சிறுபான்மை தேசிய இனமக்களின் ஒருமைப்பாட்டிணக்க முயற்சியில், மலையக மக்களினது அரசியல் உரிமைபற்றிய கலந்துரையாடல் நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் ஆயதப் போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புலம் பெயர் சூழலில் பல்வேறு தரப்பினராலும் அமைப்புக்களாலும் சிறுபான்மை தேசிய இன மக்கள் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் முனைப்புப்பெற்று வருகின்றன.
சிறுபான்மை தேசிய சமூகங்களை ஒன்றுதிரட்டி, ஒருமித்த கருத்துடன் அவர்களின் அரசியல் தீர்வுபற்றிய கோரிக்கை ஒன்றினை அல்லது திட்டவரைபொன்றினை முன்மொழியும் பட்சத்தில், அது சாதகமான அரசியல் சூழலை இலங்கையில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், லண்டனில் அமைந்துள்ள தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம், சிறுபான்மை தேசிய இனம்சார்ந்த கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
இந்தவகையில் நேற்று லண்டன் ஈஸ்ற்ஹாமில் மலையக மக்களின் அரசியல் உரிமைகள் பற்றியும், சிறுபான்மை இன மக்களின் ஒருமைப்பாட்டில் மலையக மக்களினது இணைவின் அவசியம் பற்றியும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நான்கு தசாப்தத்திற்கு மேலாக மலையக மக்கள் மத்தியில் பணியாற்றி வருபவரும், மனிதஉரிமைகள் செயற்பாட்டாளரும், ஆய்வாளரும் சமூகவியலாளருமான அருட்தந்தை கை டி பொன்கலன் கலந்துகொண்டார்.
அருட்தந்தை கை டி பொன்கலன் மார்ச் மாதம் 24 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு மலையக மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக உரையாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவ அடக்குமுறை, பௌத்த மேலாதிக்கம், அரசியல் அடக்குமுறை, சிங்களமயமாக்கல், நிர்வாக அடக்குமுறை என்பவற்றால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இம்மக்களிடையே உள்ள வேறபாடுகளையும் கருத்துமுரண்பாடுகளையும் களைந்து ஒருமித்த நோக்கோடு அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த கலந்துரையாடலில் பல சமூக ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினார்கள். தலைமைக்கு கட்டுப்படும் இயல்புகொண்ட மலையகமக்களின் பலம் அரசியல் தீர்வுகளில் முக்கியமானது என்று எழுத்தாளரும் ஆய்வாளருமான டீ.யு. காதர் குறிப்பிட்டார்.
இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து சிறுபான்மை தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்க வலுவான கருத்துவாக்கங்களும் அதற்கான தலைமையும் செயற்பாடுகளும் தேவை என்று கலந்துகொண்டவர்கள் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி - ஆதவன் நியுஸ்
நன்றி - ஆதவன் நியுஸ்
No comments:
Post a Comment