தமிழில் : ஜி. குப்புசாமி
மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே:
இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எனது நாவலான “The Rat” இன் பிரளயமான கதையோட்டத்தில் , கோணல்மாணலான தளங்களில் செல்லும் சுற்றி வளைத்த நடையில், இதைப் போன்றதொரு சபையோரின் முன்னால் நிகழ்த்தப்படும் ஒரு புகழுரை இடம்பெறுவதை எனது ஒரு சில வாசகர்கள் இப்போது நினைவுப்படுத்திக்கொள்ளலாம். ஓர் சோதனைக் கூடத்தில் பயன்படுத்தப்படும் வெள்ளெலிக்கு – அங்கே புகழாரம் சூட்டப்படுகிறது.
அந்த எலிக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ‘அப்பாடா, கடைசியில் தரப்பட்டதே’ என்று ஒருவர் சொல்லலாம். அதன் பெயர் பல வருடங்களாக பட்டியலில் இருந்து வருகிறது. இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்த இலட்சக்கணக்கான சோதனைக்கூட விலங்குகளிலில் – கினிப்பன்றியிலிருந்து ரீஸஸ் குரங்குவரை – வெள்ளை ரோமமும், சிவப்புக் கண்களும் கொண்ட இந்த எலி இறுதியில் உரிய கெளவரத்தைப் பெறுகிறது. எனது நாவலில் கதை சொல்லியின் அபிப்பிராயத்தின் படி, நோபல் பரிசிற்குகந்த மருத்துவ ஆராய்ச்சியிலும், மரபணு ஆராய்ச்சியிலும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை விரித்து வைத்த ‘வாட்ஸன்’ மற்றும் ‘க்ரிக்கின்’ ஆய்வுகளிலும் மற்றெந்த பிராணிகளை விடவும் இந்த வெள்ளெலிகளே உபயோகப்படுத்தப்பட்டு, வெற்றிபெற உதவியிருக்கின்றன. இதற்குப் பிறகே சோளத்திலும் மற்ற காய்கறிகளிலும், இதர சோதனைக்கூட விலங்களிலும் படிபடியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட சட்டபூர்வமான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனாலேயே, இந்நாவல் முடிவிற்கு வரும்போது மனிதகுலத்தின் இறுதிநாட்களில் உருவான ‘வாட்ஸன் க்ரிக்குகள்’ எனப்படும் ‘எலிமனிதர்கள்’ இவ்வுலகை கோலோச்சத் துவங்குகின்றனர். இவர்களிடம் மனித, விலங்கினத்தின் இரு நற்பண்புகளும் கலந்திருக்கின்றன. மனிதர்களிடம் பெரும்பான்மையாக எலியும், எலியிடம் பெரும்பான்மையாக மனிதனும் இருக்கின்றனர். உலகம் இக்கலப்பின் மூலம் தனது ஆரோக்கியத்தை மீட்டெடுத்துக் கொள்கிறது. மாபெரும் அண்ட வெடிப்பிற்குப் பின் வெறும் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் ஈக்களும் ஒருசில மீன், தவளை முட்டைகளுமே எஞ்சியிருக்கின்றன. அதனால், இக்களேபரத்திலிருந்து மீண்டும், ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவர, ஆச்சரியகரமாக பிழைத்திருக்கும் இந்த ‘வாட்ஸன் க்ரிக்குகள்’தான் அனைத்திற்கும் தலைமையேற்க வேண்டியிருக்கிறது.