Sunday, June 10, 2012

தேசவழமைச்சட்டமும் சாதியமும்

- ராகவன்- 

சாதியம் தென்னாசிய சமூகங்களிற்கான தனித்துவமான பண்பாகயிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் இச்சமூகங்களில் சாதி கலந்திருக்கிறது.  யாழ்ப்பாணச் சாதிய அமைப்பின் அரசியல் பண்பாட்டுக் கூறுகள் பற்றி ஒரளவுக்கு எழுதப்பட்டிருக்கின்றன.எனினும்  சாதியத்திற்கும் நில உரிமைக்கும்  உள்ள சட்டரீதியான முண்டுகொடுத்தலை பற்றிய ஆழமான ஆய்வு எதுவும் வந்ததாகதெரியவில்லை.சட்டத்தின் முன் எல்லோரும் சமம் எனற மாயக்கண்ணாடியின் பின் சாதிய மேலாதிக்கமும் சனாதனமும் தேசவழமைச் சட்டத்தைஎவ்வாறு வடிவமைத்திருக்கின்றன என்பது ஆய்வுக்குரிய பொருள். இக்கட்டுரை ஒரு முழுமையான ஆய்வு அல்ல. ஆனாலும் ஒரு ஆரம்ப விவாதத்திற்கான கருப்பொருளாக இக்கட்டுரை இருக்குமென நம்புகிறேன்.

“தேசவழமைச் சட்டம் எமது தமிழ் பாரம்பரிய சட்டம், அது பெண்வழி சமூகமுறையின் பெருமையையும் சமபகிர்வையும் எமக்குத் தந்திருக்கிறது”  எனும்கதையாடல்களுக்கப்பால் சாதிய கலாசார படிமங்கள் தேசவழமை சட்டத்தின் அடித்தளமாக இருக்கின்றன என்பதை ஆய்தல் அவசியம். இந்த சட்டமும் நடைமுறையும் எவ்வாறு சாதிய மேலாண்மையை பேணி சொத்துரிமையை  தொடர்ந்து ஆதிக்க சாதியரிடம் தக்கவைக்கின்றதென்பதை பார்ப்பது முக்கியமானது.
சமூக உறவுகள் உற்பத்தி உறவுகளால் நிர்ணயிக்கப்படுகின்றதென்பார் மார்க்ஸ். சாதியத்திற்கும் உற்பத்தி உறவுகளுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு இருக்கின்ற போதும் சாதியம் அரசியல் சட்ட  பண்பாட்டு தளங்களில் செலுத்தும் ஆதிக்கம் வெறும் பொருளாதார அடிக்கட்டுமானத்தின் வெளிப்பாடல்ல.உற்பத்தி உறவுகள் கலாசார பண்பாட்டு தளங்களில் பாதிப்பு செலுத்தும் அதேசமயம், கலாசார பண்பாட்டு தளங்களின் தாக்கம் உற்பத்தி உறவுகளையும்பாதிக்கின்றன. இதன் விளைவால் சமூக உற்பத்தி உறவுகளிலும் தொடர்ந்த மாற்றங்கள் எழுகின்றன. தேசவழமைச் சட்டத்தின் அடிப்படை சாதிய கலாச்சாரத்திலிருந்தே எழுகிறது. சாதிய கலாசார சட்ட அமைப்பு சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும்அதேவேளை உடைமை உறவுகளிலும் தாக்கத்தைச் செலுத்துகிறது.
சாதி பிறப்பால் தீர்மானிக்கப்படுவதால் இதனை வெறும் வர்க்க பரிசோதனைக்குள்ளாக்கிக் குணப்படுத்த முடியாது. வர்க்கத்திற்கும் சாதிக்கும் தொடர்பு இருப்பினும் இரண்டும் வெவ்வேறு தளங்களில் இருந்து பார்க்கப்பட வேண்டியவை . ஒருவன் தொழிலாள வர்க்கத்தில் இருந்து வந்தால் அவனது பரம்பரைஅதே வர்க்கத்தில் தொடர்ந்திருக்க வேண்டிய நியதி இல்லை. மாறாக சாதியம் பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது.  ஒரு ஏழை உயர்சாதியும் பணக்காரஉயர்சாதியும் சாதிய அடுக்கில் ஒரே அந்தஸ்தை கொண்டிருப்பர். மாறாக ஒரு தலித், சாதிய அடுக்கில் உயர் நிலைக்கு வரமுடியாது. அதற்காக சாதியம்மாறாமல் அப்படியே இருந்து வருகிறது என்பதல்ல அர்த்தம். ஆனாலும் சாதியத்தின் வடிவங்கள் மாறினாலும் அதன் அடிப்படை குணாம்சம் ஆட்டம்காணாமலே இருப்பதற்கு சமய கலாசார – நடைமுறைகளும் சட்டங்களும் முண்டுகொடுக்கின்றன.
இவ்வகையில் தேசவழமைச் சட்டம் சாதியத்தை எவ்வாறு தொடர்ச்சியாக பேணுகிறது என்பதையே இக்கட்டுரை ஆய்கிறது. இக்கட்டுரையின் சட்ட ரீதியானதகவல்கள் H.W. தம்பையாவின் ‘The Laws and Customs of the Tamils of Jaffna’ எனும் நூலிலிருந்தே பெரும்பாலும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

 தேசவழமைச் சட்டம் வட பகுதியில் நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் வழக்கு.  இது சாதிய அசமத்துவத்தில் உதித்த  உயர்சாதி சமத்துவம்பேணும் சட்டமே.   தேசவழமை  தனி நபருக்கானதுமட்டுமல்ல பிரதேசம்  சார்ந்தது (personal and territorial). தனிநபர் என்று சொல்லும் போது அவர் வெறும் தனிநபர் அல்ல. சாதிய அடுக்கில் அவரது நிலைப்பாடும் சாதிய சமூகத்தில் அவரது தொழிற்பாடும் அவரது சமூக நிலையை தீர்மானிக்கிறது. பிரதேசம்எனும் போது பிரதேசத்தின் நில  உடைமையாளர்களின் உரித்து சம்பந்தமானது. தனிநபர் சம்பந்தமான தேசவழமை சட்டமானது யாழ்ப்பாண வாசி (  யாழ்மாவட்ட தமிழர்கள் மட்டுமே யாழ்ப்பாண வாசி என்ற பதத்திற்குள் அடங்குவர்- மலபார் வாசிகள் என்றே சட்டத்தில் சொல்லப்படுகிறது) என்றவரைமுறையால் தீர்மானிக்கப்படுகிறது. பிரதேசம் சம்பந்தமானது என்பது அங்கு அசையா சொத்து வைத்திருக்கும் அனைவருக்குமான சட்டம். பிரதேசவகையில் அங்கு சொத்து வைத்திருக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைவருக்குமானது.
தேசவழமை காலங்காலமாக நடைமுறையில் இருந்தபோதும் டச்சுகாரரின் காலனித்துவ காலகட்டத்திலேயே தேசவழமை வழக்கு எழுத்து வடிவத்தில்ஒழுங்குபடுத்தப்பட்டு சட்ட வடிவம் பெற்றது . கிளாஸ் இசாக்ஸ் 1707 இல் தேசவழமையை தொகுத்து  முதலில் டச்சில் எழுதினார். பின்னர்  யான் பிரஸ்அதனைத் தமிழில் மொழியாக்கம் செய்தபின் 12 தமிழ் முதலியார்களின் பார்வைக்கு விடப்பட்டு அவர்களின் அங்கீகாரம் கேட்கப்பட்டது. அந்தமொழிபெயர்ப்பை முதலியார்கள் ஏற்றுக்கொண்டு கை எழுத்து வைத்த போதும் அவர்கள் அடிமைகள் சம்பந்தமாக பின்வாறு தெரிவித்தனர்:
“மலபார் (தேசவழமை) சட்டமும் வழக்கங்களும் இப்பூமியின் மரபுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன. ஆனாலும் எங்களது  பாரம்பரியப்படி அடிமைகள்ஆண்டானை மதிக்காத  நிலை ஏற்படும் போதும் உத்தரவுகளுக்கு பணியாத போதும் அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க ஆண்டானுக்கு உரிமைஇருக்கிறது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக அடிமைகள் தண்டனைக்குள்ளாகும் போது வேண்டுமென்றே தங்களது காதுகளை கிழித்து மாய்மாலம்காட்டி நீதிபதியிடம் சென்று முறையிடுகிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளால் ஆண்டார்கள் நீதிபதிக்கு முன் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.இவ்வாறான நிகழ்வுகள்  ஆண்டார்களின் ஒழுக்கத்தை  கீழ்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் அடிமைகளையும் துணிச்சலாக்குகிறது. அடிமைகளின் தவறான நடவடிக்கைகளின் போதும் அவர்களுக்கு சங்கிலி மாட்டி தண்டனை கொடுக்கும் போதும் ஆண்டார்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கிறது.இந்த விடயங்களை கவர்னர் கருத்தில் கொண்டு  அபராதத் தொகையை நிறுத்துமாறு வேண்டுகிறோம்.”
ஆனாலும் டச்சு அரசு அபராதத் தொகை வாங்குவதை நிறுத்தவில்லை. தம்பையா கூறுவது போல் அவர்கள் அபராதத் தொகையை நிறுத்தாதது மனிதாபிமான ரீதியிலல்ல. தண்டனை வரிகள் மூலம் தங்களது வருமானத்தை பெருக்குவதற்கே. இங்கு அடிமைகள் என்று குறிக்கப்படுவது  தலித்மக்களே.
டச்சுக்காரர் இலங்கைக்கு வந்த போது யாழ் பிரதேசத்தில் தேசவழமை  நடைமுறையில் இருப்பதைக் கண்டனர். காலனித்துவ அதிகாரமும் சாதியமேலடுக்கு அதிகாரமும் எவ்வாறு ஒத்தோடின  என்பதற்கு வழக்கிலிருந்த தேசவழமை  எழுத்து வடிவமாக்கப்பட்டு  டச்சுகாரரால் சட்டமாக்கப்பட்டதுசாட்சியம். காலனித்துவம், நிறவாத சிந்தனை முறையை தனது கருத்தியலாக கொண்டு தனது ஆட்சியை நியாயப்படுத்தியது.
சாதிய சிந்தனைமுறையும்  நிறவாத சிந்தனை முறையும் மனிதரை பிறப்பின் அடிப்படையில் வகுப்பதில் எழுந்த அநாகரீக சிந்தனை முறைகள்.    ஐரோப்பியரின் அடிமை வியாபாரம் இதற்கொரு எடுத்துக்காட்டு. கறுப்பு மக்களை அடிமைகளாக்கி வியாபாரம் செய்த ஐரோப்பியர்கள் கறுப்பு மக்களை மனிதனின் கடைநிலையாக உருவகப்படுத்தி அடிமை முறையை நியாயப்படுத்தினர். இதனால் மேல் சாதியினர்  தலித் மக்களை அடிமைகளாகவைத்திருந்ததோ அல்லது அவர்களுக்கு உடைமை மறுப்பு செய்யப்பட்டதோ அநீதி என டச்சுக்காரர் பார்க்கவில்லை. அது நிற வகுத்தலின்  சிந்தனைத் தொகுப்பில் சாதியத்தை இணைத்து வெள்ளைகாரனுக்கு அடுத்ததாக வெள்ளாளனை நிறுத்தியது. பனான் (fanon) இன் வெள்ளை முகமூடி போர்த்த கருப்பு தோலர்களாக உயர்சாதியினர் தம்மை வெள்ளைக்காரனுக்கு அடுத்த படியில் வைத்து கொண்டனர். தெற்கில் அதேபோல் கொவிகம சாதியினர் ஆதிக்க சாதிகளாக தொடர்ந்து அதிகாரம் புரிந்தனர். இவ்வகையில் சாதிய சிந்தனை முறையும் நிறவாதமும் ஒன்றையொன்று வளர்த்தன.
பிரித்தானியர் காலத்தில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோதும் சாதியக் கட்டமைப்பு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது.  தம்பையாவின் கூற்றின்படி பிரித்தானியர் அடிமை முறையை உடனடியாக இலங்கையில் ஒழிக்கவில்லை. மாறாக பல்வேறு சட்டங்களை படிப்படியாக கொண்டுவந்தே மாற்ற முடிந்தது.  இறுதியாக அடிமை ஒழிப்பு சட்டம் ( 20 பிரிவு ) 1844 இல் அமுலுக்கு வந்தது. தலித் மக்கள் அடிமைகள் அல்ல என பெயர்தான் இருந்ததே தவிர நடைமுறையில் அவர்கள் தொடர்ந்தும் அடிமையாகவே இருந்தனர்.


அடிமை ஒழிப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபின் வந்த ஒரு வழக்கில் (Queen V Ambalavanar SCR 271)  உயர்சாதியினருக்காக தமிழர் தலைவரான இராமநாதன் ஆஜரானார். தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரின் செத்தவீட்டில் பறை அடித்துஊர்வலம் நிகழ்ந்த போது உயர்சாதியினர் தங்களது கலாசார நடைமுறைகளை தாழ்த்தப்பட்டவர்கள் பின்பற்றக்கூடாதென ஆர்ப்பாட்டம் செய்ததால் கைதுசெய்யப்பட்டனர். தேசவழமை சட்டத்தின் பிரகாரம் உயர்சாதியினர் அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை கொண்டவர்கள்  என்பது இராமநாதனின் வாதம்.அந்த குறிப்பிட்ட சரத்து அக்காலத்தில் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டதினைக்கூட இராமநாதன் சொல்லவில்லை. ஆனாலும் அவரது வாதம் எடுபடவில்லை.தேசவழமைச் சட்டத்தை மதித்த போதும் மகாராணியின் பிரஜைகள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க உரிமை இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.அடிமை முறை சட்டம் ஒழிந்தபின்னும் நடைமுறையிலும் சிந்தனையிலும் உயர்சாதியினர் சாதியத்தை விட தயாராக இருக்கவில்லை என்பதற்குமேற்சொன்ன வழக்கு ஓர் உதாரணம்.
தேசவழமைச் சட்டத்தின் பல கூறுகள் தற்சமயம் நடைமுறையில் இல்லாதபோதும் அதன் சாதிய  தார்ப்பரியத்தை புரிந்துகொள்ள  அன்றிருந்த சட்டத்தை முழுமையாக ஆய்தல் அவசியம். தேசவழமை சரத்து இல 5 (1869) – 4   இவ்வாறு கூறுகிறது:
“இம்மாகாணத்தின் உரித்துகள் உரிமைகள் சம்பந்தமான முடிவுகளானது இம்மாகாணத்தில் தொன்று தொட்டு கடைப்பிடித்துவரும் வழமைகள்,நடைமுறைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.இந்த உரித்தும் உரிமையும்  உயர்சாதியினருக்கும்- குறிப்பாக வேளாளருக்கும்- தாழ்ந்த சாதியினருக்கும் -  குறிப்பாக  பள்ளர், நளவர், கோவியர் போன்றாருக்கும் இடையே நிலவும் உறவுமுறையிலிருந்தே எழுகிறது”.
எனவே தேசவழமையின்  தோற்றமும் சட்டமாக்கலும் சாதியத்தை தொடர்ந்து பேணுவதற்கான கலாச்சார வடிவமே.  சாதிய அடுக்கில் உயரத்தில் இருப்பவனின் உரித்துகள், உரிமைகள் காப்பாற்றபடுவதற்கான ஒழுங்கு முறையேதேசவழமை.  இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது நில உரிமை மட்டுமல்ல. சாதிய அடுக்கில் இருக்கும் ஒவ்வொரு தனி நபரும் எவ்வாறு தமதுசாதிய கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்கான அமைப்புரீதியான வடிவத்தை தேசவழமை தருகிறது என்பதே. தேசவழமையானது சாதியகலாச்சார நடைமுறைகள் சமூக வழக்கங்கள் அனைத்தையும் சட்டரீதியாக வடிவமைத்திருக்கிறது. ஒருவகையில் தேசவழமை, வர்ணாசிரம தர்மத்தை தனக்கேற்றபடி வடிவமைத்து தனது சாதிய கோட்பாட்டினை நிறுவியது எனலாம். உதாரணமாக ஒவ்வொரு சாதியும் திருமணம் செய்யும் போது அது தேசவழமை மரபின் படி ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அவர்களது பிரத்தியேக சடங்குகள்அதற்கான அங்கீகாரத்தை வழங்கின.
வெள்ளாளரின் திருமணம் முள்முருக்கு நட்டு, அர்ச்சகர் ஓமம் வளர்த்து, கூறை கொடுத்து, அம்மி மிதித்து, சலவை தொழிலாளி – சிகை அலங்காரிமுன்னிலையில்   தாலிகட்டும் பொழுது அங்கீகாரம் பெறுகிறது. சாண்டாரின் திருமணம் பார்ப்பனன் இல்லாமல் கூறை கொடுத்ததன் பின் உணவுபரிமாறுவதுடன் அங்கீகாரம் பெறுகிறது. பள்ளர் – நளவரின் திருமணம் துணியொன்றை மாப்பிள்ளை கொடுக்க மணப்பெண் அவர்களுக்கு சோறுவழங்குவதுடன் எளிதாக அங்கீகாரம் பெறுகிறது. தலித்துகள் திருமணம் செய்வது அவர்களை அடிமையாக வைத்திருந்த மேல்சாதிமானின் ஒப்புதல் இன்றிசெய்யப்பட்டிருந்தால் அதற்கு அங்கீகாரம் இல்லை. இவ்வாறாக யாழ் குடிகளின் வாழ்க்கை முறையின் சாதிய  கலாச்சார பண்பாட்டு வடிவங்களுக்கான சட்ட வடிவமே தேசவழமை.
இப்பண்பாடுத் தளத்திலிருந்து எழுந்த தேசவழமைச் சட்டமானது உடைமைகள், உரித்துகள், திருமணம் சம்பந்தமான மிக நுணுக்கமான விதிகளைகொண்டு தொடர்ந்தும் உயர்சாதியினர் தமது உடைமைகளை ‘சமபங்கு’ பிரிக்கவும் விற்கவும் வாங்கவும் வழிசெய்யும் அதேவேளை தலித் மக்கள்தொடர்ந்தும்  நில உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையை  உருவாக்கிறது. ஒருவகையில் சனாதன தர்மத்தின் யாழ்ப்பாண வடிவமே தேசவழமை.
இனி நில உடைமை சம்பந்தமான தேசவழமையின் அடிப்படைகளை பார்ப்போம்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை முக்கிய நில உடைமையாளர்களாக வேளாளரே விளங்கினர் – விளங்குகிறார்கள்  என்பதற்கு பெரும் புள்ளிவிவரங்கள் தேவையில்லை. எனவே அடிமை குடிமைகளாக இருந்த தலித் மக்கள் ‘பாரம்பரிய நிலத்தின்’ சொந்தகாரராக இருக்கவில்லை.
இந்த சொத்து பிரிப்பானது பரம்பரை பரம்பரையாக தங்களது சாதி – சந்ததி  தவிர வேறு யாருக்கும் போகக்கூடாது என்பதில் தேசவழமை கவனமாகஇருக்கிறது. தேசவழமைச் சட்டம் பெண்களுக்கு நில உரிமை  வழங்கும் சட்டம், அது தாய் வழி சமூகத்தின் பெருமையை பறைசாற்றும் சட்டம் எனும்பல கதையாடல்கள் தேசவழமை சட்டத்தில் ஒளிந்திருக்கும்  சாதிய ஆணாதிக்க கூறுகளை மறைக்கின்றன.
ஒருவகையில் சீதன சொத்து உயர்சாதிபெண்களுக்கான சில பாதுகாப்புகளை வழங்கினும் நடைமுறையில் கணவன் இருக்கும்வரை அந்த சீதன சொத்தை விற்பதற்கான உரிமையை அவளுக்குஅது  கொடுப்பதில்லை. இதனை பற்றிய தீவிர ஆய்வு இந்தகட்டுரையின் நோக்கமன்று. இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது நிலமற்றவர்கள் ,தலித்துகள் பற்றியது. நிலமற்ற தலித் பெண்ணுக்கு இந்த தேசவழமை சட்டத்தால் எவ்வித பலனுமில்லை. ஏனெனினில் அவள் நிலமற்றவள்.  தலித் பெண்ஒரு தலித்தாக இருக்கும் ஒடுக்குமுறையையும் பெண்ணாக இருக்கும் ஒடுக்குமுறையையும் சமகாலத்தில்  எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவேஉயர்சாதி பெண்களுக்கான தேசவழமைசட்டத்தில் இருக்கும் குறைந்த பட்ச பாதுகாப்புகூட தலித் பெண்ணுக்கும்  இல்லை. ஆணுக்கும் இல்லை.


முதுசொம், சீதனம், தேடிய தேட்டம், உரிமை என்று தேசவழமையிலிருக்கும்  நான்குவகை கூறுகளும் அசையா அசையும் சொத்துக்கள் யாருக்கு சேரும் என்பதை சட்டத்தின் மூலம் பிரகடனம் செய்கின்றன. இது யாழ்ப்பாண மாவட்டத்தில் வசித்த – வசிக்கும்  தமிழருக்கு    ( tamil inhabitant of Jaffna )மட்டும் உரித்தான சட்டம். அசையா சொத்தினை வேளாளர்கள் பெரும்பாலும் கொண்டிருப்பதால் ( ஒரு குறிப்பிட்டளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும்) தேசவழமைச்  சட்டம் வேளாளரின் மற்றும் உயர் சாதியினரின் பாதுகாவலனாகவே இருக்கிறது.
இதனை விட முன்னுரிமை சட்டம் (law of pre – emption) என்பது காணிகளை விற்கும் போது யாருக்கு முன்னுரிமை என்பதைக் கூறுகிறது. இது அங்குகாணி வைத்திருக்கும் அனைவருக்கும் பொதுவான சட்டம். ஆனாலும்   யாழ் மாவட்டத்தில் காணிகள் பெரும்பாலும் உயர்சாதியினருக்குசொந்தமானதென்பதும் , பங்கு காணிகள் என்பதும்  கவனத்தில் எடுக்கப்படுவது  முக்கியம். வாங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படுவது: 1. வருங்கால உரித்தாளர்(heir); 2. பங்கு காணி உரிமையாளர்; 3.  அயல் காணிக்காரராக இருந்து  விற்கப்படும் அக்காணியை ஈட்டுக்கு  எடுத்தவர் ஆகியோருக்கே.
காணியைவிற்பவர் ( சீதனம், இனாம் இதற்குள் அடங்காது)  இம்மூவரில் ஒருவர் வாங்குவதற்கான விருப்பம் தெரிவிப்பின் அவருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும். இம்மூவரும் விருப்பம் தெரிவிக்கும் போது அதிகமாக விலை கொடுப்பவர் முன்னுரிமை பெறுகிறார். இவர்களை தவிர்ந்த வேறு யாரும் வாங்க விரும்பின் இம்முன்னுரிமை கேட்டவரை விட அதிக விலை கொடுத்தால் மட்டுமே வாங்க முடியும். பங்குகாரராகவோ வருங்கால உரித்தாளராகவோ அல்லது அயல் காணிக்காரராகவோ ஒரு தலித் இருப்பது அரிது. எனவே ஒரு தலித் காணி வாங்குவதெனினும் சந்தை விலையை விட அதிக விலைகொடுத்தே வாங்க முடிகிறது. எனவே நடைமுறையில் தலித் மக்கள் பணம் இருந்தாலும் கூட அதிக விலையில் காணி வாங்க வேண்டிய நிலை. அதுமட்டுமல்ல அதிக விலை கொடுக்க தயாராயிருப்பினும் அக்காணிகள் அவர்களுக்கு மறுக்கப்படும் சூழலும் உண்டு.  அயலவர்கள்  தலித்துக்கு விற்றதால் தங்கள் காணி விலை குறையும் என்பதற்காக விற்க வருபவரிடம் பேசி அவரை மனம் மாற செய்யும் நிலை அல்லது அவர்களே அதிக விலை கொடுக்க தயாராயிருக்கும் நிலை ஏற்படுகிறது. தேசவழமைச் சட்டம் இவ்வாறான  சமூகஅநீதியை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது தலித் மக்களை நிலமற்றவர்களாக தொடர்ந்து வைத்திருக்கும் அனைத்து கூறுகளையும் கொண்ட ஒரு நஞ்சு.
யுத்தம் முடிந்தபின் ஐரோப்பாவிலிருந்தும் வட அமெரிக்காவிலிருந்தும் சாரி சாரியாக யாழ் விஜயம் செய்யும் தமிழர்கள் பெரும்பாலோர் மேல்சாதிக்காரரே. அவர்கள் அங்கு போவதன் உள் நோக்கம் தங்களது காணிகளை காப்பாற்றுவது அல்லது  தமது உறவினர்களுக்கு, பங்காளருக்கு  விற்பது. இதற்கு தேச வழமைச் சட்டம் அனுகூலமாக விளங்குகின்றது.
தேசவழமைச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் இன்று வழக்கொழிந்து போயிருப்பினும்  சொத்துரிமை மற்றும் முன்னுரிமை சம்பந்தமான சட்டங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. கண்டியச் சட்டமும் சில முன்னுரிமைகளை கண்டி வாசிகளுக்கு முக்கியமாக உயர்சாதிகளுக்கு  வழங்குகிறது என்பதும் கவனிக்கபட வேண்டியவிடயமே.
ஒருவகையில் நிலமற்றவர்கள் பெருகி வரும் இன்றைய இலங்கையின் திறந்த பொருளாதார யுகத்தில்  தேசவழமைச் சட்டமும் தமிழ்
பாரம்பரியம் என்ற பதாகையின் கீழ் தனது ஆதிக்க  பங்கைச் செலுத்துகிறது.

நன்றி: எதுவரை

No comments: