- கவிஞர் வைரமுத்து -
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement - some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
“Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” – பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்.
பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.
மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. “இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியே” என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. ‘மார்கழி நீராட வாரீரோ மங்கையரே’ என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.