Wednesday, August 01, 2012

விடியல் சிவா நினைவுகள்

-ந.சுசீந்திரன்-
தோழர் விடியல் சிவா அவர்கள் எனக்கு 1990 களின் நடுவாக்கில் அறிமுகமாகியிருக்கலாம். அவரைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் வீட்டில் தான் முதன்முதலில் பார்த்த ஞாபகம். அப்போதெலாம் அதிகாலையிலேயே யாராவது இளந்தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களது வீட்டுக்கு வந்து விடுவார்கள். தலைகுனிந்து கண்களை அரைப்பங்கு மூடியபடி எஸ்.வி. ஆர் பேசத்தொடங்கினால் அது மடைவிட்ட வெள்ளம் போல் ஓடியபடியிருக்கும். அப்படியொரு காலையில் தான் விடியல் சிவா அவர்களைக் கண்டேன். பெரியார் :சுயமரியாதை சமதர்மம் நூலின் பதிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம் அது. அப்பொழுது அவர் அறியப்பட்ட முற்போக்குப் பதிப்பாளராக இருந்தார். வெற்றிலை போடுவதும், வியர்க்கும் போது அவர் கையில் வைத்திருக்கும் பையொன்றினுள் இருக்கும் துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொள்வதும், எப்பொழுதும் குமிண்சிரிப்பொன்றைத் தாங்கி நிற்பதும் சிவாவின் அடையாளங்கள்.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டில் அவரைக் காணும்போது எங்கள் உறவும் நெருக்கமும் அதிகரித்திருந்தது. காரணம் தோழர் தண்டபாணி, தோழ
ர் கல்யாணி ஆகியோரின் ஒரே மகள் சுமித்திரா பெர்லினில் எங்கள் பவானி அக்காவின் மகன் கிருபாவை மணம்புரிந்திருந்திருந்தார். தமிழினியின் தொடக்க நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன், வ. கீதா, விடியல் சிவா, நான் மற்றும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோர் காலைப்பொழுதொன்றின் மரநீழல் தந்த தரையிலமர்ந்து ஈழ நிலைமைகளை சு.வி அவர்கள் தன் பாணியில் தெளிவுபட விவரித்துக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பின்னர் நிலாந்தனின் „முல்லைக் காடே, முல்லைக் காடே…“; மு.பொன்னம்பலத்தின் „மார்கழிக்குமரி…; “நீலாவணனின் „ஓ..ஓ..வண்டிக்காரா…“ போன்ற பாடல்களை சு.வியின் அதிசய உணர்குரலிசையில் கேட்டு லயித்திருந்ததையும் விடியல் சிவா அவற்றுக்குத் தலையசைத்து நின்றதையும் இப்பொழுது எண்ணிப்பார்க்கின்றேன்.

அன்றுதான் பாண்டிச்சேரி எம். கண்ணன், விடியல் சிவா ஆகியோர் சு.வியை நேரில் கண்டிருக்கலாம். பின் நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன் அவர்களதும் அவர்கள் குடும்பதினரினதும் அன்பு, விருந்தோம்பல், தன் கவிதைப் புத்தகம் வெளிக்கொண்டுவருவதில் எம். கண்ணன், விடியல் சிவாவினது மெய்வருத்தம் பாரா உழைப்பு, நேர்மைத்திறன் போன்றவற்றை மிக்க நன்றியோடு உரக்க நினைவு கூர்ந்தபடி இருந்தார் காலமாகிவிட்ட எங்கள் கவிஞன் சு. வில்வரத்தினம். „பாரதிக்குப் பின் ஓர் அதிசயிக்கத்தக்க ஆளுமை சு.வில்வரத்தினம்“ என்ற வாசகத்தை விடியல் சிவாவிடம்தான் நான் கேட்டிருக்கிறேன்.

தோழர் சிவா, தோழர் தண்டபாணி, தோழர் கல்யாணி ஆகியோர் வீட்டில் நான் ஆகக் குறைந்தது இரண்டு முறையேனும் விருந்தாகியிருக்கின்றேன். கல்யாணியின் கோழி சமையல் தனி ரகம். அச் சமையலைப் போலப் பண்ணிவிட என்னால் இன்னும் முடியவில்லை. கோயம்புத்தூரின் அரசியல், பொருளாதார, தொழிலாளர் வரலாற்றைச் சிவா சொல்லியபடி, நானும் அவரும் இரவுகளில் நடைபோயிருக்கின்றோம். சிவா அவர்கள் வீட்டிலும், கோயம்புத்தூரிலும் தோழர் எஸ்.பாலச்சந்திரன், கோவிந்தசாமி போன்றோருடன் அறிமுகமாகியிருகின்றேன். எங்கள் மேலைத்தேயப் புகலிடவாழ்வின் தார தம்மியங்களை நான் இவர்களோடு உட்கார்ந்து பேசும்போது, „நான் உங்கள் ஊருக்கு வரவே மாட்டேன் என்று சிவா கூறியதும் என் ஞாபகத்தில் இருக்கின்றது. துயரச் செய்தியின் பின் இந்த நினைவுகள் எல்லாம் இப்போது ஓடியோடி வந்து என்னவோ செய்கின்றன.

No comments: