Saturday, September 12, 2015

யாழ்.சர்வதேசத் திரைப்பட விழா.

04. 09. 2015 இல், யாழ்ப்பாணம் மஜெஸ்ரிக் கூட்டுத் தொகுதியில் நடைபெற்ற, பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை!


தொனிப்பொருள்: குடாநாட்டில் சுயாதீன திரைப்படங்களைக் கொண்டாடுதல். 
விரைவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேசத் திரைப்பட விழாவானது ஆரம்பமாகிறது. 

விழாத் திகதிகள்: 2015  செப்ரெம்பர் 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை. 
யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ்  என்பவற்றோடு  அஜன்டா 14 ஆகியன இணைந்து, முதலாவது யாழ்ப்பாண சர்வதேசத்  திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்துள்ளன. இத்திரைப்பட விழாக் காட்சிகள் அனைத்தும் இலவசமாகக் காட்டப்படுகின்றமை முக்கியமானதாகும். 

விழாவின் இயக்குநரான அனோமா ராஜகருணா, குடாநாட்டில் சுயாதீனமாக திரைப்படங்களினைக் கொண்டாடுவது என்பதே எங்களுடைய அடிப்படையான நோக்கமாகும். இவ்விழாவானது 30 வருடகால ஆயுத முரண்பாடு மற்றும் போரின் அழிவுகளிலிருந்து நிகழும் மீண்டெழுதலாக அமைவதோடு, கலையைப் பயன்படுத்தலானது, மக்களைச் சென்றடைதலாகும் என நாங்கள் நம்புகின்றோம். அத்துடன் இந்த விழாவானது, சினிமாவினூடாகச் சமூகங்கள் தமது எல்லைகளினைக் கடந்து, ஒருவர் மற்றவருடன் இடைவினை புரிவதற்கான ஒரு வெளியினை உருவாக்கும் எனவும் நாம் எண்ணுகின்றோம். எனக் கூறுகிறார்.

Saturday, September 05, 2015

நாம் நெல்லியடி அம்பலத்தாடிகளில் குழந்தைக் கலைஞர்கள்......

-கரவைதாசன்-


நெல்லியடி அம்பலத்தாடிகள்  என இலங்கையின்  நாடகவரலாற்றில் அறியப்பட்ட கலை  இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வெறுமனே நாடகக் கலைஞர்கள் என்பதனை தாண்டி மக்கள் கலைஇலக்கியச் செயற்பாட்டாளர்கள் எனச் செயற்பட்டவர்கள். இந் நாடகமன்று அந்நாட்களில்  இடது சாரியக்  கலை இலக்கிய மன்றாகவே  இயங்கி வந்தது. கந்தன் கருணை, சங்காரம் இதுவுமன்றி சமூக விழிப்பினை புகட்டவல்ல  தாளலய ஓரங்க நாடங்கங்கள் பல அந்நாட்களில் இவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில்  அரங்காடப்பட்டன. 

இலங்கை கம்யுனிஸ்டுகள் மாஸ்கோ,  பீக்கிங் என கோட்பாட்டு ரீதியிலே  பிளவுண்டிருந்த காலத்தினிலே நெல்லியடி அம்பலத்தாடிகள் கலைமன்று  சீன சார்பு செயற்பாட்டாளர்களின் கலை இலக்கிய மன்றாக இயங்கி வந்தது  என்பதே பொருந்தக் கூறக்கூடிய செய்தியாகும் . இம்மன்று  நெல்லியடியினிலே முகவரியினை கொண்டிருந்தபோதும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் முற்போக்கு கலைஞர்கள்  மத்திமைப்பட்டு இம் மன்றில் செயற்பட்டார்கள். 

மட்டக்களப்பிலிருந்து சி.மௌனகுரு, தாளயடியிலிருந்து  தாசீசியஸ், ம.சண்முகலிங்கம், யாழ்ப்பாணத்தில் பிறந்து  கரவெட்டி கன்பொல்லையில் திருமணபந்தத்தினால் வாழ்வினைக்  கொண்ட கே.எஸ். இரத்தினம் இப்படியே ஒரு நீண்ட பட்டியல் நீளும். இன்று அண்ணாவியராக  விழிக்கப்படுகின்ற இளைய பத்மநாதன் கலைஞனாக  கருக்கொண்டதும் இம் மன்றில்த் தான். அந்நாளில் அம்பலத்தாடிகளின்  வில்லிசை குழுவில் பத்தண்ணா  பிரதான கதை சொல்லியாக   இருந்தார். இவ் வில்லிசைக் குழுவினை நெறிசெய்து இவர்களுக்கு ஒத்தாசையாக கன்பொல்லையைச்  சேர்ந்த நாடறிந்த இசை நாடகக் கலைஞர் நாடத்திலகம் கே.வி. நற்குணம் அவர்கள் இருந்தார்.