பிந்தைய காலம் முடிந்துவிட்டதாக ஜெர்மினியில் அறிவிக்கப்படும் போதெல்லாம் – 10 வருடங்களுக்கு முன்பு அந்தச்சுவர் இடிக்கப்பட்டு ஒற்றுமை கோரப்பட்டத்தைப் போல –கடந்தகாலம் நம்மை துரத்திக் கொண்டு வந்து பிடிக்கிறது.
அப்போது, பிப்ரவரி 1990இல், ஃபிராக்ஃபர்ட்டில் மாணவர்களிடம் ‘ஆஷ்விட்ஸிற்குப் பிறகு எழுதுதல் என்ற தலைப்பில் உரையாற்றியபோது, எனது நூல்களை ஒவ்வொன்றாக திறனாய்வு செய்து கொள்ள விரும்பினேன். 1972இல் வெளிவந்த எனது The Diary of a Snailஇல் கடந்தகாலமும் நிகழ்காலமும் குறுக்கிட்டுக் கொண்டும், இணையாகவும் செல்கின்றன; அவ்வப்போது மோதிக்கொள்கின்றன. என் மகன்கள் எனது தொழிலை விவரிக்குமாறு கேட்கின்றனர். ‘எழுத்தாளர் என்பவன் காலத்தின் ஓட்டத்திற்கெதிராக எழுதுபவன்’ என்கிறேன். மாணவர்களிடம் நான் சொன்னது என்னவென்றால், “இதைப்போன்றதொரு கருத்து எழுத்தாளர்களை தனியாக பெட்டகத்தில் தம்மைப் பூட்டிக் கொண்டிருப்பவர்களல்லவென்றும், சாஸ்வதமானவர்களென்றும் சித்திரிக்கிறது. அவர்கள் தம்மை இந்த இடத்தில், இன்றைய தினத்தில் வாழ்பவர்களாகவும், காலமாற்றங்களுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொள்பவர்களாகவும் ஒரு சார்பு நிலையை எடுத்துக் கொள்பவர்களாகவும் சித்தரித்துக் கொள்கின்றனர்.
ஒரு சார்பு நிலையை எடுப்பதில் இருக்கும் அபாயங்கள் நன்றாகத் தெரிந்தவையே. ஒரு எழுத்தாளன் விலகி நிற்கவேண்டிய தூரம் இதனால் பாதிப்படைகிறது. கைக்கும் வாய்க்கும் போதுமான சிக்கனத்தில் அவனது மொழி இருக்கவேண்டும். நடப்புச் சம்பவங்களின் குறுகியத்தன்மை அவனையும் குறுக்கி, அவனது கற்பனையின் சுதந்திரத்தைத் தடுத்துவிடலாம். மூச்சுமுட்டி அவன் ஓடி விழுந்து போகலாம்”
நான் குறிப்பிட்ட இந்த அபாயம் என்னிடம் வருடக் கணக்காக இருந்துவருகிறது. ஆனால் அபாயமில்லாத எழுத்தாள வாழ்க்கை என்ன வாழ்க்கை? எழுத்தாளனுக்கு ஒரு கலாச்சார வர்க்கத்தின் அதிகாரம் பாதுக்காப்பாக இருப்பதென்னவோ உண்மைதான், ஆனால் தற்காலத்தை எழுதி தன் கையை அசுத்தப்படுத்திக் கொள்வோமோ என்கிற பயமே அவனை சிறைப்படுத்தியிருக்கிறது. தனக்கான தூரத்தை இழந்துவிடும் பயத்தில், தொன்மங்களும் இறுமாந்த சிந்தனைகளும் வசிக்கும் ராஜ்யத்தில் தன்னையே இழந்து விடுகிறான். ஆனால் கடந்தகாலம் தொட்டுத் திரும்பிவரும் நிகழ்காலம் இறுதியில் அவனைக் கவ்விப்பிடித்து கிழிந்துவிடுகிறது. எல்லா எழுத்தாளனும் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ பிறந்துவிட்டதாக எவ்வளவுதான் புலம்பிக் கொண்டாலும் அவன் தன்னுடைய காலத்தின் எழுத்தாளன்தான். எதை எழுதுவது என்பதை அவன் தேர்ந்தெடுப்பதில்லை; அவனுக்கான தேர்ந்தெடுப்பு நிகழ்த்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எனக்கு இல்லை என்பதை மட்டும் சொல்வேன். என் சொந்த விருப்பத்தைக் கேட்டால், அழகியல் விதிகளுக்கு கீழ்படிந்து, பாடப்புத்தங்களில் என் எழுத்துகள் தூங்கிக் கொண்டிருக்க, பத்திரமானதோர் இடத்தில் உபத்திரவமில்லாமல் சந்தோஷமாக காலம் தள்ளுவதையே விரும்புவேன்.
ஆனால் அதற்கு கொடுத்து வைத்திருக்கவில்லை. தளர்வுறச் செய்யும் எத்தனையோ சந்தர்ப்பங்கள். ஜெர்மானிய சரித்திரத்தின் கருப்பை ஈன்றெடுத்த மலையாய் குவிந்திருக்கும் குப்பைகளையும், பிணக்குவியல்களையும் தோண்டத் தோண்ட வளர்ந்து கொண்டே செல்லும் போது என்னால் எப்படி இவற்றைப் புறக்கணிக்க முடியும்? தவிரவும், நான் ஓர் அகதிகள் குடும்பத்திலிருந்து வந்தவன். அதனால், சாதாரணமாக ஒரு எழுத்தாளனை ஒரு புத்தகத்தைவிட்டு மற்றதற்கு விரட்டும் காரணங்களான பொதுநோக்கங்கள், சலிப்பு ஏற்படுத்தும் பயம், சுய பிரக்ஞையின் இயங்கு விதங்கள் ஆகியவற்றைத் தவிர எனக்கு கூடுதலாக என் பிறந்த இடத்தை தொலைத்த ஈடுசெய்ய முடியாத இழப்பும் சேர்ந்திருக்கிறது. கதைகளைப் படைப்பதன் மூலம் அழிக்கப்பட்டு தொலைந்து போனதொரு நகரத்தை மீண்டும் உருவாக்க முடியாவிட்டாலும் சித்தரிக்கவாவது முடியும். இதுதான் என்னைத் தொடர்ந்து செலுத்திவருகிறது. எனக்கு நானேவும், என் வாசகர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டியதெல்லாம் மறைந்துப்போன அனைத்தும் மறதியில் மூழ்கிப்போக வேண்டியதில்லை. இலக்கியத்தின் திறனால் அதன் கம்பீரத்தையும், அசட்டுத்தனத்தையும், தேவலாயங்களையும், கல்லறைகளையும், கப்பல்துறைகளின் சப்தங்களையும், பால்டிக் கடலலைகள் எழுப்பும் மெல்லிய தாளங்களையும், வெளியேறிக் கொண்டிருந்தாலும் இன்னமும் கதகதப்பாகவும், சுவையாகவும் இருக்கும் ஒரு மொழியையும், பாவமன்னிப்பு கேட்கத் தேவையிருக்கும் பாவங்களையும், தண்டிக்கப்படாத ஆனால் மன்னிக்கவேண்டிய குற்றங்களையும் உயிரூட்டி எழுப்பிக் காட்டமுடியும் என்பதை மட்டுமே.
இத்தகைய இழப்புகள் மற்ற எழுத்தாளர்களுக்கும் பல கொதிநிலைப் பட்டங்களைத் தந்திருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்னால் சல்மான் ருஷ்டியுடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் தொலைத்த டான்ஸிகைப் போல அவருக்கு பம்பாய் என்று குறிப்பிட்டேன். இரண்டுமே ஆதார ஊற்றாகவும், குப்பைத் தொட்டியாகவும், உலகின் கர்ப்பப்பையாகவும், வெளிவாசலாகவும் எங்களுக்குத் திகழ்கின்றன. இந்தத் திமிரும், கடுமையும் இலக்கியத்தின் இதயத்திலேயே பதிந்திருக்கின்றன. எல்லா தடைகளையும் தடுத்து நிறுத்திய எழுத்தின் நிலை இதுதான். நுணுக்கமான விவரணைகள், உன்னிப்பான சிந்தனையாக்கம், நிஜவாழ்க்கையின் யதார்த்தம் –இவை எதனாலும் அசுரத்தனமான கச்சாப் பொருட்களைப் கையாள முடியாது. தர்க்க சாஸ்திரத்தின் அறிவுப்பரப்பில் வந்தவர்களாதலால் சரித்திரத்தின் அபத்தங்கள், அர்த்தமுள்ள விளக்கங்கள் எல்லாவற்றையும் எற்றித் தள்ளிவிடுகிறது.
அதன் மேல் சுற்றப்பட்டிருக்கும் பொன்னாடைகளைக் கழற்றிவிட்டு பார்த்தால் நோபல் பரிசின் வேர்கள்கூட டைனமைட் கண்டுபிடிப்போடு சேர்ந்திருக்கிறமாதிரி மனிதனின் மற்றெல்லா கண்டுபிடிப்புகளும், அணுவைப்பிளந்தது முதல் மரபணுக்களை பட்டியலிட்டது வரை, அனைத்து அழிவையும் ஆக்கத்தையும் ஒருங்கே தன்னகத்தில் கொண்டிருக்கின்றன. எனவே இலக்கியம் தனது வேர்களில் வெடிகுண்டுகளைக் கொண்டிருந்தாலும் அவற்றின் வெடிப்பு உலகில் தாமதமாகவேனும் ஏற்படுத்தும் பாதிப்புகளை, பூதக்கண்ணாடியால் காலத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால்தான் கண்டறியமுடியும். மான்டைனிலிருந்து வால்டேர் என ஐரோப்பிய அறிவுப்புரட்சி, இடைநிலைக்கால ஐரோப்பிய அறிவுப்புரட்சி, இடைநிலைக்கால ஐரோப்பிய இறைமை வாதத்தின் இருட்டை எந்தளவிற்கு ஒளியேற்றியிருக்கிறது? இவர்களுடைய வெளிச்சத் துணுக்குகள் கூட வழியில் எதிர்ப்பட்ட தணிக்கைக் காற்றில் அணைந்து போயின. ஆனால் அறிவொளி இறுதியில் பிரகாசமாக எரியத் துவங்கியபோது அது வெறும் வறட்டு தர்க்க அறிவுணர்ச்சியின் வெளிச்சமாகவே இருந்து, சரி தவறுகளைப் பட்டியலிட்டு, பொருளாதார சமுதாய முன்னேற்றங்களுக்கான வழிமுறைகளை அறிவுறுத்துகிற பிற்பாடு தர்க்கவியல்; இருகூறாகப் பிரிய நேர்ந்த முதலாளித்துவ, சோஷசலிஸ தத்துவங்களுக்கு முன் அறிவிப்பு செய்து கொண்டிருந்தன என்பதைக் காட்டின.
இன்று அறிவுப்புரட்சியின் வாரிசுகளான இவை எவ்வாறு தோல்வியுற்றிருக்கின்றன என்பதைப் பார்க்கிறோம். புத்தகங்களின் வெடிகுண்டுகள் வெடித்ததால் நேர்ந்த தாமத விளைவுகள் எவ்வளவு அபாயகரமான நிலைகளை இப்போது உண்டாக்கியிருக்கின்றன என்பதையும் பார்க்கிறோம். இந்தச் சிதைவுகளை சரிப்படுத்த அறிவுச்சார்ந்த கருவிகளையே நாம் நம்புகிறோமென்றால் அதற்குக் காரணம் வேறெந்தக் கருவிகளும் நம்மிடம் இல்லை. முதலாளித்துவம் – இதன் சகோதரனான சோஷலிஸம் இறுந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. குறையாத வெறியோடு, தற்பெருமையோடு, இறந்துவிட்ட சகோதரன் செய்த அதே விதமான தவறுகளை தானும் செய்து வருவதை பயத்துடன் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது கட்டற்ற சந்தையை ஒரு சித்தாந்தமாக மாற்றி, தனது அளவற்ற பலத்தை வைத்து அதற்கு போதையேற்றி, நிறுவனங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கொண்டு, மேலும் இலாபத்தை ஈட்டுவதைத் தவிர வேறெந்த நோக்கமும் கொண்டிராததாகவே இருந்து வருகிறது. கம்யூனிசத்தைப் போலவே, முதலாளித்துவமும் எந்தவொரு சீர்த்திருத்தத்திற்கும் இடம் தராது தன் கழுத்தை தானே நெரித்துக்கொண்டு வருகிறது. உலகமயமாக்கம் என்ற தனது கொள்கையை அகந்தையுடன் ‘இதற்கு மாற்று ஏதுமில்லை’ என்று அறிவிக்கிறது.
அதனால் வரலாறு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இனி ‘தொடரும்’ என்பது இல்லை. ஆவலைத் தூண்டுகிற உத்திகள் இனி இல்லை. அரசியல் தனது முடிவெடுக்கும் அதிகாரத்தை பொருளாதாரத்திற்கு துறந்ததைப் போல, இலக்கியம் முன்னெழுந்து இப்புதியக் கோட்பாட்டின் தவறுகளை சரி செய்யுமென நம்பிக்கை கொள்ளலாம்.
இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும் ஓர் எழுத்து எவ்வாறு தனது இலக்கியத்தரத்தை தக்கவைத்திருக்கும்? அதன் தாமதமான பாதிப்புகளுக்கு காத்திருக்குமளவிற்கு உலகத்திற்கு நேரம் இருக்கிறதா? எதிர்காலம் என்ற கிடைத்தற்கு அரிய பொருளை வழங்கக்கூடிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா? பொது வாழ்க்கையிலிருந்து இலக்கியம் தற்போது விலகி, இளம் எழுத்தாளர்கள் இணையதளத்தை விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி வருவதுதான் காரணமா? தகவல் தொடர்பு என்ற மாய வார்த்தைகள் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்லும் தலைவிதியாகி விட்டதா? காலத்தின் ஒவ்வொரு துளியும் பதட்டத்தோடு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன. கலாச்சார தொழிற்சாலை உற்பத்தி செய்யும் கண்ணீரில் உலகம் மூழ்குகிறது. என்ன செய்ய வேண்டும்?
எனது நாத்திகத்தைப் பொருட்படுத்தாமல், என்னை இதுவரை ஏமாற்றாத துறவி ஒருவரின் முன் மண்டியிடுகிறேன். ‘ஓ, புனித (காமுவின் கருணையால்) ஸிஸிஃபஸே ! உமது பாறை குன்றின் மீது நில்லாது, நாங்கள் மீண்டும் அதைக் கீழிறக்கி வருவோமாக! அதில் நீங்கள் மகிழ்ச்சிக்கொண்டு, எங்கள் வாழ்வின் கடுமைகளைச் சொல்கிற கதைகளை முடிவுற்றதாக்குவீராக, ஆமென்.’
என் பிராத்தனை கேட்கப்படுமா? அல்லது வதந்திகள் உண்மைதானா? புதிதாக படியாக்கம் செய்யப்பட்ட ஜந்துக்கள் மனித சரித்திரத்தை நீட்டிக்கப்போகின்றன்னவா? இது எனது உரையின் ஆரம்பத்திற்கு கொண்டு செல்கிறது. மீண்டும் The Rat நாவலைத் திறந்து அத்தியாயம் 5க்கு வருகிறேன். அதில் சோதனைக் கூடத்து எலி, இலட்சக்கணக்கான பிற ஆய்வு விலங்குகள் சார்பாக நோபல் பரிசினைப் பெறுகிறது. மனிதகுலத்தின் தீராத பிரச்சினையான பசியைப்போக்கும் ஆராய்ச்சிகளை நடத்தியவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளையும் அதில் பார்க்கிறேன். காசு கொடுப்பவர்களுக்கு ஒரு ஜோடி சிறுநீரகங்கள் கிடைக்கின்றன. இதயங்கள் மாற்றப்படலாம். கம்பியின்றி உலகம் முழுக்க தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். செயற்கை கோள்களும் விண்வெளி நிலையங்களும் மனிதர்களைச் சுமந்துகொண்டு சுற்றுகின்றன. பரிசுவென்ற ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்ட நவீன ஆயுதங்கள் தமது முதலாளிகள் மரணத்தை கைக்கருகிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன. மனித மனம் கற்பனை செய்யும் எதுவும் வியப்பூட்டும் சாதனங்களால் நிறைவேற்றப்படுகின்றன. பசி மட்டும்தான் எதிர்க்கின்றன. அது வளர்ந்துகொண்டும் செல்கிறது. ஆழப்பதிந்த ஏழ்மையின் அவலம் பெருகி வருகிறது.
உலகம் முழுக்க பசியோடு அகதிகள் பரவி வருகின்றனர். அரசியல் உறுதியோடு, அறிவியல் மேன்மையைச் சேர்த்து இந்த மகத்தான அவலத்தைப் போக்கவேண்டும்; ஆனால் யாருக்கும் இதில் ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை. 1973இல், அமெரிக்காவின் துணையோடு வில்லி பிராண்ட், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் பேசினார், உலகளாவிய ஏழ்மையைப்பற்றி அவர் ‘பசி என்பதும் போர்தான்.!’ என்று அறிவித்தபோது எழுந்த கரவொலி பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது.
அவர் உரையாற்றும்போது நானும் அங்கிருந்தேன். அப்போது எனது The Flounder நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். அது மனித  இருப்பின் ஆதாரமான உணவு ஓரிடத்தில் அபரிதமாகவும், அதற்கருகிலேயே பற்றாக்குறையோடும் இருப்பதைப் போலவே, பெருந்தீனியர்களும், ஒட்டிய உயிரினங்களும், அருகருகே ஒன்றியிருப்பதைப் பற்றியும், நாக்கில் ஊறும் அறுசுவைகளின் இன்பத்தையும், செல்வந்தனின் சாப்பாட்டு  மேசையினடியில் இறைந்திருக்கும் துகள்களைப் பொறுக்குபவர்களின் ஆர்வத்தையும் அந்நாவல் கூறிச்செல்கிறது.
இந்த விஷயம் இன்னுமும் நம்மிடமே இருக்கிறது. ஏழை தேசங்களில் பிறப்பு விகிதங்கள் மட்டுமே செழிப்பாக இருக்கின்றன. வசதிபடைத்த வடக்கு, மேற்கு நாடுகள் தமது பாதுகாப்பு அரணை இன்னுமும் உயரமாக்கிக் கொண்டு இவற்றையெல்லாம் பாராமுகமாக திரையிட்டுக் கொண்டுள்ளன. ஆனால் அகதிகள் கூட்டமாய் வந்து மோதும்போது எந்தக் கோட்டைச்சுவரும் பசியின் வேகத்தில் நொறுங்கிவிடும். எதிர்காலம் இவையெல்லாவற்றையும் பற்றிச்செல்ல ஏதேனும் மிச்சம் வைத்திருக்கலாம். நமது பொதுவான நாவல் தொடரப்படவேண்டும். என்றாவது ஒருநாள் மனிதர்கள் எழுதுவதையும், வெளியிடுவதையும் நிறுத்திவிட்டாலும், அல்லது நிறுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டாலும் புத்தகங்கள் கிடைப்பது நின்றுபோனாலும், அப்போது கதைசொல்லிகள் தமது வாயிலிருந்து கேட்போரின் செவிகளுக்கு செயற்கை சுவாசம் அளித்துக் கொண்டுதானிருப்பர். பழைய கதைகளை புதுவடிவத்தில், உரத்தகுரலிலும், மென் குரலிலும், திகைக்கவைத்து, பின் திடுக்கிடவைத்து, சிரிக்கவைத்து, பின் அழுகையின் விளிம்பிற்குச் சென்று கதைகள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.

ஆசிரியர் குறிப்பு:
குந்தர் கிராஸ்:
இந்தியர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான, சென்ற மற்றும், இந்த நூற்றாண்டின் மகத்தான எழுத்தாளர். ஜெர்மனியில் ஜெர்மன் மொழியில் எழுதுபவராக இருந்தாலும் இந்தியாவை, அதிலும் குறிப்பாக கல்கத்தா நகரை தனது இரண்டாவது வீடாகக் கருதுபவர். இந்தியப் பின்னணியில் இரண்டு நாவல் எழுதியிருப்பவர். ஓவியர், சிற்பி, கவிஞர், சோசலிச சார்பான பகுதி நேர அரசியல்வாதி என குந்தர் கிராஸிற்கு பற்பல பரிமாணமங்கள், கிராஸின் கவிதைகளும் ஓவியங்களும் தமிழ் சிற்றிதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது Tin Drum என்ற நாவல் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாஜிகளால் பெரும் குற்ற உணர்வுக்கு உள்ளாகியிருக்கும் இன்றைய ஜெர்மானியர்களின் மனசாட்சியாக கிராஸ் இருக்கிறார். Cat and Mouse, Dog Years, Tin Drum ஆகிய மூன்று நாவல்களும் நாஜிஸம் ஜெர்மனியில் வளர்ந்த விதம், கிராஸின் பிறந்த ஊரான டான்ஸிக்கின் அசாதாரணமான கலாச்சார பின்புலம் ஆகியவற்றைப் படம்பிடிக்கின்றன.
குந்தர் கிராஸின் நேர்மை 2006ஆம் வருடம் அதிர்ச்சிகரமாக புலப்பட்டது. அவரது பதின்வயதில், ஹிட்லரின் எதிர்காலத் திட்டங்கள் எதையும் அறிந்திராத நிலையில், தேசபக்தி காரணமாக SS பிரிவில் தன்னார்வமாகச் சேர்ந்து போரிட்டதை தானாக முன்வந்து அறிவித்தார். இக்குழுவில் அவர் சேர்ந்த சூழ்நிலையைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரையிலும், Peeling the Onions என்ற நூலிலும் வாக்குமூலம் அளித்து எவ்வளவு உண்மையான, உன்னதமான மனிதர் என்று நிரூபித்திருக்கிறார்.


எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமியின் “கனவுகளுடன் பகடையாடுபவர்” எனும் நூலிலிருந்து ஆசிரியரின் உரிய அனுமதி பெற்று ‘பெட்டகம்’ பகுதிக்காக   பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி : கனலி

No comments: