- கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)
சண்,
சண் அண்ணா என அழைக்கப்படும் தோழர் பொன்னம்பலம் சண்முகலிங்கம் நீண்ட
காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் 22-02-2013 அன்று கனடாவில் காலமானார்.
அவரது மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது உறவினர்கள்,
தோழர்கள், நண்பர்கள் அனைவரையும் சொல்லணாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர்
இளம் பராயத்திலிருந்தே அரசியல் ,சமூக விடயங்களில் ஆர்வமுள்ளவராக
இருந்தார் .இடதுசாரி இயக்கம் அவரை இளம் பராயத்தில் ஈர்த்துக்கொண்டது
.மலையகத்தில் தொழில் பார்த்தபோது தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதனால்
அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தார் .பின்னர் இவர்
வவுனியாவில் இயங்கிய காந்தீயம் அமைப்பில் இணைந்து அப்பகுதியிலுள்ள
மிகவும் வசதி குறைந்த மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தார் .
கனடாவிற்கு
புலம்பெயர்ந்த தோழர் சண் அவர்கள் ,தானும் தன்பாடும் என்றிருக்காமல்
தன்னலமற்ற தனது சமூக அரசியல் செயற்பாடுகளை பற்றுறுதியுடன் தொடர்ந்தார்
.இவ்வகையில் ரொறன்ரோ தேடக அமைப்பு தமிழ் சமூகத்தில் ஜனநாயகம், சமத்துவம்,
விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் பன்முகத்தன்மை போன்ற
நோக்கங்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தோழர் சண் அவர்கள்
மிகுந்த அர்ப்பணத்துடன் அவ்வமைப்பில் செயற்பட்டார் . கனேடிய தமிழ்
சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான இடைவெளியை உருவாக்குவதில் பெரும் பங்கு
வகித்தார் . சகல விதமான சமூக அநீதிகளுக்கெதிராக தர்மாவேசத்துடன் போராடிய
சண் சில சமயங்களில் தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி இருந்தது .
இப்படிப்பட்ட தாக்குதல்களை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல்
எவ்வித குரோதமோ, சலனமோ, பயமோ இன்றி தனது பணியை தொடர்ந்தார் .