Thursday, May 17, 2018

"மெலிஞ்சிமுனை சைமன்" கூத்தும் கடலும் கலந்த காற்று

-கருணாகரன் -

ஆயிரம் பாயிரங்கள் பாடி ஆடியகலைஞர் 

மெலிஞ்சிமுனை சைமன்  (1938-2017) 

நாங்கள் இளையவர்களாக இருந்த 1960, 70கள் வரையில் கூத்துக் கலையும் கூத்துக் கலைஞர்களும் பெரிய நட்சத்திரங்கள். அந்த நாட்களில் கூத்துக் கலைஞர்கள் இரவுகளைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டார்கள். அதிலும் கிராமங்களில் என்றால், சொல்லவே தேவையில்லை. கூத்து அங்கேயொரு மாபெரும் கொண்டாட்ட நிகழ்வு. ஒரு நாள் திருவிழாவில் கூடிக்கலைவதைப்போல இல்லாமல், வாரக்கணக்காக, மாதக்கணக்காக கூத்தோடு ஒன்றாகிக் கலந்திருக்கும் ஊர்.

பொழுதிறங்க, கூத்தைப் பழகுவது, “வெள்ளுடுப்பு ஆட்டம்” என்று ஒத்திகை பார்ப்பது, பிறகு அதை அரங்கேற்றுவது என்று ஊர் கூத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும். இதிலே இன்னொரு விசேசமும் உண்டு. ஊரில் பாதிப்பேருக்கு மேல் கூத்துக் கலைஞர்களாகவே இருப்பார்கள். தலைமுறை தலைமுறையாக கூத்து ஆடப்படுவதே இதற்குக் காரணம். இதனால், எல்லாத் தலைமுறையிலும் ஆட்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தனர். சில ஊர்களில் சில குடும்பங்களுக்குக் கூத்திலுள்ள சில பாத்திரங்கள் பரம்பரையாக வழங்கப்பட்டேயிருந்ததுமுண்டு.

அப்படியான ஒரு காலத்தில், அப்படியான ஒரு ஊரில் கூத்தும் தொழிலுமாக இருந்தவர்தான் சைமனும்.சைமன் மெலிஞ்சிமுனைவாசி. மெலிஞ்சிமுனையில் கடற்தொழிலும் கூத்தும் கூடிக் கலந்தவை. கடலும் காற்றும் போல.கடற்காற்றும் கூத்துப் பாட்டும் நிறைந்த வெளியுடைய கிராமம் அது. கடற்தொழில் இல்லாமல் வாழ்க்கை எப்படி இல்லையோ அப்படித்தான், அங்குள்ளவர்களுக்குக் கூத்தில்லாமலும் வாழ்க்கையில்லை. சைமனுக்கும் அப்படித்தான் வாழ்க்கை (யோகம்) அமைந்தது.

நாங்கள் கூத்துக்கலைஞர்களைத் தேடி மெலிஞ்சிமுனைக்குப் போனபோது, அங்கிருந்தவர்கள் சைமனைப் பற்றிக் கதை கதையாகச் சொன்னார்கள். ஆனால், அவரை அப்போது அங்கே பார்க்க முடியவில்லை. இவ்வளவுக்கும் சைமன் வேறு யாருமல்ல. நண்பரும் ஒளிப்படக் கலைஞருமான தமயந்தியின் தந்தையே. அதற்குப் பிறகு ஓராண்டு கழித்து, அகதி வாழ்க்கையை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்தார் சைமன். நாங்கள் சந்திக்கப் போனபோது மகிழ்ச்சியாக வரவேற்றார். மலர்ந்த முகம். சிரிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாதவரைப் போல சிரித்துக் கொண்டேயிருந்தார். எங்களில் மகனை்  கண்ட பூரிப்பு.

பலதைப் பற்றியும் பேசினோம். அமர்க்களமாகவே இருந்தது சந்திப்பு. ஆனால், அவருக்கு இரண்டு கவலைகளிருந்தன. ஒன்று தன்னுடைய வீட்டில் வைத்து வரவேற்க முடியவில்லை, சாப்பாடு தர முடியவில்லை. கூழ் காய்ச்ச முடியவில்லை என்பது. மற்றது ஊருக்கு வந்திருந்தாலும் ஊர் நிலைமைகள் திருப்தியாக இல்லை என்பது. எல்லாம் படிப்படியாகச் சீராகும் என்று ஆறுதல் படுத்தினோம். ஆனால், பின்னாட்களில் நாங்கள் நம்பிக்கையூட்டியதற்கு மாறாகவே எல்லாம் நடந்தன. இதில் யார் சரி யார் தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், ஊருக்கு வந்த சைமன் அவர்கள், அங்கே இருக்க முடியாமல் போய்விட்டது. இதனால் அவர் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிக் கரம்பனில் போய் தற்காலிகமாகக் குடியேறினார். அது அவர் விரும்பிய தேர்வல்ல. விதிக்கப்பட்ட நிர்ப்பந்தம்.

ஒரு காலம் கரம்பனை விட்டு கோபத்தோடும் ஆற்றாமையோடும் வெளியேறி, மெலிஞ்சி முனைக்குப்போனவர், இன்னொரு காலத்தில் ஆற்றாமையோடும் இயலாமையோடும் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிக் கரம்பனுக்குப் போகவேண்டியிருந்தது. மனித நடத்தைகள் உண்டாக்கிய முரண்நகை இது. கரம்பனில் இருந்தவேளையிலேயே சைமன் மரணமடைந்தார். மீள ஊருக்கு வந்திருந்தாலும் தன்னுடைய சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் சாவடையக் கூட வசப்படாத விதியோடு விடைபெற்றார். இலங்கையின் அரசியலும் சமூக நிலவரங்களும் ஏற்படுத்திய காயங்களோடு மறைந்த மனிதர் நம்மிடம் பதித்துவிட்டுச்சென்ற நினைவுகளும் எழுப்பும் கேள்விகளும் ஏராளம்.

10.10.1938 இல் ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பொன் தெற்கில் பிறந்தவர் சைமன். ஆரம்பக் கல்வியை ஊரில் உள்ள பாடசாலையில் படித்த பிறகு, மேல் வகுப்பை (1947-1953) கொழும்புத்துறை புனித வளனார் கல்லூரியில் படித்தார். மெலிஞ்சிமுனையில் அந்த நாளில் கூடிய படிப்பு (அதிகபடிப்பு அல்லது மேற்படிப்பு)ப் படித்தவர் சைமனே என்று மெலிஞ்சிமுனைவாசிகள் இப்பொழுதும் சொல்கிறார்கள். இதனால், ஊரின் நல்லது கெட்டது எதற்கென்றாலும் அறிவுரை கேட்கவும் ஆலோசிக்கவும் சனங்கள் சைமனையே தேடிப்போனார்கள். இதற்குத் தோதாகச் சைமனும் தன்னால் முடிந்ததையெல்லாம் ஊருக்குச் செய்தார். அது சைமன் துடிப்போடிருந்த இளமைக்காலம். தங்களுடைய காரியங்களை மட்டும் பார்த்துக் கொள்வதற்காகப் படித்த படிப்பைப் பயன்படுத்துகின்ற பெரும்பான்மையினரின் வழமைக்கு மாறாக, ஊரின் நன்மையைக் கருதிச் செயற்பட்டார் சைமன்.

Sunday, May 13, 2018

ஆலயடிவேம்பு பிரதேச சபை: இலங்கைத் தெலுங்கர் சமூகத்திலிருந்து ஒரு பிரதித் தவிசாளர்!


ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன்.

இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.

ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு, இதே பதவிக்கு முதன் முறையாகவும், இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகியுள்ளார். இவருக்கு இப்போது 32 வயதாகிறது.

தன்னை ‘குறவர்’ என அழைப்பதை ஜெகன் விரும்பவில்லை. குறவர் சமூகத்துக்குரிய எந்தவொரு அடையாளமும் தமக்குத் தேவையில்லை என்று ஜெகன் கூறுகின்றார். குறவர் என்பதற்காகவே அவரும் அவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்கொண்ட அவமானங்களும், புறக்கணிப்புகளும் அவரை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் ஆலயடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆலையடி வேம்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் அலிக்கம்பை கிராமமும் உள்ளது. இங்கு முழுதும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வாழ்கின்றனர்.

இவர்கள் தங்களுக்கிடையில் தெலுங்கு மொழியிலேயே பேசிக் கொள்கின்றார்கள். குறவர்கள் பற்றிய புராணக் கதையொன்று இலங்கையில் உள்ளது. அலிக்கம்பையில் கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இளையதம்பி குலசேகரன் எழுதிய “அலிக்கம்பை வனக்குறவர்களும் வாழ்க்கை முறையும்” எனும் நூலில் அந்தக் கதை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.