-கரவைதாசன்-
தமயந்தியின் ஏகலைவன் நாட்டுக்கூத்து 1995ம் ஆண்டு பிரதியாக்கம் செய்யப்பட்டபோது கூத்துப்பிரதிககள் பிரதியாக்கம் செய்யப்படுவதன் அவசியம் குறித்து என்னால் வழங்கப்பட்ட கட்டியம் இது. இக்கூத்துபிரதி மீண்டும் இந்த ஆண்டு(2014) பிரதியாக்கம் செய்யப்படும் செய்தி மகிழ்வினை தருகிறது.
தமிழ்ச் சூழலில் ஆவணப் படுத்துதல் என்பது அருகியே வந்திருக்கின்றது. ஆயினும் கூத்துப் பற்றி தமிழ்நாட்டில் 11ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றினை நாடகமாக மேடையேற்றம் செய்ததாக கல்வெட்டுக்கள் உள்ளன. ஆனால் 18ம் நூற்றாட்டின் கூற்றுகளிலேயே சங்கரதாஸ் சுவாமிகள் புராணக் கதைகளை நாடகப் பிரதியாக்கம் செய்தாரென்றும் 19ம் நூற்றாட்டின் கூற்றுகளில் அன்று நீதிபதியாக இருந்த காசி விஸ்வநாதன் அவர்கள் "தம்பாச்சாரி விலாசம்" "கையூடு தாசில்தார் விலாசம்" போன்ற நாடகங்களை பிரதியாக்கம் செய்தார் என்றும் காணக்கிடைக்கின்றன. இப்படியாக நாடகப் பிரதியாக்கத்திற்கு ஒரு வரலாற்றுப் போக்கிருக்கின்றது. இருப்பினும் நாடகப்பிரதிகள் தமிழில் மிகவும் ஒறுப்பாகவே இருக்கின்ற நிலையிலே, நாடகப் பிரதியினை அச்சாக்கம் செய்வதன் அவசியம் கருதி, தமயந்தியின் "ஏகலைவன்" தென் மோடிக் கூத்துப் பிரதியினை அச்சாக்கம் செய்வதென்பது மிகவும் ஆரோக்கியமான செயல் நெறியே.
நாடகப்பிரதிகள் நாடகப்பாடமொழி நாடக அரங்கமொழி என இருவகைப்பட்டிருக்கும் இதில் நாடக அரங்கமொழிப் பிரதிதான் அரங்காட்டத்தில் முதன்மை பெறுகிறது. தமயந்தியின் ஏகலைவன் தென்மோடிக் கூத்துப் பிரதியினை வாசிப்பிற்குள்ளாக்கும்போதே இதன் தன்மையை புரிந்துகொள்வீர்கள்.
மகாபாரதத்திலே வரும் உப பாத்திரமான ’ஏகலைவன்’ பிரதான பாத்திரமாக உருவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட நாடகக் காரர்களால் ஆடப்பட்டும், மீள்வாசிப்பிற்கும் மீள்உருவாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் பிரளயனினால் உபகதை என்ற தலைப்பில் மேடையேறிய நாடகங்களில் முதல்க் கதை ஏகலைவனாக அமைந்திருந்தது. அதில் ஏகலைவன் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் காணிக்கையாக வலது கட்டை விரலை வழங்குவதாகவும் அந்தக் கட்டை விரலை அர்ச்சுணன் அம்பு விட்டு அடிப்பதாகவும் அமைந்திருந்தது.
ஈழத்து நெல்லியடி அம்பலத்தாடிகள் மன்றைச் சேர்ந்த இளைய பத்மநாதனினால் உருவாக்கம் செய்யப்பட்ட ஏகலைவன் நாடகத்தில் துரோணரின் காலடியில் ஏகலைவன் தன் வலது கை கட்டை விரலை தானே கோடரியால் வெட்டி காணிக்கையாக வழங்குவதாகவும் அதனை அவனது தந்தையும் நண்பர்களும் பார்த்து ஆத்திரமடைவதாகவும் அமைந்துள்ளது.