Wednesday, June 05, 2013

பிணங்களால் பிரச்சினை இல்லை மனுஷங்கதான் பிரச்சினை



சுடுகாட்டின் திசையிலேயே பெண்கள் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடு காக்கும் சமூகம் நம்முடையது. சுடுகாட்டுக் காற்று அடித்தாலே ஆவி  அண்டியதாக அஞ்சும் மக்கள் மத்தியில்தான் கிருஷ்ணவேணி வாழ்கிறார். அனாதைப் பிணங்களை வண்டியில் சுமந்துவந்து அடக்கம் செய்வதோடு,  சந்நியாசித்தோப்பு சுடுகாட்டுக்கு வரும் ஊர்ப் பிணங்களை எரிக்கும் பணியையும் செய்கிறார்.


புதுவை பொது மருத்துவமனை வளாகத்திலிருந்து கிளம்புகிறது அந்த வண்டி. முன்னும் பின்னும் பிணவண்டியிலிருந்து சகிக்க இயலாத நாற்றம்  நாசியை உறுத்துகிறது. வியர்வை உருக உருக வலுகொடுத்து வண்டியை இழுத்துச் செல்லும் கிருஷ்ணவேணியை சபித்துக்கொண்டே நடக்கிறார்கள்  மக்கள். பிரதான சாலையைக் கடக்கும் வண்டி, சந்துகளில் நுழைந்து சந்நியாசித்தோப்பு சுடுகாட்டை வந்தடைகிறது. வண்டியை நிறுத்திவிட்டு,  படபடவென மண்வெட்டியை எடுத்து குழிவெட்டத் தொடங்குகிறார் கிருஷ்ணவேணி. குழி ஆழமானதும் வண்டியைச் சரிக்க, குழியில் விழுகிறது  வெண்துணி போர்த்திய சடலம். அருகே அமைதியாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னொரு பிணம்.



பிணம் புதைக்க குழி தோண்டித் தோண்டி கைகளில் இயல்புக்கு மீறிய சுருக்கங்கள். வாழ்க்கையின் இருட்டுப்புற ரகசியங்களை கண்டடைந்து விட்ட  ஞானியைப் போல அலட்சியம் தொனிக்கும் பார்வை... கிருஷ்ணவேணி சாதாரண மனுஷியில்லை. சாதனை மனுஷி.


‘‘இந்த ஊர்லதான் நான் பொறந்தேன். அப்பன் பேரு பிச்சமுத்து. முனிசிபாலிட்டில குப்பை வேலை செஞ்சார். அம்மை பேரு செங்கேணி. நாலு  புள்ளைகள்ல மூத்தவ நான். ஆறாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். மூத்த பிள்ளைங்கிறதால சிறு வயசுலயே கல்யாணம் கட்டிட்டாங்க. புருஷன் பேரு  அல்பர். மனுஷன் தங்கமானவரு. குடிப்பழக்கம் மட்டும் உண்டு. ஒருநாளும் என்னை அழ வச்சுப் பாத்ததில்லை. 

காய்கறி வாங்கக்கூட வூட்டை விட்டு வெளியில அனுப்பமாட்டாரு. மகாராணி மாதிரி இருந்தேன். அவருதான் முதல்ல இந்த சாவுவேலையைப்  பாத்தாரு. பொணத்துக்கு 15 ரூவா கொடுப்பாங்க. வரிசையா மூணு ஆம்புளைப் புள்ளைக. திடீர்னு ஒருநாள் நெஞ்சைப் புடிச்சுக்கிட்டு ரத்த வாந்தி  எடுத்தாரு. தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுனேன். போற வழியிலேயே போய்ச் சேந்துட்டாரு. அப்போ எனக்கு வயசு முப்பது. பெரிய பய அஞ்சாவது  படிச்சான். கடைசிப்பயல ஒண்ணாவது சேத்துருந்தேன். ஒண்ணுமே புரியலே.

நாங்கள்லாம் சேத்து வச்சுப் பழகாத ஜனங்க. அஞ்சாயிரம் கையில கிடைச்சாலும் அன்னைக்கே அது காலியாயிரும். என் வீட்டுக்காரர் இறந்தப்போ  ஒத்தை பைசா கையில இல்லே. புள்ளைகள்லாம் அழுது கரையுறதைப் பாக்க மனசு ரணமாப் போச்சு. வெளிவேலைக்குப் போகலாம்னா ஊரு, உலகம்  தெரியாது. ‘பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நாமும் அவர்கூடவே போயி சேந்துருவோம்’னு விஷத்தை அரைச்சுட்டேன். கடைசி நேரத்துல உறவுக்கார  அக்கா பாத்து தடுச்சிருச்சு. ‘லட்டாட்டம் புள்ளைகள வச்சுக்கிட்டு ஏன்டி சாக நினைக்கிறே... வாழ்ந்து பாரு’ன்னு புத்திமதி சொல்லுச்சு.

வூட்டுக்காரர் உசுரோட இருந்தப்போ ஒருநாள் சொன்னாரு, ‘முனிசிபாலிட்டிக்கு நிறைய ஒழைச்சிருக்கேன்டி... எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவங்க  கிட்ட போயி நில்லு. ஏதாவது வேலை போட்டுக் கொடுப்பாங்க’ன்னு. நேரா போயி ஆபீசரைப் பாத்தேன். ‘ஒம் புருஷன் போனபிறகு அனாதைப்  பொணம் எடுக்க ஆளு இல்லை. வர்ற ஆட்களும் ஓடிப் போயிடுறாங்க. கொஞ்ச நாளைக்கு அந்த வேலையை நீ பாரு. அதுக்குப்பிறகு வேற வேலை  போட்டுத் தாரேன்’னு சொன்னாரு ஆபீசரு. 

‘எந்த ஊருல சாமி, பொம்பள போயி பொணம் எடுத்திருக்கா’ன்னு கேட்டுட்டு வந்துட்டேன். ஒரு ஓட்டல்ல போயி வேலை கேட்டேன். ‘வெட்டியாம்  பொண்டாட்டிக்கெல்லாம் வேலை கொடுக்க முடியாது’ன்னு அனுப்பிட்டாங்க. வீட்டு வேலை செய்யலாம்னு போனா, யாரும் கிட்ட சேக்கல. வீட்டுக்கு  வந்து யோசிச்சுப் பாத்தேன். புள்ளைக மூணும் கண் வத்திப் போய் கிடக்குதுக. ஏதாவது பண்ணியாகணும். ‘சரி, நமக்கு வாய்ச்சது இதுதான்’னு முடிவு  பண்ணிட்டேன்.

மொத பொணம், பஸ் ஸ்டாண்டு பக்கத்துல, மழையில நனைஞ்சு விறைச்சுப் போய் கிடந்துச்சு. பாத்தவுடனே மனசுக்குள்ள பயம் வந்திருச்சு. மனசை  கட்டுப்படுத்திக்கிட்டு மூத்த பயல உதவிக்கு வச்சுக்கிட்டு, பொணத்தைத் தூக்கி வண்டியில போட்டு தள்ளிக்கிட்டே இந்த மயானத்துக்கு வந்தேன்.  வந்தா, இங்கே ஆட்கள்லாம் கூடி நிக்கிறாக. என் வீட்டுக்காரர்கிட்ட உதவிக்கு இருந்த ஆளுக.... ‘ஒரு பொம்பள எப்பிடி பொணத்தைத் தூக்கிட்டு  சுடுகாட்டுக்குள்ள வரலாம்... கால வெட்டுவோம், கைய வெட்டுவோம்’னு ஒரே பிரச்னை. 

புடிச்சுத் தள்ளி அடிச்சுட்டாங்க. போலீசு, மீனவ மக்கள் எல்லாம் வந்து, ‘இனிமே கிருஷ்ணவேணிதான் பொணம் எடுப்பா’ன்னு உறுதியா  சொல்லிட்டாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்க... பதினைஞ்சு வருஷமாச்சு. எண்ணிக்கை கணக்கு வச்சுக்கலே. இங்கே தெரியுற முட்டுக எல்லாம் நான்  மண் அள்ளிப் போட்டதுதான்...’’ - நம் வியப்பை புறம்தள்ளிவிட்டு, மயானக் கொட்டகையில் எரிந்து கொண்டிருக்கும் சடலத்தின் மீதிருக்கும் விறகைத்  திருத்தி வைக்கிறார் கிருஷ்ணவேணி.  

‘‘ஊர்க்காரங்க கூட ஏத்துக்கிட்டாங்க; உறவுக்காரங்க ஏத்துக்கல. எம் புருஷனோட உடன்பிறந்தாருங்க எல்லாம் என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க. பொணம்  தூக்குறவளாம். மூத்தாருங்க எறந்ததுக்குக் கூட தகவல் சொல்லி விடல. எல்லாத்தையும் தாங்கிக்க மனசு பக்குவப்பட்டுப் போச்சு. எங்கோ பெறந்து,  எங்கோ வளந்து, இங்க வந்து செத்துக் கிடக்கிற எத்தனையோ பெணங்களைத் தூக்கி, உறவுக்கு உறவா நின்னு பொதைக்கிற புண்ணியம் போதும்  எனக்கு. இங்க அடங்கிக் கிடக்கிற உசுருக எல்லாம் மேலோகத்துல போயி என்னைப் பத்தி தப்புன்னு சொல்லட்டும்... ஆண்டவன் கொடுக்கிற  தண்டனைய ஏத்துக்கறேன். மத்தபடி எதுக்கும் நான் கலங்கி நிக்கல.  

அனாதைப் பொணங்கள ஒரு வாரமோ, ஒரு மாசமோ வச்சிருப்பாங்க. உரிமை கேட்டு யாரும் வரலேன்னா எனக்கு ஆளனுப்பிருவாங்க. தூக்கிட்டு  வந்து பொதைப்பேன். போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது, கிழிக்கிற உடம்பை தைக்க மாட்டாங்க. அப்படியே வெள்ளைத்துணி சுத்தி கட்டிருவாங்க.  வண்டியில தூக்கிட்டுப் வரும்போது ரோட்டுல போறவங்க, வர்றவங்க எல்லாம் என்னை சபிச்சுக்கிட்டே போவாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல ‘ஏந்தான்  இந்த நாறப்பொழப்பு பிழைக்கிறோமோ’ன்னு வரும். 

ஆனா சிண்டும், சிறுசுமா இருந்த மூணு புள்ளைகள வளத்து ஆளாக்க துணையா இருந்தது இந்த பொணப் பொழப்புதானே! அதை நினைச்சு  சகிச்சுக்குவேன். எயிட்ஸால செத்தது, காசநோய்ல செத்தது, வெறிநாய் கடிச்சது எல்லாம் இங்கேதான் வரும்... தொட்டுத் தூக்கித்தான் பொதைப்பேன்.  எப்பவாவது போயி ஒரு தடுப்பூசி போட்டுக்குவேன். மத்தபடி பொணங்களால பிரச்னையில்லை. மனுஷங்கதான் பிரச்னை...’’ - சோகம் இழையோட  சிரிக்கிறார் கிருஷ்ணவேணி. 

ஒரு பிணத்துக்கு இப்போது 100 ரூபாய் கொடுக்கிறார்கள். அதுவும் உடனே கையில் கிடைக்காது. மூன்று மாதம், ஆறு மாதத்துக்கு ஒருமுறை  எழுதிக்கொடுத்து வாங்கவேண்டும். மற்றபடி ஊர்ப்பிணம் எரிக்கும்போது ஏதாவது கிடைக்கும். கிருஷ்ணவேணி நடத்திய பெரும் போராட்டத்தை  அடுத்து, சந்நியாசி தோப்பு சுடுகாட்டிலேயே கிருஷ்ணவேணிக்கு வேலை வழங்கியிருக்கிறது நகராட்சி. ஓரளவுக்கு பாதுகாப்பான, ஆனால் நிம்மதியற்ற  வாழ்க்கை.

‘‘எந்த புள்ளைகளை உலகம்னு நினைச்சு வாழ்ந்தனோ, யாருக்காக இந்த பொணங்களை எல்லாம் சுமக்கத் துணிஞ்சனோ, அந்தப் பிள்ளைகளே  இன்னைக்கு என்னை ஒரு மனுஷியா மதிக்கலே. மூத்தவனும், அடுத்தவனும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிட்டானுங்க.  வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பாக்குறதில்லை. கடைசிப் பைய மட்டும் இப்போ கூட இருந்து உதவுறான். அவனுக்கும் என்ன நினைப்பிருக்கோ... மவராசன்,  எம்புருஷன் யாருகிட்டயும் கையேந்தி நிக்கிற நிலைமையில என்னை விடலே... தொழிலைக் கொடுத்திருக்காரு. உடம்புல வலுவுள்ள வரைக்கும்  உழைப்பேன். முடியலையா.... இதோ இங்கன எனக்குன்னு ஒரு குழி... அதுபோதும் எனக்கு!’’ - கண்கள் அரும்ப, அருகில் நிற்கும் நாய்க்குட்டியை  வாஞ்சையாக அணைத்துக் கொள்கிறார் கிருஷ்ணவேணி. அந்த அணைப்பில் தாய்மை ததும்புகிறது.

நன்றி :தினகரன் 

No comments: