main |
sidebar
"மெலிஞ்சிமுனை சைமன்" கூத்தும் கடலும் கலந்த காற்று
-கருணாகரன் -
ஆயிரம் பாயிரங்கள் பாடி ஆடியகலைஞர்
மெலிஞ்சிமுனை சைமன் (1938-2017)
நாங்கள் இளையவர்களாக இருந்த 1960, 70கள் வரையில் கூத்துக் கலையும் கூத்துக் கலைஞர்களும் பெரிய நட்சத்திரங்கள். அந்த நாட்களில் கூத்துக் கலைஞர்கள் இரவுகளைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டார்கள். அதிலும் கிராமங்களில் என்றால், சொல்லவே தேவையில்லை. கூத்து அங்கேயொரு மாபெரும் கொண்டாட்ட நிகழ்வு. ஒரு நாள் திருவிழாவில் கூடிக்கலைவதைப்போல இல்லாமல், வாரக்கணக்காக, மாதக்கணக்காக கூத்தோடு ஒன்றாகிக் கலந்திருக்கும் ஊர்.
பொழுதிறங்க, கூத்தைப் பழகுவது, “வெள்ளுடுப்பு ஆட்டம்” என்று ஒத்திகை பார்ப்பது, பிறகு அதை அரங்கேற்றுவது என்று ஊர் கூத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும். இதிலே இன்னொரு விசேசமும் உண்டு. ஊரில் பாதிப்பேருக்கு மேல் கூத்துக் கலைஞர்களாகவே இருப்பார்கள். தலைமுறை தலைமுறையாக கூத்து ஆடப்படுவதே இதற்குக் காரணம். இதனால், எல்லாத் தலைமுறையிலும் ஆட்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தனர். சில ஊர்களில் சில குடும்பங்களுக்குக் கூத்திலுள்ள சில பாத்திரங்கள் பரம்பரையாக வழங்கப்பட்டேயிருந்ததுமுண்டு.
அப்படியான ஒரு காலத்தில், அப்படியான ஒரு ஊரில் கூத்தும் தொழிலுமாக இருந்தவர்தான் சைமனும்.சைமன் மெலிஞ்சிமுனைவாசி. மெலிஞ்சிமுனையில் கடற்தொழிலும் கூத்தும் கூடிக் கலந்தவை. கடலும் காற்றும் போல.கடற்காற்றும் கூத்துப் பாட்டும் நிறைந்த வெளியுடைய கிராமம் அது. கடற்தொழில் இல்லாமல் வாழ்க்கை எப்படி இல்லையோ அப்படித்தான், அங்குள்ளவர்களுக்குக் கூத்தில்லாமலும் வாழ்க்கையில்லை. சைமனுக்கும் அப்படித்தான் வாழ்க்கை (யோகம்) அமைந்தது.
நாங்கள் கூத்துக்கலைஞர்களைத் தேடி மெலிஞ்சிமுனைக்குப் போனபோது, அங்கிருந்தவர்கள் சைமனைப் பற்றிக் கதை கதையாகச் சொன்னார்கள். ஆனால், அவரை அப்போது அங்கே பார்க்க முடியவில்லை. இவ்வளவுக்கும் சைமன் வேறு யாருமல்ல. நண்பரும் ஒளிப்படக் கலைஞருமான தமயந்தியின் தந்தையே. அதற்குப் பிறகு ஓராண்டு கழித்து, அகதி வாழ்க்கையை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்தார் சைமன். நாங்கள் சந்திக்கப் போனபோது மகிழ்ச்சியாக வரவேற்றார். மலர்ந்த முகம். சிரிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாதவரைப் போல சிரித்துக் கொண்டேயிருந்தார். எங்களில் மகனை் கண்ட பூரிப்பு.
பலதைப் பற்றியும் பேசினோம். அமர்க்களமாகவே இருந்தது சந்திப்பு. ஆனால், அவருக்கு இரண்டு கவலைகளிருந்தன. ஒன்று தன்னுடைய வீட்டில் வைத்து வரவேற்க முடியவில்லை, சாப்பாடு தர முடியவில்லை. கூழ் காய்ச்ச முடியவில்லை என்பது. மற்றது ஊருக்கு வந்திருந்தாலும் ஊர் நிலைமைகள் திருப்தியாக இல்லை என்பது. எல்லாம் படிப்படியாகச் சீராகும் என்று ஆறுதல் படுத்தினோம். ஆனால், பின்னாட்களில் நாங்கள் நம்பிக்கையூட்டியதற்கு மாறாகவே எல்லாம் நடந்தன. இதில் யார் சரி யார் தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், ஊருக்கு வந்த சைமன் அவர்கள், அங்கே இருக்க முடியாமல் போய்விட்டது. இதனால் அவர் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிக் கரம்பனில் போய் தற்காலிகமாகக் குடியேறினார். அது அவர் விரும்பிய தேர்வல்ல. விதிக்கப்பட்ட நிர்ப்பந்தம்.
ஒரு காலம் கரம்பனை விட்டு கோபத்தோடும் ஆற்றாமையோடும் வெளியேறி, மெலிஞ்சி முனைக்குப்போனவர், இன்னொரு காலத்தில் ஆற்றாமையோடும் இயலாமையோடும் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிக் கரம்பனுக்குப் போகவேண்டியிருந்தது. மனித நடத்தைகள் உண்டாக்கிய முரண்நகை இது. கரம்பனில் இருந்தவேளையிலேயே சைமன் மரணமடைந்தார். மீள ஊருக்கு வந்திருந்தாலும் தன்னுடைய சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் சாவடையக் கூட வசப்படாத விதியோடு விடைபெற்றார். இலங்கையின் அரசியலும் சமூக நிலவரங்களும் ஏற்படுத்திய காயங்களோடு மறைந்த மனிதர் நம்மிடம் பதித்துவிட்டுச்சென்ற நினைவுகளும் எழுப்பும் கேள்விகளும் ஏராளம்.
10.10.1938 இல் ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பொன் தெற்கில் பிறந்தவர் சைமன். ஆரம்பக் கல்வியை ஊரில் உள்ள பாடசாலையில் படித்த பிறகு, மேல் வகுப்பை (1947-1953) கொழும்புத்துறை புனித வளனார் கல்லூரியில் படித்தார். மெலிஞ்சிமுனையில் அந்த நாளில் கூடிய படிப்பு (அதிகபடிப்பு அல்லது மேற்படிப்பு)ப் படித்தவர் சைமனே என்று மெலிஞ்சிமுனைவாசிகள் இப்பொழுதும் சொல்கிறார்கள். இதனால், ஊரின் நல்லது கெட்டது எதற்கென்றாலும் அறிவுரை கேட்கவும் ஆலோசிக்கவும் சனங்கள் சைமனையே தேடிப்போனார்கள். இதற்குத் தோதாகச் சைமனும் தன்னால் முடிந்ததையெல்லாம் ஊருக்குச் செய்தார். அது சைமன் துடிப்போடிருந்த இளமைக்காலம். தங்களுடைய காரியங்களை மட்டும் பார்த்துக் கொள்வதற்காகப் படித்த படிப்பைப் பயன்படுத்துகின்ற பெரும்பான்மையினரின் வழமைக்கு மாறாக, ஊரின் நன்மையைக் கருதிச் செயற்பட்டார் சைமன்.
யாழ்ப்பாணத்தில் படித்து விட்டு ஊருக்கு வந்த சைமனுக்கு ஊரிலே காத்திருந்தன பிரச்சினைகளும் அதற்கான வேலைகளும். 1956, 57 இல் கரம்பனில் கத்தோலிக்க ஆதிக்கசாதியினரின் அடக்குமுறைக்கு எதிரான மோதல் ஒன்று நடந்தது. அது சாதிரீதியான மோதல். அப்பொழுது 18, 19 வயது இளைஞனாயிருந்த சைமன், தன்னுடைய சக நண்பர்களுடன் இணைந்து சாதி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார். ஆனாலும் ஒரு கட்டத்தில் தொடர்ந்தும் கரம்பனில் இருப்பது பொருத்தமானதல்ல என்ற முடிவுக்குச் சனங்களோடு அவரும் வரவேண்டியதாயிற்று.
இதனால், கரம்பனிலிருந்து வெளியேறி, மெலிஞ்சிமுனைக்குப் போனார்கள். இவர்களோடு நாரந்தனை, சரவணை, கரையூர் போன்ற இடங்களில் செறிந்து வாழ்ந்த மீனவ மக்களும் தமது பூர்வீக இடங்களை அந்தப்படிக்கே விட்டுவிட்டு, தமக்கான தனியொரு கிராமத்தை உருவாக்குவதற்காக மெலிஞ்சிமுனைக்கு போகத் தொடங்கினார்கள். அப்பொழுது மெலிஞ்சிமுனை ஒரு கடலோர ஒதுக்கிடம். சிறிய பத்தைகளும் பொட்டல் வெளியுமான ஒரு கடலோரக் காட்டுப்பகுதி. குடிநீர் அறவே கிடையாது. ஆனால் அதுவே பிறகு சனங்கள் வாழ்கிற, கூத்துப் பாட்டும் அதைக் கொண்டு திரிகிற காற்றும் நிறைந்த மெலிஞ்சிமுனை என்ற ஊராகியது. எதையும் ஆக்கவும் அழிக்கவும் தெரிந்தவர்கள் மனிதர்களல்லவா. அவர்கள் தங்கள் உழைப்பினால் மெலிஞ்சிமுனையை உருவாக்கினார்கள்.
சவால்களின் மத்தியில் ஒரு புதிய கிராமத்தை உருவாக்குவதென்பது இலகுவான ஒன்றல்ல. அதுவும் ஆதிக்கத் தரப்புகளுடைய எதிர்ப்புகளின் மத்தியில் புதிய கிராமத்தை உருவாக்குவது இலகுவானதல்ல. எல்லாவற்றுக்கும் சவாலாக இருந்தது அன்றைய சமூக நிலவரங்களும் அரசியற் சூழலுமாகும். அன்று அதிகாரத்திலிருந்த தமிழரசுக்கட்சி கரம்பன் கத்தோலிக்க ஆதிக்கச் சமூகத்தினருக்குச் சார்பாகச் செயற்பட்டது. இதைச் சமநிலைப் படுத்துவதற்கு அல்லது எதிர்கொள்வதற்கு அந்த அரசியலுக்கு மாறான ஒரு அரசியற் தேர்வைச் சைமன் தரப்புச்செய்ய வேண்டியதாயிற்று. சைமன் தேர்ந்தெடுத்தது அல்பிரட் துரையப்பாவின் அரசியலை. துரையப்பா சனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற அரசியலைச் செய்தார். இதனால், அப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக அல்லது எதிராக அல்பிரட் துரையப்பா பலமானதொரு தரப்பாக யாழ்ப்பாணத்திலிருந்தார்.
அல்பிரட் துரையப்பாவின் செல்வாக்குத் தீவுப்பகுதி வரை பரவியிருந்தது. அல்பிரட் துரையப்பாவுடன் தொடர்பு கொண்டு, மெலிஞ்சிமுனையின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை உதவிகளைப் பெற்றுக் கொண்ட சைமன், சில காலம் துரையப்பாவுடன் இணைந்து பொதுப்பணிகளைச் செய்தார். இந்தச் சந்தர்ப்பத்திலேயே மெலிஞ்சிமுனைக்கெனத் தனியாகச் “சங்கக் கடை ஒன்று வேணும் என்ற கோரிக்கையைச் சனங்கள் முன்வைத்தனர். அது “கூப்பன்” என்ற நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிப் பொருட்களைக் கிராமத்துச் சனங்கள் பெறுகின்ற காலம். அந்தப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக மெலிஞ்சிமுனையிலிருந்து கரம்பனுக்கே போய் வரவேண்டியிருந்தது. இந்தச் சிரமத்தைத் தீர்ப்பதற்காக மெலிஞ்சிமுனைக்கே கூட்டுறவுச் சங்கத்தின் கிளையொன்றையத் திறக்க வேண்டும் எனக் கோரிய சனங்களின் விரும்பத்துக்கு ஏற்றமாதிரி அதை ஊருக்குக் கொண்டு வந்தார் சைமன். ஆனாலும் இது நினைத்த மாத்திரத்தில் சுலபமாக நடந்து விடவில்லை. பல போராட்டங்கள், சிரமங்களின் மத்தியிலேயே மெலிஞ்சிமுனையில் ஒரு கிளையைத் திறக்க வைத்தார் சைமன். அப்படியே மெலிஞ்சிமுனைக்கென்றொரு பள்ளிக்கூடம் வருவதற்காகவும் ஊர்ச்சனங்களை இணைத்துப் போராடி, அதையும் உருவாக்கினார். எல்லாமே சவால்களின் மத்தியில்தான் செய்ய வேண்டியிருந்தது. “கடலையும் காற்றையும் ஆள்கின்றவனுக்கு இதெல்லாம் தூசு” என்று சொல்லிக்கொள்ளும் நம்பிக்கையே சைமனின் ஆதாரசக்தி. கடைசிவரையிலும் அவருக்கு எந்தச் சவாலும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை.
படித்திருந்தாலும் சைமன் அரச உத்தியோகத்தை நாடிப்போகவில்லை. அது அரச உத்தியோகம் என்பது சமூக அந்தஸ்தாகவும் குடும்பப் பொருளாதாரத்தை நிர்மாணிக்கும் பெரியதொரு வலுவாகவும் இருந்த காலம். அல்பிரட் துரையப்பாவின் தொடர்புகளும் செல்வாக்குமிருந்தாலும் அதை வைத்துத் தனக்கென உத்தியோகத்தையோ வேறு எதையுமோ பெற்றுக்கொள்வதற்குச் சைமன் முயன்றதில்லை. “எங்கட பகுதிக்குள்ள நீதான் படிச்சிருக்கிறாய். அதுக்கேத்த மாதிரி, அரசாங்க உத்தியோகமொண்டை துரையப்பாவைப் பிடிச்சு எடடாப்பா. நாளைக்கு ஊரில நாலு நல்ல வேலைகளைச் செய்யிறதுக்கு அந்த உத்தியோகமும் அதுகின்ரை அதிகாரமும் உதவும்” என்று மெலிஞ்சிமுனையிலிருந்த சில மூத்தவர்கள் சொன்னாலும் சைமன் அதைக்குறித்துச் சிந்திக்கவேயில்லை. பதிலாக அவர் மற்றச் சனங்களைப் போலக் கடற்றொழிலையே செய்தார். பிறகு மெலிஞ்சிமுனையிலேயே ஒரு சிறிய கடையை ஆரம்பித்து, அதையே தொடர்ந்து நடத்தினார்.
இதற்கிடையில் 1958ம் ஆண்டு அரசாங்கம் அன்று அறிமுகப்படுத்தியிருந்த சுய உதவி வீடமைப்புத் திட்டத்தின் உதவியுடன் மெலிஞ்சிமுனையில் 53 வீடுகள் கட்டப்பட்டன. 1961 இல் சைமனுக்குத் திருமணம் நடந்தது. காதல்மணம்தான். சைமனின் துணையாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார் லூர்து.
1968 இல் ஊர்காவற்துறைப் பகுதியின் மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் கடலட்டை குளிக்கும் தொழிலை அறிமுகஞ் செய்ததோடு, முதல் கடலட்டைச் சங்கத்தின் காரியதரிசியாகவும் இருந்து பணியாற்றினார் சைமன். அது கடலட்டை பிடிக்கும் தொழில் உச்சமதிப்புப் பெற்றிருந்த காலம். அப்படியே அந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்குமாக பல வழிகளிலும் உழைத்தார். இப்படிப் பொதுப் பணிகள், ஊர் விடயங்கள், கூத்து, தொழில் என எல்லாவற்றிலும் செயற்பட்டுத் தனக்கானவொரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால், இதை அவர் திட்டமிட்டுத் தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக உருவாக்கவில்லை. பதிலாக ஊரின் முன்னேற்றம், சமூகத்தின் வளர்ச்சி என்ற நோக்கில் செயற்பட்டதன் மூலமாக விளைந்ததே இதுவாகும். தனிப்பட்ட நலன் நோக்கில் அவர் தன்னை மையப்படுத்திச் சிந்தித்திருந்தால், அந்த ஊர் வட்டாரத்தில் அல்லது அவருடைய செல்வாக்கு வலயத்தில் தன்னை அரசியல் ரீதியாகவோ சமூக நிலையிலோ பலமாக்கிக் கொள்வதற்கு முயற்சித்திருக்கலாம்.
பதிலாகக் கிடைக்கின்ற பொது நன்மைகளையெல்லாம் தனிப்பட்ட வளர்ச்சிக்கான மூலதனமாக்கும் காலத்தில் சைமன் விதிவிலக்காகவே இருந்தார். இதுதான் சைமனின் சிறப்பு. இதுவே அவருடைய அடையாளம். இதுவே அவருடைய மதிப்பை மேலும் உயர்த்தியது. இந்தப் பதிவை எழுதுவதற்கான உந்துதலைத் தந்ததே இந்த மதிப்புத்தான். மாறாக அவர் தன்னை மையப்படுத்தக் கூடிய உபாயங்களைக் கையாண்டிருந்தால், பொருளாதார ரீதியில் பலமானதொரு நிலையை எட்டியிருக்கக்கூடும். ஆனால், அவருடைய அடையாளம் மாறி, அவரைப்பற்றிய கதையும் வேறாகியிருக்கும்.
சைமன் 10 வயதிலிருந்தே நாட்டுக்கூத்தில் ஈடுபட்டு வந்தார். 1948 இல் "தேவசகாயம்பிள்ளை" கூத்தில் பெண்பாத்திரம் ஏற்று அரங்காடியதே இவரது முதல் மேடையாகும் என்று குறிப்பிடுகிறது மெலிஞ்சிமுனையிலிருந்து வெளியிடப்பட்ட நாட்டுக்கூத்துப் பற்றிய பதிவொன்று. சைமனின் தந்தையாரும், மூத்த சகோதரன் பாக்கியநாதரும் கூத்துக் கலைஞர்கள்தான். அந்தக் காலகட்டங்களில் கூத்தில் கொடியேற்றியவர்கள்.
இன்னும் கூத்துப் பாடல்களைப் பாடி, மெலிஞ்சிமுனையின் மாலைப் பொழுதையும் முன்னிரவுகளையும் அழகாக்கிக் கொண்டிருக்கிறார் சைமனின் மூத்த சகோதரர் பாக்கியநாதன். சைமனின் குடும்பம் மட்டுமல்ல, மெலிஞ்சிமுனையில் உள்ள அத்தனைபேருமே நாட்டுக் கூத்துக் கலையிற் கலந்து கரைந்தவர்களே. கூத்து அவர்களுக்கு உயிர்நாடி. மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறி அவர்கள் வேறிடங்களில் வாழ்ந்தாலும் அங்கேயும் கூத்தைக் கைவிடுவதில்லை.
மெலிஞ்சி முத்தனிடமிருந்தும் தமயந்தியிடமிருந்தும் கூத்துப் பிரதிகளைப் படித்துக் கொண்டேயிருக்கிறேன். கனடாவிலும் நோர்வேயிலும் அவர்கள் நிகழ்த்துகிற கூத்தைப் பார்ப்பதற்கு இலங்கையிலிருக்கும் எனக்கு விதியில்லை. ஆகவே பிரதிகளை வாசித்துக் காண வேண்டியதுதான். ஆண்டுக்கு ஒரு கூத்தையாவது அரங்கேற்ற வேண்டும் என்று முயன்று கொண்டேயிருக்கிறார் மெலிஞ்சி முத்தன். இது கனடா வாழ்க்கையில். எங்கே வாழ்ந்தாலும் ஒருவர் தன்னுடைய உயிர்மூச்சை இழந்துவிட்டு வாழமுடியுமா? ஆகவே அங்கெல்லாம் கூத்தை எப்படியாவது அரங்கேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். கனடாவில் மெலிஞ்சிமுத்தன், நோர்வேயில் தமயந்தி. இப்படி பிரான்ஸில், இத்தாலியில், லண்டனில் என இந்தக் கூத்தர்களின் வேர் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. அங்கெல்லாம் கூத்துப் பூத்துப் பொலிகிறது.
மெலிஞ்சிமுனையில் உள்ள சிறப்பு, அங்கே ஒவ்வொரு குடும்பமும் கூத்தில் பங்கேற்கும் பழக்கமும் பாரம்பரியமும் கொண்டது. பத்து வயதிலே மேடையேறிய சைமன் தொடர்ந்து "புனித கிறிஸ்தோப்பர், அலசு , ஊசோன் பாலந்தை, மந்திரிகுமாரி, புஸ்பா, அன்னை வேளாங்கண்ணி, கண்ணொளி கொடுத்த காரிகை....." போன்ற பல கூத்துக்களில் பிரதான பாத்திரங்களை ஏற்று அரங்காடினார். பெரும்பாலும் மிகக் கரடுமுரடான, கடினமான பாடல்களைக் கொண்ட பாத்திரங்களே சைமன் ஆடியவை. அந்தப் பாத்திரங்கள் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியவை என்பது ஊராரின் நினைவு. அந்தப் பாத்திரங்களாகவே மாறி அரங்கை ஆண்டு கலக்கியிருக்கிறார். இதைப்பற்றி மெலிஞ்சிமுனையின் புகழ்மிக்க அண்ணாவியார் சவரிமுத்து என்னிடம் ஒரு தடவை சொன்னார், “சைமன் மேடையில் தெரிந்தால் காணும், அப்ப நீங்கள் சபையைப்பார்க்க வேணும். வலு உற்சாகமாகி விடும். வீரத்திறல் பாத்திரம் சைமனுக்கு வலு சோக்காக இருக்கும்” என்று.
சைமனின் கூத்துப் பங்களிப்பைப் பற்றிப் பெருமையாக நினைவு கூர்கிறார்கள் மெலிஞ்சிமுனைவாசிகள். சைமன் நடித்த எந்தக் கூத்தையும் நான் பார்க்கவில்லை. நான் வாழ்ந்த சூழல் அவருடைய கூத்துகளை அந்த நாட்களில் பார்ப்பதற்கு வாய்க்கவில்லை. பின்னாளில் அவர் நடித்திருந்த கூத்தொன்றின் ஒளிப்பதிவைப் பார்த்தேன்.
ஒரு ஊருக்கு சங்கக்கடையும் பள்ளிக்கூடமும் தேவாலயமும் விளையாட்டுக்கழகமும் மட்டும் இருந்தால் போதுமா? குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படையான தேவைகள் எல்லாமே மெலிஞ்சிமுனைக்குச் சவாலாக இருந்தன. அந்த நாட்களில் ஊர்காவற்றுறை, கரம்பன், நாவாந்துறை, வேலணை போன்ற இடங்கள் வசதியும் புகழும் பெற்றிருந்தன. ஆனால், மெலிஞ்சிமுனைக்கு அப்படியான எந்த அடிப்படைகளும் இருக்கவில்லை. கூத்தைத்தவிர, அந்த மனிதர்களுக்கு வேறு விசயங்கள் எதுவும் மகிழ்ச்சிக்குரியவையாக இருக்கவில்லை. ஒரேயொரு தெரு மட்டுமே ஊருக்கு வந்தது. அதுவும் ஒழுங்கான முறையில் செம்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சாட்டியிலிருந்தே குடிதண்ணீர் வரவேணும். இப்போது கூட மெலிஞ்சிமுனையில் இதுதான் நிலைமை. ஒரு சிறிய கொள்கலன் தண்ணீருக்காக முழுநாளும் காத்திருக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டதுண்டு.
சைமனுக்கு ஆறு பிள்ளைகள். அநேகமாக எல்லாப் பிள்ளைகளும் சைமனைப் போலப் பொதுச் சிந்தனையைக் கொண்டவர்களே. மூத்தமகன் விமல் என்ற தமயந்தி, 1982 இலேயே “ஊர்த்தொழவாரம்” பார்க்கவென வீடு துறந்தார். பிறகு ஊர் துறந்தார். பிறகு நாடு துறந்தார். ஈ.பி.ஆர்.எல். எவ் இயக்கத்தில் இணைந்த தமயந்தியின் வாழ்க்கை போராட்டம், ஒளிப்படங்கள் (Photography), இலக்கியம் என்றே அமைந்து விட்டது. போராட்டம், பொதுவாழ்வு என்று செயற்பட்ட தமயந்தி, புலம்பெயர்ந்து சென்றாலும் நிலத்தின் நினைவும் கனவுமாகவே அமைந்த வாழ்க்கை அது. மற்றப் பிள்ளைகளும் நாட்டிலுள்ள அரசியற் பிரச்சினைகளின் காரணமாக வெளியேறி அங்குமிங்குமாக வாழ வேண்டியதாயிற்று. அப்படியே சைமனும் மெலிஞ்சிமுனையிலும் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிய இடங்களிலும் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். 1983 க்குப் பிறகான நாட்கள் பொதுவாகவே ஈழத்தமிழர்களுக்கு இனிப்பாக இருந்தில்லை. மெலிஞ்சிமுனைக்கும் சைமனின் குடும்பத்துக்கும் அது மேலும் இடர் தருவதாக இருந்தது. தீவுப்பகுதி இராணுவ முற்றுகைக்குட்படும்போதெல்லாம் சைமனும் அகதியானார். அலைக்கழிக்கப்பட்டார்.
இப்படி அலைந்த, அவலமான வாழ்க்கையில் மேலும் ஒரு சுமையாகவும் வலியாகவும் தன்னுடைய 51 ஆவது பிறந்த நாளுக்கு முதல்நாள், 1991.10.09 ஆம் திகதி மிதிவெடியில் வலது காலை இழந்தார் சைமன்.
மிஞ்சிய ஒற்றைக் காலுடன் தொடர்ந்த அகதி வாழ்க்கையே நீண்டகாலத்துக்கு நிரந்தரமானது. மெலிஞ்சிமுனையை விட்டு யாழ்ப்பாணத்துக்கு நகர்ந்து, பிறகு அங்கிருந்து கிளாலி – பண்டிதர் குடியிருப்புக்குப் போய் அங்கே தற்காலிகமாகத் தங்கியிருந்தது சைமனின் குடும்பம். அது ஒரு முழுயுத்தகாலம். அந்த யுத்தச் சூழலுக்குள், ஊரை விட்டுப் பண்டிதர் குடியிருப்பில் தங்கியிருந்தபோதும் கூத்துக் கலையைக் கை விடவில்லை அவர். இது மெலிஞ்சிமுனை வாசிகளின் பிறவிக்குணம் என்று சொன்னேன் அல்லவா. போகுமிடங்களிலும் கூடக் கூத்தைப் போடுவது நீங்காத இயல்பு. அங்கே இளைய தலைமுறையினரில் ஆண் பெண் கூத்துக் கலையாளர்களை உருவாக்கியும், அரங்கேற்றியும் வந்தார். அத்தோடு, "பார் போரம்மா" போன்ற புதிய கூத்துப் பிரதிகளை எழுதி அரங்கேற்றியிருக்கிறார். பிறகு தென்மராட்சிக்கு இராணுவம் வந்தபோது சைமன் அங்கிருந்து வெளியேறி இந்தியாவுப் போனார். சென்னை புறநகர்ப் பகுதியில் கிழக்குக்கரையில் ஒரு மீனவக் கிராமத்தில் (கானத்தூர்) ஏறக்குறையப் 12 ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கே இருந்த காலத்திலும் கூத்துப் பற்றிய சிந்தனைகளிலேயே இருந்தார். சென்னையில் கலை, இலக்கியப் படைப்பாளிகள், தோழர்களுடன் சைமனுக்கு உறவும் தொடர்புகளுமிருந்தன. கருப்புப்பிரதிகள் நீலகண்டன் தொடக்கம் ஷோபாசக்தி வரை ஒரு விரிந்த உறவு வட்டம் அது. துயரம் வாழ்க்கை சூழ்ந்திறுக்கியபோதும் எந்த நிலையிலும் தளர்ந்து விடாத, அதில் துவண்டு விடாத இயல்பு சைமனுடையது. போராடி வாழ்ந்த அனுபவங்கள் அவரைத் தெம்பூட்டி வைத்திருந்தன.
சென்னையிலிருந்த காலத்தில் எப்பொழுது நாடு திரும்புவேன், ஊருக்கு மீளுவேன் என்ற எண்ணமேயிருந்தது. அந்தக் கனவு 2013 இல் நிறைவேறியது. ஊருக்குத்திரும்பினார். ஆனால், அவர் நினைத்தமாதிரியெல்லாம் இருக்கவில்லை. அவர் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பல வகையிலும் ஊர் நிலவரங்கள் மாறியிருந்தன. அவர் நடத்திய கடையின் சுவடே இல்லை. அவர் கஸ்ரப்பட்டுக் கட்டிய வீட்டில் ஒரு கல்லுக்கூட மிஞ்சியிருக்கவில்லை. அவர் கடினமாக உழைத்து உருவாக்கிய காணியைக் கூட மீளப் பெறுவதில் ஏராளம் கெடுபிடிகள், நெருக்குவாரங்கள். ஏற்றுக்கொள்ளவே முடியாத விதிமுறைகள். எல்லாவற்றுக்கும் திரும்பப் போராடவும் அலையவும் வேண்டியிருந்தது. ஆனால், முன்னரைப்போல இப்போது அவரால் எல்லா இடத்துக்கும் ஓடியாடிப்போய் வேலை செய்ய முடியவில்லை. முதுமையும் ஒரு கால் ஒன்றை இழந்த நிலையும் அவரை முடக்கி விட்டன. மனம் கொந்தளித்தது. அவர் எதைப்பற்றியாவது கதைத்தால் அல்லது கேட்டால், புதிய உத்தியோகத்தர்கள், “நீங்கள் யார்?” என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள். காலத்தின் விந்தையை நினைத்துச் சிரிப்பதைத் தவிர வேறு வழிகளிருக்கவில்லை. கண்ணீரை ரகசியமாகத் துடைத்துக் கொண்டார். ஊரைவிட்டுப் பெயர்ந்து போகாமல் தொடர்ச்சியாக ஊரிலேயே இருந்திருந்தால் இப்படியான கேள்விகளைக் கேட்டிருப்பார்களா?
எல்லாவற்றையும் விடுவோம். நியாயத்தின்படி குறைந்த பட்சம், உடைத்த வீட்டையாவது கட்டித் தருவார்களா? அவரும் அந்த வீட்டை மீளக்கட்டுவதற்கான உதவிக்காக விண்ணப்பித்தார். “உங்களுடைய பிள்ளைகள் எல்லாம் திருமணம் செய்து விட்டார்கள். நீங்களும் மனைவியும் மட்டுமே இருப்பதால், இரண்டு பேருக்கு வீடு கொடுக்க முடியாது” என்று பதில் சொன்னார்கள் அதிகாரிகள். இரண்டு பேர் உள்ள குடும்பங்களுக்கு வீடில்லை என்றால், அவர்கள் எங்கே மரநிழல்களிலா வாழ்வது? என்ற கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் அவர் கேட்டது தன்னுடைய இடித்தழிக்கப்பட்ட வீட்டை மீளக் கட்டித் தருமாறே. அதை இந்த நாடு மறுத்து விட்டது. இந்த நாடுதானே தன்னுடைய வீட்டை இடித்தழித்தது. அப்படி இடித்தழித்த வீட்டைக் கட்டித்தராமல் ஆயிரம் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்ற கோபமும் துக்கமும் சைமனுக்கிருந்தது.
ஆனாலும் ஊருக்கு வந்தது அவருக்குச் சந்தோசமே. மீண்டும் தன்னுடைய நிலத்தில் காலடி வைப்பது தாயின் மடியில் தலை வைப்பதற்குச் சமமல்லவா. சொந்தங்களோடும் சொந்த நிலத்தோடும் வாழக் கிடைத்த வாழ்க்கையையிட்டு நிறைவாக இருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவருடைய கலைப் பங்களிப்பை மதித்துப் பலரும் பேச முற்பட்டனர். கூத்துத் தொடர்பாக ஆய்வுகளைச் செய்யும் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து பேசி அறிந்து சென்றார்கள். பிரதேசக் கலாச்சாரப் பேரவை சைமனை அழைத்துக் கௌரவித்தது. 2014 இல் அவருக்கு “வாழ்நாள் கலைஞர் விருது” வழங்கப்பட்டது. தொடர்ந்து 2015 இல் “கலை விழுது” விருது. இதற்குப் பிறகு 2016 இல் ஜனாதிபதியினால் “கலாபூஷணம் விருது” வழங்கப்பட்டது. இப்படியே தொடர்ச்சியாகப் பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. இது ஒரு வகையில் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. சந்தோசத்தில் கூத்து நினைவுகளை மீட்டு மீட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்.
79 வயதில் மரணத்தைச் சந்தித்த சைமனுடைய நினைவுகளைப் பலரும் நினைவு கொள்கிறார்கள். ஊரில் அவர் அப்பொழுது உருவாக்கிய அத்திவாரங்கள், இன்று பல கட்டமைப்புகளின் உருவாக்கத்திற்கும் உயர்ச்சிக்கும் உதவிக் கொண்டிருக்கின்றன. இளைய தலைமுறை அதில் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது.
சைமன் அவர்களுடைய மரணத்தின்போது பலரும் பலவிதமாக அவருடைய நினைவைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். நீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் போராடிய ஒரு களச் செயற்பாட்டாளாகச் சைமன் வாழ்ந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய வரலாற்றைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். லாப நட்டக் கணக்குப் பார்க்காமல் கடையை நடத்திய காலத்துப் புதினங்களைச் சொல்கிறார்கள். கூத்தென்றால், மகிழ்ந்து கொண்டாடும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே ஏராளம் கதைகளில் சைமன் நிறைந்திருக்கிறார்.
இதைப்போல, சைமன் அவர்களின் மரணச் செய்தியறிந்து தங்கள் மனவுணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்கள் பலர். அந்தப் பதிவுகளிலிருந்து மாதிரிக்குச் சில.
Nimal Antoni என்பவர் தன்னுடைய முகப்புத்தகத்தில்.“தனது இளவயதிலிருந்தே நாட்டுக்கூத்துக் கலையில் முத்திரை பதித்த அற்புதமான கலைஞர் இவர். நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே எனது தந்தையார் இவர் நடித்த நாட்டு கூத்து ஒன்றையும் தவறவிடாது அழைத்து செல்வார். தாளமும் சுருதியும் கூத்து நடையும் அதனோடு கூடிய அழகான நடிப்பும் இவருக்கும் இவரோடு ஒத்தவர்களுக்குமே சொந்தமானது. எமது பாரம்பரிய கலைவடிவத்தை நீண்ட காலமாக காத்துவந்த இந்த அற்புதமான கலைஞனுக்கு தலை வணங்கி நிக்கிறோம்” என்கிறார்
Ma Sithivinayagam இப்படிச் சொல்கிறார் “ஆளுமைமிக்க அற்புதமான நாட்டுக்கூத்துக் கலைஞர். அவரது இழப்புத் துயரம் தருகின்றது. அந்தப் பாரம்பரிய கலை ஆளுமைக்கு என் ஆழ்ந்த அஞ்சலி ! கூத்தும் பாட்டுமாய் ஈழத் தீவொன்றில் இருந்த வாழ்வை, கண்ணிவெடி வைத்து காலையும் பறித்துக்கொண்டு , இலங்கை தேசம் துரத்தியனுப்ப தமிழக அகதிவாழ்வும் அலைக்கழிப்பும் தன் பிள்ளைகள் வாழ்வும் தேசத்திற்கொன்றாய் திரிந்ததை... அவரது பழையக் கூத்தைப் பாடச்சொன்னால் உருகி உருகிப் பாடியழுவார் அய்யா சைமன் பத்திநாதன். எஞ்சிய நாளில் நாடு திரும்பி அவர் கழிக்க விரும்பிய வாழ்வை இன்று சொந்தநாட்டில் வைத்தே மரணம் பறித்துக்கொண்டது. கொஞ்சம் மதுவை குடித்ததும் பழையக் கூத்தாடியின் உற்சாகத்தில் எழுந்தாட முயன்று விழ முயன்றதொரு தருணத்தின் காட்சி விழி மறைத்துக்கொள்ளும். நீர்த் திரையை விலக்கி ஆடிக்கொண்டேயிருக்கிறது... நானறிந்தவரை அகதிவாழ்வே அகாலமரணம்தான்....” என.இப்படி ஏராளமுண்டு.
என் நினைவில் பல விதமாகப் பதிந்திருக்கும் சைமன் அய்யா ஒரு தடவை என்னைத் தன்னோடு அணைத்தபடி சொன்னார், “தம்பி, கால் இல்லாதவனும் காசில்லாதவனும் ஊருக்கு வரக்கூடாது” என்று.
ஆயிரம் பாயிரங்களை ஓங்கிப் பாடிய குரல் அன்று உடைந்து நொருங்கியதைக் கேட்டேன். ஆனாலும் அந்த கூத்தின் சத்தம் ......
No comments:
Post a Comment