-நோயேல் நடேசன் -
மறைந்த இலங்கை தலைமை இலக்கியவாதி எஸ்போவின் மறைவை நினைவு கூர்ந்து அவரது வரலாற்றில் வாழ்தல் என்ற சுயசரிதை நூலை முன்வைத்து 27-11-2015 ல் வெளிவரும் கட்டுரை
இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட எஸ் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் என்ற சுயசரிதை நூலின் இரண்டு பாகங்களையும் நான் ஏன் படிக்கவேண்டும்? படித்தால் என்னிடத்தே வைத்திராமல் அதைப் பற்றி உங்களுக்கு ஏன் சொல்லவேணடுமென்பது என்ற முக்கியமான கேள்விக்கு நான் பதில் தரவேண்டும்.
பதிலை எனது கூற்றாகச் சொன்னால் அது மதிப்பிழக்கலாம். எனவே எனது கருத்தைச் சொல்லாமல் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் வார்த்தையில் சொல்வது நலமானது.
‘எமக்கு முந்திய தலைமுறையில் தமிழுக்கு தொண்டு செய்தவர்களை நாம் நினைத்துப் பார்க்காவிடில் அடுத்த சந்ததியில் நம்மை மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்ற தார்மீகமான நினைவை நாங்கள் வைத்திருக்க முடியாது.’
இதை மிகவும் அழுத்தமாக சொல்வதானால் எனது பெற்றோரையோ எனது மனைவியின் பெற்றோரையோ பராமரிக்க தவறினால் எனது மகனிடம் அல்லது மகளிடம் எனது வயோதிபகாலத்தில் எதையும் எதிர்பார்க்க தகுதியில்லாதவனாகிறேன். அதை யாழ்ப்பாணத்து வழக்கத்தில் சொன்னால் எனது தந்தைக்கு சிரட்டையில் தேநீர் பரிமாறினால் எனது மகனும் அதிலே எனக்குத் தருவான்.
எமது மத்தியில் சுயசரிதை எழுதுவது வழக்கமில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கல்வெட்டு எழுதுவோம் ஆனால் கல்வெட்டு எழுதினால் எல்லோருக்கும் பெயரைத் தவிர மற்றவை எல்லாம் ஒரே மாதிரி தேவார திருவாசகத்துடன் இருக்கும். அந்தியேட்டி செலவோடு கல்வெட்டும் பழைய கடதாசியாகிவிடும்.
தனது வாழ்கையில் நடந்த விடயங்களை காய்தல் உவத்தல் அற்று எழுதுவதோ மற்றவரை எழுதுவதற்கு அனுமதிப்பதோ இல்லாதது தமிழ் சமுகம். தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பிற்காலத்து போரட்டத்; தலைமுறையில் வந்தவர்களைப் பற்றிய குறிப்புகள் எம்மிடமில்லை. அதை எழுதுவதற்கு எந்த ஏற்பாடுகளும் எம்மிடமில்லை. இது ஈழத்தமிழர்மத்தியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் நிலையும் அதுவே. கருணாநிதி எம்.ஜி. இராமச்சந்திரன் போன்றவர்கள் தங்கள் அரசியல் தேவைக்காக எழுதியவை உள்ளன. இக்காலத்திலும் பூரணமாக எம்ஜிஆர் சம்பந்தமப்பட்ட ஒரு புத்தகத்தை யாராவது எழுதினால் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்.
இப்படியான தமிழ்ச்சூழலில் எஸ்.பொ. தனது ஐம்பது வருட எழுத்து வாழ்வை எந்த ஒளிவு மறைவுமின்றி எழுதியது ஒரு இமாலய துணிவு. அதைப் படைப்பாக்கியது மகத்தான சாதனை. இதை குறைந்தபட்சம் இன்னமும் ஐம்பது வருடங்களுக்கு தமிழில் எவராலும் செய்யமுடியுமா என்பது கேள்விக்குறி. எழுதுவது முடிந்தாலும் பாவனை காட்டாது தனது பலங்களையும் பலவீனங்களையும் மதியத்தில் சூரிய குளியல் நடத்தும்; மேற்குநாட்டுப் பெண்கள்போல் துணிவுள்ளவர்கள் எவருமில்லை அந்தவகையில் தமிழில் இது ஒரு முன்னுதாரணம்.