Thursday, February 18, 2021
கலைஞர் காவலர் வண்ணைத்தெய்வம்..
Wednesday, February 03, 2021
டொமினிக் ஜீவா
-எம் .ஏ.நுஃமான்-
டொமினிக் ஜீவாவுக்கு 85 வயதாகிறது. கலை இலக்கிய நண்பர்கள் அவரது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 27.06.2011 கொண்டாடினார்கள். 18.06.2011ல் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு கரவை விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியீட்டு விழாவில் ஜீவாவைச் சந்தித்தேன். வழக்கம்போல் அன்போடு விசாரித்தார். மல்லிகை இதழ்களோடு அழகாக அச்சிட்ட ஒரு அழைப்பிதழையும் நீட்டினார். அது அவரது பிறந்த நாள் சந்திப்பு அழைப்பிதழ். எட்டுப் பக்கங்களில், ஒவ்வொரு பக்கத்திலும் ஜீவாவின் வெவ்வேறு முகத் தோற்றத்துடன், ஜீவமொழிகள் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ். இம்முறை கட்டாயம் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எனினும் முடியவில்லை. ஆகையால் இக்குறிப்பை எழுதுகிறேன்.
ஜீவாவுக்கு எண்பத்தைந்து வயது என்பதை நம்பமுடியாது. அவரது ஆரோக்கியம் அப்படி. இன்னும் அதே வெள்ளை நெனல் வேட்டியுடன் கைகளை அகல விரித்து நிமிர்ந்து நடக்கிறார். இளமை மிடுக்கின் சுவடுகள் இன்னும் மறைந்துவிடவில்லை. தீவிர இலக்கியச் செயற்பாட்டாளராக, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்தும் மல்லிகை ஆசிரியராக அர்ப்பணிப்புடன் இயங்குகிறார். நினைவாற்றலும் செயற் துடிப்பும் மங்கிவிடவில்லை. உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று வேடிக்கையாக மல்லிகை தூண்டில் பகுதிக்கு ஒரு கேள்வி அனுப்பலாம் என்று சிலவேளை நாங்கள் சில நண்பர்கள் சந்திக்கும் போது பேசிக்கொண்டதுண்டு. அதற்கு அவர் சொல்லக் கூடிய விடைகளை நினைத்துப் பார்த்துச் சிரித்ததும் உண்டு. ஜீவாவின் ஆரோக்கியத்தின் அடிப்படை அவரது வாழ்க்கை முறைதான் என்று நினைக்கிறேன். அவர் தன் வாழ்க்கையை கட்டுதிட்டமான சில ஒழுங்குமுறைகளுக்குள் அமைத்துக்கொண்டவர். தற்துணிபும் தன்னம்பிக்கையும் அவரை வழிநடத்தின. ஒரு இலக்கியவாதி என்ற வகையில் அவரது வாழ்வு நிறைவானது. இதில் அவருக்கு ஒரு சுயதிருப்தி இருப்பது அவரது ஒவ்வொரு எழுத்திலும் வெளிப்படக் காணலாம்.
நான் ஜீவாவை முதல்முதல் சந்தித்தது 1965 டிசம்பரில் என்று நினைக்கிறேன். அப்போதுதான் நீலாவணனுடன் முதல்முதல் நான் யாழ்ப்பாணம் போயிருந்தேன். அப்போது மல்லிகை வெளிவரத் தொடங்கியிருக்கவில்லை என்று நினைக்கிறேன். கஸ்தூரியார் வீதியில் ஜீவாவின் தொழிலகத்தில் அவரைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசினோம் என்பது இப்போது நினைவில்லை. ஜீவா ஒருவருக்கு சிகையலங்காரம் செய்துகொண்டே என்னுடன் உரையாடியது இன்றும் நினைவிருக்கிறது. அப்போது நான் இலக்கிய உலகுக்குப் புதியவன். ஜீவா என்னைப் பற்றி அதிகம் அறிந்திருக்க முடியாது. 1970களின் தொடக்கத்தில் கைலாசபதியின் தலைமையில் சாகித்திய மண்டல உறுப்பினர்களாகச் செயற்பட்டபோதுதான் நாங்கள் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாவலப் பிட்டியிலும் கல்முனையிலும் இலக்கிய விழாக்களை நாம் இணைந்து நடத்தியிருக்கிறோம். அக்காலகட்டத்தில்தான் நான் மல்லிகையில் அடிக்கடி எழுதினேன். 1976ல் நான் யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தபின் மல்லிகை அலுவலகத்திலும், வெளியிலும் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் இருந்தன. மல்லிகையைத் தருவதற்காக என் வீட்டுக்கும் அவர் சில தடவைகள் வந்திருக்கிறார். 1990ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டுப் புலம்பெயரும்வரை இச் சந்திப்பு நீடித்தது. பின்னர் ஜீவாவும் அநேகரைப்போல் கொழும்புக்குப் புலம்பெயர்ந்தார். அதன்பின் அடிக்கடி இல்லாவிட்டாலும் இடைக்கிடை அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
மல்லிகையை வெளியிடத் தொடங்கிய பின்னர் ஜீவா தன் சுயதொழிலைக் கைவிட்டு அதனையே தன் முழுநேரத் தொழிலாகவும் இலக்கியப் பணியாகவும் வரித்துக்கொண்டார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தை, இலக்கியத்தை மட்டும் நம்பி வாழ்பவர் இலங்கையில் நான் அறிந்தவரை ஜீவா ஒருவர்தான். அவருடைய விடா முயற்சியும், தற்துணிபும், அர்ப்பணிப்பும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன, மல்லிகையை ஐம்பதாவது ஆண்டை நோக்கிக் கொண்டு செல்கின்றன. இதை ஒரு தனிமனித சாதனையாக நாம் கொண்டாடலாம்.
கடந்த நாற்பது ஆண்டுகால ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மல்லிகையின் பங்கு என்ன என்ற கேள்வி நம்முன் உள்ளது. 1970க்குப் பின்னர் மல்லிகையில் எழுதி முன்னணிக்குவந்த ஒரு எழுத்தாளர் பரம்பரை இதற்குப் பதில் சொல்லும் என்று நம்புகின்றேன். திக்வல்லை கமால் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஓர் இலக்கிய ஆளுமை. இவருடைய கணிசமான படைப்புகள் மல்லிகையிலேயே பிரசுமாயின.
செங்கையாழியான் தொகுத்த மல்லிகைச் சிறுகதைகள் இரு தொகுதிகளும் மல்லிகையின் இலக்கியப் பங்களிப்பின் அறுவடைகள்தான். தான் வளர்த்த அல்லது தன்னைக் களமாகக் கொண்டு வளர்ந்த இலக்கியப் பரம்பரை பற்றி மல்லிகை பெருமைப்படுவதில் நியாயம் உண்டு.
முக்கியமான சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதிலும் மற்ற இதழ்களைவிட மல்லிகைக்கு முக்கியமான பங்கு உண்டு. மல்லிகை வெளியிட்ட சிங்களச் சிறுகதைகள் தொகுப்பு இதற்கு ஒரு உதாரணம்.
ஈழத்து இலக்கியம், இலக்கிய விமர்சனம் தொடர்பான திறந்த விவாதங்களுக்கு மல்லிகை எந்த அளவு களமாக அமைந்தது என்ற கேள்வியையும் நாம் கேட்டுப்பார்க்கலாம். இது தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு இடம் உண்டு. எனினும் மல்லிகையில் இடம்பெற்ற விமர்சனங்கள், விவாதங்கள் பல முக்கியமானவை. மார்க்சியம், தேசியம், இலக்கியவடிவங்கள் என்பன தொடர்பான முக்கியமான விமர்சனக் கட்டுரைகள், விவாதங்கள் மல்லிகையில் இடம்பெற்றுள்ளன. கைலாசபதி, சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரட்னா உட்பட ஈழத்தின் முக்கியமான விமர்சகர்கள் மல்லிகையில் எழுதியுள்ளனர். மல்லிகையில் வெளிவந்த முக்கியமான விமர்சனக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கப்படின் இத்துறையில் மல்லிகையின் பங்களிப்பு வெளிச்சத்துக்கு வரும்.
ஒரு சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில் 1950, 60 காலகட்டத்துச் சிறுகதை எழுத்தாளராகவே நாம் ஜீவாவை நோக்கவேண்டும். ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை இக்காலகட்டம் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். இலங்கையில் இடதுசாரி, மார்க்சிய அரசியல் சிந்தனையும் முற்போக்கு இலக்கிய இயக்கமும் முன்னணிக்கு வந்த காலகட்டம் இது. சமூகரீதியில் ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வும் சமூக எழுச்சியும் இலக்கியத்தில் வெளிப்பாடு பெற்று, சாதாரண மக்களின் பேச்சுமொழி இக்கிய மொழியாக மாற்றமடைந்த காலகட்டமும் இதுவே. வர்க்க, சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை என்ற குரல் இலக்கியத்தில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கிய காலகட்டம் இது. தாழ்த்தப்பட்ட அடிநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இக்கால கட்டத்தில்தான் எழுத்தாளர்களாக முன்னணிக்கு வந்தார்கள். டொமினிக் ஜீவா, டானியல், என். கே. ரகுநாதன், எஸ். பொன்னுத்துரை போற்றவர்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். சே. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், இளங்கீரன் முதலியோர் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தோர் அல்ல எனினும் புதிய இலக்கியக் கருத்துநிலையை ஏற்றுக்கொண்டு முற்போக்கு இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவாகினர். கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரட்னா ஆகியோர் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கருத்துநிலைக் காவலர்களாக முன்னணிக்கு வந்தனர்.
ஜீவாவின் கதைகள் இக்காலகட்டத்து முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டுக்கு உதாரணங்களாக அமைவன. ஜீவாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட அல்லது அடிநிலை மக்களே. அவர்களது பிரச்சினைகள், துன்பங்கள், ஆசை அபிலாசைகள், அவர்களுக்குள் புதைந்திருக்கும் மனிதத் தன்மை என்பன அவரது கதைப் பொருளாக அமைகின்றன. சாதி ஒடுக்குமுறை என்னும் யாழ்ப்பாணச் சமூக யதார்த்தத்தை, அங்கு நிலவிய வர்க்க முரண்பாட்டை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லும் கதைகள் அவற்றுட் பல. இக்காலத்தில் எழுதிய டானியல், என். கே. ரகுநாதன், நீர்வை பொன்னையன், செ. கணேசலிங்கள் முதலியோரின் கதைகளிலும் நாம் இப் பொதுப் பண்பைக் காணலாம். 1950, 60களில் இத்தகைய கதைகள் ஈழத்து இலக்கிய உலகில் புதியவை. அரசியல் உணர்வை முனைப்பாகக் கொண்டவை. அதனாலேயே இவை கலை அல்ல பிரச்சாரம் என ஒரு சாராரால் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதுவே மக்கள் இலக்கியத்தின் அழகியல் என முற்போக்கு விமர்சகர்களும் எழுத்தாளர்களும் வாதிட்டனர். அக்கால கட்டத்தில் இத்தகைய படைப்புகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய வாலாற்றுத் தேவை தங்களுக்கு இருந்ததாக ஏ. ஜே. கனகரட்னா இதுபற்றிப் பேசும்போது ஒருமுறை என்னிடம் கூறினார். இப்போது பின்னோக்கிப் பார;க்கும்போது ஏ. ஜே. அப்படிச் சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகின்றது. எக்காலத்துக்கும் பொதுவான, நிலையான கலைமுறை, அழகியல் என்று எதுவும் இல்லை. எல்லாமே மாறுவன, வேறுபடுவன. இந்த வேறுபாடுகளே இலக்கியத்துக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருகின்றன. 1950, 60 களில் 70களிலும்கூட முற்போக்கு இலக்கியம் முன்வைத்த அழகியல் தனித்துவமானது, வேறுபட்டது என்ற புரிதல் முற்போக்கு இலக்கியத்தின் அழகில் பிரச்சினைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வாக அமையலாம். இச்சர்ச்சைகள் எவ்வாறு இருந்தாலும் ஐம்பது அறுபதுகளில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ஜீவாவும் ஒரு முக்கிய ஆளுமை என்பதை யாரும் மறுக்க முடியாது. மல்லிகைப் பந்தல் மூலமாக ஒரு நூல் வெளியீட்டாளர் என்ற வகையிலும் ஜீவாவின் இலக்கியப் பணி முக்கியமானது.
ஜீவாவின் சுயசரிதை நூல்களை - எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத் தாளின் ஊடாக ஒரு அனுபவப் பயணம் - படிக்கும் போது அவரது சமூகச் சூழல், குடும்ப வாழ்வின் நெருக்கடி ஆகியவற்றுக்குள் அமிழ்ந்து போகாது ஈழத்து இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாக அவர் எழுச்சியடைந்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே தோன்றுகின்றது. அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே இதனைச் சாத்தியமாக்கியது என்று கூறலாம். சவரக் கடையே தன் சர்வகலாசாலை என்றும், நான் சிரைக்கப் பிறந்தவனல்ல சாதிக்கப் பிறந்தவன் என்றும், மண்புழுவாக இருந்து மனிதனானவன் என்றும் ஜீவா தன்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். தன்னையும் தன் வரலாற்று முக்கியத்துவத்தையும் பற்றி அடிக்கடி குரல் உயர்த்திப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். சிலவேளை இது ஒரு நெருடலாகவும் மிகையான சுய மதிப்பீடாகவும் எனக்குத் தோன்றியதுண்டு. ஆயினும், ஜீவா என்ற மனிதனின், எழுத்தாளனின், பத்திரிகையாளனின் பயணத்தில் தாண்ட வேண்டியிருந்த தடைகளையும், சகிக்க வேண்டியிருந்த அவமானங்களையும், சந்திக்க வேண்டியிருந்த இன்னல்களையும் அறியும்போது ஜீவாவின் உளவியலைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜீவா சொல்வதுபோல் இறுக்கமான யாழ்ப்பாணச் சாதி அடுக்கை உடைத்துக்கொண்டு ஒரு மண்புழு மனிதனான கதைதான் ஜீவாவின் கதை. அவருடைய சிறுகதைகள் எல்லாவற்றையும் விடச் சிறந்த கதை அது. ஜீவாவின் 85ஆவது பிறந்த நாளை அதனாலேயே நானும் கொண்டாட நினைத்தேன். ஜீவா இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மல்லிகையையும் மல்லிகைப் பந்தலையும் இன்னும் மணம் கமழச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
…………. …………….
இதை எழுதி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்
கனத்த மனதுடன் இன்று வழியனுப்புகிறோம்.
நிறை வாழ்வு வாழ்ந்தீர், நிலைக்கும் உம் பணிகள்