-கரவைதாசன்-
தமயந்தியின் ஏழு கடல் கன்னிகள் வாசிப்பு மனநிலை!
அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
தமயந்தியின் ஏழு கடல் கன்னிகள் வாசிப்பு மனநிலை!
அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் . கதை சொல்ல...
மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது, சுவைக்க முடியாது, தொட்டுணரவும் முடியாது.
எனினும் மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் கதைகளிலே வருகின்ற ஒரு இருளுடனோ அல்லது இருண்ட வீட்டுடனோ அல்லது எச்.சி. அனசனின் கதைகளில் வருகின்ற ஏதாவது ஒரு அஃறினை பொருளுடனோ உறவாடுவதுபோல் இக்கதைகளினிலே வருகின்ற தேவதைகளுடன் சிரித்துப் பேசி கும்மாளமிட்டு குதூகலிக்க முடிகிறது, கண்டு வரத்துகள் வாங்க முடிகிறது, சேர்ந்து நுகர்ந்து சல்லாபிக்க முடிகிறது, கிள்ளி எறிந்து வாயினிலே விட்டு மென்றும் மீதியினை கொப்பளிக்கவும் முடிகின்றது. என்றால் பிள்ளைவாளும் பறையனாரும் சபையினில் விவாதம் செய்கின்றனர் என்பது போல் சமன் செய்யப்படுகின்றது . மையத்தினை உடைத்து உதைத்து உதைத்து விளிம்பினில் வைத்து அழகு செய்யப்படுகின்றது . இது தமயந்தி என்ற கதை சொல்லியால் முடிந்திருக்கின்றது. தமிழ் மொழியினிலே தேவதை என்ற சொல் உசத்தியானது என்ற ஆதிக்க மனோபாவத்துக்கே பட்டா ஆகிப்போயிருக்கும் மனோநிலையில் முட்டியை உசத்தி "எங்களதும் தேவதைகள் தான்! வயல் உனக்கு சாமி என்றால் கடல் எனக்கு தேவதை!" இதுவும் கர்வமான ஒரு இலக்கியச் செல்நெறிதான். அவர் உருவகித்த அந்த தேவதைகள் ராட்சத இரும்பு இயந்திரங்கள் கொண்டு உழுது கிழிக்கப்படுகின்றபோது வீசும் இரத்தவாடை, கந்தகம் விழுந்து வெடிக்கின்றபோது எழும் கரும் புகை போன்ற சொற் கூட்டங்கள் அவரின் எழுதுகோலினால் வரிகளில் குந்தி இருக்கச் செய்கின்றபோது வாசிப்போரின் கண்களை சிவக்க வைக்கின்றார்.