Thursday, September 20, 2018

"மலையக அபிவிருத்தி அதிகாரசபை" நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’
(மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று (19) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்த சரத்துகளை நீக்குவதற்குரிய சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்திலுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிபடுத்தல்.
பெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச்செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல்.
அதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன் படிக்கைகளை செய்துகொள்ளுதல்.
இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.
அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.
அதிகாரசபையின் பணிகள்….
1. அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல்.

2. ஆதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கல் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
3. புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத் திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதிலும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமூதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.
4. தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதனை வசதிப்படுத்தல்.
5. இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல்.

நன்றி : மலைநாடு

Thursday, May 17, 2018

"மெலிஞ்சிமுனை சைமன்" கூத்தும் கடலும் கலந்த காற்று

-கருணாகரன் -

ஆயிரம் பாயிரங்கள் பாடி ஆடியகலைஞர் 

மெலிஞ்சிமுனை சைமன்  (1938-2017) 

நாங்கள் இளையவர்களாக இருந்த 1960, 70கள் வரையில் கூத்துக் கலையும் கூத்துக் கலைஞர்களும் பெரிய நட்சத்திரங்கள். அந்த நாட்களில் கூத்துக் கலைஞர்கள் இரவுகளைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டார்கள். அதிலும் கிராமங்களில் என்றால், சொல்லவே தேவையில்லை. கூத்து அங்கேயொரு மாபெரும் கொண்டாட்ட நிகழ்வு. ஒரு நாள் திருவிழாவில் கூடிக்கலைவதைப்போல இல்லாமல், வாரக்கணக்காக, மாதக்கணக்காக கூத்தோடு ஒன்றாகிக் கலந்திருக்கும் ஊர்.

பொழுதிறங்க, கூத்தைப் பழகுவது, “வெள்ளுடுப்பு ஆட்டம்” என்று ஒத்திகை பார்ப்பது, பிறகு அதை அரங்கேற்றுவது என்று ஊர் கூத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும். இதிலே இன்னொரு விசேசமும் உண்டு. ஊரில் பாதிப்பேருக்கு மேல் கூத்துக் கலைஞர்களாகவே இருப்பார்கள். தலைமுறை தலைமுறையாக கூத்து ஆடப்படுவதே இதற்குக் காரணம். இதனால், எல்லாத் தலைமுறையிலும் ஆட்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தனர். சில ஊர்களில் சில குடும்பங்களுக்குக் கூத்திலுள்ள சில பாத்திரங்கள் பரம்பரையாக வழங்கப்பட்டேயிருந்ததுமுண்டு.

அப்படியான ஒரு காலத்தில், அப்படியான ஒரு ஊரில் கூத்தும் தொழிலுமாக இருந்தவர்தான் சைமனும்.சைமன் மெலிஞ்சிமுனைவாசி. மெலிஞ்சிமுனையில் கடற்தொழிலும் கூத்தும் கூடிக் கலந்தவை. கடலும் காற்றும் போல.கடற்காற்றும் கூத்துப் பாட்டும் நிறைந்த வெளியுடைய கிராமம் அது. கடற்தொழில் இல்லாமல் வாழ்க்கை எப்படி இல்லையோ அப்படித்தான், அங்குள்ளவர்களுக்குக் கூத்தில்லாமலும் வாழ்க்கையில்லை. சைமனுக்கும் அப்படித்தான் வாழ்க்கை (யோகம்) அமைந்தது.

நாங்கள் கூத்துக்கலைஞர்களைத் தேடி மெலிஞ்சிமுனைக்குப் போனபோது, அங்கிருந்தவர்கள் சைமனைப் பற்றிக் கதை கதையாகச் சொன்னார்கள். ஆனால், அவரை அப்போது அங்கே பார்க்க முடியவில்லை. இவ்வளவுக்கும் சைமன் வேறு யாருமல்ல. நண்பரும் ஒளிப்படக் கலைஞருமான தமயந்தியின் தந்தையே. அதற்குப் பிறகு ஓராண்டு கழித்து, அகதி வாழ்க்கையை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்தார் சைமன். நாங்கள் சந்திக்கப் போனபோது மகிழ்ச்சியாக வரவேற்றார். மலர்ந்த முகம். சிரிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாதவரைப் போல சிரித்துக் கொண்டேயிருந்தார். எங்களில் மகனை்  கண்ட பூரிப்பு.

பலதைப் பற்றியும் பேசினோம். அமர்க்களமாகவே இருந்தது சந்திப்பு. ஆனால், அவருக்கு இரண்டு கவலைகளிருந்தன. ஒன்று தன்னுடைய வீட்டில் வைத்து வரவேற்க முடியவில்லை, சாப்பாடு தர முடியவில்லை. கூழ் காய்ச்ச முடியவில்லை என்பது. மற்றது ஊருக்கு வந்திருந்தாலும் ஊர் நிலைமைகள் திருப்தியாக இல்லை என்பது. எல்லாம் படிப்படியாகச் சீராகும் என்று ஆறுதல் படுத்தினோம். ஆனால், பின்னாட்களில் நாங்கள் நம்பிக்கையூட்டியதற்கு மாறாகவே எல்லாம் நடந்தன. இதில் யார் சரி யார் தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், ஊருக்கு வந்த சைமன் அவர்கள், அங்கே இருக்க முடியாமல் போய்விட்டது. இதனால் அவர் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிக் கரம்பனில் போய் தற்காலிகமாகக் குடியேறினார். அது அவர் விரும்பிய தேர்வல்ல. விதிக்கப்பட்ட நிர்ப்பந்தம்.

ஒரு காலம் கரம்பனை விட்டு கோபத்தோடும் ஆற்றாமையோடும் வெளியேறி, மெலிஞ்சி முனைக்குப்போனவர், இன்னொரு காலத்தில் ஆற்றாமையோடும் இயலாமையோடும் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிக் கரம்பனுக்குப் போகவேண்டியிருந்தது. மனித நடத்தைகள் உண்டாக்கிய முரண்நகை இது. கரம்பனில் இருந்தவேளையிலேயே சைமன் மரணமடைந்தார். மீள ஊருக்கு வந்திருந்தாலும் தன்னுடைய சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் சாவடையக் கூட வசப்படாத விதியோடு விடைபெற்றார். இலங்கையின் அரசியலும் சமூக நிலவரங்களும் ஏற்படுத்திய காயங்களோடு மறைந்த மனிதர் நம்மிடம் பதித்துவிட்டுச்சென்ற நினைவுகளும் எழுப்பும் கேள்விகளும் ஏராளம்.

10.10.1938 இல் ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பொன் தெற்கில் பிறந்தவர் சைமன். ஆரம்பக் கல்வியை ஊரில் உள்ள பாடசாலையில் படித்த பிறகு, மேல் வகுப்பை (1947-1953) கொழும்புத்துறை புனித வளனார் கல்லூரியில் படித்தார். மெலிஞ்சிமுனையில் அந்த நாளில் கூடிய படிப்பு (அதிகபடிப்பு அல்லது மேற்படிப்பு)ப் படித்தவர் சைமனே என்று மெலிஞ்சிமுனைவாசிகள் இப்பொழுதும் சொல்கிறார்கள். இதனால், ஊரின் நல்லது கெட்டது எதற்கென்றாலும் அறிவுரை கேட்கவும் ஆலோசிக்கவும் சனங்கள் சைமனையே தேடிப்போனார்கள். இதற்குத் தோதாகச் சைமனும் தன்னால் முடிந்ததையெல்லாம் ஊருக்குச் செய்தார். அது சைமன் துடிப்போடிருந்த இளமைக்காலம். தங்களுடைய காரியங்களை மட்டும் பார்த்துக் கொள்வதற்காகப் படித்த படிப்பைப் பயன்படுத்துகின்ற பெரும்பான்மையினரின் வழமைக்கு மாறாக, ஊரின் நன்மையைக் கருதிச் செயற்பட்டார் சைமன்.

Sunday, May 13, 2018

ஆலயடிவேம்பு பிரதேச சபை: இலங்கைத் தெலுங்கர் சமூகத்திலிருந்து ஒரு பிரதித் தவிசாளர்!


ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன்.

இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.

ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு, இதே பதவிக்கு முதன் முறையாகவும், இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகியுள்ளார். இவருக்கு இப்போது 32 வயதாகிறது.

தன்னை ‘குறவர்’ என அழைப்பதை ஜெகன் விரும்பவில்லை. குறவர் சமூகத்துக்குரிய எந்தவொரு அடையாளமும் தமக்குத் தேவையில்லை என்று ஜெகன் கூறுகின்றார். குறவர் என்பதற்காகவே அவரும் அவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்கொண்ட அவமானங்களும், புறக்கணிப்புகளும் அவரை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் ஆலயடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆலையடி வேம்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் அலிக்கம்பை கிராமமும் உள்ளது. இங்கு முழுதும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வாழ்கின்றனர்.

இவர்கள் தங்களுக்கிடையில் தெலுங்கு மொழியிலேயே பேசிக் கொள்கின்றார்கள். குறவர்கள் பற்றிய புராணக் கதையொன்று இலங்கையில் உள்ளது. அலிக்கம்பையில் கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இளையதம்பி குலசேகரன் எழுதிய “அலிக்கம்பை வனக்குறவர்களும் வாழ்க்கை முறையும்” எனும் நூலில் அந்தக் கதை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, February 22, 2018

முத்து அங்கிள்

-சந்துஸ்-
முத்து அங்கிள் ...
சப்பாத்தி முள்ளும் சரியாக முளைக்காது * என்று சொல்லப்பட்ட மண்ணிலே அரிதாகப் பூத்த அத்திப்பூ நீங்கள். அப்படித்தான் அவரை நாங்கள் அழைத்தோம். எழுபதுகளில் கொழும்பின் புறநகரான களுபோவிலவில் நாங்கள் வசித்த வீட்டின் ஒரு அறையில் இளம் தம்பதிகளான இந்திரா அன்ரியும் முத்து அங்கிளும் எங்களுடன் வசித்தனர். என் சிறு பிராயத்து நினைவுகளில் மறக்கமுடியாத ஓர் அம்சமாக அவர் இருக்கின்றார். அப்போது சிறுவர்களாக இருந்த எம்மைக் கவரும் எதோ ஒரு சக்தி அவரிடம் இருந்திருக்க வேண்டும். மாலைப் பொழுதுகளில் வேலையிலிருந்து அவர் வரும் வரை நாங்கள் காத்திருக்குமளவிற்கு அவர் எங்களுடன் நெருங்கியிருந்தார். தன்னுடைய வேலைகளுக்கு மத்தியில் எமக்கென்று செலவழிக்க அவரிடம் எப்போதும் நேரமிருந்தது. வேலையால்  வந்ததும் குளியலறையில் அவர் பெருங்குரலெடுத்துப் பாடுவதைக் கேட்பதில் தொடங்கி  அவர் எங்களுக்குச் சொல்லும் கதைகளின் வழியாக அவர் அழைத்துச் செல்லும் அந்த வினோதமான உலகத்தில் சஞ்சரிப்பது என்பது எங்கள் நாட்களின் அன்றாட அம்சமாகி இருந்தது. 
அவரிடம் இருந்தது தன்னை ஒளி த்துக் கொள்ளத் தெரியாத காற்று மனம். அவர் சத்தமான குரலில் பாடுவார். இருந்தால் போலநடனமாடுவார்.ஷேக்ஸ்பியரின் நாடகங்களின்  பாத்திரங்கள் பேசும் பெரும்பாலான வாசகங்கள் அவருக்கு மனப்பாடம்.
திடீரென்று வழமையாக அணியும் சேட் காற் சட்டையைத் தவிர்த்து national என்று சொல்லப்படும் முழுக்கைச்சேட்டும்  வெள்ளை வேட்டியும் அணிந்து திரிந்தார். அந்தக் காலத்தில் எங்களது சித்தி பத்திக் (Batique) உடைகள் தைக்கும்  வேலை செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஒரு வாளிக்குள் மஞ்சள் நிறக் கரைசலை நிரப்பிச் சென்றிருந்தார். அதை கண்ட முத்து அங்கிள் தனது வெள்ளை நிற தேசிய உடையைக் கொண்டு வந்து அந்த வாளிக்குள் போட்டுத் தோய்த்தெடுத்தார். அதன் பிறகு சில நாட்கள் மஞ்சள் உடையில் ஒரு துறவியைப் போலத் திரிந்தார். சில நாட்கள் தாடியும் மீசையும். சில நாட்கள் மழித்த தலையும் முழுச்சவரமும். ஒரு நாளினில் இருந்தது  போல் மறு நாளினில் இல்லை என்று கண்ணன் பாட்டில் வரும் பாரதியின் வரிகளை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

Thursday, February 01, 2018

அ. சிவானந்தன் எனும் ஒரு ஆளுமையின் மறைவு (1923-2018)

-சமுத்திரன்-

அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு

சிவானந்தனின் மரணம் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களுடன் தன்னை அடையாளப்படுத்திய ஒரு பேரறிஞரின் மறைவென அவரை நன்கறிந்தோர் சர்வதேச ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். ‘நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காகவே எழுதுகிறோம்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த சிவா ஜனவரி மூன்றாம் திகதி தொண்ணூற்றுநாலு வயதில் அவர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக வாழ்ந்து வந்த லண்டனில் மறைந்தபோது விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது சுலபமல்ல. அந்த ஆளுமைக்குள் ஆற்றல்மிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் இருந்தன      என அவரைப் பற்றி நண்பர்கள் வியந்துரைப்பதில் ஆச்சர்யமில்லை.

Wednesday, January 17, 2018

தமிழை ஆண்டாள்- கவிஞர் வைரமுத்து -

- கவிஞர் வைரமுத்து -

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement - some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :

“Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” – பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்.

பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. “இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியே” என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. ‘மார்கழி நீராட வாரீரோ மங்கையரே’ என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.

பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.