Sunday, April 21, 2013

இளையதலைமுறைக்கு புதிய வாசல்






ஆசிரியர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் நினைவாக


-இராகவன்-
காலச்சுவடு என்ற பெயரை 2001 பிற்பகுதியில் நண்பர் குப்பிழான் ஐ. சண்முகன் வாயிலாகத்தான் நான் முதன் முதலாகக் கேள்வியுற்றேன். 1988 காலப் பகுதியில் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் தமிழகத்திற்கு வந்து சுந்தர ராமசாமி வீட்டில் தங்கியிருந்ததாகவும் தான் இதுவரை சந்தித்த மனிதர்களுள் கேண்மை பூண்டு விருந்தோம்புவதில் சுந்தரராமசாமி போல் ஒருவரை எடுத்துக்காட்ட இயலாதென்றும் கதை கதையாகச் சொல்லி சுந்தர ராமசாமியின் மகள் தைலாவின் ஒளிப்படத்தையும் எனக்குக் காட்டியிருக்கிறார். எனினும் நான் காலச்சுவடு இதழைக் கண்டது தேவதாசனின் ‘சலன சித்திரம்’ அலுவலகத்தில்தான். தேவதாசன் ஈழத்துத் தமிழ் சினிமாவை வளப்படுத்தப் போகிறேனென ‘சலன சித்திரம்’ அமைப்பைத் தொடங்கினார். அப்போதுதான் ‘பாரதி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தேவதாசன் ‘பாரதி’ திரைப்படம் குறித்து ஈழம் தமிழகம் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளில் வெளிவந்த விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து ‘பாரதி - திரைப்பட விமர்சனத் திரட்டு’ என்ற நூலை சலன சித்திர வெளியீடாகக் கொண்டுவந்திருந்தார். அந்நூல் குறித்துக் காலச்சுவடில் கண்ணன் ‘சலனபாரதி’ என்ற தலைப்பில் ஒரு விமர்சனக் குறிப்பை எழுதியிருந்தார். அக்குறிப்பு வெளியான இதழையே தேவதாசன் சலன சித்திரம் அலுவலகத்தில் பார்வைக்காக வைத்திருந்தார். அவ்விதழை எடுத்துப் புரட்டிப் பார்த்தபோது வடிவமைப்பும் உள்ளடக்கமும் அதுவரை நான் பார்த்திருந்த இதழ்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. எனினும் அவ்விதழை வீட்டிற்கு எடுத்துச்சென்று வாசிக்கத் தேவதாசன் அனுமதிக்க வில்லை.2002 பிற்பகுதியில் பருத்தித்துறைக் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் உமாகாந்தன் ஒருநாள் தமது அலுவலகத்திற்கு காணியுறுதி அலுவலாக ஒருவர் வந்ததாகவும் அவர் பெயர் குலசிங்கம் என்றும் அவர் தீவிர இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகத் தோன்றுவதாகவும் விரும்பினால் புலோலியிலுள்ள தனது வீட்டிற்கு வரும்படி சொன்னதாகவும் என்னிடம் கூறினார். ஒருநாள் சனிக் கிழமை நானும் உமாகாந்தனும் புலோலியிலுள்ள குலசிங்கம் வீட்டிற்குப் போனோம். வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார். யாழ் மாநகரசபை நூலகத்தில் கூட இல்லாத நூல்கள் எல்லாம் அந்த நூலகத்தில் இருந்ததைக் கண்டு பிரமிப்பிலாழ்ந்தோம். அங்கே காலச்சுவடு இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அவ்விதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரும்பினால் வாங்கிக்கொள்ளலாம் என்றும் குலசிங்கம் சொன்னார். அப்போது எனக்கு வேலை இல்லை. அதனால் கையில் பணப்புழக்கமுமில்லை. ஆனால் உமாகாந்தனின் நிலமை வேறுவிதமானது. அதனால் 500ரூபா கொடுத்து 50 காலச்சுவடு இதழ்களைக் குலசிங்கத்திடம் வாங்கினார். காலச்சுவடு இதழொன்றில் குலசிங்கத்தின் நேர்காணலும் வெளியாகியிருந்தது. இவ்விதழை குலசிங்கம் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவரிடம் வாங்கிய 50 இதழ்களையும் ஆளுக்கு 25 எனப் பிரித்து வாசித்துப் பரிமாறிக்கொள்ளத் தீர்மானித்தோம்.
இதன்படி எனக்குக் கிடைத்த 25 இதழ்களையும் ஒரு மாத கால இடை வெளியில் வாசித்து முடித்துவிட்டேன். உமாகாந்தனிடமிருந்த 25 இதழ்களும் அவரது அலுவலகப் பணியின் காரணமாக வாசிப்பதில் தாமதமானது. எனினும் அவ்விதழ்களையும் பகுதி பகுதியாக அவரிடம்பெற்று வாசித்து முடித்தேன். அந்த வாசிப்பு அதுவரை நான் அறிந்திராதவொரு உலகத்தினை எனக்கு அறிமுகப்படுத்திப் பிரமிப்பிலாழ்த்தியது. நவீன இலக்கியத்தின் பக்கம் என்னைத் திசை திருப்பிவிடும் முதற் கட்டப் புள்ளியாகவும் அது அமைந்துவிட்டது.
பா. வெங்கடேசனின் ‘மழையின் குரல் தனிமை’, பெருமாள்முருகனின் ‘நீர்விளையாட்டு’, பிரேம் - ரமேசின் ‘முன்னொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன’ ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’ எஸ். ராமகிருஷ்ணனின் ‘வேனல் தெரு’ அம்பையுடனான நீண்ட நேர்காணல் எனப் பல அம்சங்கள் என்னை வெகுவாகப் பாதித்தன. சாரு நிவேதிதா, பிரேம் - ரமேஷ் ஆகியோரை நான் காலச்சுவடு வாயிலாகவே அறிந்துகொண்டேன். இதன் பின் காலச்சுவடு இதழ்களைத் தொடர்ந்து வாசிக்க ஆர்வங்கிளர்ந்தது.
ஒரு தடவை கொழும்பிற்குச் சென்றபோது பௌசரின் மிலேனியம் புக்லாண்ட்டிற்குப் போனேன். அங்கே காலச்சுவடு இதழ்கள் ஒழுங்காக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. காலச்சுவடு இதழ்களைத் தொடர்ந்து பெறுவது குறித்து பௌசரிடம் பேசியபோது அவர் எனக்குத் தொடர்ந்து தபாலில் அனுப்புவதாக உத்தரவாதமளித்து அதன்படியே அனுப்பிக்கொண்டிருந்தார். 2003 தொடக்கம் என நினைக்கிறேன். ‘கோட்பாடுகளின் மரணம்’ என்றொரு சிறுகதையை எழுதிக் காலச்சுவடிற்கு அனுப்பினேன். ஒரு சில வாரங்களில் காலச்சுவடு ஆசிரியர் குழுவின் சார்பில் அரவிந்தன், கோட்பாடுகளின் மரணத்தைக் காலச்சுவடு இதழில் பிரசுரிக்கத் தீர்மானித்திருப்பதாகவும், வாசிப்பில் தடங்கல் ஏற்படுத்தக்கூடிய சில பகுதிகளை நீக்குவதற்கு அனுமதி கேட்டும் கடிதம் அனுப்பியிருந்தார். காலச்சுவடு ஆசிரியர் குழுவின் நேர்மையும் இங்கிதமும் என்னைப் பிரமிப்பிலாழ்த்தின. இப்படியெல்லாம் கடிதம் அனுப்புவார்கள் என அப்போதுதான் உணர்ந்துகொண்டேன். உடனடியாக அவர்களது நிபந்தனைக்குச் சம்மதித்துக் கடிதம் அனுப்பினேன். காலச்சுவடு ஈழத்து இலக்கிய சிறப்பிதழை 2004 ஏப்ரலில் கொண்டுவந்தபோது அவ்விதழில் ‘கோட்பாடுகளின் மரணம்’ பிரசுரமாயிற்று - அது என்னைத் தொடர்ந்து எழுதுவதற்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. அக்காலத்தில் காலச்சுவடு இதழ் மற்றும் உலகத்தமிழ் . காம் சேர்ந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு நான் ‘கலாவல்லியின் நெடுக்கு வெட்டுமுகம்’ என்ற கதையை அனுப்பினேன். அக்கதை பரிசுக்குரிய முதல் பட்டியலில் தெரிவானது. இதை நான் இன்றளவும் எனக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகக் கருதுகிறேன். இப்போட்டியில் ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசினைப் பெற்றிருந்தனர். இப் போட்டியில் பரிசுபெற்ற கதைகள் ‘புதிய சலனங்கள்’ எனும் தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக ஒரு தொகுப்பாக வெளிவந்தது. இத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய அரவிந்தன் எனது கதையைப் பற்றியும் ஓரிரு வரிகள் சிலாகித்து எழுதியிருந்தார். இதையெல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. கரையேற முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைப் படைப்பாளிகளைக் கைதூக்கிவிடுவதில் காலச்சுவடு முக்கியப் பங்கினை வகித்து வருகிறதென்றால் மறுப்பதற்கில்லை.
2003 காலப்பகுதியில் கண்ணன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். 08.08.2003 அன்று யாழ் பல்கலைக் கழக மாணவர் பொதுஅறையில் பிற்பகல் 4 மணிக்கு கண்ணனுடனான கலந்துரையாடல் நடைபெற இருப்பதாகத் தகவலறிந்து நானும் நண்பர் குப்பிழானும் நெல்லியடி கூட்டுறவுச் சங்க முச்சக்கர வண்டியில் யாழ் பல்கலைக்கழகம் சென்றோம், கண்ணன் யாழ்ப்பாணம் வந்திருப்பதையறிந்த நெல்லியடி கூட்டுறவுச் சங்கத் தலைவர் சிதம்பரப் பிள்ளை நெல்லியடியிலும் கண்ணனுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்ய விரும்பி எங்களைக் கண்ணனுடன் பேசி ஒழுங்கு செய்யவென அனுப்பியிருந்தார். அன்றைய தினம் கண்ணனுடனான உரையாடலை வழிநடத்திய நவீன இலக்கியவாதி ஒருவரிடம் நாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னோம். அவர் கண்ணனுக்கு நேரமில்லை. அவர் வரமாட்டார் என்று சொன்னார். அதனால் மிகுந்த ஏமாற்றமடைந்தோம்.
இதற்கிடையில் வண்டியில் ஏதோ திருத்தம் செய்யவேண்டுமெனக் கூறி வண்டியுடன் சாரதி வெளியே சென்றுவிட்டார். கலந்துரையாடல் முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்ற பின்னரே எமக்கான வண்டி வந்து சேர்ந்தது. நாங்கள் புறப்பட்டுச் சென்றபோது வளாக வீதியில் ரஞ்ச குமாரைக் கண்டோம். குப்பிழான் ஐ. சண்முகன் ரஞ்சகுமாருடன் பேசவேண்டுமெனச் சொன்னதால் வண்டி நிறுத்தப்பட்டது. ரஞ்சகுமாருடன் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னோம். கண்ணன் இத்தகைய கலந்துரையாடல்களைப் பெரிதும் விரும்புவாரென்றும் அப்படியொன்றும் நேரமில்லாமல் இல்லையென்றும் பக்கத்திலுள்ள தொலைத் தொடர்பு நிலையத்திற்கு அவர் சென்றிருக்கிறார் என்றும் அவர் வந்ததும் பேசி ஒழுங்கு செய்துகொள்ளலாம் என்றும் ரஞ்சகுமார் எங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணனும் வந்து சேர்ந்தார். அவருடன் நாங்கள் பேசியபோது எதுவித மறுப்புமின்றி நெல்லியடிக் கூட்டுறவுச் சங்கத்தின் கலந்துரையாடலில் கலந்துகொள்ளச் சம்மதித்தார். மிகக் குறுகிய கால முன்னறிவித்தலின் பேரில் அக்கலந்துரையாடல் நெல்லியடிக் கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் 09.08.2003 அன்று காலை 10.30 மணி தொடக்கம் 12.30மணி வரை இடம்பெற்றது. கலந்துரையாடலை நானே வழி நடத்தினேன். அக்கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் கண்ணன் காலச்சுவடு இதழின் விற்பனையைப் பெருக்குவதற்காகத்தான் யாழ்ப்பாணம் வந்ததாகக் கருதினர். இந்திய அமைதிப்படை இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மேற்கொண்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து கண்ணனிடம் மோசமான கேள்விகள் எழுப்பப்பட்டன. எல்லாக் கேள்விகளுக்குமே கண்ணன் வெகு நிதானமாகப் பதிலளித்தார். அந்த நிதானம் என்னை அதிசயிக்கச் செய்தது. அக்கலந்துரையாடல் குறித்து ஒரு குறிப்பினை எழுதிக் காலச்சுவடிற்கு அனுப்புமாறு கண்ணன் என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் எழுதி அனுப்பினேன். அக்குறிப்பு காலச்சுவடு ஈழத்துச் சிறப்பிதழில் வெளியானது. கலந்துரையாடல் முடிவில் கண்ணனுக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் மதிய போசன விருந்தளிக்கப்பட்டது. பின்னர் கண்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் வந்திருந்த வாகனத்திலேயே நானும் ரஞ்சகுமார், ரவீந்திரன் (Book Lab), சோமிதரன் ஆகியோரும் குலசிங்கத்தைச் சந்திக்கப் பருத்தித்துறைக்குப் போனோம். அங்கே குலசிங்கத்தைச் சந்தித்து நிழற்படம் எடுத்துக் கொண்டோம். அன்று பிற்பகலே கண்ணன் ரஞ்சகுமாருடன் கொழும்பு பயணமானார். இது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த மறக்க முடியாத சந்திப்பு.
எனது சிறுகதைகளின் தொகுப்பொன்றை வெளியிடுவதற்காகக் காலச்சுவடை அணுகியபோது மறுப்பேதுமின்றிச் சம்மதித்து நூல் வெளியாவதுவரை ஷாலினியும் கண்ணனும் காட்டிய அக்கறையைச் சொல்லிமாளாது. இளந்தலைமுறைப் படைப்பாளிகளைக் கைதூக்கி விடுவதில் காலச்சுவடு இதழுக்கு நிகராக வேறொரு இதழை எடுத்துக்காட்ட முடியுமெனத் தோன்றவில்லை. 2009 காலப்பகுதியின் நெருக்கடியான தருணங்களைப் பதிவு செய்வதில் காலச்சுவடு தீவிரமாக இயங்கியிருக்கிறது. இதற்கெனவே தனக்கிருந்த அடிப் படையான நியமங்களை மீறிச் செயற்பட்டிருக்கிறது. எனினும் சமரசம் செய்துகொள்ளவில்லை. முன்னறிமுகமில்லாதவர்களுக்கெல்லாம் அக்காலகட்டத்தில் நூறு பக்கங்கள் வரை காலச்சுவடு ஒதுக்கியிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளும்போது தலை தாழ்த்தத் தோன்றுகிறது.
நன்றி:காலச்சுவடு

No comments: