ஜனாதிபதி தேர்தல் தெரிவிக்க விரும்புவதென்ன ?
-வி.சிவலிங்கம் -
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் குறுகலான ஒரு சந்துக்குள் சிக்கியுள்ளது. கடந்த 30 வருடங்களிற்கும் மேலாக, நாட்டை உலுக்கிய தமிழ்க் குறுந்தேசியவாதமும், இதனை ஒடுக்குவதற்காக சிங்களத் தேசியவாதம் கலந்த அரச ஒடுக்குமுறையும் அதற்கான விலையைக் கொடுத்துள்ளன. புலிகளின் தேசியவாதம் தோற்கடிக்கப்பட்டதாக இறுமாப்பு அடைந்திருந்த சிங்களத் தேசியவாதம் நாட்டின் ஜனநாயகத்தை அடமானமாக வைத்தே இந்த வெற்றியை ஈட்டியது. நாட்டில் காணப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் ஊழலின் இருப்பிடமாக மாறின. ஆயுதப் படைகள், அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மாறி, ஒரு குழுவினரின் ஆட்சி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மொத்தத்தில் தேசத்தின் ஜனநாயக வாழ்வு மோசமான நிலைக்குச் சென்றது.
போரின் வெற்றியினால் பெருமிதமடைந்த மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்பாகவே தேர்தலை நடத்துவதற்கு முன்வந்தார். அடுக்கடுக்காக இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த பெரும் தோல்வியும் மேலும் அக்கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களும் தேர்தலில் தன்க்கு வெற்றியை ஈட்டித் தரும் என அவர் நம்பினார்;. எனவே இதுவே சரியான தருணம் எனக் கருதிய ஜனாதிபதி மீள்தெரிவுக்கான தேர்தலில் குதித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், ஊடகங்களுக்கெதிரான தாக்குதல்கள், மேற்குலக நாடுகளுக்கு எதிரான போக்குகள், ஈரான், லிபியா, பர்மா போன்ற ஜனநாயக விரோத நாடுகளுடனான நெருக்கமான உறவுகள் போன்றவற்றினால் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கினார். எனவே ஜனாதிபதி தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று நிரூபிப்பது பிரதான தேவையாகியுள்ள நிலையில்தான் இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் நாட்டின் சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரையில், அதுவும் குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தளவில், முக்கியமான தேர்தலாகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் துப்பாக்கி மூலம் ஒடுக்கப்பட்டு முடக்கப்பட்டன. புலிகளின் முன்னணி அமைப்பாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டணி இக்கொடுமைகள் குறித்து மௌனம் காத்தது. தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயகம் குற்றுயிராக்கப்பட்டது. மக்கள் வரலாறு காணாத மிகப்பெரிய மனித அவலங்களைச் சந்தித்தார்கள். இன்று தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட மிகப் பெரிய ஜனநாயக விரோத சக்தி நிர்மூலமாக்கப்பட்ட நிலையில், அங்கு ஜனநாயக வாழ்வுக்கான அரும்புகள் துளிர்விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த வாய்ப்பினை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குமா இல்லையா என்பதே நம்முன் உள்ள கேள்வியாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரில் யார் இந்த வாய்ப்பைத் தருவார்கள்? இதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான அரசியல் பின்புலம் யாரிடம் உள்ளது? தற்போதுள்ள அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என வாதிடப்படுகின்றது. அவ்வாறான ஆட்சி மாற்றம் சாத்தியமா? அல்லது அவ்வாறான ஆட்சி மாற்றம் எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைப்பதை விட, இந்த இரண்டு அபேட்சகர்களினதும் கொள்கைகள், கோட்பாடுகள், வாய்ப்புகள், மற்றும் அவர்களது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சக்திகள் என்பன பற்றி விவாதிப்பதன்மூலம் வாக்காளர்கள் தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான அதிகளவு தகவல்களை வழங்க முடியும். இதுவே இக்கட்டுரையின் நோக்கமுமாகும்.
அவ்வாறான ஒரு பரந்த எண்ணத்தை அடிப்படையாகக்கொண்டு முதலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களின் பின்புலம் பற்றி ஆராய்வோம்.
இவர் இராணுத்தில் 40 வருடங்கள் சேவை புரிந்தவர். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இவரது பணியாகும். நாட்டின் பாதுகாப்பு என்பது தேசத்தின் ஜனநாயக கட்டுமானங்கள் மற்றும் அரசியலமைப்பு வழங்கும் விதிகளுக்கு அமைவாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாகும். அந்த வகையில், இவர் இராணுவத்தின் பிரதான தளபதியாக செயற்பட்டாரா என்பதே எமது கேள்வியாகும். நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான முழுமையான தகவல்களை அரசின் தலைமைக்கு வழங்குவதும் அந்த அரசியல் தலைமையின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய பாதுகாப்புத் திட்டங்களை வரைந்து செயற்படுத்துவதும் இராணுவத் தலைமையின் கடமையாகின்றது. புலிகளுக்கு எதிரான போர்த்திட்டங்கள் வரையப்பட்டபோது நாட்டின் ஜனநாயக வாழ்வுக்கு முதலிடம் வழங்கப்பட்டதா? நாட்டு மக்களின் ஒரு பிரிவினராகிய தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட கவனம் என்ன? புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்தும் திட்டங்கள் காணப்பட்டதா? இவ்வாறான கேள்விகளுக்கான குறைந்த பட்ச பதில்கள் எதையாவது எம்மால் காண முடிகின்றதா?
இப்போரின்போது சிங்களத் தேசியவாதம் ஆற்றிய பங்கு என்ன? மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியல்வாதி என்ற வகையில் சிங்களத் தேசியவாதத்தை தனது அரசியல் தேவைக்கு பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் நாட்டின் இராணுவம் சிங்கள தேசியவாதத்தின் சக்தியாக செயற்பட்டதா அல்லவா என்பதே எம்முன் உள்ள கேள்வியாகும். அரசு (state) என்பதும் அரசாங்கம (government) என்பதும் வெவ்வேறானவை. அரசு என்பது நிலையானது. அரசாங்கம் என்பது தற்காலிகமானது. இராணுவம் என்பது அரசின் பகுதியே தவிர, அரசாங்கத்தின் பகுதி அல்ல. இலங்கை அரசியல் வரலாற்றில் அமைந்த அரசாங்கங்கள் யாவும் இராணுவத்தினை தமது கருவியாகப் பயன்படுத்தின. ஆனால் மகிந்த தலைமையிலான அரசாங்கம் அரசுக் கட்டுமானத்தை முழுமையாகவே இராணுவமயமாக்கியது. அரசாங்கத்தின் முழு அனுசரணையும் அரசின் ஒரு பகுதியாகிய இராணுவத்துக்குக் கிடைத்தன. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆயுதப்படையின் தளபதியாகவும் அமைந்ததால் இராணுவம் சட்டத்திற்குப் பயப்படாது செயற்பட்டது. இராணுவம் என்பது பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டது. உதாரணமாக, உளவுப்பிரிவு, குண்டர் பிரிவு போன்ற பலவற்றை உள்ளடக்கியது. இதன் மூலம் பத்திரிகையாளர்கள், வர்த்தகர்கள், அரசியல் எதிரிகள், தொழிற்சங்கவாதிகள், மாணவர் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இராணுவத்தின் தகவல்களின் அடிப்படையில்தான் வீதித் தடைகள், வீடுகளில் புகுந்து சோதனையிடுதல், கொழும்பில் இருந்து இரவோடிரவாக மக்களை ப் வண்டியில் ஏற்றி அனுப்புதல், விசாரணை இன்றிச் சிறையில் இடுதல், சிறையில் படுகொலைகள் போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றன. இவ்வாறான நடவடிக்கைகள் யாவற்றையும் அரசியல் தலைமையின் தனியான உத்தரவின்பேரில் நடைபெற்றதாகச் சொல்வதா அல்லது அரசியல் தலைமை என்பது இராணுவத்தின் பாதுகாப்புக்குள் அகப்பட்டதால் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொண்டதா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புப் படைகளும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயற்பட்டதன் மூலமே நாட்டின் ஜனநாயகம் சீர்குலைந்த நிலையில் போரை வெற்றி கொண்டார்கள் என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.
எனவே இந்த அடிப்படையில்தான் சரத் பொன்சேகா அவர்களின் ஜனநாயகம் என்பதை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. இவர் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டிருப்பாராகில் முதலில் தாம் பதவிக்கு வந்ததும் போர் தொடர்பான முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுவதாகக் கூறவேண்டும். போர் தொடர்பான முழுமையான விசாரணை ஒன்றின் மூலமே சிங்கள தேசியவாதத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்த முடியும். இது சாத்தியமா? இவர் சிங்களத் தேசியவாதத்தின் ஒரு பிரதிநிதியாவார். அரசியல் கட்டுமானங்களில் இரண்டறக் கலந்திருக்கும் இத் தேசியவாத சிந்தனைகள் ஒழிக்கப்படாதவரை ஜனநாயகம் நிலவுகின்ற ஒரு நாட்டை எம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. ஊழல், குடும்ப ஆட்சி என்பன இதன் விளைவுகளால் ஏற்பட்டவையே. கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் நிலவும் திறந்த பொருளாதாரக் கட்டுமானம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை, விகிதாசார பிரதிநிதித்துவம் என்பன ஊழலுக்கான உந்துவிசைகளாகும். புலிகளின் 30 வருடகால பயங்கரவாதமானது சிங்களப்பகுதிகளில் கட்டுப்பாடற்ற பொருளாதாரம் வேரூன்றுவதற்கான அதிக வாய்ப்பை வழங்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தனியார்துறை மீதான முதலீடு, லஞ்சம், ஊழல் என்பன நாட்டின் பிரிக்க முடியாத அம்சங்களாக அமைந்தன. இதன் காரணமாக, இந்த 30 வருட காலங்களில், சர்வதேச வர்த்தகத் துறையுடன் இணைந்த புதிய சிங்கள வர்த்தக சமூகம் பலமடைந்துள்ளது. இச் சமூகம் தமிழ், மு;லிம் வர்த்தக சமூகங்களை முற்றாக ஒடுக்கும் வகையில் சிங்கள தேசியவாதத்தை இராணுவத்துடன் இணைத்து பயன்படுத்தி வருகின்றன. இப்பின்னணியில் இருந்தே சரத் பொன்சேகா அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளை ஆராயவேண்டியுள்ளது.
இலங்கையின் அரசியல் வாழ்வில் அரசியற் கட்சிகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் கட்சி அரசியல்களின் நடவடிக்கைகளின் விளைவுகளே இன்றைய நிலைமைக்குக் காரணமாகும். நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் அரசியற் கட்சிகளின் துணையுடனேயே அதனை மேற்கொள்ள முடியும். எந்த விதமான அரசியற் பலமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியற் கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி., ஐக்கிய தேசியக்கட்சி என்பவற்றில் சார்ந்திருக்கும் சரத் பொன்சேகா எந்த அடிப்படை மாற்றத்தையும் செய்ய முடியாத நிலையிலேயே காணப்படுகிறார். இவரின் கட்டுப்பாட்டில் அரசியற் கட்சிகள் இல்லாத நிலையில், ஆயுதப் படைகள் மட்டுமே இவரது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருக்கப் போகின்றது. இராணுவரீதியான அனுபவத்தைக் கொண்ட அவர் அரசியற் பிரச்சினைகளை அணுகுவதற்கும் அரசியல் கட்சிகள் அவருக்குத் துணையாக இல்லாதவிடத்து எதன் மூலம் அவர் தனது ஆளுமையை நிரூபிக்க முயற்சிப்பார். நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரச்சினைகளைக் கையாளும் அனுபவமும் அரசியல் அடிப்படையில் கோட்பாடுகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையும் இல்லாதவிடத்து சகல பிரச்சினைகளும் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டுச் செல்வதாக அவர் உணரும் ஆபத்து அதிகளவில் உண்டு. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக் கோரிக்கைகள் காலப்போக்கில் பயங்கரவாதமாக வர்ணிக்கப்பட்டு, இராணுவத்தின்மூலம் ஒடுக்கப்பட்டு, அந்த அரசியல் கோரிக்கைகள் எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்ட நிலைமைக்குத் தள்ளப்பட்டதோ அதேபோன்று அரசியல் கட்சிகளின் மோதல்கள், ஊழல் மற்றும் லஞ்சம் என்பவற்றினால் சுயநலன்களை வளர்த்து வரும் கும்பல்கள் கட்டுப்பாடற்று செயற்படும் நிலைகள் ஏற்படும்போது இவற்றை ஒடுக்க பாகி;தான் போன்று ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கான ஆரம்பமாகவே நாம் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் தமது பதவிக்காலம் முடிவடைந்து சில மாதங்களிற்குள்ளாகவே அரசியலில் ஈடுபட்டு வருவது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும். அரசின் சுதந்திரமான கட்டமைப்புகளில் ஒன்றாகிய நீதித்துறை சார்ந்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இவர் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி சிறுபான்மை இனங்களின் அரசியற் கோரிக்கையைப் பலவீனப்படுத்தியதோடு, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை கேள்விக்குட்படுத்தியவர். இந்த நீதியரசர் முன்னாள் இராணுவத் தளபதியை ஆதரித்து நிற்பது என்பது நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்து மேலும் சிந்திக்க வைத்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் அப் பதவியினை எட்டுவதற்கு அவருக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் எவ்வாறான நலன்களைப் பிரதிபலிக்கின்றன என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, ஜேவிபியினரை எடுத்துக் கொண்டால், இவர்கள் அதிகாரப் பரவலாக்கத்தை முற்றாக எதிர்த்து வருகின்றனர். இவர்கள் 13வது திருத்தம் இந்தியாவின் தலையீட்டினால் உருவானது என்கிறார்கள். வடக்கு-கிழக்கை விட ஏனைய மாகாணங்களில் அதிக தமிழர்கள் வாழ்வதால் அதிகாரப் பரவலாக்கம் அர்த்தமில்லை என வாதிக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வாழ்வில் மேற்குலக ஆதிக்கம் இருப்பதாகவும் குறிப்பாக, இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாகவும் கூறி இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் போன்றவற்றிற்கு எதிராக பேசியும் செயற்பட்டும் வருகிறார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிரான போக்கைக் கொண்டிருக்கின்றது. இது அதிகாரப் பரவலாக்கத்தை ஆதரிக்கும் அதேவேளை, மேற்குலகம் மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளையும் கொண்டிருக்கிறது. எனவே முக்கியமான பிரச்சினைகளில் எதிரெதிரான போக்குகளைக் கொண்டிருக்கும் இந்தக் கட்சிகள் சரத் பொன்சேகாவிடம் எவ்வாறான தீர்வினைச் சிபாரிசு செய்வார்கள் அல்லது சரத் பொன்சேகாவினால் ஏதாவது சுயமான தீர்வை முன்வைக்க முடியுமா?
இத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றவேண்டும் எனவும் அவரது 4 ஆண்டு கால பதவிக்காலத்தில் நாட்டில் என்னவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் ஊழல், லஞ்சம், குடும்ப ஆட்சி என்பனவே எஞ்சியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இவை நியாயமானவை. இனப்பிரச்சினைக்கான எந்தவிதமான காத்திரமான முன்மொழிவையும் இவர் முன்வைக்கவில்லை. இவர் பதவிக்கு வந்த ஆரம்பத்தில் சில கல்விமான்கள் கொண்ட குழுவொன்றை அமைத்து நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைக் கொடுக்கப் போவதாக கூறி இருந்தார். அவர்களும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளையும் முன்மொழிந்தார்கள். ஆனாலும் அவ்வறிக்கைகளை அவர் தனது கவனத்திற்கு எடுக்கவில்லை. அதன் பின்னர் தென்னிலங்கையின் அரசியற் கட்சிகள் மத்தியில் இருந்து ஒரு பொதுவான அறிக்கையை எதிர்பார்த்து சர்வ கட்சிகள் மாநாட்டைக் கூட்டி இருந்தார். ஜேவிபி, ஐக்கிய தேசியக்கட்சி போன்றன வௌ;வேறு காரணங்களால் இடையில் விலகிக்கொண்ட போதிலும் திஸ்ஸவிதாரண அவர்கள் தலைமையில் அமைந்த சர்வ கட்சிகள் குழு அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கை தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதேவேளை 13வது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாகவும் இடையிடையே தெரிவித்திருந்தார். இந்த நான்கு வருட காலத்தில் போரை முன்னிலைப்படுத்த எடுத்த தீவிரம் தீர்வை முன்னிலைப்படுத்துவதற்கான தலைமையை வழங்குவதில் இருக்கவில்லை. தற்போதும் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காகப் போட்டியிடும் இவர் இதுவரை இனப்பிரச்சினை தொடர்பாக எந்தத் தீர்வையும் முன்மொழிவதாக இல்லை. தற்போது வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லை எனவும் தெரிவித்து வருகின்றார். ஜனாதிபதியின் இத்தகைய போக்கானது சிறுபான்மை இனங்கள் மத்தியில் தவிர்க்க முடியாத சந்தேகத்தை விதைத்து வருகின்றது. சிங்கள தேசியவாதக் கருத்துக்கள் தேசபக்திக் கருத்துக்களாக மாற்றம் பெற்று வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான சக்திகள் தேசவிரோத சக்திகள் என அடையாளப்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.
மறுபக்கத்தில் சர்வதேச கடனுதவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளில் அப்பிரதேச மக்களின் பங்களிப்பு பெறப்படுவதில்லை. இந்த அபிவிருத்தி வேலைகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. அபிவிருத்தி இடம்பெறும் பிரதேசங்களில் உள்ள காணிகளை சிங்கள மக்கள் வாங்குவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு மறைமுகமான சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்றது. இது இலங்கை - இந்திய ஒப்பந்த நோக்கங்களுக்கு முரணானது. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெற்றபோது அப்பகுதியில் ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் அச்சபை சுயமாக இயங்க முடியவில்லை. ஆளுநரின் தலையீடுகள் அதிகரித்தன. தேர்தல் வாக்குறுதிகள் மீறப்பட்டதே எஞ்சியது. மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் மதிப்பீடு செய்வதன்மூலம் ஆட்சி மாற்றத்தைக் கோருவது அர்த்தமுள்ளதா என்பதே எம்முன் உள்ள மற்றொரு கேள்வியாகும்.
நாம் விமர்சனங்களை அர்த்தமுள்ள விதத்தில் முன்வைப்பதே நேர்மையான அணுகுமுறையாக அமையும். மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி புலிகளின் பயங்கரவாதத்திற்கெதிராகவே செலவிடப்பட்டது. கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக இலங்கையில் அமைந்து வந்த அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தோல்வியையே கண்டன. இந்த அரசுகள் இவ்வாறான யுத்தத்தில் ஈடுபட்டபோது சர்வதேச அழுத்தங்களுக்கு செவி சாய்த்து வந்தன. தமிழ் மக்களின்மீதான துன்புறுத்தல்களின்போது அழுத்தங்களும் அதிகரித்து வந்தன. இதனால் போர் முழுவீச்சில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் திகதி அமெரிக்க சர்வதேச வர்த்தக மையம் தாக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களின் நோக்கங்களையும் மாற்றின. இதனால் 2005ம் ஆண்டு பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ அவர்களின் நோக்கங்கள் நிறைவேற சர்வதேச உதவிகள் கிட்டின.
இதுவரை காலமும் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காகவே போர் என்ற நிலைமையில் இருந்து மாற்றம் பெற்று பேச்சுவார்த்தை என்பது கைவிடப்பட்ட ஒன்றாகவே தெளிவடையத் தொடங்கியது. 30 வருடங்களாகப் புலிகளுடன் போராடி வந்த அதே இராணுவம் தற்போது புதிய சூழலைத் தமதாக்கிக் கொண்டது. புலிகளால் தலைமை தாங்கி வழி நடத்தப்பட்ட குறுந்தேசியவாதத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சித்து வந்த சிங்களத் தேசியவாதம் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இறுதிப்போருக்குத் தயாராகியது. சிங்கள தேசியவாதத்தின் கூறுகளாக இயங்கிய ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி, கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரு பிரிவினர் இப்போருக்கான ஆள் திரட்டலுக்கான பின்புலமாகச் செயற்பாட்டார்கள். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக போர் நீடித்ததன் காரணமாகவே புலிகளுக்குள் உள்முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான நெருக்கமான உறவு, புலிகளுக்கு எதிரான சர்வதேசத்தடைகள், நெருக்கடிகள் என்பன போரை மிகவும் குறுகிய காலத்தில் முடிவுக்குக் கொண்டு வர உதவின. சர்வதேச ஆதரவும் சிங்களத் தேசியவாதத்தின் உத்வேகமும் மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா தலைமையிலான அரசியல் இராணுவத் தலைமையும் நாட்டின் முழு வளங்களையும் திரட்டி போரை நோக்கித் தள்ளின.
புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை கலந்த பயங்கரவாதத்தில் மிதவாத சக்திகள் மற்றும் புத்திஜீவிகள் விலகிச் செல்ல, சமூகவிரோத சுயநல சக்திகள் எவ்வளவு உள்நுழைந்தனவோ அதேபோன்று அரசினால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையில் இருந்து தேசநலனை விரும்பும் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர் ஒதுங்கிக்கொள்ள, தேசவளங்களை சூறையாடும் சுயநல சக்திகள் ஒன்றாக இணைந்துகொண்டது என்பது ஒரு பொதுவிதியாகவே அமைந்தது. போரை நடாத்துவதற்கான ஆள்திரட்டல், அதற்கான மூலவளங்களை ஒன்று திரட்டல், போருக்கான நியாயங்களின் பரப்புரைகளை மக்கள் முன் எடுத்துச் செல்லல் என்பன ஓர் ஜனநாயக விரோத சூழலிலேயே இடம்பெற்றன. நாடு முழுவதும் போரை நியாயப்படுத்தும் பிரச்சாரங்களுடன் இராணுவத் தோல்விகளை மறைக்கும் கைங்கரியங்களும் நிறைவேற்றப்பட்டன. இப்பின்புலத்தில் இருந்து பார்க்கும்போது இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அதற்கான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல, சிங்கள தேசியவாதச் சிந்தனைகள் முழுவீச்சில் ஆதிக்கம் பெற்று வந்த அந்தக் காலகட்டத்தில் சிறுபான்மை இனத்தவர் தொடர்பான ஆதரவுக் குரல் எழுப்புபவர்கள் அரசுக்கெதிராக அல்லது இராணுவக் கெடுபிடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் தேசவிரோத சக்திகளாக அடையாளப்படுத்தப்படும் பின்னணியில் தீர்வுகள் பற்றிப் பேசி இருக்க முடியுமா அல்லது அதனைக் கேட்க மக்கள் தயாராக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. தமிழ்ப் பிரதேசங்களில் புலிகளின் ஆதிக்கத்தில் தேசியவாத சிந்தனைகள் உச்சம் பெற்றிருந்த வேளை தமிழ்-சிங்கள இன ஐக்கியத்தைப் நன்றி நன்றி அறிந்தது
என்பது பாலரும்அறிந்தது.
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதவராக இருக்கலாம். ஆனால் அவரை இனவிரோதியாக அடையாளப்படுத்த முடியுமா? அவர் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஆனால் அவரால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியவில்லை. அவரால் ஏன் அவ்வாறு செல்ல முடியவில்லை? படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் எஸ் டபிள்ய ஆர் டி பண்டாரநாயக்கா அவர்கள் எந்தச் சக்திகளின் மூலம் நாட்டின் தலைவராக ஆக்கப்பட்டாரோ, அதே சக்திகளே மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த மகாசங்கத்தின் சம்மதத்தைப் பெறாமலேயே தந்தை செல்வநாயகம் அவர்களுடன் பண்டாரநாயக்கா ஒப்பந்தத்திற்குச் சென்றார். இதன் விளைவாகவே அதே சக்திகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இன்று நாட்டின் பொருளாதாரம் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. உள்நாட்டு முதலாளி வர்க்கம் தற்போது கூறுபட்டுள்ளது. அதேபோன்று சிங்களத் தேசியவாதமும் கூறுபட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முதலாளி வர்க்கம் தனக்கான இடத்தை இழந்து வருகின்றது. இது மீண்டும் உரிய இடத்தை அடைவதற்கு சிங்கள தேசியவாத சக்திகளுடன் மறைமுகமான உறவைப் பலப்படுத்தி வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த உறவு அதன் முடிவுக்கான ஆரம்பமாகும்.
இலங்கையின் இரண்டாவது பழமை வாய்ந்த கட்சியான இது, தாக்கமுள்ள எதிர்க்கட்சியாக மட்டுமல்லாது, பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியாத நிலையிலும் உள்ளது. புலிகளுடன் மேற்கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் ஒரு பகுதி திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் தனியான அரசு ஒன்றை ஸ்தாபிக்கவும் இலங்கை அரசுடன் சம அந்த்து அடிப்படையில் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவும் ரணில் அரசு வாய்ப்பளித்ததாகவும் குற்றம் சாட்டி மிகவும் பலவீனமான தலைவராகவும் விமர்சிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டாவது பலம் வாய்ந்த தலைவராகக் கருதப்பட்ட கரு ஜயசூரிய அவர்கள் அரசாங்கத்தில் மேலும் பல உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டதும் ரணில் அவர்களின் தலைமையை மிகவும் பகிரங்கமாக விமர்சித்த நிலைமையும் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுக் காலத்தை அறிவித்து நின்றது. இவ்வாறான ஒரு வரலாற்றுப் பின்னணியில் ஜேவிபிக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையேயான தேன்நிலவு முடிவுக்கு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் கணவரின் படுகொலைக்குப் பின்னால் ஜேவிபி இருப்பதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நிலையிலும் அவரின் ஊடகத்துறை அமைச்சராக இருந்த மங்கள சமரவீர அவர்கள் ஜேவிபியுடன் ஏற்படுத்தி இருந்த உறவு காரணமாக அவர்கள் சந்திரிக்கா அரசுக்கு ஆதரவளித்தார்கள். சந்திரிக்கா அவர்களின் பதவிக்காலம் இறுதியை அண்மித்த நிலையில் அடுத்த பதவிக்கால வேட்பாளர் யார் என்ற பிரச்சினைகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்தன. அப்போது மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். இதற்குத் தலைமை தாங்கிய மங்கள சமரவீர அவர்கள் ஜேவிபியுடன் இணைந்து மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தார். இதே மங்கள சமரவீர அவர்கள் பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு என்ற அமைப்பை உருவாக்கியதோடு ஜேவிபியையும் மகிந்தவில் இருந்து விலகிச் செல்ல வழி வகுத்தார்.
அதன் பின்னர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜேவிபிக்கும் இடையேயான இணக்கத்திற்கும் இவரே காரணமாக உள்ளார். இவ்வாறான அரசியல் போக்கின்போது ஜேவிபியினரின் நடத்தைகள் நாட்டின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை மையமாகக் கொண்டிருந்தன என்பதை நாம் அவதானிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராகச் சந்திரிக்கா செயற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியலமைப்பின் 17வது திருத்தத்தை உருவாக்க அவர்களே காரணமாக இருந்தார்கள். மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து மகிந்த சிந்தனை என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தியபோது புலிகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் முழுமையாக ஒத்துழைத்தார்கள்.
போர் முடிவடைந்ததும் ஏனைய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ள அரசு தயங்கியதாலும் ஊழல் அதிகரித்துச் சென்றதாலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விலகினார்கள். தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகிறார்கள். ஜேவிபியினரின் அரசியல் அணுகுமுறைகளை மையமாக வைத்துப் பார்க்கும்பொழுது இலங்கை அரசியலில் மூன்றாவது அரசியல் பாதை எவ்வாறு வழி சமைக்கப்படுகிறது என்பதையும் இரு கட்சி ஆட்சிமுறை பலமாக உள்ள சூழலில் மூன்றாவது கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் இது உணர்த்தி நிற்கிறது.
இந்த உதாரணத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய செயற்பாட்டின் பெறுபேறுகளை ஆராய வேண்டியுள்ளது. இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றிலே முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பதாகவே தாம் யாரை ஆதரிப்பது என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இது பேரம் பேசும் அரசியலின் முடிவாகவே உள்ளது. அது மட்டுமல்லாமல், கடந்தகால அரசியல் அணுகுமுறையின் தோல்வியாகவும் உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு அதன் அரசியலின் முடிவின் ஆரம்பம் மட்டுமல்ல புதிய அரசியற் பாதைக்கான ஆரம்பமாகவும் உள்ளது. அரசுடன் ஒத்துழைப்பவர்கள் துரோகிகள் என்று கூறியவர்கள் தற்போது அந்த அரசியலைத் தாமும் தத்தெடுத்துள்ளார்கள். இந்தத் தேர்தல் இன்னுமொரு மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டு பிரதான கட்சிகள் பாராளுமன்றத்தில் சம பலத்தைப் பெறும்போது அரசு அமைக்கும் கட்சி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழ்க் கட்சிகளே இருந்தன. இவர்களின் அரசியல் அணுகுமுறை தங்களுடைய அரசியல் தேவையை நிறைவேற்றும் ஒன்றாக இருந்ததே தவிர, தேசிய அரசியலின் போக்கை மாற்றும் அல்லது தீர்மானிக்கும் ஒன்றாக அமையவில்லை. இதன் காரணமாகவே இவர்களின் அரசியலும் அணுகுமுறையும் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், எந்த சமுதாயத்தை அவ்வாறான வழியில் அழைத்துச் சென்றார்களோ அந்த சமுதாயமும் மீளமுடியாத துன்பத்தை அனுபவித்து வருகிறது.
எனவேதான் சமுதாயம் மற்றும் சர்வதேச மாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசியல் கொள்கைகளும் போக்குகளும் மாறவேண்டி உள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது காலாவதியான ஒன்று எனலாம்.
நன்றி : புகலி
No comments:
Post a Comment