Monday, September 02, 2019

எங்கள் தோழர் தங்கராசா அண்ணா

-கரவைதாசன்- 
தோழர் தங்கராசா அவர்களின் நினைவுகளை எங்கிருந்து தொடங்குவது ?
ஒவ்வொன்றாக அவரது தோழர்கள் வே.பரமகுரு, கே.எஸ்.இரத்தினம், சீ .செல்லக்கிளி, ஆ.சுந்தரம் என இன்னும் பலர்  அந்த மண்ணில் உதிர்ந்தபோதும் ஒற்றைப் பனைமரமாக அந்தக் கிராமத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தனித்துவமிக்க தோழராக அவர் வலம் வந்தார். கோட்பாட்டு ரீதியில் தனது கட்சியின் கோட்ப்பாடுகளுடன் அவர்  தன்னை அடையாளப்படுத்தியபோதும். சமூகத்தில் தானும் ஒருவராக தன்னை இணைத்துக்கொண்டு அவர் தோப்பாகவே வாழ்ந்தார். ஒரு சோஷலிசவாதிக்குரிய அரிய பண்புகளுடன்  கிராமத்தில் எரிந்துகொண்டிருக்கும் எந்த  முதற் பிரச்சினையிலும் சிநேகமாக   தீர்வு தேடும் ஒருவராக அவரை நான் அடையாளம் கண்டேன்.  அது கோவிலோ , சுடுகாடோ, கழகங்களோ அல்லது பாடசாலையோ பொதுச் செயற்பாடுகளில் பகை முரண்பாடுகளை களைந்து சினேகா முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றை  இளைஞர்  மத்தியில் பேசு பொருளாக்கி  ஐக்கியத்தினை  வலியுறுத்தும் நல்ல முன்னோடியாக அவரைக் கண்டேன். அவர் இல்லாத கிராமத்தில் கிராமத்தின் வளர்ச்சியில்  எனது நம்பிக்கைகளில் நான் பயம் கொண்டுள்ளேன்.


தேசம் என்பது மக்களின் துருவப்படல் என்றும் , தேசியம் என்பது இந்த மக்கள்துருவப்படலின்  மொய்த்தலின் பிரக்ஞை   என்பதிலும் எனக்கும் தோழர் தங்கராசா அண்ணருக்கும் ஒரே வகையான புரிதல் இருந்தது. நான் அவர்கள் காலத்து குடும்பங்களில் வளர்ந்த குழந்தை ஆதலால் இன்று இலங்கைத்தீவில் எரிந்து கொண்டிருக்கும் இந்தப்பிரச்சினையில் என்னை எங்கே வைத்துப் பொருத்திப் பார்ப்பது என்பது எனக்கு சுலபமாகவிருக்கின்றது.  எனில் துருவப்படல் என்பது இன்னும் பல தளங்களில் சமூக இயக்கத்தில் இயங்குகின்றது. மொழி, மதம், பண்பாடு சாதி, பால் என எங்களை வகைப்படுத்தி ஏதாவது ஒன்றிலோ அல்லது சிலவற்றிலோ ஒரு சங்கிலிக் கோர்வைபோல் எங்களை உணர்ச்சி வயப் படுத்தி இணைத்துவைக்கும். இதில் எமது முதன்மை பிரச்சினை எது என்னை நேரடியாக வறுக்கும்  எனக்கு முன்னால்  எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினை எது? என்பதினை நாம் எப்படி கண்டடைவது? ஒரு சோஷலிசவாதியாக நெருக்கடி மிக்க இன்றைய சூழலிலும் அவர் தெளிவாகவே இருந்தார். அவரை நினைவு கொள்ளும் இவ்வேளையில் இன்றைய  எமது கிராமத்து இளைஞர்களே! அவர் திரும்பத்  திரும்ப என்னிடம் பேசும்போது எழுப்பிய சில கேள்விகளை உங்கள் முன்வைக்கின்றேன்!  முடிந்தால் விடை காணுங்கள்! அவரது கட்சித்தோழர்கள்  எமது கிராமத்தின் நெருங்கிய உறவுகள் அவர்களுடன் உரையாடுங்கள்! அவர்களிடம் விடைகள் உண்டு! அவர்களை அழைத்து எங்களை அறிந்துகொள்ளுங்கள்.
தோழர் தங்கராசாவின் சிந்தனையில்  சில கேள்விகள். எங்களுக்கு ஏன் இன்னும் சுடுகாடு தனியாகவிருக்கின்றது?  அது ஏன்  இந்துமயானமாக அடையாளப்படுத்தப்படுகின்றது? இதுவரை காலமும் வேரொண்டை மாயணமாக மட்டும் பெயர்கொண்டிருந்த மயானம் யாருக்கும் தெரியாமல் எப்படி இந்து மாயணமாக பெயர் மாற்றப்பட்டது? நாங்கள் ஏன் 1964ல்  பவுத்த மதத்தில் சேர்ந்து பாடசாலையை உருவாக்க வேண்டியிருந்தது? எங்கள் கிராமத்திலிருந்து எந்த சமத்துவத்துக்கு போராடி எங்களது மூவரை இழந்தோம்? இவற்றுக்கு விடைதெரிந்தவராக இறுதி வரை தோழர் தங்கராசா  இருந்தார். அவர் இவ்வெல்லாத்  தளங்களிலும் எல்லாத்தலைமுறையிலும் இணைந்து செயற்பட்டவர். இறுதியாக இருந்த வேரை விழுதை இன்று இழந்து நிக்கின்றோம்.
இதை இவரிடமும் இவரோடொத்த எமது முன்னோடிகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம் .
 அவரது அர்த்தபுஷ்டியான வாழ்கை வரலாற்றினை இன்னொரு சந்தர்ப்பத்தில் விபரமாக எழுதவுள்ளேன். தோழரை நினைவில் நிறுத்தி செங்கொடியினை சாய்த்து வணங்குகின்றேன். செவ்வணக்கம் !

No comments: