-இளைய அப்துல்லாஹ்-
விமல் குழந்தைவேலின் ‘வெள்ளாவி’ நாவலை வாசித்து முடித்தபோது அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டேன். ‘நீங்கள் என்ன சலவைத் தொழிலாளியா?’ என்று. அவர் சிரித்தபடி ‘இல்லை’யென்றார்.
அப்படி மட்டக்களப்பு, இலங்கையின் கிழக்கு
மாகாண சலவைத் தொழிலாளர் சமூகத்தை
வெள்ளாவி நாவலில் துல்லியமாகக் கொண்டு
வந்தவர் அவர்.
கசகறணம் நாவலில். தேவதூதர்கள் போல் வந்தார்கள்,ராஜகுமாரர்கள் போல் உபசரிக்கப்பட்டார்கள், மாய மந்திரம் செய்தது
போல் மறைந்தே போனார்கள். விடுதலைப்புலிகளின் தோற்றம், வாழ்வு, மறைவை மூன்றே மூன்று வாக்கியங்களில் முழு மன உணர்வுகளையும் இப்படி இதற்கு முதலும் யாரும் சொல்லவில்லை. இனி மேலும் யாரும் சொல்ல முடியாதபடிக்கு விமல் குழந்தைவேல் சொன்னது எனது நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தது போல் இருந்தது.
சடார் என்ற உணர்வில் வாய் விட்டே ‘அபாரம் அபாரம்’ என்று சொல்லிவிட்டேன். மனிசி பக்கத்தில் இருந்ததையும் மறந்து. பிறகு மனிசிக்கு எல்லாம் விளங்கப்படுத்தினேன்.
விமல் குழந்தைவேலின் ஞாபக சக்தி என்னை அப்படியே புரட்டிப்போடுகிறது.
ஒரு உண்மையான சித்திரத்தை மிக வாஞ்சையோடு வாசித்தேன்.
அக்கரைப்பற்றும் அதனை சூழவுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் வட்டார சொல் வழக்குகளை நாவலில் பார்த்து இன்னும் வியந்து கொண்டிருக்கிறது என்மனது.
உண்மையில் இவ்வளவு ஞாபக சக்தி எனக்கில்லை. அந்தக் காலத்தில் வானொலிப்பெட்டியை எனது கமக்கட்டுக்குள் வைத்துக்கொண்டு திரிந்த எனக்கே எத்தனையோ சிலோன் வானொலி சம்பந்தப்பட்ட விசயங்கள் மறந்து போய்விட்டன. சிலோன் வானொலி பற்றி அந்தக் காலத்து மக்கள் என்னமாதிரி பேசுவார்களோ அதையெல்லாம் பதிவு பண்ணியிருக்கிறார் விமல். கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல்ஹமீது போன்றவர்கள் மீது மக்களுக்கிருந்த அபிமானம் கொஞ்சநஞ்சமல்ல.
விமல் முப்பத்தைந்து வருடங்கள் கழிந்த பிறகும் ஒவ்வொரு விடயத்தையும் மனதில் நினைவாக வைத்துக்கொண்டு திரிகிறார்.
எண்பதுகளில் நடந்த சம்பவம் இது.
மட்டக்களப்பு கிராம மாந்தரின் வாழ்வு இங்கே முழுமையாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
கசகறணம் ஒரு உண்மைச் சம்பவம். கற்பனை என்று எதனை நான் சொல்ல?
புட்டும் தேங்காய்ப்பூவும் போல வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் நிஜ வாழ்க்கையிது.
அஸ்ரப் எம்.பி. ஒரு நல்ல உவமையைத்தான்
சொல்லிவிட்டு செத்திருக்கிறார்.அவர் ஒரு கவிஞர் என்பதனால் இந்த உவமையைச் சொல்ல முடிந்திருக்கிறது.
தமிழ் முஸ்லிம் மக்களிடையே பகையை ஏற்படுத்த ஆயுதம் தாங்கிய இயக்கங்கள், அரசியல்வாதிகள், ஊர்ச்சண்டியர்கள் என்று பல தரப்பினர் முயன்று முயன்று தோற்றுப்போயும் இருக்கிறார்கள்.
அவர்களுக்குள் பகை வளரவில்லை வெள்ளந்தியான கிராம மக்கள் அவர்கள்.
அந்த ஒற்றுமையான காலம்; துப்பாக்கி முனையில் மக்களை தமிழ் இயக்கங்கள் துரத்தி நாசமாக்கிய பிறகு இனிமேல் வருமா? என்ற கவலையைச் சுமந்தபடி திரிந்த விமல் குழந்தைவேல் தன் மன அவசத்தை இருநூற்று நாற்பத்தொரு பக்கங்களாக இறக்கி வைத்திருக்கிறார்.
கசகறணம் என்கின்ற உன்னதமான நாவல் வெள்ளும்மா (முஸ்லிம்), மைலிப்பெத்தா (தமிழ்), குறட்டைக்காக்கா (முஸ்லிம்), குலத்தழகி (தமிழ்); இவங்கதான் அந்த நாலு பேரும் காந்தம் மண் கலவைத் தாதுத்தவிடுகளை கவர்ந்து இழுத்து ஒட்டிக்
கொள்கிறதை போலவும் என்று ஆரம்பிக்கிறது.
மூச்சுக்காற்று, வாழ்வு, வளம், தூக்கம், விழிப்பு எல்லாமே அவர்கள் தங்களது சந்தையைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள். சந்தைதான் அவர்களின் கோவில், தெய்வம் வாழ்வு எல்லாம்.
அதுதான் அவர்கள் ஒற்றுமையாய்க் கிடக்கும்
பெருந்திடல் பணம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. வாழ்வை தமக்காகவும் பிறருக்காகவும் வாழும் உன்னத பிறவிகள் இவர்கள். தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் அவர்கள் மனதால்கூட
நினைத்ததில்லை. எல்லோரும் மாமன், மச்சான், அக்கா, தங்கை,மருமகன் என்றுதான் நினைத்திருந்தார்கள்.
எனது நண்பனின் மகனை பிறந்த முப்பத்தோராம் நாளிலிருந்து நான் தூக்கி வளர்க்கிறேன். அவனில் எனக்கும் என்னில் அவனுக்கும் அலாதி பிரியம். அவன் என்னை வாப்பா என்றுதான் இந்த ஐந்து வயதிலும்
கூப்பிடுவான். அவனுக்கு நான் வாப்பாதான். அவனுக்கு முஸ்லிம், கிறிஸ்தவன் என்பதெல்லாம் தெரியாது. அப்படித் தான் கசகறணம் மாந்தர்களும். மனம்
முழுக்க வெள்ளை.
யாழ்ப்பாண தமிழருக்கும் மட்டக்களப்பு தமிழருக்கும் எப்பவும் ஒத்துவராத ஒரு மன நிலைதான் இருந்தது; இருக்கிறது. என்னதான் ஒற்றுமை என்று சொன்னாலும் அதை வைத்தே புலிகள் இயக்கத்தை உடைத்தது
சிங்கள அரசு.
யாழ்ப்பாணத்தார் படித்த திமிருடையவர்கள்.
சாதி தடிப்பு பிடித்தவர்கள். மட்டக்களப்பாருடன் திருமண சம்பந்தம் வைக்கமாட்டார்கள். யாராவது காதலித்து கல்யாணம் முடித்தால் சரி.
இந்த நாவலில் வருகின்ற காலகட்டத்தில் வாழ்ந்தவர்களில் இப்பொழுதும் உயிரோடு
இருப்பவர்கள் அந்தக் காலத்தின் அற்புதமான தருணங்களை இன்னும் அசை போட்டபடியே
இருப்பார்கள். பின்னர் அது அழிந்தே போய்விட்டது.
அந்தக் காலத்திலும்அக்கரைப்பற்று சந்தைக்குள் சின்னச் சின்ன சண்டை வரும்தான். ஆனால் மூத்தவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதெல்லாம் பொசுக்கென்று அடங்கிவிடும். பெரும் முஸ்லிம் _தமிழ் கலவரமாக மாற இருந்த சின்ன சம்பவம் ஒன்று கசகறணத்தில் வருகிறது.
‘‘சந்தையில் நின்று வெளிக்கிட்ட தமிழ் ஆள் ஒருவரின் பஸ் ரயருக்குள் முஸ்லிம் ஆளின் ஆடொன்று விழுந்து நசுங்கிவிட்டது. சந்தையே இப்பொழு து கொஞ்சம் பதட்டமாகத்தானிருந்தது.
என்ன வெள்ளும்மா பகடியா? சோனீ ர ஆடென்டா என்ன சும்மாவகா? பாத்துக்கிட்டு
போகச்சொல்லிறியா?
முழங்காலிலை குத்தி தலைக்கேத்தின பாய்க்கட்டை ஏத்தினவே கத்திலை இறக்கி கீழே போட்டா வெள்ளும்மா.
நேக்குத் தெரியும் அங்க சுத்தி இங்கை சுத்தி எங்கை வந்து நிப்பயளெண்டு நெக்கு தெரியும் வாப்பா. சோனீட ஆடுதான் தெரிஞ்சா வஸ்சை ஏத்தினான்.தெரியாம நடந்திச்சி. ஆடு செத்துப்போச்சி அதுக்கிப்ப என்ன செய்வம் வெட்டுவமா? குத்துவமா? அடிபுடிப்படுவமா? ஒரு ஆட்டுக்கு நாலு மனிச உசிர எடுப்பமா? சந்தைக்கு வந்தமா அரிசி பருப்பை வாங்கினமா எண்டில்லாம குத்தியுட்டு புதினம் பாக்கயளோ? வெக்கமாயில்லையா? இஞ்சை டேய் வேலாயுதம் வஸ்சை எடு! நீ போ நான் நாளையுக்கு காதரிட்டை கதைச்சிக்கிறன்’’
உண்மை. வெள்ளும்மா மாதிரி எத்தனையோ
சீவன்கள் பெரிய பெரிய சண்டைகளை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
ஒரு முஸ்லிமின் ஆட்டை தமிழ் ஆள் பஸ்ஸால்அடித்தது சாதாரணமான விடயமல்ல,அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும்.நெருப்பெடுக்க விடாமல் காப்பாற்றியது ஒரு முஸ்லிம்
மனிசி.
விமல் குழ ந்தை வேல் கசகறணத்தில் பாவித்திருக்கிற அக்கரைப்பற்று மக் கள் பேசுகிற தமிழ் முஸ்லிம் வழக்க மொழி அந்த ஊரின் வாசத்தை வாழ்வைஅப்படியே சுமந்து நிற்கிறது.
இந்தப் புத்தகத்தின் கடைசி பக்கங்கள் நான்கு,
நாவலுக்குள்வரும்சொற்களின் விளக்கங்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அது தேவையில்லை என்று பலர் சொன்னாலும் ஒரு
புரிதலுக்காக அந்த விளக்கம் தேவைப்படுகிறதுதான்.
இலங்கையில் இருக்கும் தேசிய இன முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கிறோம் என்று
அரசியல்வாதிகள் பொய் வேசம் போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
தனக்கு இரண்டு தேர்தல்களில் வாக்களிக்கவில்லை என்பதற்காக மகிந்த ராஜபக்ச வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எதுவும் தரமாட்டேன் என்று அடம்
பிடிக்கிறார் . இந்த அடம் இந்த மழைக்காலத்திலும் தொடருகிறது. ஆனால் அவர் போகும் இடங்களில் எல்லாம் சிங்களத்தில் டைப் பண்ணிய தமிழ் வாசகங்களை டெலி புறொம்டரில் போட்டு பிழை பிழையாக உச்சரித்து டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களின் கைதட்டலைப் பெறுகிறார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் மேடையில் கூறுகின்ற குர்ஆன் வசனத்துக்கும் ஹதீஸ_க்கும் எந்த அர்த்தமும் தெரியாமல் அமைச்சு கதிரைக்காக மட்டும்
மகிந்த ராஜபக்சவுக்குப் பின்னால் நிற்கிறார்கள். அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த யுத்தத்திற்குக் கொடுத்தவிலை அளப்பரியது. முஸ்லிம் மக்களை புலிகள் அவர்களது வீடுகளில் இருந்து விரட்டி இருபத்தொரு வருடங்கள். இன்னும் அவர்கள்
தமது இடங்களுக்குத் திரும்ப முடியாமல் எல்லாம் பிரச்சனையாக இருக்கிறது.
தமிழ் முஸ்லிம் மக்களின் அன்பு கலந்த வாழ்வியலை 1980களில் வந்த ஆயுதக்குழுக்கள் சிதைத்து
சின்னாபின்னமாக்கி அழித்த கதையை மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறது கசகறணம்.
இந்த நாவல் மட்டும்தான் இவ்வளவு தெளிவாக தமிழ் முஸ்லிம் மக்களின் கிழக்கு மாகாண வாழ்வை,இனச்சிக்கலை துணிந்து முன்வைத்திருக்கிறது. இதற்கு முன் யாரும் இப்படி எழுதத் துணியவில்லை.
புலிகள் இருக்கும்போதே இந்த நாவல் எழுதப்பட்டு விட்டது. ஐந்து வருடங்கள் வேறு பல தாமதப்படுத்தல்களுக்குப் பிறகு நாவல் வந்திருக்கிறது என்று முன்னுரையில் விமல் சொல்லிருக்கிறார். புலிகள் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால்... வெள்ளாவி
நாவலை தடைசெய்தது போல கசகறணமும் தடை செய்யப்பட்டிருக்கும். (பார்க்க - தடைசெய்யப்பட்ட வெள்ளாவி _ கட்டுரை ‘அண்ணைநான் தற்கொலை செய்யப் போகிறேன்’ என்ற எனது தொகுப்பில் வந்திருக்கிறது)
அக்கரைப்பற்று ச ந்தைதான் இந்த நாவலின் முழு மையமும். அங்கு நடந்த அத்தனை சம்பவங்களையும் அப்படியே கொணர்ந்துள்ளார் விமல்.
இதில் நான் அரசியலை சொல்லவில்லை எனது தொலைக்காட்சி பேட்டியில். அடிக்கடி விமல் சொன்னாலும் அவர் தமிழராக இருந்தும் நிஜமான அரசியலை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
அக்கரைப்பற்று சந்தை வெறுமனே விற்கும்
வாங்கும் ஒரு இடமாக இருக்கவேயில்லை.
தமிழர்கள், முஸ்லிம்கள். ஆடுகள், மாடுகள், கோழிகள், நாய்கள், காக்கைகள், வாகனங்கள், வயல்வெளி, தியேட்டர் என்று ஒரு பெருவாழ்வு வாழ்ந்த இடம். அந்த மக்களின் அன்புறவும் ஆருயிரும் அழிந்து கருகிப் போய்விட்டது.
வெள்ளும்மா, மைலிப்பெத்தா, குறட்டைக்காக்கா, குலத்தழகி, ஐஸ்பழக்காரன், தும்புமுட்டாசுக்காரன், மீரிசா, கபூர்போடியார், மலர், பொன்னம்மை, கேசவன், முஹமட், திரவியம், குறவன், குறத்தி, கனகவேல் என்று தொடருகிற கசகறணம் மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்லிகள்.
இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் பற்றி விமல் எப்பொழுது பேசினாலும் மிகவும் கனிவோடு பேசுவார்.
அது சரி, கசகறணம் என்றால் என்ன? தொடர்ந்து தொந்தரவு செய்பவனைச் சொல்லும் ஊர் வழக்கு. இப்படியான ஊர் வழக்கு சொற்களால் நிறைந்திருக்கிறது நாவல்.
எனக்கு நாவலைப் படிக்க ஆரம்பித்தது முதல் இறுதிவரை ஏதாவது எழுத்துப் பிழைகள் வந்துவிடுமோ என்ற பதட்டம் இருந்தது. ஆனால் இல்லை. ஏனெனில், அக்கரைப்பற்று வாழ் மக்களின் பேச்சு வழக்கை எழுத்துப் பிழை இல்லாமல் கொண்டு வருவதென்பது பெரு வேலை.
செத்துப்போன மனைவியின் கல்யாண சேலையை தடவிப்பார்க்கும்பொழுது கிடைக்கும் ஸ்பரிசம் போல தமிழ் முஸ்லிம் அன்புறவுகளின் அழிந்துபோன வாழ்க்கையை எந்த சமரசமுமில்லாமல் சொல்கிறது கசகறணம்.
எல்லா தமிழர்களாலும் முஸ்லிம்களாலும் கட்டாயம் படிக்கப்படவேண்டிய இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஈழத்து நாவல் இது.
விலை: ரூ. 175
காலச்சுவடு
669, கே.பி.சாலை
நாகர்கோவில் 629 001
Ph: 04652-278525, 9677778863
நன்றி: தீராநதி
No comments:
Post a Comment