தமிழ்ச் சூழலும்(போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்
-க. பூரணச்சந்திரன்-
கருத்துகள் நாளுக்கு நாள் மாறுகின்றன, வளர்கின்றன. அதனால் பல வித இயக்கங்கள் தோன்றுகின்றன. பிறகு அவற்றிற்கு எதிர்ப்பு இயக்கங்களும் எழுகின்றன. இவ்வாறு மாறிச் செல்கிறது வரலாறு. தமிழில் பல இயக்கங்கள், அவை உருவாவதற்கான புறச்சூழல்கள், காரணிகள் எவையுமே இன்றி வெறும் ஃபேஷனாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதனால் அவை வேர் பிடிக்காது மறைந்து போவதையோ, மிதந்து கொண்டிருப்பதையோ அடிக்கடி காண நேர்கிறது. இப்போது தமிழில் ஸ்ட்ரக்சுரலிசம், போஸ்ட் – ஸ்ட்ரக்சுரலிசம் பற்றிப் பேசுவது ”அறிவுஜ“வி”களுடைய ஃபேஷன். அவர்களே கொஞ்சம் படைப்புத் திறனும் வாய்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொண்டுவிட்டால் மாடர்னிசம், பிறகு போஸ்ட்- மாடர்னிசம், நான்-லீனியர் எழுத்து என்று பேசுவது ஃபேஷன்.
ஸ்ட்ரக்சுரலிசம் (அல்லது நம்மவர் மொழிப் பெயர்ப்பில் அமைப்பியல்) அதன் பெயரே எடுத்துக்காட்டுவதுபோல, இதுவரை மூலங்கள் அல்லது மூலகங்கள் இவற்றிற்குக் கொடுக்கப் பட்டுவந்த அழுத்தத்தை அமைப்புகளுக்கு மாற்றி நோக்குவது. அதன் அடிப்படைகள் மூன்று:1. சசூரின் மொழிபற்றிய கோட்பாடுகள்.
2. பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படும் அமைப்பாக்க உருவகங்கள்/ஆகுபெயர்கள் இவற்றை அழுத்திக் காட்டும் லெவிஸ்ட்ராஸ் போன்றோரின் மானிடவியல் கொள்கைகள்:
3. பிராஹா வட்டத்திலும், ரஷ்யாவிலும் செயல்பட்டு வந்த உருவவியல் வாதம்.
மேற்கு நாடுகளில் ஸ்ட்ரக்சுரலிச போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிச அலைகள் அடித்து ஓயும் நிலையில் தமிழில் இவைபற்றியும், இவற்றைப் பயன்படுத்தியும் சில கட்டுரைகள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை தொடப்படாத, சில விலக்கப்பட்ட துறைகளில் ஸ்ட்ரக்சுரலிச ஆய்வு மேற்கில் பல நல்ல நூல்களைத் தந்திருக்கிறது. (சான்றுக்கு: ரோலான் பார்த்தின் ”மிதாலஜி”, கிறிஸ்டஃபர் மெட்ஸ’ன் ”திரைப்படம் – கற்பனைக் குறிப்பான்” இவைபோல). அனுபவவாதம் அறவே தூக்கி எறியப்பட்டது. வாழ்க்கையைப் பிரதிபலித்தல் உண்மையாகக் காட்டுதல், பிரக்ஞைக் கோட்பாடு ஆகியவை தூக்கி மூலையில் வீசப்பட்டன. தன் நூலின் மேல் படைப்பாளிக்கிருந்த முழு பாத்தியதை ஒழித்துக்கட்டப்பட்டது.
பின்னமைப்பியல் இன்னும் வேடிக்கையான, பல தலைகீழான ஃபார்முலாக்களையும் தந்திருக்கிறது – ”இலக்கியம் தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது”, ”நூலினால் மக்கள் வாசிக்கப்படுகிறார்கள்”, ”சிந்தனை சிந்திக்கிறது”, ”பேச்சு பேசுகிறது”, ”எழுத்து எழுதுகிறது” …..இப்படியாக.
ஏற்கனவே உருவவியல் வாதம் ஒரு விபரீதநிலையில் (புதுத்திறனாய்வு என்ற பெயரில்) பின்பற்றப்பட்டு வந்த மேற்கில், அமைப்பியல் ஒரு புதிய விடுதலைபோலத் தோற்றமளித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆய்வுகளே தோன்றாத தமிழில்?
ஒருவகையில், ”எல்லாக் கருத்துகளின் அடிப்படைகளும் எங்கும் எப்போதும் முன்பே இருந்திருக்கின்றன” என்பதில் ஓரளவு உண்மையுண்டு. ”ஸ்ட்ரக்சர்” அல்லது ”அமைப்பு” என்பதன் அடிப்படையை, மேலைத் தத்துவ மரபில் பிளேட்டோ குறிப்பிட்ட ”வடிவம்” என்பதற்குக் கொண்டுபோக முடியும் – சில வித்தியாசங்கள் இருப்பினும். தமிழில் அமைப்பியலின் வேர்கள் இல்லாமல் இல்லை. தொல்காப்பியரே ஒரு அமைப்பியல்வாதிதான். பூக்களின் பெயர்களை நிலங்களுக்குச் சூட்டி, நிலங்களை ஐந்துவித அமைப்புக்குள் கொண்டுவந்து, அதே அமைப்புகளை மானிட உறவுகளுக்கும் பொருத்திப் பார்க்கும் போது, அவர் முழு அமைப்பியல்வாதியாகத் தான் செயல்படுகிறார். அகத்திணைகளைப் புறத்திணைகள் ஏழினோடும் பொருத்திக் காட்டுவதும் ஓர் அமைப்பியல் தன்மையே. ஆனால் அமைப்பியலின் குறையையும் தொல்காப்பியரிடத்திலேயே காணமுடியும். மனிதன் தன் அமைப்புகளை இயற்கையின் மீது சுமத்தும்போது எச்சமின்றிச் சுமத்த முடிவதில்லை. (அதாவது புறனடைகள் இன்றி அமைப்பாக்கம் செய்ய – பொது அமைப்புகளை உருவாக்க – முடிவதில்லை) ஐந்திணை அமைப்புப் பற்றிக் கூறிய கையோடு, தொல்காப்பியர் திணைமயக்கம் என்ற குழப்பமான கருத்தாக்கத்தை வைத்து, தான் கூறிய அமைப்புகளைத் தானே அழிப்பதையும் காணமுடியும். இதே போல அமைப்பியல் செயல்பட்டதனால்தான், பின்னமைப்பியல் உருவாக வேண்டிய தேவை எழுந்தது.
ஸ்ட்ரக்சுரலிச – போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிச ஆய்வுகள் இலக்கியத் துறையில் பெரும்பாலும் இயங்குவது இப்படித்தான். (பழைய முறைகளாக இருப்பின், ”தொல்காப்பியர் இங்கே என்ன சொல்கிறார்?” என்று கேள்வி எழும்). மாறாக, அமைப்பியல்வாதங்களில், என்ன முன்யூகங்கள் காரணமாகத் தொல்காப்பியம் என்ற ”பிரதி” (சிலர் மொழியாக்கத்தில் ”பனுவல்”) உருவாகியிருக்கிறது என்ற கேள்வி எழும். இப்படி ”யூகங்கள்” செய்வது சுகமானதல்லவா? அடிவெட்டு விளக்கங்கள் அளிப்பதில் அமைப்புவாதிகள் கைதேர்ந்தவர்கள். ஓர் எதிரியைச் சாடுவதென்றால், பழையமாதிரி (சான்றாக, வெங்கட் சாமிநாதனுக்கும் பிரமீளுக்கும் ஏற்பட்ட தகராறுகள் போல) இவர்கள் எதிரியின் புரிந்து கொள்ளலை, அறிவுத்திறனைச் சாட மாட்டார்கள். மாறாக, அவனது சமூக உளவியல் வளர்ப்புக் காரணிகள் சொல்லப்படும். இப்படி, உளவியல் – பொருளாதார – சமூகவியல் விளக்கங்களைத் தந்துவிட்டால் மறுக்க வழி ஏது? சுருக்கமாகச் சொன்னால், ” நீ வளர்ந்த அமைப்பு இப்படி, நீ இப்படித்தான் பேசுவாய்” என்று வாதத்திற்கு எப்படி, யாரால் பதில் சொல்ல முடியும்?
இதேபோலத்தான் பின்னமைப்பு வாதத்தின் தோழியான போஸ்ட்-மாடர்னிசம் இயங்குகிறது (தங்கள் ஆயத்திலிருந்து பிரிந்து தமிழ்ச்சூழலில் சோரம்போன தோழியர்களாகிவிட்டார்கள் இருவரும்) ”சரோஜாதேவி” எழுதினால் அது போர்னோகிராஃபி நவீன இலக்கியவாதிகளான சிலர் எழுதினால் அது போர்னோகிராஃபி அல்ல – ”சமூக ஆதிக்க அமைப்புகளை உருவாக்கும் மொழித்தளத்தினை உடைப்பது” சரோஜாதேவி என்ற புனைப்பெயரில் எழுதின ஆள் மட்டும் சமூக அமைப்புகளைக் கட்டிக்காக்கவா போர்னோ எழுதினான்? ” வெறும் பொருளாதார நிர்ப்பந்தத்துக்காக அவன் எழுதினான்” என்று அமைப்புவாதங்கள் சொல்ல முடியாது. அவனும் இந்த ஆதிக்கக் கட்டுமானங்களை உடைக்க – அவற்றின் மீதான வெறுப்பினால்தான் அப்படி எழுதினான் என்று வாதிக்க முடியும். ”மனந்திறந்த உரை” என்பதை வெறுமனே ”சொல்லக்கூசும்” ”சொற்களை வெளிப்படுத்தல்” என்று கொச்சையாகப் புரிந்துவைத்திருக்கும் ”நிதம்பச்சித்தர்கள்” பாலிஷாக ”நாங்கள் சமூகக் கட்டுமானத்தை உடைக்கச் செய்கிறோமாக்கும்” என்று நியாயப்படுத்தியவாறே எழுதி விட்டால் ”போஸ்ட் மாடர்ன்” எழுத்து தமிழில் பிறந்து விட்டதாகி விடுமா?
இக்கொள்கைகள் யாவுமே கடைசிபட்சமாகப் பார்க்கும்போது உலகை விளக்குவது – மீடியேஷன் – பற்றிய பிரச்சினைகள்தானே? புதுப் புது விளக்கங்களும் எழுத்துக்களும் தேவைதான். ஆனால் புரிந்துகொண்டு, செய்வன திருந்தச்செய்வது நல்லதல்லவா? அரைகுறை விளக்கங்களாலும் ஆய்வுகளாலும், அரைகுறைச் செயல்பாடுகளாலும் எவ்விதப் பயனுமில்லை. தமிழிலக்கியப் படைப்பும் விமரிசனமும் இந்நூற்றாண்டின் தொடக்கமுதலே இப்படிப் பட்ட அரைகுறைகளால் நிரம்பியிருப்பதுதான் தமிழின் இலக்கிய வரலாறாக ஆகியிருக்கிறது என்பதுதான் வேதனை. அமைப்புவாத பின்னமைப்புவாத மோகமும் இப்போது மேற்கில் தணிந்து, புனர் – வரலாற்று வாதமும், புனர் – யதார்த்த வாதமும் வேகம் பெற்று வருவதை இன்று காணமுடிகிறது.
தமிழிலோ, யதார்த்தப்பாணியிலான (அல்லது அமைப்புவாத பாஷையில் ”பொதுப்புத்திப்” பார்வையிலான) விமரிசனமும் படைப்புகளுமே சரி வர உருவாகவில்லை என்பதால் இவற்றின் தேவையை அழுத்திச்சொல்ல வேண்டியதிருக்கிறது. தமிழிலும் ஒரு பியர்ஸ், ஐ.ஏ. ரிச்சட்ஸ், எம்சன் போன்றோர் உருவாகியிருந்தால், இந்நேரம் ஒரு பார்த்தோ டொடோரோவோ உருவாகிவிட்டிருப்பார்கள். ஃப்ராய்டே தெரியாத நிலையில் லக்கான்; மார்க்ஸ் என்ன சொன்னார் என்று புரியாமலே அல்தூசர், நியட்சேயே என்ன சொன்னான் என்று புரியாமலே ஃபூக்கோ, கான்டே தெரியாமல் லியோடார் இது தமிழின் துரதிர்ஷ்டம் இல்லாமல் வேறென்ன?
ஸ்ட்ரக்சுரலிசம்/போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம் இவற்றின் பின்னாலுள்ள கோட்பாடுகளைச் சில அடிப்படைத் தேற்றங்களாகச் சுருக்கிப் பார்க்கலாம்.
1. உலகம், பொருள்களால் ஆனதல்ல – உறவுகளால் ஆனது;
2. உண்மை என்பது உருவாக்கப்படுவது;
3. மானிட அறிவியல்களின் அடிப்படை இலக்கு, மனிதனை உருவமைப்பதல்ல – மாறாக கரைத்தழிப்பது;
4. அர்த்தத்தைவிட மொழியே முந்தியது;
5. இலக்கியப் பிரதிகள் அணிகின்ற உடையே நம்பகத்தன்மை;
இக்கோட்பாடுகளைச் சற்றே ஆராய்வது நமக்குப் பயன்தரும்.
(1) ”உலகம் பொருள்களால் ஆனதல்ல – உறவுகளால் ஆனது: இக்கூற்றில் ஓரளவு தான் உண்மை உண்டு. உறவுகள் என்றிருப்பதே, அவற்றின் பின் பொருள்கள் இருக்கின்றன என்ற யதார்த்த நிலையை உட்கொண்டுள்ளது. இந்த அளவில் கூறினால் நமக்கு மறுப்பில்லை. ஆனால் அமைப்புவாதம் இதை ஒருகோடிக்கு இழுத்துச் சென்று, பொருள்களே இல்லை, உறவுகள் மட்டுமே இருக்கின்றன” என்று சொல்லும் போதுதான் பிரச்சினை எழுகிறது. உறவு என்பதே இந்தப் பொருளுக்கும் – அந்த பொருளுக்கும் என்ன சம்பந்தம் என்பதுதானே? உறவுகள் தான் அர்த்தத்தை மனிதனுக்கு அளிக்கின்றன என்பதிலும் நமக்குத் தடையில்லை. பாரி ஒரு வள்ளல் என்று சொல்வதன் அர்த்தம் மற்றவர்களை விட அவன் அதிகம் கொடுத்தான். மற்றவர்கள் அவனைவிடக் குறைவாகவே கொடுத்தனர் என்பதுதான். எனவே ஒருவரைப் பற்றி ஒன்றைச் சொல்லும்போதே, நாம் மற்றவர்களைக் கருத்தில் கொண்டுதான் அல்லது விலக்கித்தான் பேசமுடியும். இந்த அளவில் உறவுகளே அர்த்தத்தைத் தருபவை. ஆனால் பாரியுமில்லை. மாரியுமில்லை, சேரனும் இல்லை, சோழனுமில்லை – என்பது பிரச்சினைக்குரியது. இவ்வாறு சொல்லுமிடங்களில் அமைப்புவாதமும் பிற இயற்கை அறிவியல்களைப் பின்பற்றி மனிதனைப் பொருளாக்குகிறது.
(2) ”உண்மை உருவாக்கப்படுவது” என்ற உட்கோளின் அடிப்படை, கற்பனைத் திறன், புறப்பொருள்களை அப்படியே படைக்க வல்லது” என்ற ரொமாண்டிக் பழந்தத்துவம்தான். இதை நன்கு ஆராய்ந்தால், இன்னொரு உட்கிடையும் இருக்கிறது. ”உருவாக்கப்பட்ட அறிவு என்பது உண்மையானதல்ல; அது புனைவாகும்.” உண்மையில் கவனிக்க வேண்டியது – நாம் உலகின் மீது உருவாக்கும் வடிவங்கள் / அமைப்புகள் அதை ”வடிவமைப்பவை அல்ல” – மாறாக, ”கேள்விக்குள்ளாக்குபவை நான் சில அமைப்புகளை உலகின்மீது பொருத்திப் பார்க்கிறேன் என்றால், இயற்கை வேறெந்த அமைப்பாக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாது என்று அர்த்தமல்ல. இதன் பயனுள்ள உட்கோள் நம் அமைப்பாக்கங்களை சத்துள்ள வகையில் நாம் பயன்படுத்திக்கொள்ள இடம் தருகின்ற வகையில் இயற்கை அமைகிறது என்பதே. இந்த வாதத்தையும் ஒரு கோடிக்குக் கொண்டுசென்ற, ”அமைப்புகள்தான் இருக்கின்றன. பொருள்கள் இல்லை” என்றோ, ”உலகம் பற்றிய நமது அறிவே புனையப்பட்டது, அல்லது பொய்யானது, ஆகவே எப்போதும் எல்லாம் முன்பே இருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது.
(3) ”மனிதனைக் கரைத்தழிப்பதே லட்சியம்” – இதனை லெவிஸ்ட்ராஸ் சொல்லுமிடம், சார்த்த ரோடு அவருக்குள்ள முரண்பாட்டினை விளக்கும்போது. இருத்தலியல், ”சரியான மானிடத்துவம் என்பது தீவிர விடுதலையில்தான் இருக்கிறது” என்பதை வலியுறுத்தும்போதே, மானிடக் கருத்தமைப்புகளுக்கும் அப்பாற்பட்ட ”சுயத்துவ எச்சம் என்றும் எஞ்சியிருக்கும் என்பதையும் உட்கொண்டு தான் சொல்லுகிறது. இருத்தலியலோடு முரணி, ஸ்ட்ரக்சுரலிசம் தோன்றும் போது, அதன் இருண்மையான, ஆதாரமான சுயம் என்ற பகுதியை விட்டு விட்டு, சமூகசுயங்களின் புனைவுக்குணம் என்ற பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய முற்படுகிறது. இவ்வாறு செய்யும்போது, மனிதன் தனக்கு முன்னே இருந்து செயல்படுகின்ற அமைப்புகளின் ஓர் அங்கமாக மட்டுமே ஆகிவிடுகிறான். ஆகவே முன்பே கூறியதுபோல ”டிஹ்ம்யூமனைஸ்” செய்யப்படுகிறான். ஆகவே மானிடவியலின் நோக்கம் மனிதனை உருவாக்குவதாக இல்லாமல், அவனைக் ”கரைத்தழிப்பது” ஆகிவிடுகிறது. மானிடவியல், ஒரு சுப்பனையோ குப்பனையோ தனித்துவம் வாய்ந்த மனிதர்களாகக் காட்டாது – மாறாக சுப்பன், குப்பன் இவர்களையெல்லாம் கலாச்சாரத்தினால் உருவான, மனிதகுணம் அற்ற அமைப்புகளாகத் தான் காட்ட முடியும்.
”மனிதனைக் கரைத்தழித்ததில் ”லெவிஸ்டிராசுக்கும் மட்டுமல்ல ஃப்ராய்டுக்கும் பங்குண்டு ஏற்கெனவே வழக்கிலிருந்த பயன்வழி – இன்பக்கொள்கையை ஃப்ராய்டு ”இன்பக்கொள்கை” என்று பெயரிட்டு அதற்கு நனவிலி அஸ்தஸ்து கொடுத்ததன் வாயிலாக மானிட இயல்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டதே என்ற கொள்கையை முன் வைத்தார். சமீபத்தில், போஸ்ட் – ஸ்ட்ரக்சுரலிச சிந்தனை பரவிய நிலையில் நவீன உளப்பகுப்பாய்வு வேடிக்கையான எல்லைகளைத் தொடுகிறது – மர்ரே ஷ்வார்ட்ஸ் பின்வருமாறு வாதிக்கிறார் (அல்லது சாடுகிறார் ஏனெனில் இது தான் பக்கமே ”கோல்” போடும் விஷயம்) ”தர்க்கவிவாதம் என்பதே நியாயப் படுத்தல் என்று கொள்வதானால் உளப்பகுப்பாய்வும் ஒரு தர்க்கரீதியான அறிவமைப்பு என்றால் – உளப்பகுபாய்வு, மெய்ம்மை பற்றிய எவ்வித அறிவையும் தருவதன்று மாறாக, பகுப்பாளர் நியாயப்படுத்துவதே ஆகும் இந்த வாதத்தை விரிவுபடுத்தினால், ”உளப்பகுப்பாய்வுத் துறையில் நம்பிக்கை வைக்க எவ்விதக் காரணமுமில்லை” என்றாகும். ஆனால் இம்முடிவிற்கு வராமல் தப்பித்துக்கொள்வது பின்னமைப்பியல் சிந்தனையின் இயல்பான குணம்.”
தன்னிலையைக் கரைத்தழிப்பதில் முடிவானநிலையைக் கொண்டு வந்தது தெரிதா. தூய அனுபவக்களம் என்பது உறவுகளின் மெல்லிய ஜவ்வாகிவிடுகிறது. இவ்வுறவுகளோடு இணைந்துள்ள கருத்தாக்க முற்கோள்களையும் களைந்து விட்டால், பிறகு எஞ்சிநிற்பது ஒன்றுமில்லை. படிமம், கருத்தாக்கம், மொழி, பிரதி போன்றவற்றால் விளையும் பலவித இலட்சியவாதங்கள் உண்டு. லோகாயதமான ”பொருள்” என்பதை எதிர்ப்பதால் இவை அனைத்தும் பொதுத்தன்மை பெறுகின்றன. தெரிதாவுக்குக் ”குறி” என்பதே பிரக்ஞையின் அமைப்பு. எனவே யதார்த்தத்துக்கும் குறிகளுக்கும் இடையில் தெளிவான எல்லைக்கோடு எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். எனவே இன்னொரு எல்லையாக, மனத்திற்கும் – அது விளைவித்த குறிகளுக்கும் எவ்வித தடுப்புக்கோடும் இல்லை என்ற முடிவுக்கும் வருகிறார். ஆகவே பிரக்ஞைப்பற்றிப் பேசுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. ”பிரதியைத் தவிர வேறெதும் இல்லை என்று எழுதுகிறார்.
இவற்றினால் நாம் காணக்கூடிய அடிப்படைக் கொள்கை இதுவே. பொருள்கள் என்பவை, மொழியினால் முன்வைக்கப்படுபவை. அதற்கு முன் அவற்றிற்கு எவ்வித இருப்புமில்லை. தமிழ்நாடு சாலைவழிகள் பற்றித் திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டிருக்கும் வரைபடத்திற்கும் ஆக்ஸ்ஃபோர்டு அட்லசில் உள்ள தமிழ்நாட்டின் படத்திற்கும், லோகல் கம்பெனி ஒன்று வெளியிட்டுள்ள தமிழ்நாட்டின் வரைபடத்திற்கும் வண்ணம், அளவு போன்ற பல விதங்களிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை என்று முடிவுக்கு வரும் பேரறிவாளர்கள் நிலையில்தான் அமைப்புவாதிகள் – பின்னமைப்புவாதிகள் நிற்கிறார்கள்.
(4) சசூர் முதலாகத் தொடங்கி, மொழியின் ”விதிக்கட்டுப்பாடற்ற” தன்மையை தன்னிச்சையான தன்மையை அழுத்தமாகக் கூறியிருக்கின்றனர். மொழியின் குறிகளுக்கும் பொருள்களுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என்பது நாம் ஒப்புக் கொள்ளக்கூடியதுதான். ”பூனை” என்று நாம் குறிக்கும் ஒரு பிராணியை, ”கானை” என்று கூடப் பெயரிட்டு ஆதியிலிருந்து அழைத்திருக்க முடியும். ஆனால் இந்தத் தொடக்க நிலை உறவு மட்டுமே தன்னிச்சையானது. இதன் பின்னர். இம்மாதிரி பொருள்களும் – மொழியும் தொடர்புபடுத்தப்பட்ட பின்னர், எழுகின்ற மொழியமைப்பு யதார்த்தமானது, ஒழுங்கானது. ஆனால் சசூர் முதலாகத் தொடங்கிய அமைப்பு – பின்னமைப்புவாதிகள் ”ஒலி மட்டுமல்ல, அர்த்தமும் தன்னிச்சையானது” என்றே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.
சசூர் மொழி என்பது ஒரு வடிவமைப்பு, சாராம்சப் பொருள் அல்ல என்று வலியுறுத்துகிறார். லக்கானோ, ”புறவடிவத்தைவிடப் பொருளே நம் கவனத்திற்குரியது” என்பதைத் தலைகீழாக்கி, ”வார்த்தைகளின் உலகமே பொருள்களின் உலகினைச் சிருஷ்டிக்கிறது” என்கிறார். இவ்விரு கூற்றுகளையும் இனைத்தால், வடிவம் என்ற ஒன்று மட்டுமே இருக்கிறது என்ற தீவிரமுடிவு கிடைக்கிறது. ”குறி” என்ற கருத்தாக்கமும் கூட, நிலைத்த, உறுதியான, பொருள் சுட்டலுக்கே இட்டுச்சொல்லும் என்பதை உணர்ந்த தெரிதா, ” எழுதுதல் ” என்ற ”நடுநிலை”ச் சொல்லை உருவாக்குகிறார். சசூர் கூறிய ”வித்தியாசங்கள்” என்னும் கருத்து, தெரிதாவிடம் இரட்டைமதிப்புப் பெறுகிறது. முதலில், இந்த வித்தியாசங்களின் விளையாட்டுகளே ”அர்த்தம்” என்னும் ”மாயை” யைத் தோற்றுவிக்கின்றன என்பது; இரண்டாவது ”ஒத்திப்போடல்” என்னும் அர்த்தத்தில் அச்சொல் உருவாக்க/உருவகிக்கப் படுகிறது. ”மொழியில் எப்போதும் நிலைத்த அர்த்தங்களே இல்லாததால், அர்த்தம் என்பது தேவையான சூழலை வேண்டி ஒத்திப் போடப்படுகிறது. ஆனால் அவ்வாறான குறித்த சூழல் எப்போதும் முடிவாகக்கிட்டப் போவதில்லை ஆதலால், அந்தக் குறிக்கான அர்த்தம் இன்னும் ஒரு சூழலை எதிர்நோக்கிக் காத்திருக்கவேண்டும்” இப்படியே எல்லையற்று தொடர்ச்சியாக.
தெரிதா மட்டுமல்ல, அவரை தீவிரமாகப் பின் பற்றிய அமெரிக்க யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் பால் டிமானும் கூட, பழைய அர்த்தங்களைத் தலைகீழாக்கல், உடைத்தல் என்பதை மட்டுமே செய்யவில்லை. ”எதுவுமே நிச்சயமில்லை, அர்த்தம் என்பது ஒத்திப்போடுதலே” என்று சொல்லும் இவர்கள், தங்கள் எழுத்துக்களை மட்டும் மற்றவர்கள் தீவிர அக்கறையோடு வாசிக்கவேண்டும் என்பதற்கான அறிவார்த்த ஆயத்தங்களோடு, தர்க்க ரீதியாகத்தான் வாதிடுகிறார்கள். அதாவது ”மற்றவர்கள் படைப்பிலும் அர்த்தம் இல்லை” என்று நிலை நாட்டும் தங்கள் எழுத்தில் மட்டும் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதாக தங்கள் எழுத்தின் மேல் மற்றவர்கள் கவனம் கொள்ள எதிர்பார்க்கிறார்கள். இது, அவர்களுடைய கருத்தின் முரண்நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டும் விஷயம். மேலும் தகர்ப்பமைப்பு விமரிசனம் என்பது தகர்ப்பது மட்டும் அல்ல. மீண்டும் புனர் அமைப்பதும்தான் ஏனெனில் தகர்ப்பது என்பது எப்போதுமே ஒரு கொள்கையாக நிலைபெற முடியாது. பழையதைத் தகர்த்த எச்சங்களிலேயே புதியவை உருவாகிவிடுகின்றன. எனவே முற்றாகத் தகர்ப்பது என்பது என்றும் இருக்க முடியாது. அதாவது இறுதி எச்சங்கள், அவற்றின் பொருள்சுட்டல்கள், இருந்தே தீரும். தெரிதாவும் பால் டிமானும் இதைச் சொல்லளவில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், செயலளவில் நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள், ஒப்புக்கொள்கிறார்கள். இதுதான் தகர்ப்பமைப்பு விமரிசனத்தின் நிலை, தகர்ப்பமைப்பு விமரிசனத்தின் மிக ஆரோக்கியமான பகுதி. அது இறுகிப்போகாமல் எப்போதுமே புதியகாற்றை உள்ளே விடுகிறது என்பது.
”சுயம்” என்பது கரைத்தழிக்கப்பட்டாலும், அனுபவம் என்பதும், பிளேட்டோனிய வடிவங்களும் அர்த்தங்களும் அறவே இல்லை என்று சொல்லப்பட்டாலும், ”பிரதி” என்பதாவது எஞ்ச வேண்டியது தானே? தெரிதா, பால் டிமான் இவர்களிடம் உள்ள பெரும் ஆற்றல், இப்படி வாதிட கூடிய அவர்களது அறிவுப் புதுமைதான். பிறரது கருத்துக்களுக்குப் பின்னால் எப்படியேனும் சென்று காலை வாரும் உத்தியைக் கடைப்பிடிக்கும் இவர்கள், அதனை மொழியின் மேலேற்றி அவ்வாறான விளையாட்டுகள் தவிர வேறொன்றுமே இல்லை என்கிறார்கள். ”எதுவும் நிலைத்ததன்று; எதன்மேலும் சந்தேகம் கொள்” என்பதுதான் இதன் அடிப்படை.
ஆனால் தகர்ப்பது, தன்னையே கொல்லும் படை. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதையும் அந்த வாக்கின் வாய்மையை ஆராய்வதற்கே பயன்படுத்தும் விமர்சகனின் தர்க்கத்தையும் உடைக்கிறது அதே வாதம். பைரோ என்ற பழைய கிரேக்க அவநம்பிக்கைத் தத்துவவாதி எப்பொருளுமே, மரியாதைக்குரியது – அவமரியாதைக்குரியது என்று பாகுபடுத்தமுடியாது; நீதியா – அநீதியா என்று ஒரு செயலைப் பற்றியும் முடிவுக்கு வருவது இயலாதது. என்றார் ”எதுவுமே உண்மையில் இருப்பதில்லை – மரபும் பழக்கமே மனிதச் செயலை நிர்வகிக்கின்றன. எந்த ஒரு பொருளும் அல்லது செயலும் இதுதான் – அதுதான் என்றெல்லாம் வகைப்படுத்த / பெயரிடப்பட முடியாதது” என்பது அவர் கருத்து. எனவே நம் ஆராயும் கேள்வி, ”இவ்வாறு கூறும் கூற்றே மரபுவழிப்பட்டதா, இல்லையா? என்பதாகத்தான் இருக்கவேண்டும் – என்பதும் அவர் கருத்து.
அக்ரிப்பா என்னும் தத்தவவாதியின் தடுமாற்ற நிலையின் ஐந்து வடிவங்கள் என்னும் கொள்கையும் கவனிக்கப் பட வேண்டியது. இதில் முதல் வகை, சார்பியல் பற்றிய வடிவம். இது அமைப்புவாதம் – பின்னமைப்புவாதத்தின் வரலாற்றை விளக்கக்கூடியது. அதாவது ”அமைப்புகள் உள்ளன” என்பதிலிருந்து தொடங்கி ”எதுவுமே இல்லையோ” என்ற அவநம்பிக்கைக்கு வந்திருக்கும் போக்கைச் சுட்டிக்காட்டக்கூடியது. இது கூறுகிறது: ”ஒரு பொருளை அதுவாகவே/அதைக் கொண்டே அறிதல் இயலாது. பிறபொருள்களோடு சம்பந்தப்படுத்தித்தான் அதனை அறியவேண்டும். எனவே எந்தப் பொருளையும் அறிவது என்பதே இயலாது. ”அக்ரிப்பா கூறும் இரண்டாவது வடிவம், தெரிதாவின் ”எல்லையற்ற ஒத்திப்போடல்” என்னும் கொள்கையை முன்நோக்குகிறது. அதன் பெயர், எல்லையற்று விரிதலின் வகைமை”, அது கூறுகிறது. எப்பொருளைத் தேடுகிறோமோ, அது நிச்சயமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்க மறுக்கிறோம். ஏனெனில், தேடும்பொருளுக்குத் தரப்படும் நிரூபணமே, இன்னொரு பொருளைத் தேடுவதற்கான அடிப்படை விவாதக்களமாக ஆகிவிடுகிறது. இப்படியே எல்லையற்றுச் செல்கிறது. அக்ரிப்பா, இதனைத் தர்க்க விவாதங்களுக்கான கொள்கையாக முன்வைத்தார். தெரிதாவோ, இதனை அர்த்த – உறுதிப்பாடின்மைக்கான கொள்கையாக ஆக்குகிறார். வேறு வித்தியாசம் இல்லை. முன்பே சொன்னது போல, இவ்வித ”பைரோத்தனக்” கூற்றுகள்யாவும் ”பைரோத்தனமாகவே” முடிவடையும் – அதாவது தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றன. இவ்வாறெல்லாம் கூறிய அவநம்பிக்கை வாதிகள், நல்ல திருப்தியான, சமூகத்தோடு ஒத்த வாழ்க்கையையே நடத்தினார்கள்” என்கிறார் டயோஜினில். ஹ்யூம் போன்ற அவநம்பிக்கையாளரும் கூட, தம்மை அழுத்தும் அவநம்பிக்கைத் தளங்களிலிருந்து விடுபட வேண்டி, தம் நண்பர்களோடு ”பேக்கமன்” விளையாடி, தூலயதார்த்தம் பற்றிய தம் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஜான்சனும் இப்படியிருந்திருந்தால் ஏதேனும் விளக்குக் கம்பத்தை உதைத்துத் தம் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பார் போலும் தெரிதாவும்கூட, இன்னும் தம் புத்தகங்களின் முதல் பக்கங்களில் தன் பெயரைப் போட்டுக் கொள்கிறார். கடிதங்களைக் கையெழுத்திடத்தானே செய்கிறார்?” ”க்ளா” புத்தகம், ஆசிரியனின் அழிவைக் காட்டவில்லை – மாறாக, தெரிதாவின் இருப்பை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை முன்வைக்கப்பட்ட வாதங்கள், அமைப்பு – பின்னமைப்பு வாதங்களின் பின்னாலுள்ள அணுமைய – அப்ஜெக்டிவிஸ” தத்துவத்தையும் மறுப்பதற்குப் போதுமானவை. விடாப்பிடியாக, அர்த்தங்கள் என்பவை அகராதியில் இருக்கின்றன என்று தேடிய காலம் மலையேறிவிட்டது என்பதை எவரும் மறுக்கவில்லை. அதேசமயம் ”செயல்படு அர்த்தம்” இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. மெனோவுக்கும் சாக்ரடீசுக்கும் நடந்த விவாதம் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.”
மெனோ: சாக்ரடீஸ் ஒரு பொருளைப் பற்றி நீ எதுவுமே அறியாதபோது எப்படி அதைத் தேட முடியும்? உனக்குத் தெரியாத பொருள்களில் எவ்விதப் பொருளை நீ தேடும் பொருள் என்று கண்டுபிடிப்பாய்? அதைத் தேடிக் கண்டுபிடித்தாலும் நீ தேடிய பொருள் அதுதான் (நீ இதுவரை அறிந்து கொள்ளாதது அதுதான்) என எப்படி அறிவாய்?
சாக்ரடீஸ்:
நீ என்ன சொல்ல வருகிறாய் என்பதை அறிவேன், மெனோ. ஒரு விதண்டாவாதத்திற்கு என்னை இழுப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறாய். ஒருவன் தான் அறிந்த ஒன்றையோ அறியாத ஒன்றையோ தேட முடியாது – ஏனெனில் அவன் ஏற்கனவே அறிந்திருக்கிறான். அறியாதைத் தேட முடியாது. ஏனெனில் தான் எதைத் தேடுகிறோம் என்று அவனுக்குத் தெரியாது.
தெரிதா முதலியோர், ”எதுவுமே இல்லாததைத் தேடுபவர்கள்” உண்மை இறுதி நிலையில் இருக்கிறது. அது யதார்த்தத்தின் நெசவினால் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே ஐந்தாம் தேற்றமான ”இலக்கியப் பிரதிகள் அணிகின்ற உடையே நம்பகத்தன்மை” என்பது மட்டும் எஞ்சுகிறது.
ஆகவே, நாம் தொடங்கிய நிலைக்கே வருகிறோம். கருத்துகள் நாளுக்கு நாள் மாறுகின்றன. அவநம்பிக்கைவாதிகள், பைரோக்கள், அக்ரிப்பாக்கள், மொனேக்களின் சிந்தனைகள் இன்று மாற்றுநிலையில் அமைப்பு – பின்னமைப்பு வாத வடிவத்தை அடைகின்றன. இது முற்றாகப் புதிய மொந்தையில் பழையகள் என்று கூறுவதாகாது. ஏனென்றால், காலப்போக்கில் கள்ளின் தீர்மான வேதியியல் கூறுகளும் மாறுகின்றன. மொந்தையின் வடிவமும் மாறுகிறது. எனினும் ஐந்து வயதில் பார்த்த ஒருவனை ஐம்பது வயதிலும் அறிந்து கொள்ளும் ஒரு சில தீர்மானக்கூறுகள் போல சில மாறாதவை என்றும் ஏற்கிறோம். எனவே ஏதோ ஒன்றைப் புதிதாக அடைந்துவிட்ட ”மதவாதிகளின் உற்சாகம் ஆதனால் ஏற்படுகின்ற விபரீத வாதப்பிரதிவாதங்கள் அவற்றின் செயல்பாட்டில் எழும் தீவிரவாதம் இவற்றைத் தவிர்ப்பது நலம். இதுதான் தமிழ்ச் சூழலில் வலியுறுத்திக் கூறவேண்டிய விஷயம், நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன்களுக்கு அடிமையாகக் கிடக்கும் தமிழில் எந்த ”இஸம்”வரும்போதும், விமரிசனப் பாங்குடன், அதற்கான முறையான வரலாற்றறிவோடு பார்க்கப்படுவதில்லை. தீவிர ஃபேஷன் – மோஸ்தர்காரர்கள், ஒன்றைப் புனிதமான அறிமுகப்படுத்துவதும் ஆதரிப்பதும், முற்றிலும் மரபுவழிப்பட்ட ஒற்றைப்பரிமாணச் சிந்தனையாளர்கள் முற்றிலுமாக எதிர்ப்பதும் தான் இங்கே காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது. அமைப்பியல் – பின்னமைப்பியல் பற்றிய இன்றைய விவாதங்களிலும் இதையே காண முடிகிறது.
அடுத்த நிலையில், இவற்றை முன்வைக்கும் ஃபேஷன்வாதிகள் சரியான செயல்முறைகளை உருவாக்குவதில்லை. ”தியரி”யை முன்வைப்பதில் காட்டும் அக்கறையை ”பிராக்டிஸ்” இல் இவர்கள் காட்டுவதில்லை தமிழ்ச் சூழலில் செயல்முறை முன்னாலும் ”தியரி” பின்னாலும் வருவதே நலம். அனாவசிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அப்போது கொள்கையும் புரியும், செயல்முறையும் வளரும், இப்போது சிலரிடம் ”ஸ்ட்ரக்சுரலிச” ”போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிச” அறிவு ஏகபோகமானதும் மற்ற பலர் நமக்கும் இதற்கும் ஒத்துவராது” என்று அஞ்சி ஒதுங்கியதும் தான் மிச்சம். எந்த அதிகாரத் தளங்களை உடைக்க பின்னமைப்பியல் உதவும் என்கிறார்களோ, அதே அதிகாரத் தளங்களை இவர்களே வைத்திருக்கிறார்கள் – ஆதரிக்கிறார்கள்.
இன்னொன்றையும் பார்க்கவேண்டும். தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் நூலில் – கொள்கைகளை முன்வைப்பதில் காணப்பட்ட அறிவுத்தீவிரம், அவரது செயல்முறைத் திறனாய்வில் இல்லை – அவை மேம்போக்காகவே அமைந்துவிடுவதால் கோட்பாட்டின் கட்டுறுதி – வன்மை மீதான நம்பிக்கை போய்விடுகிறது.
இதே போன்று வாதங்கள் பல, பின் நவீனத்துவப் படைப்புகளுக்கு எதிராகவும் இருக்கின்றன. அவை இன்னொரு சமயம் கடைசியாகச் சொல்லவேண்டியது. ஆர்ப்பாட்டம் வேண்டாம் அடக்கமே பலன் தருவது. தமிழுக்கு உண்மையாகப் பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர் மிக அடக்கமாகவே எவ்வளவோ சாதிக்திருக்கிறார்கள். மற்றவர்களின் ”தன்னிலையை’க் கரைப்பதில் தீவிர அக்கறை காட்டும் இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் தன்னிலையில் முதலில் கரைத்துக் கொள்வது நல்லது ”நான் நான்” என்று தம்பட்டமடித்துக் கொண்டவர்கள் எதிரணியில் இருந்ததையோ, எவ்வித பாதிப்புமின்றிப் போனதையோ தான் இலக்கிய வரலாறு காட்டுகிறது.
நன்றி: காலச்சுவடு
No comments:
Post a Comment