-மா.அரங்கநாதன்-
காவிய காலம் என்ற புத்தகத்தில் திரு. எஸ். வையாபுரி பிள்ளை அவர்கள் “ஆரியர் தமிழரை இகழ்ந்தனர் – தமிழர் விடவில்லை. அவர்களை மிலேச்சர் என்றனர்” என்று கூறியுள்ளார். அகராதிப்படி ஆரியம் – ஆரிய மொழி – ஆரியர் ஆகியவற்றிற்கு மிலேச்சர் என்றே பொருள் தரப்படுகிறது. மொழியில் உயர்வு தாழ்வு என்று எதுவுமில்லை. குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட மொழிகள் மேலான படைப்புகளை கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்க கண்டத்து கென்யா நாட்டில் காட்டகத்தே உள்ள கிராமங்களில் ஆண்கள் ஒரு மொழியும் பெண்கள் ஒன்றுமாக பேசுகிறார்கள். அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்து அந்த மொழிகளில் எந்த படைப்பும் இல்லை. அவற்றிற்கு எழுத்துருவும் இல்லை. கென்யா நாட்டு Ngũgĩ wa Thiong’o அவர்களின் நாவலான Devil on the Cross ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்ற காரணத்துக்காக அந்த நாவலை கென்யா நாட்டு மக்களுக்குச் சொந்தமானது அல்ல என்று யாரும் சொல்லிவிடப் போவதில்லை. ஆசிரியர் கூகி ஏன் பிரஞ்சில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதினார் என்றும் யாரும் கேட்கப்போவதில்லை. தெரிந்த விசயம். தமிழகத்திற்கே அல்லது தென்னாட்டிற்கே சொந்தமான பரத நாட்டியக் கலை ஏன் வடமொழியில் எழுதப்பட்டது என்பது போலத்தான். சொல்லப்போனால் பல்லவர் காலத்தில் மன்னர்கள் தமிழை மதித்தாலும் தமிழ்க் கலைகளை – நாட்டியம், சிற்பம், இசை போன்றவற்றை – வடமொழியில்தான் எழுதும்படி பார்த்துக் கொண்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய ஆய்வு, தில்லை நடராசரின் ஊழிக்கூத்து, தமிழ் இசை பற்றிய நூல்கள் யாவும் ஆங்கிலத்திலேயே எழுதும்படி ஊக்குவிக்கப்பட்டது. இது எல்லா காலத்திலும் நடந்த விசயந்தான். இன்னொரு மொழியில் எழுதப்பட்டது என்ற காரணத்திற்காக அந்தக் கலைகள் தமிழுக்குச் சொந்தமானவை அல்ல என்று சொல்லிவிட முடியாது.