Wednesday, April 27, 2011


தலித் பெளத்தப் பெண்ணியம்  

-உமா தேவி -

தலித் சமூக விடுதலைச் சூழல் இயக்கங்களிலும் இலக்கியங்களிலும் பெண்ணியம் குறித்தப் பார்வையிலும் தன்னுடைய கூர்மையினை இழந்து கொண்டே வருகிறது எனலாம். பண்டிதர் அயோத்திதாசர், டாக்டர் அம்பேத்கர் காலத்தைத் தொடக்கமாக வைத்தால், தற்போது நான்காம் கட்ட தலித் விடுதலை அரசியல் இயங்கிக் கொண்டு இருக்கிறது எனக் கணக்கிடலாம். பண்டிதர் அயோத்திதாசருடையக் காலம் தலித் விடுதலை அரசியலில் தீவிரமாகவும் அல்லது அடிப்படைவாதமாகவும் இயங்கியது என்றால், டாக்டர் அம்பேத்ர்களுடையக் காலக்கட்டத்தை தலித் விடுதலைச் சூழலின் அறிவியல் புர்வமான காலக்கட்டம் எனலாம். அதனைத் தொடர்ந்து இயங்கிய இயங்குகின்ற தலித் சமூகம், தன்னுடையத் தீவிரத்தையும் அறிவியல் புர்வமான பார்வையினையும் படிப்படியாக தன்னிலையில் இழந்து கொண்டே வருகிறது என்பதை வரலாற்றுப் பதிவுகள் உணர்த்துகின்றன. அதற்குக் காரணம் தலித் சமூக விடுதலைக்கு அடிப்படை காரணிகளான அக-புற கூறுகளாக விளங்கும் அம்பேத்கரிசத்தையும் தற்கால தலித் சமூகச் சூழலையும் உற்று நோக்காத்தேயாரும். ஜாதிய வன்கொடுமைகளும் தீண்டாமையும் இந்தியர் சமூகச் சூழலில் தலித் மக்கள் மீது திணிக்கப்படுவது இயல்பான வாழ்க்கைச் சூழலாக கருதப்பட்டக் காலத்தில், பெறப்பட்ட உரிமைகளின் அளவை, இனறைய மீச்சிறு விடுதலைச் சூழல் அளித்திட்ட உரிமைகள் மிஞ்சவில்லை என்பது எதார்த்தமாகி இருக்கிறது- இந்திய அரசு தன்னுடையத் தொடக்கக் காலத்தில் தலித் சமூகத்தைச் சர்ந்த தேசியத் தலைவரை நம்பியே இயங்க வேண்டி இருந்தது. ஆசியத் துணைக்கண்டத்தின் அரசியலமைப்பு டாகடர் அம்பேத்கரை இறைஞ்சியே பெற்றுக் கொண்டது என்பது வரலாறு உணர்த்தும் உண்மை.

ஆளுங்கட்சியான காங்கிரசு அரசு தன்னை எதிர்த்துத் தோற்றுப்போன, கட்சித் தலைவரான டாக்டர் அம்பேத்கரிடமே, இந்திய நாட்டின் உயிர் நாடியான இந்திய அரசியலமைபைபுச் சட்டத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டது என்பது, அக்கால தலித் சமூகத்தின் ஆளுமையையும் சுயமரியாதையையும் நமக்கு எடுத்தியம்புகிறது. ஆனால் இன்றைய தலித் அரசியலை ஆய்வு நோக்கில் காணும்போது நமக்கான பின்னடவை நாம் ஒப்புக்கொள்ள வேணடியுள்ளது. இதனை தமிழக தலித் அரசியலை விமர்சனப் பார்வையோடு அணுகும் போது புரிந்து கொள்ள முடியும். சுதந்திரமடையாத இந்திய தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய காந்தி தலைமையிலான காங்கிரசை, ஒற்றைத் தலைவனாய் போராடி வென்ற டாக்டர் அம்பேத்கரை, தனது வழிகாட்டியாக்க கொண்டு இயங்கும் தமிழக தலித் இயக்கங்கள், டாக்டர் அம்பேத்கரின் எந்த பாதிப்பும் அற்ற, சமரச அரசியலையே நடத்திக்கொண்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கருடைய நூற்றாண்டின் எழுச்சியால் இயக்கமான தலித் மக்களைக் கொண்டு, தமிழகம் முழுவதும் இருந்த பல புதிய-பழைய தலித் கட்சிகள் யாவும் மிகப்பெரிய கட்சிகளாக வளர்ச்சி அடைந்தன. அம்பேத்கருடைய நேர்மையும், அறிவும், தீவிரமும் அவருடைய மரணத்திற்குப் பிறகும் மக்களை ஒருங்கிணைக்கின்ற சக்தியாக, தற்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாலும் தனித்திறமையாலும் பெருங்கட்சிகளாக இயங்கிக் கொண்டிருக்கும் தலித் சமூகமும் தலைவர்களும் இச்சமூகத்தை விடுதலையின் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். காரணம், எதிரிகளோடும் துரோகிகளோடும் போரிட்டு வெல்ல வேண்டிய சமூகநீதியானது “அரசியல் நிலைப்பாடு” என்ற பெயரில் எதிரிகளையும் துரோகத்தையும் நம்பிய, “சார்பு அரசியலை” மேற்கொள்வதாலேயே தன்னுடைய சமூக நீதியின் சாரம்சத்தை இழந்து கொண்டு வருகின்றன. மிகச் சரியான உதாரணமாக தலித் விடுதலைக்கு எதிராகவே கடிகத்தையும் கொள்கைகளையும் கொண்டுள்ள திராவிடக் கழகங்களை எரித்துப் போராட வேண்டியக் களப்போராளிகள், சமூக விடுதலையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல் விடுதலைக்கு வித்திட்டுக் கொண்டு இருக்கினறார்கள். ஒரு சமூகத்தின் விடுதலை கல்வி, பொருளாதாரம், அதிகாதம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கின்றது என்கின்ற டாக்டர் அம்பேத்கரின் “சமூகப் புரிதல்“ தாக்கம் எதுவுமற்று அரசியல் விடுதலையை நோக்கியே அனைத்து தலித் இயக்கங்களும் இயங்கிக் கொண்டிருப்பது சமூக விடுதலைக்கும் பண்பாட்டு எழுச்சிக்கும் மிகப்பெரிய பின்னைடவையே உண்டாக்கும். உண்டாக்கி இருகிறது. அவற்றில் பண்பாட்டு எழுச்சிக்கு அடிப்படை வித்தாக இயங்கும் தலித் பெண் விடுதலைக் குறித்த எவ்வித்த் தீவிர நடவடிக்கையும் விவாதங்களும் எந்த தலித் இயங்கங்களிலும் இலக்கியங்களிலும் இல்லாதது தலித் பெண்ணியத்தை தேக்க நிலையில் வைத்துள்ளது. பெண்ணியம் குறித்த வரலாற்றுப் பார்வை தலித் அல்லாதவர்களுக்கும் தலித்துகளுக்கும் மிகமிக அவசியமாக இருக்கிறது. ஒவ்வொரு தேசமாகவும் சமூகமாகவும் இருநதாலும் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே.

ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்குமான இடைவெளி மிக நீளும்போது நாட்டுக்கு நாடும் சூழலுக்கும் சூழலும் வேறுபடுவது இயற்கை. இன்னிலையில் ஒட்டுமொத்த பெண்களுக்குமான விடுதலையை ஒற்றை வார்த்தையான பெண்ணியத்திற்குள் அடக்குவதும் அதிகாரமும் வலிமையும் வார்த்தைகளையுமு உடைய பெண்கள், அதற்கான பிரச்சார பீரங்கிகளாக இயங்கி, ஆங்காங்கே பெண்ணியத் தலைவிகளாக அடையாளப்பமுத்திக் கொள்வது ஜாதியத் தீவிரத்தால்-ஜாதி இந்துப் பெண்களால் தலித் பெண்களின் அவலத்தை அல்லது அடையாளத்தை மறைக்கும்-மறுக்கும்-மறக்கும் அரசியல் சூழ்ச்சியாகக் கூட பெண்ணியத்தையும் பெண்ணியத் தத்துவத்தையும் கூறலாம். பெண்ணியம் என்பதை, மானுட விடுதலையின் பொதுத் தன்மையிலிருந்து பிரித்து அணுகுவதைப் போன்று பெண்ணியம் என்ற பொதுத் தன்மையிலிருந்து பிரித்து ஒடுக்குகின்ற ஆண்களுக்கு மட்டுமல்லாது கிராமங்களின் ஊர்களில் ஜாதியைக் கருக்கொண்டு இருக்கும் ஜாதி இந்துப் பெண்களுக்கு எதிராகப் பேசும் கூர்மையான அரசியலாக தலித் பெண்ணியத்தை அணுகலாம். இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத்தவரையில் தத்துவம் அல்லது கல்வி, பொருளாதாரம் போன்றவற்றின் பின்புலத்தோடு தலித் பெண்ணியத்தை பேசுவதினும் மிகப்பாதுகாப்பான களம் பண்பாட்டுப் பின்னணியோடு அல்லது சமயப் பின்னணியோடு பேசுவதாகும். இந்தியாவில் (தமிழகத்தில்) தலித்துகளும் தலித் பெண்களும் அனுபவிக்கும் - அனுபவித்தக் - கொடுமைகள் யாவும் இந்துமதப் பின்னணியில் நிகழ்ந்ததேயன்றி, கல்வி, பொருளாதாரத்தைச் சார்ந்ததாக அல்ல. ஒருக்கப்படுகின்ற ஒரு பெண்ணின் விடுதலை இங்கு, பௌத்தத் தத்துவத்தின் அடிப்படையில் முன் வைக்கும்போதே இந்து சனாதான ஒடுக்குமுறையை நடுங்க வைக்க முடியும்.

இங்கு அம்பேத்கர் முன்னெடுத்த விடுதலை நடவடிக்கையில் பௌத்த ஏற்பு இன்றளவிலும் தலைமையேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆணாதிக்கத்தை விடவும் மிக வலிமையானது இந்துத்துவப் பண்பாடேயாகும். காரணம், ஆணாதிக்கம் இந்துத்துவப் பண்பாட்டின் விளைவே அன்றி அதுவொரு தனித்துவமோ அல்லது தத்துவமோ அல்ல. இதனை டாக்டர் அம்பேத்கர் இந்து சனாதானவாதிகள் குழந்தைத் திருமணத்தை. நடைமுறையில் வைத்திருந்ததன் காரணம் உட்சாதிகளுக்குள்ளேவான திருமணத்தைப் பாதுகாப்பதோடு ஜாதி மறுக்கும் கலப்புத் திருமணத்திற்கு எதிரானதாகவே கையாண்டனர் என்புகிறார். மறுமணத்தை இந்துக்கள் எதிர்ப்பதற்கும் காரணமும் ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்வதைத் தவிர்ப்பதற்காகவேயாகும். அதனை, நடைமுறைப்படுத்துவதற்காகவே உடன்கட்டை ஒறும் வழக்கம் அறிவிக்கப்படாத இந்துச் சட்டமாகவே இருந்தது எனகிறார்.

உட்சாதிகளுக்குள்ளே விதவை மறுமணத்தை எதிர்ப்பதற்கானக் காரணம் இந்துக்கள் தீண்டத்தகாதவர்களினும் கேவலமான தீண்டத்தகாதவர்களாக விதவைகளைக் கருதியது. அது இனறளவினும் சங்கர மடத்தின் சங்கராச்சாரியார் விதவைனளை நேருக்குநேர் பார்ப்பது இந்துப் புனிதத்திற்கு ஒற்படுத்தும் தீட்டு என்று கருதுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், உள்நோக்கி ஆராய்ந்தால் பெண் பிறப்பு முன்ஜென்மப் பாவமாகவே இந்துத் தத்துவம் அறிவிக்கினறது. இதனை ஜாதியத்தின் அடையாளமாகப் புணூலை அணிகின்றப் பார்ப்பனர்கள் பெண்களுக்கான எவ்வித் அடையாளத்தையும் வழங்காத்திலிருந்துப் புரிந்துகொள்ள முடியும். இன்று நடைமுறைதிலிருந்து பெறப்பட்டதேயன்றி அது இந்துத் தத்துவத்தின் அடிப்படை அல்ல. தெய்வங்களின் கூட்டமாக இருக்கும் இந்துமதம் பெண் தெய்வங்களை மூன்றாந்தரமாக வைத்திருக்கிறது. இராமனை ஒழுக்கசீலனாக முன்னிறுத்தத் துடிக்கும் மதம் பெண்ணியம் குறித்த சமூக அறிவு சிறிதுமற்றே நகருகிறது. இந்து மதத்தில் இன்றளவில் உள்ள பெண் தெய்வங்கள் பௌத்த மதத்திலிருந்து கடன் வாங்கப்பட்டவையே, பெண்களை சமயத்துறவியாக்க்கூட அனுமதிக்காத இந்து மதம் பெண் தெய்வங்கிள எப்படி அனுமதிக்கும். பௌத்த பிக்குனிகளும் ஜைன துறவிகளும் பிற்காலத்தில் சமூகப்பணியின் முடிவில் குடிமக்களால் தெய்வங்களாக வணங்கப்பட்டனர். அத்தெய்வங்களே இன்று இந்து மதத்தை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. பெண்களை பாவ பிறப்பென்றும், சமயத்துறவியாவதற்கு தகுதி அற்றவர்கள் என்றும் வரையறுத்த இந்துமதத்தின் பெண்ணெதிர்ப்பு அரசியலைப் பெண்களே தலைமையேற்று நடத்தும் அளவிற்கு கொண்டு சென்றது என்ற டாக்டர் அம்பேத்கர் பெண்களுக்கான கல்வி, பொருளாதாரம், சமூக விடுதலை அவசியம் என்பதை உணர்ந்ததால் அதனை வெறும் கவிதையாகவோ அல்லது கட்டுரையாகவோ எழுதாமல் இந்து மசோதா திருத்தச் சட்டமாக இயற்றுகிறார். அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தில் இருந்த நேருவிடம் அதற்கான முன் நிபந்தனையோடே அச்சட்டத்தை எழுதினார். ஆனால் அன்றைய இந்து சனாதானவாதிகளின் தலைமையில் பெண்கள் கூட்டம் தமது விடுதலைச் சட்டத்தை தாமே எதிர்த்துப் போராடியதை வெறும் அரசியல் சூழலாகப் பார்க்க முடியாது. முழுக்க முழுக்க இந்து மதத்தின் பெண்ணொடுக்கு மறையாகவே அப்போராட்டம் அமைந்திருந்தது எனலாம். ஆக பெண் ஒடுக்குமுறை என்பது இந்து மதத்தின் அடிப்படையிலேயே உயிர்த்துக்கொண்டு இருப்பதால் பெண் விடுதலை என்பதை பௌத்தப் பண்பாட்டை முன் வைத்துப் பேவேண்டியுள்ளது. இந்துப் பண்பாட்டிற்கு எதிரான பௌத்தப் பண்பாட்டைப் பற்றிய எந்தவொரு அக்கறையும் அற்றுப் பேசப்படுகின்ற பெண்ணியம் ஜாதி இந்துத்துவத்தின் மீதான நம்பிக்கையையே அடையாளப்படுத்துகிறது. மார்க்சியத்தை பௌத்தத்தோடு ஒப்பிடும் டாக்டர் அம்பேத்கர் பௌத்தம் போன்ற சமத்துவத்தை முன் வைக்கும் மார்க்சியம் இந்தியச் சூழலிலுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான பண்பாட்டு விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் வெறும் பொருளாதார மேம்பாட்டை நோக்கி நகர்வது மார்க்சியத்தின் குறையல்ல. மாறாக மார்க்சியவாதிகளின் குறையாகவே உள்ளது. இன்று பொதுவுடைமைவாதிகள் தம்மோடு பிணைந்துள்ள இந்து மதத்தை பிரித்தெடுக்காமல் இந்தியச் சூழலுக்கேற்ப மார்க்சியப் பாதையை வகுத்துக்கொள்ளாமல் மேலோட்டமாக ஜாதி எதிர்ப்பற்ற தீண்டாமை எதிர்பை பேசுவதைப் போன்றே பெண்ணியவாதிகளும் செயல்படுகின்றனர். ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண்ணியவாதகளுக்கு இந்து மத்த்தை எதிர்க்கும் திராணிகளற்றுப் போவார்களேயானால் நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைத்திடும்போது என்றே புலம்ப வேண்டியுள்ளது.

பௌத்தப் பெண்ணியம் குறித்த சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஜந்த வரிகளுக்கோ பத்து வரிகளுக்கோ மிகாமல் பதிலளிக்க முடியாது. விடுதலையை நோக்கி நகரும் பெண்களின் - ஆண்களின் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பௌத்தப் போராட்டத்தின் அனுபவமே பௌதத்ப் பெண்ணியத்திற்கான பதிலை உணர்த்த முடியும். தற்காலத்தில் பிரபலமாகவுள்ள இசங்களின் போதையில் பௌத்தத்தின் மீது எழுகின்ற கேள்விகளும் சந்தேங்களும், பௌத்தத்தை எந்த வகையிலும் சிறுமையாக்க முடியாது. ஏனெனில் அது தத்துவ நோக்கிலும் பண்பாட்டு நோக்கிலும் விஞ்ஞான நோக்கிலும் பகுத்தறிவுடையதாய் - பயனுடையதாய் - நடைமுறைக்கு உகந்ததாய் நிமிர்ந்து நடக்கும் யானையே பௌத்தப் பெண்ணியம்.

நன்றி : உமாதேவி  

No comments: