-கரவைதாசன்-
எனக்குத் தெரியும் தூரத்தில் அவர்கள் அந்த தொடு கடலை அண்டி நின்று
கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில்
அண்டளவாக ஒரு இரண்டு மீட்டர் இடைத்தூரம் இருக்கலாம். அவர்கள் எதையோ சம்பாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர்
அநாதரவற்றுக் கிடக்கும் கல்லொன்றினையோ அல்லது பனிக் கட்டியொன்றையோ உதைக்கின்றார்.
இருப்பிலிருந்து பிரிய விரும்பா
ரீங்காரத்துடன் அது நகர்ந்து செல்கின்றது.
நேற்றிரவு பூத்த பனிகள் இறுகித் திண்மையாகி வெள்ளைச் சல்லிக் கற்களைப்போல் கடற்
கரையோடு பரந்து கிடக்கின்றன. வானம் கரும் முகில்களால் சூழ்ந்தே கிடக்கின்றது.
இடையிடையே வெள்ளியிலான முகில்கூட்டங்களும். மொய்க்கின்ற குளிரும், வசந்த காலத்தினிலே இலையும் கணுவும் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் குடை
விரித்துநின்ற மரங்கள் விறகாகி உயிர் ஒளித்து
மீண்டும் ஒரு பிராப்தத்துக்காய் வான் நோக்கி விரல் நீட்டி தவம் கேட்க அவற்றிலும் பனி குந்தியிருந்தன. இவை டென்மார்க் நாட்டின் குளிர் காலத்தின் இயற்கை வனப்புகள்.
எனக்கு இரசிக்க
நேரமில்லை கைகோடரியினை ஓங்கி மரக்குத்திகளியிடையே
இறக்கினேன். எதிரே காற்று மெல்ல வந்து விலகிப் போனாபோது குளிர் முகத்தில்
அறைந்தது. உள்ளே சென்று வழைமைபோல் அப்பா
பாவிக்கின்ற அந்தக் கூடையை எடுத்து வந்து கொத்திப்பிரித்தெடுத்த விறகுகளை அதில் அடுக்கத்தொடங்கினேன்.
அப்பாவுக்குத் தெரிந்த அதே நுட்பம் பெரிய
துண்டுகள் கீழாகவும் சிறுதுண்டுகள் மேலாகவும்
அடுக்கி முடித்தேன். பலம் கொண்டவரை
கூடையை இழுத்துச் சென்று கொட்டிலின் நடுவே விட்டேன்.
இரண்டொரு விறகுத்துண்டுகளை
என்னோடு எடுத்துக் கொண்டு வீட்டின் பின்கதவினைத்
திறந்து சமையல் அறையினைக் கடந்து வராந்தவை நோக்கிச் சென்றேன். அங்கே அம்மா லீற்ஸ்
கிழங்கினை பிரித்துச் சுத்தம் செய்துகொண்டு நின்றாள். நான் எடுத்துச் சென்ற விறகுகளை போறணையில் இட்டேன். நெருப்பு
சூழ்ந்து கொண்டு சுவாலைவிட்டு எரியத்தொடங்கியது சிறு கணங்களில் அவை தணலாய்
பூக்கத்தொடங்கும். ஆனாலும் இப்போதே வராந்தாவை இதமான வெப்பம் சூழ்ந்திருந்தது. அப்போதான் கோட்டைக் கழட்டத் தோன்றியது.