மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவில் நாம் நிற்கிறோம். இவ்வேளையில் அரசியல் கலை இலக்கியத் தளங்களில் இவரோடு சேர்ந்து இயங்கிய இவரது சகா எஸ். தர்மன் (ஜெர்மனி)அவர்கள், கே.எஸ். இரத்தினம் அவர்கள் இறப்பெய்தியபோது அனுப்பி வைத்த பிரிவுச் செய்தியினை பதிவேற்றுகின்றேன்.
அம்மான் என நாம் அன்பாக அழைக்கும் கே.எஸ். இரத்தினம் அவர்கள் யாழ் கொக்குவிலைச் சேர்ந்தவர். பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் கன்பொல்லைக் கிராமத்தில் எனது கற்கண்டு சித்தப்பாவின் மகள் எனது சகோதரி முறையான இராசு அவர்களை திருமண பந்தத்தில் சேர்த்துக்கொண்டு பலரும் புகழ்ந்து போற்றும் வகையில் வாழ்ந்து வந்தார். திருமண பந்த வழியில் வந்தவர் நண்பனுக்கு நண்பன் போலும் மைத்துனருக்கு மைத்துனர் போலும் அன்பாக பண்பாக பழகினார். நாம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து எல்லாக் காரியங்களையும் ஒன்று சேர்ந்து செய்வோம். அச்சூழல் காரணமாக கே.எஸ். இரத்தினம் அவர்களின் மூலம் சீனசார்பு கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து வெகுஜன இயக்க மூலம் பல சாதியப் போராட்டங்களில் பங்காற்றினோம். இதில் முக்கியமாக கன்பொல்லையில் சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். மேலும் நானும் கே.எஸ். இரத்தினம் அவர்களும் வேறு தோழர்களோடு இணைந்தும் பல முற்போக்கான வேலைகளை செய்தோம். மக்கள் சீனத்துக்கு எதிராக அமெரிக்க எடுத்த Shoes of the Fisher men ஆங்கிலப் படத்தினை யாழ் றீகல் தியேட்டரில் ஓடவிடாமல் தடுத்து ஓர் தாக்குதலை நடத்தினோம். படம் திரையிடப்பட்டபோது வெளியில் கைக்குண்டு வெடிக்கவைத்து கலகம் விளைவிக்கப்பட்டபோது நாம் தியேட்டரின் திரைக்கு உள்ளேயிருந்து கோழிமுட்டைக் கோதுக்குள் கொண்டு சென்ற பெயின்ரினை அடிக்க வேண்டும் அத்தாக்குதலை வெற்றிகரமாகச் செய்தோம். இத்தாக்குதலுக்கு தோழர் இக்பால், சலீம், சி.கா.செந்திவேலும் , ஆத்திசூடி நவரத்தினம் கிளிநொச்சியினை சேர்ந்த தோழரும் வெளியில் நின்று செயற்பட்டனர். மேலும் பல முற்போக்கான வேலைகளை செய்ததோடு பல நாடகங்களையும் நடித்து மேடைகள் பல ஏற்றினோம். இப்படியாக நண்பனுக்கு நண்பன் போலும் தோழனுக்கு தோழன் போலும் இணைந்து பல காரியங்களை செய்து வந்ததினை நினைக்கும்போது அவர் ஞாபகம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது . அவரைப்போல் அன்பு காட்ட தோளோடு தோள் கொடுக்க வேறு யாருமில்லை. இன்று என் கையை நழுவிப் போய்விட்டார். அவரின் சிரிப்பு, நகைச்சுவையான கதைகள், பண்பான பழக்க வழக்கங்கள். என் கண்முன் நிற்கின்றது . இனி அவரை எப்போது காண்பேன் என மனம் ஊசலாடும். தோழன் ச.தர்மன் (ஜெர்மனி).