Sunday, December 16, 2012

தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து இயக்குனர் மணிமேகலையுடன்-நேர்காணல்

-ஜெயச்சந்திரன் ஹஸ்மி-

தேவதைகள் – நமது கனவுலகத்திலும் கற்பனைகளிலும் சினிமாக்களிலும் வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, அழகாக, கவலைகள் இல்லாமல், பாடிச் சுற்றிக்கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்வின் தேவதைகளை அடையாளப்படுத்துகிறது ஒரு ஆவணப்படம். ஆம், இந்த தேவதைகள் உழைத்து உண்பவர்கள். வியர்வை சிந்தி சம்பாதிப்பவர்கள். ஆண் பெண் பேதங்களை உடைத்தவர்கள். உழைப்புக்கு ‘பால்’ ஒரு வரையறை இல்லை என்று உணர்த்தியவர்கள். எல்லாவற்றிற்கும் மேல் இவர்கள் பெண்ணைப் பற்றி சமூகம் கொண்டிருக்கும் உள்ளீடுகளை உடைத்தெறிந்தவர்கள். நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கனவு காணும் கண்களை கசக்கி, நம் சமூகத்தை ஆழ்ந்து கவனித்தால், தெருவுக்குத் தெரு இதுபோன்ற தேவதைகளை காணலாம். இவர்கள் நிஜ தேவதைகள். லீனா மணிமேகலை இயக்கத்தில் வந்துள்ள ‘தேவதைகள்’ ஆவணப்படம் உலகத்தோடு நிமிடத்துக்கு நிமிடம் போராடும் மூன்று பெண்களைப் பற்றி பேசுகிறது. இயக்குனர் லீனா மணிமேகலையோடு கலந்துரையாடியதிலிருந்து....
1. முதலில் இந்த தேவதைகள் ஆவணப்படத்திற்கான அடிப்படைக் கரு எங்கிருந்து வந்தது?

தோழர் பவா செல்லதுரையின் வழி ஒப்பாரி கலைஞர் லஷ்மி அம்மாவின் தொடர்பு கிடைத்தது. வசியம் வைக்கப்பட்ட ஒரு ஆடு போல அவர் பின்னாடி சுற்றிக்கொண்டிருந்தேன். மணிமேகலை என்று அறிமுகம் செய்துக்கொண்ட அடுத்த நொடி, மணிமேகலைக்கு ஒரு பாடல் என்று இட்டுக்கட்டி பாடத்தொடங்கிவிட்டார். ஒரு முழுமையான மனுஷி அவர். அவரைப்பற்றி மேலும் பலர் தெரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக கேமிராவில் ஆவணப்படுத்தலாமா என்று கேட்டேன். உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்துக்கொள் என்றார். தேவதைகளின் விதை அந்த உரையாடல் தான்.
இவரைப்போன்றே அசாதாரணமான வாழ்க்கையை எந்த புகாருமில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடலில், விகடன் சரண் மூலம் சேதுராக்கம்மாவையும், பாண்டிச்சேரி சுகுமாரன் மூலம் கிருஷ்ணவேணியம்மாவையும் தொடர்பு கொண்டேன். தேவதைகள் சாத்தியமானது.

Friday, December 07, 2012

உடுப்பிட்டிமகளிர் கல்லூரியும் தீட்டும்

-வி.அப்பையா-
இனஅழிப்பு போருக்கு பிந்தைய காலங்களில் சமூக வாழ்க்கை இயல்பாகி விட்டதற்கான தோற்றப்பாட்டை அரசும், அதன் சிவில் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களினூடாகவும், பல்வேறு "நிகழ்ச்சிநிரல்" செயல்பாடுகள் மூலம் நிறுவ முயலுகிறார்கள்.
ஆனால், உண்மையில் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக இராணுவ நிர்வாகத்திற்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்க திமிருக்கு எதிராகவும் போராடுவது என்பது தொடர் போக்காகவே இருந்து வருகிறது.
சமீபத்தில் இணையங்களில் "பெரிதாக” அடிபடாத அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்தி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்கக்கோரி பாடசாலை முன்பு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது. ஒரு தகுதியான அதிபர் நியமனத்திற்கு கூட மக்கள் போராட வேண்டியுள்ளதையும், "நிர்வாக சீர்கேடு, தலையீடு" எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்த செய்தி உணர்த்துகிறது.
மக்களின் போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன? 04.10.2012இல் வடமராட்சி வலயத்தில், தரம் 1 ஏபி கொண்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற 15 பேரில், தரம் 2-2 நிலையில் உள்ள ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகுதியான கல்வி தகுதி கொண்ட அதிபர் இருந்தும் ஏன் இந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது நியாமான கேள்வியாகவே உள்ளது.
மேலும், முன்னைய காலங்களிலும் இதே போன்ற நிலமைதான் இக்கல்லூரிக்கு ஏற்பட்டுள்ளது. 12.11.2012ல் ஓய்வுபெற்ற இக்கல்லூரியின் அதிபரின் தேர்வும் கூட "விதிமுறைகளை£" மீறி "அதிகாரம்" படைத்தோரால் நியமிக்கப்பட்டது. இவரும் கூட அதிபர் தரம் அற்ற, ஆசிரியர் தரத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போதைய அதிபர் நியமனத்தையும் கருத்தில் கொண்டால் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் "நிர்வாக செல்வாக்கை" புரிந்து கொள்ள இயலும். இக்கல்லூரிக்கான முதல் நிலை தகுதியுடைய அதிபர்கள், உடுப்பிட்டியில் இல்லையா? என்றால், உண்மை செய்தி அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.