Monday, June 10, 2019

கன்பொல்லைக் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை



-கரவைதாசன்-

கன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது­­? இதற்கு ஏன் தவம் அறக்கட்டளை அனுசரணை வழங்கியது?

கன்பொல்லைக் கிராமத்தில் பல்வேறு குறைபாடுகள் இன்றும் காணப்படுகிறது. அவற்றில் குடிநீர்ப் பிரச்சினை இன்று முதன்மை பிரச்சினையாகவுள்ளது . கடந்த ஏப்ரல் மாதம் நெல்லியடி பிரதேச சபையிலிருந்து கிராமத்தில் கிராமத்தின் அபிவிருத்தி என்னும் பெயரில் கிராமத்திலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத பொதுநிறுவனங்கள் அழைத்து கலந்துரையாடப்பட்டது . அனைவரும் ஒருமித்த குரலில் குடிநீர்ப் பிரச்சினையினை முதன்மை பிரச்சினையாக முன்மொழிந்துள்ளனர் . அதனை கவனத்தில் எடுப்பதாக உறுதி அளித்தவர்கள், அசமந்தப் போக்காக நடந்துள்ளனர் . ஏற்கெனவே மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட ஒரு தாங்கி பிரதேச சபையிடம் இருக்கின்றது, ஆகவே இன்னுமொரு தாங்கியை கிராமத்தவர்கள் தங்களது முயற்சியில் சேகரித்துக்கொண்டால் இரண்டு தாங்கியிலும் தாங்கள் தண்ணீர் வழங்குவதாக கூறி வந்துள்ளனர் .இதற்கிடையில் மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட அந்த தாங்கியையும் அவர்கள் அப்புறப்படுத்திவிட்டார்களாம். இந்த விடயத்தினை எனது கவனத்துக்கு கிராமத்தின் முன்னேற்றச்சங்க செயலாளர் வெ.யோகராசா கொண்டு வந்தார். கூடவே ஏன் எங்களது அறக்கட்டளை ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக வாங்கித்தரக் கூடாது எனவும் வினாவினார். முதலில் மறுத்த நான் அவரின் வைப்புறுத்தலின் பேரில் வாங்கிக்கொடுக்க சம்மதித்தேன்.அதன் பிரகாரம் 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக தவம் அறக்கட்டளையினால் வாங்கிக்கொடுத்தோம் . அந்த தாங்கி ஸ்ரீ நாரதா வீதியில் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியில் அவர்களிடமுள்ள தாங்கியிலும் எங்களால் வழங்கப்பட்ட தாங்கியிலும் குடி நீர் வழங்கும் படி பலமுறை கேட்டபோதும், பிரதேச சபையினரிடம் அசமந்தப் போக்கே காணப்பட்டதாக எனக்கு எட்டியது .இது விடயமாக நான் எனது நண்பர்களுடன் கதைத்து வடமாகாணத்தின் இராணுவ கட்டளைத் தளபதி கெட்டியாராச்சி தர்சன அவர்களுடன் கலந்து கதைத்தோம். அவர் எங்களிடம் அக்கறையோடு இந்த விடயத்தினை கேட்டறிந்தார். தாங்கள் 15,000 லீற்றர் குடிநீரினை கிழமைக்கு இரண்டு தடவை தந்து உதவுவதாக வாக்குத் தந்தார். அதன் அடிப்படையில் மேலும் இரண்டாயிரம் லீற்றர்கள் கொள்ளக்கூடிய இரண்டு தாங்கிகளை வாங்கி மாதிரிக் கிராமத்தில் கிராமமுன்னேற்ற சங்கத்துக்கு முன்பாக ஒன்றும் நாரதாவீதியில் ஒன்றும் விகாரைக் காணிக்கு முன்பாக கிராமத்தின் நடுப்பகுதியில் ஒன்றும் தாங்கிகளின் பாதுகாப்பு கருதி எங்களுக்கு தெரிந்தவர்களின் வளவுகளில் தாங்கிகளினை வைத்து விட்டு தண்ணீர் வடி குழாயினை பொதுவெளியில் சகலரும் பாவிக்கும் படியாக வெளியே வைத்தோம். இதுதான் நடந்த கதை. மேலதிகமாக எந்த பொது நிறுவனமும் தாங்கிகளை வாங்கி கிராமத்தில் வைத்தால் இராணுவம் தொடர்ந்து குடிநீர் வழங்கி உதவும் . தவம் அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட மூன்று தாங்கிகளும் எங்களது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டது. நாங்களே உதவும் கரங்கள் பணவிடயத்தில் எங்களுக்கு வேறு உதவும் கரம் இல்லை . பொது சேவை என்பது
" வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளயாருக்கு அடிப்பதல்ல! " இந்த வார்த்தை எங்களுக்குப் பொருந்தாது. நாம் எமக்கு நாமே வகுத்த பொது வழியில் பொறுப்புடன் இயங்கி வருகிறோம். நாம் நல்ல நண்பர்களுடன் கலந்தாலோசித்து முயற்சித்து குடிநீரினை கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளோம் .குடி நீர் எல்லோருக்கும் பொதுவானது அதனை எல்லோரும் பெற்று பயனடைவீர். இந்த விடயத்தில் கிராமத்துக்கு இரண்டு தடைவையாக நேரில் வந்து நிலைமையினை அவதானித்து உதவிய மதிப்புக்குரிய Dr.சி.மோகன் அவர்களை நான் பெரிதும் கெளரவப்படுத்துகின்றேன் . நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சமயப் போதகர்களையும் பெரிதும் மதித்து கெளரவப்படுத்துகின்றேன் . அசமந்தப்போக்கோடு நடக்கும் அரசியல் சக்திகளை கேட்க வக்கத்தவர்கள் . அவர்கள் போடும் எலும்புத்துண்டுக்காக எங்களை குறை கூற முயற்சிக்க வேண்டாம். இதற்குள் சாதியரீதியான புறக்கணிப்பு இருப்பதான சந்தேகம் எமக்கு இருக்கிறது. மற்றையது புகலிடத்தில் சாட மாடையாக எங்களை சாடுகிறவேலையை விட்டுவிடவும் . இல்லையேல் உங்களை யாரென பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டி வரும்! நாகரீகம் கருதி இப்போது விட்டு விடுகிறேன்.
ஆனால் நாம் எமது பொது சேவையில் தொடர்ந்தும் மானிட நேசிப்புடன் வழிகொள்வோம்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்த்திகேசன்.

- எம். ஏ. சி. இக்பால்-
இந்தக் கட்டுரை 2002 -ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் 25 -வது ஆண்டு நினைவு மலரில் பிரசுரிக்கப்பட்டது. இக் கட்டுரையை வரைந்த எம். ஏ. சி. இக்பால் அவர்களுக்கு நன்றிகள். 2019ம் ஆண்டு ஜூன் 25
மு. கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்று யாழ்ப்பாண மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட அமரர் மு. கார்த்திகேசன் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும், சுவாரசியமான ஹாஸ்ய பேச்சாளராகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என்பது சகலரும் அறிந்ததே.
அன்னார் காலமாகி பல வருடங்கள் கடந்துவிட்டாலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், சேர்ந்து செயற்பட்டவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சகலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அமரர் கார்த்திகேசனுடனான தமது தொடர்புகளை நினைவுபடுத்தி தமக்கிடையில் பேசி அகமகிழ்ந்து அன்னாரைப் புகழ்ந்து அவரது நினைவுடன் பிரிந்து செல்வது வழக்கமான ஒரு விடயமாகும்.
அவருடைய பணிகளில் மிகவும் சிறந்த பணியாக அன்று அமைந்தது அவரது அரசியல் பணி என்றால் அது மிகையாகாது.
யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் அமரர் கார்த்திகேசன் அவர்கள். பிரபுத்துவ கலை கலாச்சார ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த யாழ்ப்பாணத்தில் மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் பல கொடூர கஷ்டங்களை எதிர்கொண்ட கார்த்திகேசன் அவர்கள், அதனை அவரது தோழர்களான காலஞ்சென்ற வைத்திலிங்கம் மாஸ்டர், அரியரட்ணம் மாஸ்டர், M.C. சுப்பிரமணியம், கே. டானியல், சுபைர் இளங்கீரன் போன்றவர்களின் உதவியுடன் துணிவுடன் எதிர்கொண்டு மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் முன்னின்று உழைத்தார்.
அதன் மூலம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற கார்த்திகேசன் அவர்கள் 1955 -ம் ஆண்டு இடம் பெற்ற யாழ். மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சாதி, மத பேதங்களுக்கு எதிராக செயற்பட்ட கார்த்திகேசன் அவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.