வங்கம் தந்த சிங்கம்!- எஸ்.ஜி.ரமேஷ்பாபு-வங்கம் தந்த சிங்கம்: ஜோதி பாசு['தோழரே, உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்' என்னும் தலைப்பில் அண்மையில் ம்றைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு பற்றித் 'தடாகம்.காம்' இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பிரசுரமிது.] உலகினை புரிந்துக்கொள்வதற்கும் அதன் சூட்சுமங்களான தத்துவங்களை மக்களிடம் விளக்குவதற்கும் இறு வேறு தன்மைகள் உள்ளன என்று மனித குலம் நீண்ட நாள் நம்பி வந்தது. சாதாரண மனிதர்களால் உலகின் சூட்சுமங்களை அதன் அடிப்படையான தத்துவங்களை புரிந்துக்கொள்ள இயலாது என்றே பல தத்துவஞானிகள் நம்பினர், அவ்வாரே செயல்பட்டனர். ஆனால் கார்ல்மார்க்ஸ் மட்டுமே முதன் முதலாக அந்த வரட்டு நம்பிக்கையை உடைத்தெரிந்து, மக்கள் வாழ்நிலையை சார்ந்தே உலகின் சூட்சுமங்கள் என்று நம்பப்படுகிற தத்துவங்கள் இயங்கமுடியும் என்று நிருபணம் செய்தார். எந்த ஒரு தத்துவமும் சூன்யத்திலிருந்து பிறப்பதில்லை அது மக்கள் வாழ்நிலையை அதாவது பொருள் வயப்பட்ட வாழ்க்கையிலிருந்தே பிறக்கிறது என்பதை விஞ்ஞான அடிப்படையில் நிரூபணம் செய்தார்.
அந்த தத்துவர்த்த அறிவியல் நிரூபணங்களை முதலாய் கொண்டே லெனின், மாவோ, பிடல்காஸ்ட்ரோ, ஹோ-சி-மின் போன்றோர்களால் ஒரு புதுமையான, உழைக்கும் மக்களை முன்னணிப் படையாக கொண்ட ஆட்சிகளை வென்றெடுக்க முடிந்தது. மார்க்சியத்தை முன்னேறிய அறிவியல் துணையிடனும், நடைமுறை போராட்டத்துடனும் மேலும் வளர்த்தெடுத்தார் மாமேதை லெனின். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பாராளுமன்றத்தை புரட்சிக்கான பாதையில் பயன்படுத்துவது குறித்து அவரால் சிறந்த வழிகாட்டுதல்களை செய்யமுடிந்தது.
இந்தியா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாட்டில், வர்க்க அணிதிரட்டலுக்கு தடையாய், ஆயிரக்கணக்கான சாதிகள் உள்ள நாட்டில் நினைத்த மாத்திரத்தில் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் மாற்றத்தை உருவாகிட முடியாது. அப்படி நினைப்பதும் நடப்பது மார்க்சிய மயக்கநிலை அல்லது வரட்டு சூத்திரம். "மாவோ பாதையே எங்கள் பாதை" போன்ற அறைவேக்காட்டுதனமான கோஷங்கள் பிறந்தது இந்த மயக்க நிலையால்தான். ஆனால் இந்தியாவில் முற்போக்கு அரசியலுக்கு மக்களை திரட்டும் அதே நேரத்தில், இடையில் பூர்ஷ்வா பாராளுமன்றத்தை, சட்டமன்றத்தை மக்கள் நலன் பயக்கும் மன்றமாக ஏன் பயன்படுத்தக்கூடாது? உழைக்கும் மக்கள் தத்துவமான மார்க்சியத்தை இந்தியா போன்றதொரு நாட்டில் கிடைக்கின்ற வாய்ப்பை வைத்து மக்களிடம் எப்படி கொண்டு செல்வது? இந்த கேள்விக்கு இந்தியாவில் வெற்றிகரமாக பதில் அளித்த கம்யூனிஸ இயக்கத்தின் தளகர்த்தாகளில் இ.எம்.எஸ் சும், ஜோதிபாசுவும் முக்கிய தலைவர் ஆவார்கள். இந்த பின்னணியில் தோழர் ஜோதிபாசுவின் பங்களிப்பை பார்பதுதான் அவரது பிரமாண்டமான ஆளுமையை புரிந்துக்கொள்ள உதவும்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடிநாதமாக திகழ்ந்த தோழர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற விவசாயிகளின் உரிமை கேட்ட போராட்டமான தோ - பாகா இயக்கத்தில், தேசப்பிரிவினை காலகட்டத்தில் மதவெறி கலவரத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், 1959 -ம் ஆண்டு பட்டினியால் வாடும் மக்களை பாதுகாக்க நடைபெற்ற மகத்தான உணவு இயக்கத்தில், 1960 -களில் நடைபெற்ற நிலப் போராட்டங்களில், அவசரநிலை பிரகடணத்தை இந்திரா காந்தி அமலாக்கிய அரைப் பாசிச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரிக்க முடியாத தலைவராக, மக்கள் ஊழியராக திகழ்ந்தார். அவரது தலைமையில் அந்த மாநில மார்க்ஸிட் கட்சி மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்தது. அதானால்தான் 1977க்கு பிறகு மதக்கலவரம் நடக்காத மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கிறது. 1984ல் இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கிய மக்கள் வேட்டையாடப்பட்ட போது மேற்குவங்கத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். தோழர் ஜோதிபாசுவின் குறிப் பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்று, சட்டமன்றப் பணியை சட்டமன்றத்திற்கு வெளியில் உள்ள மக்கள் இயக்கங்களேடும், தொழிலாளர் போராட்டங்களேடும் ஒருங்கிணைத்தது.
1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட போது மேற்கு வங்கத்தில் பிரமோத் தாஸ் குப்தாவுடன் இணைந்து மிகச் சரியான உத்திகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி கட்சியை மாபெரும் சக்தியாக வளர்ப்பதில் மிக முக்கியப் பங்காற்றினார். கட்சியின் அரசியல் பிரச்சாரங்களில், வெகுமக்கள் இயக்கங்களில், சட்டமன்றத்தில் தோழர் ஜோதிபாசு மகத்தான தலைமைப் பாத்திரத்தை வகித்தார். 1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 9 உறுப்பினர் கொண்ட கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவில் கடைசியாக உயிர் வாழ்ந்த தலைவர் ஜோதிபாசு இப்போது இல்லை.
1946இல் மாகாண சட்டசபைத் தேர்தலில் தோழர் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது. தான் விரும்புகின்ற வரை வெல்ல முடியாதவராக அல்லது மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுபவாராக அவர் இருந்தார். அப்போது முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்து வதற்கும், சட்டமன்றத்திற்கு வெளியே நடக்கும் இயக்கங்களை வலுப்படுத்து வதற்கும் சீரிய முறையில் பயன்படுத்தினார். இரண்டுமுறை அவர் துனை முதல்வராக பணியாற்றினார். 1967 - 70ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களில் காவல்துறை தலையிடுவதை அவர் அனுமதிக்கவில்லை. வங்கத்தில் தீவிரமடைந்த நிலப்போராட்டத்தின்போது, பினாமி நிலங்களை கண்டறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு குறுக்கே நிற்காது என்று ஜோதிபாசு அறிவித்தார்.
1977 ஜூன் 21, சரியாக காலை 10.30 மணிக்கு முதலாவது இடது முன்னணி அரசின் அமைச்சரவை பதவியேற்றது. அதன் முதல்வராக தோழர் ஜோதிபாசு பதவியேற்றார். அந்த நிலையை அவர் இப்படி விளக்குகிறார்
"என்னைத்தவிர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணபாத கோஷ், டாக்டர் அசோக் மித்ரா, பார்வர்ட் பிளாக் சார்பில் கனய் பட்டாச்சார்யா, ஆர்எஸ்பி சார்பில் ஜதின் சக்ரவர்த்தி ஆகியோர் அன்று பதவி ஏற்றனர். மேலும் 16 அமைச்சர்கள் ஜூன் 23ஆம் தேதியன்று பதவி ஏற்றார்கள். மேலும் 7 பேர் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். புதிய அரசாங்கம் மேற்கொண்ட முதல் முடிவு, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது என்பதுதான். அமைச்சரவை பொறுப்பு களை விநியோகிப்பதில் அனுபவத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஒரு சிலரின் நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே இப்போதுள்ள சட்டங்கள் அனைத்தும் அமைந்திருந்த நிலையில், எங்களுக்கு முன்னால் கடுமையான நேரம்தான் காத்திருந்தது. மாநில அரசிற்கும் மிகக்குறைந்த அதிகாரமே இருந்தது. இவற்றிலும்கூட மத்திய அரசின் தலையீடு இருந்தது. முந்தைய அரசு பறித்த உரிமைகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதுதான் எங்களது முதல் கடமையாக இருந்தது.
இதற்கு முந்தைய ஐக்கிய முன்னணி அரசுகளைப் போல இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே, பதவியிலிருந்து இறக்கவே முடியாது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். முதலாவதாக, முந்தைய காலங்களை ஒப்பிடும்போது இந்த முறை எங்களது வலிமை பெரிதாக இருந்தது. அடுத்து, இந்த முறை இடதுமுன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே ஒற்றுமையும் அதிகமாக இருந்தது. மக்களும் எங்களேடு இருந்தார் கள். எனவேதான் தலைமைச் செயலகத்திலி ருந்து மட்டுமே ஆட்சி செய்ய மாட்டோம் என்ற கோஷத்தை நாங்கள் எழுப்பினோம்".
- இடதுமுன்னணியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்த 36 அம்சங்களில் 21 திட்டங்களை அவர்களால் அமல்படுத்த முடிந்தது. மீத மிருந்தவை ஓரளவிற்கு நடைமுறைப்படுத் தப்பட்டது. நிலச்சீர்திருத்தம்தான் அவர்களது முன்னுரிமை திட்டமாக இருந்தது. குத்தகைதாரர்களை பதிவு செய்யும் இயக்கம் தீவிரமாக நடத்தப்பட்டது.
- விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக்கூலியும் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கொத்தடிமை முறையானது கடுமையான வகையில் நசுக்கி ஒழிக்கப்பட்டது.
- காங்கிரஸ், நக்சலைட் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 1700 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அரசியல் அமைப்புச்சட்டம் 311(2) சி பிரிவின் கீழ் வேலைநீக்கம் செய்யப்பட்டோர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
- இடது முன்னணி அரசானது ஜனநாயக உரிமைகளை மீண்டும் மாநிலத்திற்கு அளித்தது மட்டுமின்றி, அதை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டது.
- தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை வழங்கப்பட்டதோடு, நியாயமான காரணங்களுக்காக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவெரு வேலை நிறுத்தத்தையும் அடக்கி ஒடுக்க போலீஸ் அனுப்பப்படாது என்று அறிவித்தனர். போலீஸ்காரர்களும் தங்களுக்கான சங்கம் உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
- நீண்ட நாட்களாகவே சுயாட்சி பெற்ற அமைப்புகளுக்கும் நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதையும் செயல்படுத்தினர். மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்தி, அதிகாரத்தை பரவலாக்குவதற்கான சரியான திசைவழியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- 1978 ஜூன் 4ஆம் தேதியன்று பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தம் 55,952 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் சரியான நேரத்தில் திரண்டெழுந்தனர். கிராமங்களின் தோற்றமும் மாற்றத்தை நோக்கிச் சென்றது. இந்த பஞாயத்து களின் மூலமாகவே இடது முன்னணி அரசு தனது நிலச்சீர்திருத்த திட்டத்தை துவங்கியது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்கள் கைப்பற்றப்பட்டு, நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மின்சாரம், பாசனம் போன்ற இதர துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த 33 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் இடது முன்னணி படைத்த சாதனைகளுக்கெல்லாம் இந்த முதல் அரசாங்கம் அடிநாதமாய் இருந்தது எனில் அது மிகையில்லை. இன்று இந்தியாவில் நிலச்சீர்திருத்த சட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள நிலங்களில் சரிபாதி மேற்குவங்க அரசு கொடுத்திருக்கிறது என்பதோடு ஒப்பிட்டு இந்த மகத்தான சாதனையை நம்மால் புரிந்துக்கொள்ள இயலும். கொடிய உணவு பஞ்சம் தாக்கிய மாநிலம் உணவு உற்பத்தியில் தன்னிரைவு அடைவது மகத்தான சாதனை. இது மக்களுடன் இடையறாது தொடர்பு கொள்ளும் இடத்தில் மட்டுமே சாத்தியம்
தனது சொந்த வாழ்க்கையில் அவர் நினைத்திருந்தால் அன்றிருந்த வங்கத்தில் உள்ள பல செல்வந்தர்களைப் போல் வாழ்ந்திருக்க முடியும். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறுவது 1930 ஆம் ஆண்டுகளில் அத்துனை எளிதானதல்ல. ஆனால் அவைகளை ஒதுக்கி தள்ளினார். தனது பட்ட மேற்படிப்பை முடித்து திரும்பிய அவர் தொழிற்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியாவில் இருந்த பலதொழிற்ச்ங்கவாதிகளைப் போல் அவர் செயல்படவில்லை. தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியலை போதித்தார். அதனால்தான் அவர் தொழிலாளர்களிடம் நிலைத்திருக்க முடிந்தது. அவரது எளிமையான அனுகுமுறை அவரது சித்தாந்தம் கொடுத்தது என்பதை அவர் பெருமையுடன் குறிப்பிடுவார். மிகப்பெரிய தத்துவ விஷயங்களை மக்களுக்கு புரியும் மொழியில் அவரால் விளக்க முடிந்ததால்தான் அவர் பின்னால் மக்கள் அணி திரண்டனர். வெறும் வார்த்தைகளால் அடித்தட்டு மக்களிடம் சுதந்திரத்தை சொன்ன காங்கிரஸ் இந்திய நாட்டின் முதலாளிகளின் நலனை விட்டுத்தரவில்லை அன்றும் இன்றும். ஆனல் உன்மையான சுதந்திரம் உழைக்கும் மக்கள் விடுதலைதான் என்று கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் அன்றும் இன்றும். விடுதலை போராட்டத்துடன் உழைபாளிகளின் போராட்டத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தையும் ஒன்றினைப்பதில், சுதந்திரத்திற்கு பின் அந்த உழைப்பாளி மக்களின் வாழ்வியல் போராட்டத்தையும் தோழர் ஜோதிபாசு ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டார்.
ஒரு வலுவான இயக்கத்தை கட்டிட அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். அரசு கொடுத்த வீட்டில்தான் இறுதிவரை வாழ்ந்தார். தனது வருமானத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி கொடுக்கும் சம்பளத்தில் வாழ்ந்தார். சொத்துக்களை சேர்க்கும் நோக்கம் அவருக்கில்லை என்பது அவரது வாழ்க்கை நிருபணம் செய்துள்ளது. சென்னையில் நடந்த கட்சியின் அகிலைந்திய மாநாட்டில் இதர பிரதிநிதிகளுடன் வரிசையில் நின்று தேனீர் பருகியது அதிசய தகவலாக தமிழக செய்தி ஊடகங்கள் பிரசுரம் செய்தன. இவையெல்லாம் தோழர் ஜோதிபாசுவின் சொந்த குண்நலன் என்று புகழ்ந்துரைப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. அது தனது இயக்கத்தின் இயல்பு என்பார். தனிநபர்களுக்கு வராற்றில் முக்கிய பாத்திரமிருப்பது உண்மைதான் ஆனால் தனிநபர்களே வரலாற்றை படைக்க முடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்பதை அவர் புரிந்திருந்தார்.
ஒருவகையில் உண்மையும் அதுதான். திரிபுராவின் முதலமைச்சாராக பத்து ஆண்டுகள் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிருபன் சக்ரவர்த்தி தனது பதவி காலம் முடிந்ததும் கையில் இரண்டு பெட்டிகளுடன் சாலையில் நடந்து சென்றார். நிருபர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்ட போது எனது கட்சி அலுவலகத்திற்கு என்றார். ஏனெனில் அவருக்கு சொந்தமாய் வீடு கூட கிடையாது. சமீபத்தில் மறைந்த மதுரையில் பத்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த மோகனுக்கு சொந்தமாய் வீடு இல்லை. அவர் வைத்திருந்த வாகனம் எம்.80 கட்சி வாங்கி கொடுத்தது. தனி மனிதர் எவ்வுளவு உயரிய குணத்துடன் இருப்பினும் அவர் சார்ந்திருக்கின்ற இயக்கம் சரியான தத்துவத்தை கொண்டிருந்தால்தான் அந்த தனி நபரால் அதை செழுமைபடுத்த முடியும்.
அதனால்தான் தனக்கு பிரதமர் பதவி வாய்ப்பு கிடைத்த போதுகூட கட்சியின் ஒப்புதலை பெறாமல் அந்த பொறுப்பை ஏற்க முடியாது என்று உறுதியாய் நின்றார். அந்த கட்டுப்பாடும். உறுதியும் அவரது ஆளுமையின் அடையாளம். அந்த ஆளுமைதான் அவரை அரசியல் சிகரத்தில் நிறுத்தியது. மதசார்பின்மைக்காக, சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக, நிலமற்ற மக்களுக்கு ஆதரவாக இறுதிவரை போராட வைத்தது. இந்தியா போன்ற முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசமைப்பு அதிகாரத்தினுள் இருக்கும் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துக்கொண்டே, அதில் கிடைக்கும் வாய்ப்பை, மத்திய அரசின் கடுமையான பழிவாங்கும் போக்கு இருந்தால் கூட மக்களுக்காக எப்படி இயங்கலாம் என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியவர் அவர். அவரது இழப்பு இந்திய இடதுசாரி இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். ஆனாலும் வெற்றிடம் எப்போதும் நிரம்பும் தன்மை உள்ளது என்ற உண்மையும் உடன் வருகிறது.
அரசியல் என்றாலே சாக்கடை என்று தினம்தினம் இளைஞர்கள் மத்தியில் கருத்து பிரச்சாரம் நடத்தப்படுகிறது. தனியார்மயம், தாளாரமயம், உலகமயம் போன்ற மயங்கள் வித்தைத்துள்ள சுயம் சார்ந்த வளர்ச்சி அதற்கு உரம் சேர்க்கிறது. தனது வாழ்க்கை மட்டும் பாதுகாப்புக்குறியது மற்றவர் குறித்து எதற்கு கவலை? என்பது யாரும் போதிக்காமல் ஊடகங்களின் வாயிலாக பொது புத்தியில் அடித்து இறக்கப்படுகிறது. அரசியலில் பதவி பெற எதுவும் செய்யலாம் என்பது தனது வேலைக்கு லஞசம் கொடுப்பதை போல இயல்பானது என நம்பவைக்கப்பட்டுள்ளது. அவரச உலகின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பணம் சம்பாதிக்க படைக்கப்பட்டதாக மின்னனு ஊடகங்கள் போதிக்கின்றன. நெருக்கடிகளில் உழலும் மக்களுக்கு புதிய புதிய வடிவில், தோற்றத்தில், பெயரில் சாமியார்களும் சாமிகளும் தேவையாய் இருக்கிறது. கஞ்சா சாமியார் முதல் கார்ப்ரேட் சாமியார் வரை கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்திருப்பது உலகமயத்தின் விளைவு என்பதை புறம் தள்ள முடியாது உண்மையாகி உள்ளது.
இப்போது மீண்டும் துவக்கத்திற்கு வருவோம். சாதாரண மனிதன் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தனக்கு மேலான ஒரு சக்தியை நம்பத் துவங்கும்போது சூட்சுமங்கள் நிறைந்த தத்துவங்கள் வேகமெடுக்கின்றன. உன்னால் எதுவும் முடியாது, எல்லாம் அவன் செயல் என்று தனது பிரச்சனைகளுக்குகாக போராடாமல் மக்களை பார்வையாளர்களாக வைத்திட இந்த தத்துவங்கள் விரும்புகின்றன. ஆனால் ஜோதிபாசுகள் வேண்டுவது, எதுவும் மக்களை மீறி நடப்பதல்ல, மக்கள் பார்வையாளர்கள் அல்ல பங்கேற்பவர்கள். மக்கள் தங்கள் போராட்ட சக்தியின் மீது நம்பிக்கைவைக்க வேண்டும். அரசியல் சாக்கடை என்று போதிக்கப்படுவது இளம் தலைமுறையை அதிலிருந்து விலக்கிவைக்கதான். ஏன் நேர்மையான அரசியல் இல்லை. என்னைப்போன்றவர்கள் இருப்பது தெரியவில்லையா? என்று தனது வாழ்க்கை மூலம் வினா எழுப்புகிறார். பதில் சொல்வது இளம் தலைமுறையின் கடமை என கருதுகிறேன்.
உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்
தோழர் ஜோதிபாசு! வீரவணக்கம்.
நன்றி :தடாகம்