Thursday, February 22, 2018

முத்து அங்கிள்

-சந்துஸ்-
முத்து அங்கிள் ...
சப்பாத்தி முள்ளும் சரியாக முளைக்காது * என்று சொல்லப்பட்ட மண்ணிலே அரிதாகப் பூத்த அத்திப்பூ நீங்கள். அப்படித்தான் அவரை நாங்கள் அழைத்தோம். எழுபதுகளில் கொழும்பின் புறநகரான களுபோவிலவில் நாங்கள் வசித்த வீட்டின் ஒரு அறையில் இளம் தம்பதிகளான இந்திரா அன்ரியும் முத்து அங்கிளும் எங்களுடன் வசித்தனர். என் சிறு பிராயத்து நினைவுகளில் மறக்கமுடியாத ஓர் அம்சமாக அவர் இருக்கின்றார். அப்போது சிறுவர்களாக இருந்த எம்மைக் கவரும் எதோ ஒரு சக்தி அவரிடம் இருந்திருக்க வேண்டும். மாலைப் பொழுதுகளில் வேலையிலிருந்து அவர் வரும் வரை நாங்கள் காத்திருக்குமளவிற்கு அவர் எங்களுடன் நெருங்கியிருந்தார். தன்னுடைய வேலைகளுக்கு மத்தியில் எமக்கென்று செலவழிக்க அவரிடம் எப்போதும் நேரமிருந்தது. வேலையால்  வந்ததும் குளியலறையில் அவர் பெருங்குரலெடுத்துப் பாடுவதைக் கேட்பதில் தொடங்கி  அவர் எங்களுக்குச் சொல்லும் கதைகளின் வழியாக அவர் அழைத்துச் செல்லும் அந்த வினோதமான உலகத்தில் சஞ்சரிப்பது என்பது எங்கள் நாட்களின் அன்றாட அம்சமாகி இருந்தது. 
அவரிடம் இருந்தது தன்னை ஒளி த்துக் கொள்ளத் தெரியாத காற்று மனம். அவர் சத்தமான குரலில் பாடுவார். இருந்தால் போலநடனமாடுவார்.ஷேக்ஸ்பியரின் நாடகங்களின்  பாத்திரங்கள் பேசும் பெரும்பாலான வாசகங்கள் அவருக்கு மனப்பாடம்.
திடீரென்று வழமையாக அணியும் சேட் காற் சட்டையைத் தவிர்த்து national என்று சொல்லப்படும் முழுக்கைச்சேட்டும்  வெள்ளை வேட்டியும் அணிந்து திரிந்தார். அந்தக் காலத்தில் எங்களது சித்தி பத்திக் (Batique) உடைகள் தைக்கும்  வேலை செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஒரு வாளிக்குள் மஞ்சள் நிறக் கரைசலை நிரப்பிச் சென்றிருந்தார். அதை கண்ட முத்து அங்கிள் தனது வெள்ளை நிற தேசிய உடையைக் கொண்டு வந்து அந்த வாளிக்குள் போட்டுத் தோய்த்தெடுத்தார். அதன் பிறகு சில நாட்கள் மஞ்சள் உடையில் ஒரு துறவியைப் போலத் திரிந்தார். சில நாட்கள் தாடியும் மீசையும். சில நாட்கள் மழித்த தலையும் முழுச்சவரமும். ஒரு நாளினில் இருந்தது  போல் மறு நாளினில் இல்லை என்று கண்ணன் பாட்டில் வரும் பாரதியின் வரிகளை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

Thursday, February 01, 2018

அ. சிவானந்தன் எனும் ஒரு ஆளுமையின் மறைவு (1923-2018)

-சமுத்திரன்-

அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு

சிவானந்தனின் மரணம் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களுடன் தன்னை அடையாளப்படுத்திய ஒரு பேரறிஞரின் மறைவென அவரை நன்கறிந்தோர் சர்வதேச ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். ‘நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காகவே எழுதுகிறோம்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த சிவா ஜனவரி மூன்றாம் திகதி தொண்ணூற்றுநாலு வயதில் அவர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக வாழ்ந்து வந்த லண்டனில் மறைந்தபோது விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது சுலபமல்ல. அந்த ஆளுமைக்குள் ஆற்றல்மிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் இருந்தன      என அவரைப் பற்றி நண்பர்கள் வியந்துரைப்பதில் ஆச்சர்யமில்லை.