Tuesday, November 26, 2019

சி.கா. செந்திவேல் 76 அநுபவப்பகிர்வு...

-கரவைதாசன்-

தோழர்களும் நண்பர்களும் கூடுங்கள்! பயணத்தின் பகிர்வில்.....

கன்பொல்லையில் சமத்துவத்துக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை தோழர் அடிக்கடி கிராமத்துக்கு வருவார், சிலவேளையில் பொழுது சாய்ந்துவிட்டால் இரவு தங்கி நின்று செல்வார். அப்போது கிராமத்தின் சனசமூக நிலையம் கனுவில் சனசமூக நிலையம் என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்டு முதலியார் கோவிலடியில் இயங்கி வந்தது. இரண்டு பெரிய வாங்கில்களும் ஒரு பெரிய வாசிப்பு மேசையும் அங்கிருந்தது. அங்கிருந்த ஒற்றை வாங்கிலில் தான் தோழர் தூங்குவார். அநேகமாக அப்போராட்ட காலத்தில் ஆண்கள் யாருமே வீடுகளில் தூங்குவது இல்லை அங்கிருந்த கோவில்களிலும் ஸ்ரீ நாரதா பாடசாலையிலும் பூவரசமரங்கள் குடைபிடித்து நின்ற இருண்ட ஒழுங்கைகளிலும் ஆண்கள் இரவிரவாக விழித்திருப்பார்கள். வாசிகசாலை கிராமத்தின் நடுப்பகுதியிலும் போலிஸ் வாகனம் உள்வரமுடியாத ஒழுங்கையுடன் அமைந்திருந்ததாலும் அங்கே தான் ஊருக்கு வரும் தோழர்களை தங்கவைப்பார்கள். காலையில் ஒரு குண்டுசீனிப்பாணும் தேனீரும் அல்லது இரண்டு தோசையும் தேனீரும் பாடசாலை வளவில் எல்லோருக்கும் போல் தோழருக்கும் கிடைக்கும் மதியம் யராவது ஒரு முக்கிய தோழர் ஒருவரின் வீட்டில் உணவருந்துவார். பின் நெல்லியடித் தோழர்கள் அவரை வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். அந்நாட்களில் தோழருக்கும் எனது தந்தையார் தவத்தாருக்கும் இடையில் நடந்த சம்பாசனைகளின் அநுபவங்களை கடிதவாயிலாக எனக்கு எழுதியுள்ளார். அவற்றை நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.

No comments: