Tuesday, December 31, 2013

தலைமுறைகள் விமர்சனம்

-உமா சக்தி -

நாம் விட்டு விலகிக் கொண்டிருக்கும் வேர்கள் மிக ஆழமானது. தொன்மையானது. ஆனால் வளர்ச்சி, தொழில்நுட்பம், சம கால வாழ்வியல் முறைகள் நம் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் மறைக்கும் மாயைகள். அது தற்காலிகமாக நமக்கு பெருமை தருவது போலத் தோன்றினாலும் நம்மை இழந்து, வேறு எதைப் பெறுவதற்காக இவ்வாழ்க்கை என்ற கேள்விக்கு உட்படுத்துவது தான் தலைமுறைகள் திரைப்படத்தின் மூலம் பாலுமகேந்திரா கேட்கும் கேள்வி. (ஆனால் சரியாகக் கேட்டிருக்கிறாரா என்பது தான் நம் கேள்வி) பணத்தின் பின் ஓடும் எந்த மனிதரையும் நிறுத்திக் கேளுங்கள் வாழ்க்கை உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்று அவர்களுக்கு பதில் சொல்லக் கூட நேரமிருக்காது. வாழ்க்கை அவர்களுக்கு பேப்பர்களால் ஆனது. வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரம், அலுவலகப் பேப்பர்கள், பணத் தாள்கள். அவர்களுக்கு அதுவே உலகம். அதுவே வாழ்க்கை.
சுப்பு பிள்ளையின் மகன் பணத்தைத் தேடி ஓடுபவனாக இருந்தாலும் பாசத்துக்கும் கட்டுப்படுபவன். இத்திரைப்படத்தில் மூன்று தலைமுறைகள் பற்றி கோடிட்டுக் காட்டுகிறார். பழையவை, இடைப்பட்டவை, புதியவை. இவ்வளவு தான். தலைமுறை இடைவெளி என்பது அன்பில் உருகும் நெஞ்சங்களுக்கு இல்லை. புரிதல் இருந்தால் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் இந்த இடைவெளி சமன்படும் என்று இப்படத்தில் சொல்லாமல் சொல்கிறார்.இத்திரைப்படம் நேர்க்கோட்டில் ஒரே விஷயத்தை நோக்கி நகர்கிறது.

காவேரிக்கரை கிராமத்தில் ஓய்வு பெற்ற தமிழ் வாத்தியார் சுப்பு (பாலுமகேந்திரா). அவருடைய மகன் சிவா சென்னையில் பெரிய டாக்டர் ஆனால் சாதி விட்டு கிருத்துவப் பெண்ணை மணம் முடித்ததால் பெரியவர் மகனை தன் சாவுக்குக் கூட வரக் கூடாது என்று விலக்கி வைத்துள்ளார். பெரியருக்கு இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி இரண்டு மாதங்கள் கழித்துதான் சிவாவுக்குத் தெரிய வருகிறது.

அவன் மனைவி இச்சமயத்தில் நிச்சயம் போய் அவரை ஒரு முறை பார்த்துவிட்டு வரச் சொல்ல,தயக்கத்துடன் ஊருக்குக் கிளம்புகிறான். பெரியவர் அவனை முதலில் வெறுப்பது போல காண்பித்துக் கொண்டாலும், எங்கே அவன் கிளம்பி விடுவானோ என ஊள்ளூர அச்சப்படுகிறார். வயதான ஒரு குழந்தையைப் போல பிடிவாதமாக இருப்பதாக நடித்தாலும், அவர் ஒடுங்கிப் போன நிலையில் மகனின் திரும்புதலை மிகவும் எதிர்ப்பார்த்துள்ளார். மகனின் அன்பும் அக்கறையும் உடல் நலமற்ற அவருக்கு வைத்தியம் பார்ப்பதிலிருந்து அவருக்கு வென்னீர் வைத்து குளிப்பாட்டுவது வரை பணிவிடைகள் செய்ய அவர் உருகிப் போகிறார். அடுத்த சில தினங்களில் அவன் மனைவியும் மகனும் கிளம்பி கிராமத்துக்கு வரவே கதை சூடு பிடிக்கிறது....

'வே ஹோம்' உள்ளிட்ட பல அயல் சினிமாக்களில் பார்த்து ரசித்த காட்சிகள் தான் என்றாலும் மொழியும் உணர்வும் இக்கதையை நம் மண் சார்ந்த கதையாகப் பார்க்க வைக்கிறது. கதை கவிதையாக நகர்ந்தாலும், இடையிடையே நிறைய கேள்விகளை (இயக்குனரிடம் பேசி பதில் வாங்க வேண்டிய கேள்விகள் தான்) தொக்கி நிற்கிறது. வழக்கம் போல அவரின் நாயகிகள், ஒரே மாதிரி குரலில் ஒரே மாதிரி சாயலில் பேசுகிறார்கள். இந்தப் படத்தின் புதிய விஷயம் இயக்குனர் பாலு நடிகர் பாலுவாகியிருக்கிறார்.

கோவிந் நிஹ்லானியின் அர்த் சத்தியா என்ற திரைப்படம் ஏனோ நினைவுக்கு வந்தது. அதுவும் ஆர்ட் ஃபிலிம் தான். மெதுவாகத் தான் காட்சிகள் நகரும். ஆனால் அந்தக் கதையின் ஆழம். அதன் வீரியம். நடிப்பவர்களின் பங்களிப்பு. இசை. மனக் கொதிப்புகள் என்று அந்தப் படம் அந்த நாயகனின் தோல்வியிலும் இயலாமையிலும் நம்மைப் பங்கெடுக்கச் செய்யும். பாலுமகேந்திராவின் பாசாங்கான இந்தத் தலைமுறைகள் திரைக்கு வெளியே நின்று வேடிக்கைப் பார்க்க மட்டுமே செய்தது. கல்பனா லாஜ்மே, ரித்விக் கட்டக், கோவிந்த் நிஹ்லானி, கேத்தன் மேத்தா, ஷ்யாம் பெனகல், ரிது பர்னோ கோஷ், அபர்ணா சென், அடூர், எம் டி வி,...இன்னும் நிறையப் பெயர்கள் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கின்றன....தமிழில் இருக்கும் ஒரே ஒரு பாலுமகேந்திரா கூட இப்படி ஏமாற்றுகிறார் என்று தோன்றியது. இந்தப் படத்தில் என்ன குறை என்று கேட்காதீர்கள் படமே குறை (பாதி) தான்.
இது ஒரு குறும்படம் பார்த்த உணர்வை அளித்ததே அன்றி முழுத் திரைப்படமாகவில்லை. பாடல்கள் இல்லை என்பதற்காக சொல்லவில்லை, கலைப்படங்களின் தொனியுடன் இருப்பதால் அல்ல, மிக நுட்பமான சில விஷயங்கள் உள் அடுக்குகளாய் இருந்தாலும், படம் ஆங்காங்கே தொய்வாகவும் கூறுவது மீண்டும் கூறுவதாகவும் இருந்தது.

படத்தில் நான் ரசித்த காட்சிகள்

சிறுவனுக்கும் தாத்தாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள்- க்ரான்ட்பா என்று அவன் அழைப்பான் என்னப்பா என்பார் மெல்லிய குரலில். இது என்ன அது ஏன் என்று கேள்விகளால் குடைவான் பேரன். ஆங்கிலம் தெரியாவிட்டாலும் புரிந்து கொண்டு தன்னால் முடிந்த வரையில் அவனுக்கு திருப்தி ஏற்படும் வகையில் பதில் சொல்வார். மழையில் தாத்தாவும் பேரனும் ஆட்டம் போடுவார்கள், ஒரு கட்டத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்படவே செயல் இழக்கும் தாத்தா பேரனை சைகையால் அருகில் அழைத்து தாத்தாவை மறந்தாலும் தமிழை மறக்காதே என்பார். ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவை வழக்கம் போல வெகுவாக ரசித்தேன். இசை இளையராஜா என்று டைட்டில் கார்டில் பார்த்த ஞாபகம்.

இன்னும் ஆழமான காட்சிகளுடன் திரைக்கதையை இன்னும் ஷார்ப்பாக்கி இருந்தால் இந்தப் படம் தொட்டிருக்கும் உச்சம் உலக சினிமாக்களைவிட மிக அதிகமானதாக இருந்திருக்கும்.

No comments: