Friday, June 04, 2010

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010வெளிவந்துவிட்டது


இனவாதம் அழிவு வாதமே
-எதுவரை இதழ் நாலில் இருந்து-

இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 1978க்குப் பின் மைய அரசாங்கம் மீண்டுமொருமுறை “சர்வ வல்லமை” பொருந்தி செயற்படுவதற்கான அரசியல் அடித்தளத்தை இலங்கை ஆளும் தரப்பிற்கு வழங்கியுள்ளது.

கேள்விக்குட்படுத்தப்பட முடியாத நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுடன் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கக்கூடிய பாராளுமன்றப் பலத்தையும் பெற்றுவிடக் கூடிய அரசியல் சூழலானது, அரசியலமைப்பு ரீதியாக இலங்கை புதிய மாற்றத்திற்குள் நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளது.

அமுலுக்கு வரவுள்ள புதிய அரசியலமைப்பானது இலங்கை அரசினதும் அரசாங்கத்தினதும் பண்புகளில் கணிசமான மாற்றத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவே இருக்கும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அடித்தளமான அகபுறக்காரணிகளை தீர்ப்பதற்கு மாற்றாக, மேலும் இந்த விடயங்களில் புதிய அரசியலமைப்பானது சிங்கள தேசியவாத சிந்தனைகளை அரசின் கொள்கையாக முன்னிலைப்படுத்தும் என்பதை துணிந்து எதிர்வு கூறமுடியும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாகவும் அவரினதும் அவரது குடும்பத்தினதும் அதிகாரத்தை பல ஆண்டுகளுக்கு நீடித்து பாதுகாக்கக் கூடியதாகவும் இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதுடன் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமை, கருத்து சுதந்திர உரிமை, பன்மைத்துவ அரசியல் அடையாளம் என்பனவற்றிற்கு பெரும் சவாலாகவே இருக்கப் போகிறது.

தேசிய இனப்பிரச்சினையை மிக ஆழமாக்கியதில் 1978இல் அமுலுக்கு வந்த ஜே.ஆர். ஜெய வர்த்தனாவின் அரசியலமைப்பிற்கு பெரும் பங்குள்ளது. அந்த காயங்களை ஆற்றமுடியாது அழிவும் துயரமும் மனக்கசப்பும் முரண்களும் நீடித்து வந்த காலகட்டத்தில் மீண்டுமொரு அரசியல் அமைப்பு இறுக்கம் நிகழ்வது பதற்றத்தையும் அச்சத்தையுமே தருகிறது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மறுப்பு, தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரதிநிதித்துவக் குறைப்பு, பல இன கலாச்சார அடையாளங்களை பலவீனமாக்கும் அரசிய லமைப்பு ஏற்பாடுகள் மேலும் நிலைமையை சிக்கலாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த நிலைமை தொடர்வதற்கும் மீளமீள இறுக்கமுற்று புதிப்பிக்கப்படுவதற்குமான அகபுறச் சூழல்களை உருவாக்கி வருபவர்கள் சிங்கள இனத் தேசியவாதிகள் மட்டுமல்ல. தமிழ், முஸ்லிம், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் எனச் சொல்லி வருகின்ற அனைத்து அரசியல் தலைமைகளுமே இந்த நிலை நீடிப்பதற்கு காரணகர்த்தாக்களாவர்.

இனவாதத்தை சிங்கள தேசியவாத சக்திகள் மட்டுமே தங்களது அரசியல் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தமிழ் முஸ்லிம் மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ள மக்கள் மத்தியில் தீவிர இனவாதத்தையே பரப்புரை செய்து மக்களை இனவாத மயப்படுத்தியே வைத்துள்ளனர்.

சிங்கள இன வெறுப்பு, தமிழின வெறுப்பு, முஸ்லிம் இன வெறுப்பு, மலையக மக்கள் மீதான வெறுப்பு என இலங்கை இனச்சூழல் இனவாதத்தில் ஆழப்புதைந்து கிடக்கிறது. சிறுபான்மை தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்ற புறக்கணிக்கப்படுகின்ற மக்கள் என்ற வகையில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டுமேயழிய இனவாத அடிப்படை வேலைத்திட்டங்களின், பிரச்சாரங்களின் ஊடாக அல்ல என்பதை இந்த நெருக்கடிமிக்க காலகட்டத்தில் பிரங்ஞைபூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர்: எம்.பவுசர்



No comments: