-கவிதா-
தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கும் புலம்பெயர் ஈழத்துத்தமிழ் திரைப்படங்கள் தற்பொழுது மீண்டும் தமது முகவரிகளைத் தேடத்தொடங்கியுள்ளன. அவ்வப்போது திரையிடப்படும் குறும்படங்களிலும், ஒளிஇசைகளின் மூலமும் மெல்ல மெல்ல தமது பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றன.
ஈழத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் வளர்ந்துவரும் திரைக்கலை பெரும் சவால்களுக்கு மத்தியில் தன்னை இழுத்துக் கொண்டுபோகவேண்டிய நிலையில் உள்ளதாகவே நான் நினைக்கின்றேன். தென்னிந்திய சினிமாக்களின் தாக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் மீறி ஈழத்துச்சினிமா தனது அடையாளத்தை கண்டுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
தென்னிந்தியத் திரைப்படங்களுக்குக் கிளம்பும்போது இருக்கும் உற்சாகம் ஏனோ நமது ஈழத்துப் படைப்புகளுக்கு போகும் போது ஏற்படுவதில்லை. கடமைக்காக போவது, அழைப்பின் கட்டாயத்தில் போவது, எமது கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகப்போவது என்று இப்படி பல காரணங்களுக்காகவே ஈழத்துத்திரைப்படங்களுக்கு நாம் செல்கிறோம் என்பதுதான் உண்மை. இப்படித்தான் நானும் ஒரு ஈழத்து திரைப்படத்தைப் பார்ப்பதற்காக் சென்றேன். எமது கலைஞர்களின் படைப்பிற்கு சமூகமளிக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு ஏதுவும் என்னை உற்சாகப்படுத்தியிருக்கவில்லை. எப்படியோ அலுப்படிக்கப் போகிறது ஆனாலும் போய்வருவோம் என்ற மனநிலையில்த்தான் கிளம்பினேன்.
பெரும்பான்மை ஈழத்துத்திரைப்படங்களில் வரும் மொழி (இலங்கைத்தமிழ்) ஒரு நாடகபாணியிலேயே கையாளப்பட்டு நம்மைத் திரைக்கதைக்குத் தூரமாக நிறுத்திவிடுவதுண்டு. ஆனால் உறவு திரைப்படத்தில் வந்த கதாபாத்திரங்களின் பேச்சுத்தமிழ் நம்மை கதையோடு ஒன்ற வைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. அத்தனை கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் தெளிவாக உணர்ந்து அவர்களது மனவெளிப்பாடுகளை வெளிக்கொணர்ந்த இயக்குனரின் பங்கு முக்கியமானது.
தாய் தகப்பனின் மனநிலை அவர்களுடைய யதார்த்தமான வெளிப்பாடு. குடும்பஅரசியல், கதையோடு இழையோடிய நகைச்சுவைக்காட்சிகள், நுணுக்கமாக சில நொடிகளுக்குள் சொருகப்பட்ட அரசியற் பார்வைகளும், சேரனின் கவிதைகளும் சிறப்பு. சின்னதொரு காட்சியில் வந்து போகும் அம்மம்மாவின் கதாபாத்திரம் கூட மனதோடு நிற்கிறது. தமிழகச்சினிமாக்களுடன் நாம் எமது ஈழத்துத்திரைப்படங்களை ஒப்பிடத் தேவையற்ற அளவிற்கு தனித்தன்மையோடு செதுக்கப்ட்டிருக்கின்றது இத்திரைப்படம்
வழமையான சினிமாக்களில் வரும் சண்டைகள், வில்லத்தனங்கள், உடற்கவர்ச்சி என்பன இல்லாமலும் ரசிகர்களுக்குக் கதை சொல்லலாம் என்பதை நிரூபித்திருக்கிறது «உறவு». ஒரு நல்லவன் இருந்தால் ஒரு கெட்டவன் என்ற கதாபாத்திரங்களை அகற்றி, தஸ்தாயேவ்ஸ்க்கியின் கதைகளின் கதாபாத்திரங்கள் போல உறவு திரைப்படத்தின் கதாபாத்திரங்களும் தமது பக்க நியாயங்களுடனும், அவர்களுடைய கலாச்சாரப்பின்னனி, வாழ்நிலைச்சூழல் தரும் எதிர்பார்ப்புகள், மனநிலைபாதிப்புகளுடனும் உலாவருகின்றனர். கதாபாத்திரங்களின் மனநிலைககளின் சரியான, ஆழமான வெளிப்பாடு எம்மை கதையோடு பயணிக்க வைக்கிறது.
கதையின் வாழ்வியலோடு வரக்கூடிய யதார்த்தமான மனஉளைச்சல்களை கதாநாயகனின் சந்தேகக்கண் புறம்தள்ளிவிட்டதோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. சந்தேகம் என்பதற்கு அதிக அழுத்தம் கொடுத்தது அங்கு இருந்திருக்கக்கூடிய வேறு பல மனவேற்றுமைகளை தவறவிட்டுவிட்டதோ என்னும் கேள்வியும் எனக்குள் எழுந்தது. நாயகியின் பாத்திரமும் மிக மிக சாதுவானவளாய், எதையும் சமாளித்து போகும் குணம் கொண்டவளாய், கடைசிவரை கணவனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் பாத்திரமாக சித்தரித்திருந்ததும், அதை ஒரு ஆளுமையுள்ள புலம்பெயர்தேசத்துப் பெண்ணிடம் காட்டியதும் ஏன்? ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எம் சமூகத்து மனப்பான்மையின் வெளிப்பாடா? ஆனால் ஏன் அப்படியான பெண்ணும், ஆணும் இருக்கமாட்டார்களா என்று கேட்டால், நிச்சயமாக இருப்பார்கள் என்றே சொல்லலாம்.
சோகப்பாடலின் கவிதை வரிகள் அருமை என்றாலும் இந்தப்பாடல் பார்வையாளர்களுக்கு தேவைபட்டிருக்கவில்லை என்பது எனது கருத்து. கதையும், திரைக்கதையும், இயக்கமும், கதாபாத்திரங்களுக்கு நிகராக ஏனோ படத்தொகுப்பாக்கமும், திரைஇசையும், சில இடங்களில் ஒளிப்பதிவும் ஒத்துழைக்கவில்லை. சில காட்சிகள் தேவையற்று வருவதை தவிர்த்திருக்கலாம். கதாநாயகி தேவையற்ற இடங்களில் நடனஅசைவுகளைத் தவிர்த்திருக்கலாம். திரைப்படத்தை லயித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் மனநிலையை பாடல்கள் சற்று அதிகமாகவே வேறுபக்கம் திருப்புகிறது. வழமைபோல நிதிப் பிரச்சனைகளை நாம் காரணமாக சொல்லாமல் இத்திரைப்படத்தின் இசையும், படத்தொகுப்பும் சற்றே சரிசெய்யப்பட வேண்டும் என்பது எனது அவா. புலம் பெயர்ந்த மண்ணில் அருந்ததியின் «முகம்» திரைப்படத்திற்கு பின் அதற்கு நிகராக இரசித்த ஈழத்தமிழரின் திரைப்படம் »உறவு». ஈழத்து திரைப்படத் துறையில் மற்றுமொரு நம்பிக்கை.
உலகப்புகழ்பெற்ற நோர்வேஜிய நாடகாசிரியர் ஹென்ரிக்; இப்சனின் «பொம்மைவீடு» நாடகத்தில் வரும் «ஹெல்மர்» பாத்திரத்தின் சாயலை நாயகன் முரளியில் காணக்கூடியதாக இருந்தது. இருவரும் எந்வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்கள். சமூகம் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்படியான மனிதர்கள். நேர்மையானவர்கள் இருந்தும் சமூகஅந்தஸ்தும், ஆண் என்ற மனோபாவமும், அவர்களை கலாச்சாரக் கைதியாக்கிவிடுகிறது. சமீபத்தில்; «பொம்மைவீடு» படித்த பாதிப்பில் இருந்த எனக்கு, அந்நாடகத்தின் இறுதியில் நாயகி கதவினை அறைந்து சாத்தும் கதவின் ஒலி எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்தக் கதவின் ஒலியை படத்திலும் அபியிடம் எதிர்பார்த்திருந்தது மனது. ஆனால் எந்த அறைதலுமின்றி, புலம்பெயர் சமூகத்துப் பெண்களின் வலியை சொன்னபடி அமைதியாக கதவைச்சாத்தி வெளியேறிக்கொண்டிருந்தாள் அபி. ஈழத்துத் திரைப்படத் துறையில் மற்றுமொரு ஆறுதல் «உறவு».
………………..……
எமது கலைஞர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பதில்லை என்று ஆதங்கப்படும் எமது கலைஞர்களையே அந்தத் திரையரங்கில் காணாதது ஏமாற்றமே. அதிலும் திரைப்படத்துறையில் ஈடுபாடுஉள்ளவர்களும், ஆர்வம்முள்ளவர்களும் அங்கிருக்காததும் பெருத்த ஏமாற்றமே.
No comments:
Post a Comment