- கரவைதாசன் -
தமிழிலே மேலைத்தேயவரின் வருகையும் அவர்களின் வருகைக்கு பிற்பட்ட புனைகதை (Fiction) முறையும் அறிமுகமாவதற்கு முன்பு வரலாறு, சோதிடம், வைத்தியம், இலக்கியம் என எல்லாம் கவி வடிவிலேயே இருந்திருக்கின்றன. முன்னெல்லாம் சபைகளிலே கவிதையிலேதான் கதைத்தார்கள் என்று காணக்கிடக்கின்றது. அந்தவகையில் பாடற்கலையும் ஆடற்கலையும் இணைந்து கூத்து அல்லது நாடகம் என்ற வடிவம் மிகச் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாக விருக்கின்றது. பழம்பெரும் நூல்களான சாத்தனாரின் கூத்த நூலிலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும், பரதருடைய நாட்டியசாஸ்திரத்திலும் நாடகம் பற்றிய பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிந்து, தரு, ஓடம் தண்டகம், விருத்தம், பத்யம், சுலோகம், ஓரடிதரு, ஓரடிபதம் எனப் பல்வேறு இசைவடிவங்களை இசைநாடகங்களில் கையாண்டதாகக் காணக்கிடக்கின்றது.
கூத்து என்பது இசையோடு இணைந்த ஆட்டமாகும். ஈழத்திலே தமிழர் பாரம்பாரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளிலே கூத்து பல்நெடும் காலமாக ஆடப்பட்டு வந்திருக்கின்றது. இவை வடமோடி, தென்மோடி, வட்டக்களாரி, காத்தான்கூத்து, மகுடிக்கூத்து, வீரபத்திரா; ஆட்டம், காமன்கூத்து எனப்பல வகைப்படும். உண்மையில் கூத்து தமிழர்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாகவிருக்கின்றது.
ஆனால் கிராமங்கள் நகரங்களாகியபோதும், பார்சிய வடிவிலான ஸ்பெசல் நாடகமுறையின் வருகையாலும், சினிமாவின் வருகையாலும் கிராமத்தினிலேயே இக்கூத்து வடிவம் வித்தூண்டி நின்றபோது நகரத்து மக்களால் இக்கூத்து வடிவம் நாட்டுக்கூத்து என அழைக்கப்பட்டது.